Site icon சக்கரம்

இஸ்ரேல் – ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்தம் தொடங்கியது

ஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவிற்கு இடையேயான அதிகாரப்பூர்வமான நான்குநாள் தற்காலிக போர்நிறுத்தம் இன்று வெள்ளிக்கிழமை (24.11.2023) உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கியது.

நவம்பர் 22 அன்று போர் நிறுத்தத்திற்கான அறிவிப்பு வெளியானபோதும், போர் நிறுத்தம் தொடங்கும் நேரம் தாமதமாகி வந்த நிலையில் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கியதாக, இரண்டு தரப்பிற்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திய கத்தார் அறிவித்துள்ளது.

போர் நிறுத்தத்தை தொடர்ந்து இஸ்ரேல் சிறைகளில் உள்ள பலஸ்தீன  ஹமாஸ் கைதிகளில் விடுதலை செய்யப்பட இருக்கும் 150 பலஸ்தீனிய கைதிகளின் பட்டியலை இஸ்ரேல் கொடுத்துள்ளது. இவர்களில் பலர் விசாரணை யின்றி இஸ்ரேல் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இதில் முதல் 39 கைதிகள் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு விடுவிக்கப்படுவார்கள் என்றும், காசாவில் உள்ள பணயக்கைதிகள் இஸ்ரேலுக்கு வந்த பிறகே அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் இஸ்ரேல் தெரிவித்தது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) காசாவில் இருந்து பணயக்கைதிகளை அழைத்து செல்ல உதவும் என்று கத்தார் கூறியுள்ளது.

ஹமாஸ் விடுதலை செய்ய இருக்கும் பணயக்கைதிகளின்  பட்டியலை இஸ்ரேல் பெற்றுள்ளதாகவும், அவர்களது குடும்பத்தினருக்கு அறிவித்துள்ளதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் வியாழக்கிழமை (23.11.2023) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த 4 நாள் போர் நிறுத்தத்தில் ஒவ்வொரு நாளும் உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட மனிதாபிமான பொருட்கள் அடங்கிய 200 லொரிகளும்  மற்றும் நான்கு எரிபொருள் லொரிகளும் காசாவிற்குள் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இஸ்ரேலிய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பலஸ்தீனிய சிறுவர்கள்.

வடக்கு பகுதிக்கு செல்பவர்கள் மீது தாக்குதல்

போர் தொடங்கியதில் இருந்து வடக்கு காசா பகுதியில் வசித்து வந்த 10 இலட்சத்திற்கும் அதிகமான பலஸ்தீனர்களை தெற்கு பக்கம் நோக்கி துரத்திய இஸ்ரேல் இராணுவம், தற்போது போர் நிறுத்தம் தொடங்கிய பிறகும் தெற்கு பகுதியில் இருந்து வடக்குப் பகுதியில் தங்களின் வீடுகள்  இருந்த பகுதியை நோக்கி யாரும் வரக் கூடாது என மிரட்டல் விடுத்திருப்பதாகவும் சில இடங்களில்  துப்பாக்கியால் சுட்டும், புகைக்குண்டுகளை வீசியும்  தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. 

யுத்தம் தொடங்கிய ஒக்ரோபர் 7 முதல் இதுவரை 6 ஆயிரம் குழந்தைகள், 4 ஆயிரம் பெண்கள் என 14 ஆயிரத்து 800 பலஸ்தீனர்களை இஸ்ரேல் இராணுவம் கொன்று குவித்துள்ளது. 1 இலட்சத்திற்கும் அதிகமான குடியிருப்புகளையும் அழித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சில முக்கிய கள நிகழ்வுகள்

– அ. அன்வர் உசேன்

Exit mobile version