Site icon சக்கரம்

ராகுல் காந்தி ஒரு ‘ராவணன்’

காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியை பல தலைகள் கொண்ட ராவணனாக சித்தரித்து பாரதிய ஜனதாக்கட்சி வெளியிட்டுள்ள போஸ்டருக்கு காங்கிரஸின் ஊடகப்பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி அதன் ‘எக்ஸ்’ (X) தளத்தில் பிரதமர் மோடி குறித்து மிகப்பெரிய பொய்யர் என்றும், ஜூம்லா பாய் (Jumla Boy) விரைவில் தேர்தல் பேரணியில் அடித்துச் செல்லப்பட இருக்கிறார் என்றும் போஸ்டர் வெளியிட்டது. இதற்கு அடுத்த நாளே, பா.ஜ.க தனது ‘எக்ஸ்’ தளத்தில் ராகுல் காந்தியை ராவணனாக சித்தரித்து இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளது.

பா.ஜ.கவின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள ஜெய்ராம் ரமேஷ் தனது ‘எக்ஸ்’ தளத்தில், “பா.ஜ.கவின் அதிகாரபூர்வ சமூக வலைதளத்தில், ராகுல் காந்தியை ராவணனாக சித்தரித்து வெளியிடப்பட்டிருக்கும் கிராஃபிக்ஸ் போஸ்டரின் உண்மையான நோக்கம் என்ன?. இந்தியாவைப் பிரிக்க நினைக்கும் சக்தியால் தனது தந்தை மற்றும் பாட்டியை இழந்த காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.,யுமான ராகுல் காந்திக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது.

பிரதமர் மோடி பொய் சொல்லும் நோயால், நார்சிஸ்டிக் பர்சனாலிட்டி டிஸார்டரால் (Narcissistic personality disorder) பாதிக்கப்பட்டிருப்பதற்கு தினமும் தரும் ஆதாரங்களில் இதுவும் ஒன்று. ஆனால் அவரது கட்சி, இவ்வாறான அருவருக்கத்தக்க ஒன்றை உருவாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டும் இல்லை. முற்றும் ஆபத்தானதும் கூட. இதற்கு நாங்கள் பயப்படமாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க வெளியிட்டுள்ள போஸ்டரில், இந்தியா ஆபத்தில் உள்ளது. இது காங்கிரஸ் கட்சியின் தயாரிப்பு ஜோர்ஜ் சோரோஸ் இயக்கும் ராவண் என ராகுல் காந்தியை பல தலைகளுடன் சித்தரித்துள்ளது. அதில், “நவீன யுகத்தின் ராவணன் இங்கே. இவன் ஒரு தீயசக்தி, தர்மத்துக்கு எதிரானவன், இவனது நோக்கம் இந்தியாவை அழிப்பதுதான்” என்றும் தெரிவித்துள்ளது.

பா.ஜ.கவின் இந்த போஸ்டர் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி வத்ரா தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மரியாதைக்குரிய மோடி, ஜெ.பி. நட்டா அரசியல் மற்றும் விவாதங்களை நீங்கள் எந்த அளவுக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறீர்கள்? வன்முறை மற்றும் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலான போஸ்டர்கள் உங்கள் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் வருவதை ஏற்றுக் கொள்கிறீர்களா? நேர்மையாக நீங்கள் சத்தியம் செய்து வெகுநேரம் ஆகவில்லை. உங்கள் வாக்குறுதியைப் போல சத்தியத்தையும் மறந்து விட்டீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெய்ராம் ரமேஷ், பிரியங்கா காந்தியைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபாலும் பாஜகவின் போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். “ராகுல் காந்தியை ராவணனாக சித்தரித்து பா.ஜ.கவின் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அருவருக்கத்தக்க போஸ்டரைக் கண்டிக்க வார்த்தைகள் இல்லை. அவர்களது நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. அவர் கொல்லப்படுவதையே அவர்கள் விரும்புகிறார்கள். அவர் ஏற்கனவே வன்முறையில் தனது பாட்டி மற்றும் தந்தையை இழந்துள்ளார். அரசியல் காரணங்களுக்காக ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டிருந்த எஸ்.பி.ஜி பாதுகாப்புத் திரும்பப் பெறப்பட்டது. பாதுகாப்பான எம்பிகளுக்கான இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்பு அவர் வேண்டுகோள் விடுத்தும் இன்னும் அவருக்கு வேறு வீடு ஒதுக்கப்படவில்லை. இவையெல்லாம் தங்களின் வெறுப்பு நிறைந்த சித்தாந்தத்தின் மையத்தை தாக்கும் , அவர்களுடைய முக்கியமான எதிரியை இல்லாமல் செய்ய நினைக்கும் பா.ஜ.கவின் சதியே” என்று தெரிவித்துள்ளார்.

இந்து தமிழ்
2023.10.06

Exit mobile version