டெல்லி நோக்கிய பேரணியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் இருக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் அவர்களை ஆதரிக்கிறோம். விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும் என்று நாங்கள் வெளிப்படையாகக் கூறி இருக்கிறோம். விவசாயிகளின் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டப்படியான உத்தரவாதமாக இருக்க வேண்டும். எங்கள் தேர்தல் அறிக்கையில் நாங்கள் இதை கூற இருக்கிறோம். அனைத்து விளைபொருட்களுக்கும் இல்லாவிட்டலும், அத்தியாவசிய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையையாவது சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
‘கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது, விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம் என வாக்குறுதி அளித்த பிரதமர் நரேந்திர மோடி, அதற்காக எதையும் செய்யாதது ஏன்?’ என்று மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜித்து பத்வாரி குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “2014 மக்களவைத் தேர்தலின்போது விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம் என பிரதமர் மோடி கூறினார். தற்போது விவசாயிகள் செய்த தவறுதான் என்ன? தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு உரிய விலையை விவசாயிகள் பெற முடியாதது ஏன்?
விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம் என மோடி கூறி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. எதுவும் நடக்கவில்லை. தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் பலமுறை போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அரசு அவர்களோடு பல கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி இருக்கிறது. ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக்க அரசு இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை” என குற்றம் சாட்டினார்.
இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது என்று மத்திய வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான்காவது சுற்று பேச்சுவார்த்தைக்கு பின்னர், எம்எஸ்பி கோரிக்கை, பயிர் பல்வகைப்படுத்துதல், பயிர் கழிவுகளை எரித்தல், வழக்குகள் போன்ற அனைத்து பிரச்சினைகள் குறித்தும் 5-வது சுற்றில் பேச அரசு தயாராக இருக்கிறது. விவசாயத் தலைவர்களுக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த நான் அழைப்பு விடுக்கிறேன். அமைதியை பேணுவதற்கு இது மிகவும் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், பஞ்சாப் – ஹரியாணா எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் ‘டெல்லி சலோ’ பேரணியை இன்று (21.02.2024) மீண்டும் தொடங்கியபோது, அதைத் தடுத்து நிறுத்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை ஹரியாணா போலீஸார் வீசினர். இதனால் மீண்டும் அங்கு பரபரப்பு சூழல் நிலவுகிறது.
ஷம்பு எல்லையில் விவசாயிகளின் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நில அகழ்வு இயந்திரங்கள் மற்றும் புல்டோசர்கள் உரிமையாளர்களுக்கு ஹரியாணா போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பொக்லைன்ஸ் மற்றும் ஜேசிபி உரிமையாளர்கள் மற்றும் அவற்றை இயக்கும் தொழிலாளர்களே, நீங்கள் போராட்டக்காரர்களுக்கு உங்களின் உபகரணங்களை பயன்படுத்தி உதவி செய்ய வேண்டாம்.
உங்களுடைய இயந்திரங்களை போராட்டக் களத்தில் இருந்து வெளியே எடுத்துச் செல்லுங்கள். அவை பாதுகாப்பு படையினருக்கு எதிராகவும், அவர்களைக் காயப்படுத்தவும் பயன்படுத்தப்படலாம். அது ஜாமீனில் வெளியே வர முடியாத குற்றமாகும். மேலும், நீங்களும் கிரிமினல் குற்றத்துக்கு ஆளாகலாம்” என்று எச்சரித்துள்ளது.
14,000+ விவசாயிகள் பேரணி: மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரித்து டெல்லி நோக்கிச் செல்லும் போராட்டத்தில் 14 ஆயிரம் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். 1200 டிராக்டர்கள், 300 கார்கள், 10 மினி பஸ்களில் அவர்கள் குவிந்தனர். கண்ணீர் புகை குண்டுகளை எதிர்கொள்ளும் வகையில், விவசாயிகள் பலரும் தங்கள் முகத்தில் கவசம் அணிந்துள்ளன. சாக்குகளை தண்ணீரில் நனைத்து வைத்துள்ளனர். டிராக்டர்களையே தங்குமிடம் போல் தயார் செய்தும் வைத்துள்ளனர்.
இந்தப் பின்புலத்துடன், பஞ்சாப் – ஹரியாணா எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று டெல்லி நோக்கி செல்ல முயன்றபோது, அவர்களைத் தடுத்து நிறுத்த ஹரியாணா போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் மீண்டும் அங்கு பரபரப்பு சூழல் நிலவுகிறது.
பலத்த பாதுகாப்பு: டெல்லிக்குள் நுழைய விடாமல் விவசாயிகளை தடுக்க பஞ்சாப் – ஹரியாணா எல்லை பகுதிகளில் 8 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. டிக்ரி மற்றும் சிங்கு எல்லைகளில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பல அடுக்கு தடுப்பு வேலிகள் அமைத்துள்ளனர். கொன்க்ரீட் தடுப்புகள், வாகனங்கள் முன்னேற இயலாத வண்ணம் இரும்பு ஆணிகள் பதிக்கப்பட்ட தடுப்புகள் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். காசிபூர் எல்லையில் 2 பாதைகள் மூடப்பட்டுள்ளன.
