Site icon சக்கரம்

பிரேசில் ஜனாதிபதி  லூலா: இஸ்ரேலின் செயல் ஹிட்லரின் இனப்படுகொலையை ஒத்தது!

ரண்டாம் உலகப்போரின் போது யூதர்களை ஹிட்லர்  படுகொலை செய்தது போல காஸாவில் பலஸ்தீனர்களை  இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருகிறது என பிரேசில் நாட்டின் இடதுசாரி ஜனாதிபதி  லூலா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஆப்பிரிக்க ஒன்றியத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போது, இதனை தெரிவித்தார். மேலும் காஸாவில் நடப்பது போர் அல்ல, இனப்படுகொலை என தெரிவித்தார்.  மேலும் இஸ்ரேல் இராணுவத்தின் அராஜகங்கள்  குறித்துப்  பேசும் போது, இது இரு நாட்டு இராணுவ வீரர்களுக்கு  இடையிலான போர் அல்ல.

இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட இராணுவம், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்  எதிராக நடத்தி வரும் போர் என்று குறிப்பிட்டார். மேலும் இது போன்ற கொலை, ஹிட்லர் 60 இலட்சம் யூதர்களை இனப்படுகொலை செய்த போது நடந்தது.

வரலாற்றில் வேறு எப்போதும் இது போன்ற இனப்படுகொலைகள் நடக்கவில்லை என தெரிவித்தார். லூலாவின் கருத்துக்களை தொடர்ந்து, இஸ்ரேல்  வெளியுறவுத்துறை அமைச்சர் காட்ஸ், பிரேசிலின் தூதரை அழைத்து கண்டிக்க இருப்பதாகவும் தங்களை தற்காத்துக்கொள்ளும் இஸ்ரேல் நாட்டின் உரிமையை நாங்கள் எப்போதும் யாருடனும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் எனவும்  இனப்படுகொலையை நியாயப்படுத்தி தனது எக்ஸ் (X) தளத்தில்  தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசியுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும் இது எங்களது தற்காப்பு உரிமை என இனப்படுகொலையை நியாயப்படுத்தி கூறியுள்ளார்.

இந்த உரையின் போது இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் ஒக்ரோபர் 7 தாக்குதலை ஒரு பயங்கரவாதச்  செயல் என்று லூலா கண்டித்தார். மேலும் அதற்கு பதிலடி என காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் கொலை வெறியாட்டத்தைக்  கண்டித்துள்ளார்.    

மேலும் பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா அமைப்பிற்கு அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பணக்கார நாடுகள் நிதி உதவிகளை நிறுத்தியதை கண்டித்தார்.  இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 28,858 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவார்கள்.

Exit mobile version