-ஆர்.சிங்காரவேலு
2023 ஒக்ரோபர் 7 முதல் காஸாவில் பலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்து வரும் இஸ்ரேலை கண்டித்து, 16 ஆவது முறையாக இங்கிலாந்தில் தேசிய அளவிலான பேரணி/ஆர்ப்பாட்டம் இலண்டனில் ஜூலை 6 இல் நடைபெற்றது. இதில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பலஸ்தீன ஒருமைப்பாடு இயக்கமும், யுத்தத்தை நிறுத்துங்கள் கூட்டணியும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜெர்மி கோர்பின் (Jeremy Corbyn) உட்பட 5 சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு எழுச்சி உரை ஆற்றினர். கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தலைமையிலான புதிய தொழிலாளர் கட்சி அரசு, இனப் படுகொலையை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர்.
எம்பிக்களின் எழுச்சி உரையின் சுருக்கம் :-
‘இதோ நாங்கள் ஒரு மக்கள் இயக்கம்; ஒரே குரலில் பேசுகிறோம்; ஒன்றாக பேரணியில் பங்கேற்கிறோம்; இணைந்து பணியாற்றுகிறோம்; ஒன்றாக கோரிக்கை எழுப்புகிறோம்; ஒன்றாக சாதிப்போம்; எப்போதும் பின்வாங்க மாட்டோம். பயங்கர ஆயுதங்கள், அவற்றை இயக்கும் கணனிகளை இஸ்ரேலுக்கு பிரிட்டன் வழங்குவதில் என்ன நியாயம் உள்ளது?’ என ஜெர்மி கோர்பின் கேட்டார்.
எனது தாய்நாடு பலஸ்தீனம், சர்வதேச மனித உரிமைகளின் புதை குழியாக பலஸ்தீனம் மாறி உள்ளது. மனித குலத்தின் நலனுக்காக இங்கு கூடியுள்ளோம். 10 டௌனிங் ஸ்ட்ரீட்டில் எந்த பிரதமர் வசிக்கிறார் என்பது முக்கியமல்ல. வெப்பமா?மழையா என்பது முக்கியமல்ல. இப்பேரணிக்கு தொழிற்சங்கங்களின் ஆதரவு உள்ளது. சாமானிய மக்கள் முஸ்லிம், யூதர், கிறிஸ்தவர், இந்து, புத்த மதம் அல்லது எந்த மதமும் சாராதவர் இப்பேரணியில் பங்கேற்றுள்ளனர்.
ஈரான் ஜனாதிபதி முன்னுள்ள சவால்கள்
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi), இந்த ஆண்டு மே மாதம் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில், வெளியுறவு அமைச்சர் மற்றும் ஆறு பேருடன் இறந்துவிட்டார். ஜூன் 28 இல் நடைபெற்ற ஜனாதிபதிக்கான தேர்தலில் மசூட் பெஜெஸ்கியான் (Masoud Pezeshkian) 42 சதவிகிதத்திற்கு மேல் வாக்கு பெற்றார். ஜூலை 7 இல் நடைபெற்ற இரண்டாவது சுற்று தேர்தலில் 54 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஓகஸ்ட் துவக்கத்தில் பெஜெஸ்கியான் பதவி ஏற்பு விழா நடைபெறும் .
பெஜெஸ்கியான், (வயது 70) ஒரு மருத்துவர். 2006 முதல் ஈரான் எம்பி ஆக உள்ளார். ஒருமுறை சுகாதார அமைச்சராகவும் இருந்துள்ளார். நாடாளுமன்றத்தில் பழமைவாதிகளுக்கு பெரும்பான்மை உள்ளதால், மித சீர்திருத்தவாதி ஆன இவர், தனது தேர்தல் வாக்குறுதிகளை அமலாக்க பல சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. பெண்கள் சம்பந்தப்பட்ட கொள்கைகளில் சீர்திருத்தம் மற்றும் சிறப்பான சேம நல நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்பது அவரது வாக்குறுதி. ஈரானிய பொருளாதாரம், அமெ ரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளால், உயர் பணவீக்கம், குறைவான முதலீடுகள் மற்றும் தேக்க நிலையில் உள்ளது.