சாலை மார்க்கம் மட்டுமல்லாமல் ஆறு, கால்வாய் வழியாகக் கூட விவசாயிகள் முன்னேறிவிடக் கூடாது என்று காவல் துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. பஞ்சாப் காவல் துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த உத்தரவின் பேரில் கெடுபிடிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைவர்கள் மட்டுமே முன்னேறுவோம்: இதனிடையே, விவசாய சங்கத் தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறுகையில், “இளைஞர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் யாரும் இப்போது முன்னேற வேண்டாம். விவசாயத் தலைவர்கள் மட்டும் டெல்லி நோக்கி முன்னேறுகிறோம். நாங்கள் யாரையும் தாக்கப்போவதில்லை. நாங்கள் வெறுங்கையுடன் செல்கிறோம். நாங்கள் டெல்லியில் மத்திய அரசை முடிவு எடுக்கச் சொல்லி வலியுறுத்துவோம்.
அரசாங்கம் எங்களை கொலைகூட செய்யட்டும். ஆனால், எங்களை அடக்குமுறைக்கு உள்ளாக்க வேண்டாம். குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை அறிவித்து பிரதமர் இந்தப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் வேண்டுகோள். விவசாயிகளை ஒடுக்கும் அரசாங்கத்தை தேசம் ஒருபோதும் மன்னிக்காது” என்றார்.
மேலும் அவர், “விவசாயிகளை ஒடுக்கும் அரசாங்கத்தை தேசம் ஒருபோதும் மன்னிக்காது. ஹரியாணா கிராமங்களில் துணை இராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் செய்த குற்றம்தான் என்ன? உங்களை நாங்கள் பிரதமராக்கியதுதான் குற்றமா? எங்களை பாதுகாப்புப் படைகள் கட்டுப்படுத்தும் என்று நாங்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அரசியல் சாசனத்தை மதித்து நடங்கள். நாங்கள் அறவழியில் அமைதியாக டெல்லியை நோக்கி முன்னேற அனுமதியுங்கள். அது எங்களின் உரிமை” என்று தெரிவித்தார்.
அதேபோல் விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் டலேவால் கூறுகையில், “எங்கள் இலக்கு அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது அல்ல. எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்த்து எங்களுக்குச் சாதகமாக முடிவு எடுக்க வேண்டும் என்றே வலியுறுத்துகிறோம். ஆனால் மத்திய அரசு எங்கள் கோரிக்கைகளை கண்டும் காணமால் கிடப்பில்போடும் உத்தியைக் கடைபிடிக்கிறது. எல்லையில் பல அடுக்கு தடுப்பு வேலிகளை அமைத்து நாங்கள் டெல்லியை நோக்கி முன்னேறவிடாமல் தடுக்கிறது” என்று பா.ஜ.க அரசு மீது குற்றம் சுமத்தினார்.
மீண்டும் பேச்சுக்கு மத்திய அரசு அழைப்பு: போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது என்று மத்திய வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான்காவது சுற்று பேச்சுவார்த்தைக்கு பின்னர், எம்.எஸ்.பி (Minimum Support Price – MSP) கோரிக்கை, பயிர் பல்வகைப்படுத்துதல், பயிர் கழிவுகளை எரித்தல், வழக்குகள் போன்ற அனைத்து பிரச்சினைகள் குறித்தும் 5 ஆவது சுற்றில் பேச அரசு தயாராக இருக்கிறது. விவசாயத் தலைவர்களுக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த நான் அழைப்பு விடுக்கிறேன். அமைதியை பேணுவதற்கு இது மிகவும் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.
கோரிக்கைகள் என்னென்ன? – வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளின்படி 23 வகையான பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும். இதை உறுதி செய்து சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 ஆம் திகதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
250 விவசாய சங்கங்கள்: பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 250 விவசாய சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்று உள்ளன. ஆயிரக்கணக்கான விவசாயிகள் பஞ்சாபில் இருந்து தலைநகர் டெல்லியை நோக்கி பேரணியாக செல்கின்றனர். அவர்கள் பஞ்சாப் – ஹரியாணா எல்லைப் பகுதியான ஷம்புவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு சார்பில் விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் கடந்த 18 ஆம் திகதி 4 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறும்போது, “விவசாயிகளின் கோரிக்கை அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. மத்தியில் புதிய அரசு அமைந்த பிறகு விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். இப்போதைக்கு பருத்தி, சோளம், துவரை, உளுந்து, மசூர் பருப்பு ஆகியவற்றை 5 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்ய உறுதி அளிக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து கிஷான் மஸ்தூர் மோர்ச்சா சங்கத்தின் தலைவர் ஷிரவன் சிங் பாந்தர், பாரதியகிஷான் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் தலேவால் கூறும்போது, “குறிப்பிட்ட 5 பயிர்களுக்கு மட்டும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்து அதன் அடிப்படையில் கொள்முதல் செய்ய மத்திய அரசு சில பரிந்துரைகளை முன்வைத்தது. இதை நிராகரிக்கிறோம்” என்றனர்.