வெளியுறவுக் கொள்கையை பொறுத்தவரை, ஈரான் அணுசக்தி ஒப்பந்தம், தொடர்பாக மேற்கத்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி புதுப்பிக்கப் போவதாக பெஜஸ்கியான் கூறியுள்ளார். 2018 இல் தன்னிச்சையாக அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொண்டது குறிப்பிடத்தக்கது. லெபனானின் ஹெஸ்புல்லா குழு தலைவருக்கு, ஜனாதிபதி எழுதிய கடிதத்தில், ஹெஸ்புல்லாவிற்கு ஈரானின் ஆதரவு தொடரும் என தெரிவித்துள்ளார். இதனால் சிரியா, யேமன், ஹெஸ்புல்லா போன்ற அமைப்புகளுக்கு ஈரானின் ஆதரவு தொடரும். ரஷ்யா, சீனாவுடன் இணைந்து பல துருவ உலக அமைப்புக்காக ஈரான் பாடுபடும்.
புதிய மக்கள் முன்னணியை ஆட்சி அமைக்க அழைக்க மறுக்கும் பிரெஞ்சு ஜனாதிபதி
பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் (Emmanuel Macron), நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்து விட்டு, திடீர் தேர்தலை அறிவித்தார். தேர்தல் ஜூன் 30 மற்றும் ஜூலை 7 என இரு கட்டங்களாக நடைபெற்றது. 557 உறுப்பினர் கொண்ட நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை பெற 289 இடங்கள் தேவை .
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது புதிய மக்கள் முன்னணிக்கு 182 இடங்களும், இம்மானுவேல் மக்ரோனின் தாராளவாத கூட்டணிக்கு 168 இடங்களும், தீவிர வலதுசாரி தேசிய பேரணிக்கு 143 இடங்களும் கிடைத்தன. எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை.
புதிய மக்கள் முன்னணியில் அதிக இடங்களை தலை வணங்கா பிரான்ஸ் என்ற கட்சியும், மீதி இடங்களை கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட், பசுமைக் கட்சிகளும் பெற்றன. இது இடதுசாரிகளின் கூட்டணி. பொது சேவைகளை பலப்படுத்துவது, விலை உயர்வை கட்டுப்படுத்துவது போன்ற வாக்குறுதிகளை இந்த முன்னணி வழங்கியது.
இமானுவேல் மக்ரோன் தனது தாராளவாத கூட்டணியின் தோல்வியை ஏற்க மறுத்து வருகிறார். அதனால் புதிய அரசை அமைக்க மக்ரான் புதிய மக்கள் முன்னணியை அழைக்க தயக்கம் காட்டி வருகிறார். பிரதமர் கேபிரியல் அட்டால் (Gabriel Attal), நாட்டின் நிலைத்தன்மை ஏற்படுத்த, ராஜினாமா செய்ய விரும்பினார். ஆனால் அவரை, நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டாம்; தொடர்ந்து பிரத மராக இருங்கள் என மக்ரோன் கூறுகிறார். இதை புதிய மக்கள் முன்னணி கடுமையாக ஆட்சேபித்துள்ளது. மக்ரோனின் நவீன தாராளமய கொள்கைகளை எதிர்த்துப் போராடிய, தீவிர வலதுசாரிகள் ஆட்சிக்கு வருவதை தடுத்திட போராடிய, சமூக இயக்கங்களும் மக்ரோனின் தயக்கத்தை கண்டித்துள்ளன.
வாக்காளர்கள் தங்களுக்கு வழங்கியுள்ள பொறுப்பை நிறைவேற்ற தயாராக இருப்பதாக புதிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. விரைவில் தனது பிரதமர் வேட்பாளரை அறிவிக்க உள்ளது.
நிமிர்ந்து நிற்கும் சாகல் (Sahel) பிராந்தியம்!
பர்கினா பாஸோ, கேமரூன், சாட், காம்பியா, கினியா மௌரிடேனியா, மாலி, நைஜர், நைஜீரியா, செனகல் (Burkina Faso, Cameroon, Chad, The Gambia, Guinea Mauritania, Mali, Niger, Nigeria and Senegal) ஆகிய 9 ஆப்பிரிக்க நாடுகள் உள்ள பிராந்தியம் சாகல் (Sahel) பிராந்தியம் என அழைக்கப்படுகிறது.
ஜூலை 6, 7 இல் சஹாரா பாலைவனத்திற்கு தெற்கே உள்ள மூன்று பிரதான சாகல் நாடுகள் பர்கினா பாஸோ, மாலி, நைஜர் சாகல் நாடுகளின் கூட்டணியை உருவாக்கின. இது முதல் உச்சி மாநாடு. இதை உருவாக்கும் வேலை 2023 முதல் துவங்கியது. தலைவர்கள் அவ்வப்போது கலந்து பேசி வந்தனர்.
பிரான்ஸ் தலையீடு காரணமாக, இந்த மூன்று நாடுகளிலும் ஏராளமான பிரச்சனைகள் தோன்றின. நேட்டோ (NATO) ஆதரவுடன் அல் கைடா (AL-Qaida) தீவிரவாத இயக்கம் லிபியாவை அழித்தது. பிரெஞ்சு மற்றும் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளால் மூன்று நாடுகளும் பாதிக்கப்பட்டன. மூன்று நாடுகளை பிரான்ஸ் கடுமையாகச் சுரண்டிக் கொண்டிருந்தது. 2020 முதல் 5 முறை மூன்று நாடுகளில் ஆட்சிக்கு எதிராக சதி நடந்தது. சிவிலியன் தலைவர்களை இணைத்துக் கொண்டு, மூன்று நாடுகளிலும் புதிய தலைவர்கள் சதிகள் மூலம் ஆட்சிக்கு வந்தனர்.
ஐரோப்பாவில் ஒளி; நைஜரில் இருளா?
கடந்த சில ஆண்டுகளாகவே, இந்த மூன்று சாகல் நாடுகளும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டன . இப்ராஹிம் தரோர் (Ibrahim Traoré) என்ற பர்கினோ பாஸோ ஜனாதிபதி, உச்சி மாநாட்டு முடிவில் பின்வருமாறு கூறினார்: ‘ஆப்பிரிக்காவை அடிமைகளின் சாம்ராஜ்யமாக ஏகாதிபத்தியவாதிகள் பார்க்கின்றனர்; ஆப்பிரிக்க மக்களும், நிலமும், அடி நிலமும் அவர்களுக்கு சொந்தம் என நம்புகின்றனர். நைஜரில் கிடைக்கும் யுரேனியத்தால் ஐரோப்பாவில் விளக்கு எரிகிறது. ஆனால் நைஜரின் வீதிகளில் இருள் சூழ்ந்துள்ளது. இவை அனைத்தும் மாற வேண்டும்’.
உச்சி மாநாட்டில் மக்களும், சரக்குகளும் தங்கு தடையற்ற வகையில் மூன்று நாடுகளுக்கு இடையே செல்வதற்கு வழிவகுக்கும் வகையில் ஓர் ஒப்பந்தம் போடப்பட்டது. ஐ.எம்.எப் (IMF) ஐ சார்ந்து நிற்பதை தவிர்ப்பதற்காக, நிலை நிறுத்தும் நிதி உருவாக்கவும், உலக வங்கியை சார்ந்து நிற்காமல் இருக்க முதலீட்டு வங்கியை ஏற்படுத்துவது எனவும் ஒப்பந்தங்கள் ஏற்பட்டன.
2024 பெப்ரவரியில் ஐ.நா வளர்ச்சி திட்டம், சாகல் மனித வளர்ச்சி அறிக்கை 2023 ஐ வெளியிட்டது. சாகல் நாடுகளில் தங்கம், யுரேனியம், லித்தியம், வைரம் ஏராளமாக உள்ளன. ஆனால் மக்களோ வறுமையில் உள்ளனர். மேற்கத்திய பன்னாட்டு சுரங்கக் கம்பெனிகள், தாதுப் பொருட்களை வெட்டி எடுத்து கொள்ளையடிக்கின்றன.
2023 நவம்பரில் மாலி, 3 நாடுகளின் பொருளாதார நிபுணர்களை அழைத்துப் பேசி வளர்ச்சி திட்டங்களை வரையறுத்தது. ஆனால் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார கூட்டமைப்பு திணித்துள்ள பொருளாதாரத் தடைகளால், இத்திட்டங்களை நிறைவேற்ற முடியாது .தங்கள் நாடுகள், உண்மையான சுதந்திரத்தை இன்னமும் தேடிக் கொண்டிருப்பதாக நைஜரின் அமைச்சர் ஒருவர் கூறுகிறார்.
உக்ரைனை தூண்டிவிடும் நேட்டோ கூட்டணி நாடுகள்
வடக்கு அட்லாண்டிக் இராணுவக் கூட்டணியான நேட்டோ 1949 ஏப்ரல் 4 இல் உருவானது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் 10 ஐரோப்பிய நாடுகள் இணைந்து நேட்டோவை உருவாக்கின. பத்து முறை நேட்டோவை விரிவாக்கம் செய்ததில், மேலும் 20 நாடுகள் நேட்டோவில் இணைந்தன. அரசியல் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சனைகளை விவாதித்து, பல கூட்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன. 2023, 2024 இல் கடைசியாக நேட்டோவில் இணைந்த நாடுகள் பின்லாந்து, சுவீடன். சோசலிச நாடுகளின் வார்சா (Warsaw) கூட்டணி, நேட்டோவிற்கு எதிராக உருவானது. சோவியத் யூனியன் பின்னடைவுக்குப் பிறகு வார்சா கூட்டணி கலைக்கப்பட்டு விட்டது. எனவே நேட்டோ கலைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
உக்ரைன் நேட்டோவில் இணைய விண்ணப்பித்தது. உக்ரைன் இணைக்கப்பட்டால், உக்ரைனின் படைகள் உக்ரைனை எல்லையாக கொண்ட ரஷ்யாவின் எல்லை வரை நிறுத்தப்படும். இது ரஷ்ய பாதுகாப்பிற்கு குந்தகமானது எனக் கருதி, 2022 பெப்ரவரி 24 இல், ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. சில மாதங்களிலேயே பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியும், அமெரிக்காவும், நேட்டோவும் அதை தடுத்து விட்டன. யுத்தம் நீடிப்பதற்கு அமெரிக்காவும், நேட்டோவுமே காரணம்.
ஜூலை 9,10 இல் வாஷிங்டனில், நேட்டோவின் 75 ஆவது உச்சி மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் மைய விவாதப் பொருளாக, உக்ரைன் இருந்தது. உக்ரைனை நேட்டோவில் நிச்சயமாக உறுப்பினராக்குவோம்; உக்ரைனுக்கு நேட்டோநாடுகள் தேவையான இராணுவ பயிற்சி, ஆயுதங்களை வழங்குவோம்; எழுநூறு இராணுவ வீரர் கொண்ட பொது நேட்டோ படையை உருவாக்கி, உக்ரைனுக்கு ஆதரவாக பயன்படுத்துவோம் என நேட்டோவின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் (Jens Stoltenberg) கூறினார். மேலும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், தென் கொரியா ஆகிய இந்தோ பசிபிக் பிராந்திய நாடுகளுடன் நேட்டோ நட்பு வைத்துக் கொள்ளும் எனவும் கூறினார். அடுத்த ஆண்டுக்குள் உக்ரைனுக்கு 4300 கோடி டொலர் இராணுவ உதவிக்கு வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
கடந்த வாரம், நூற்றுக்கணக்கான யுத்த எதிர்ப்பாளர்கள், வாஷிங்டனில் நேட்டோ உச்சி மாநாட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். யுத்தம், வன் முறையை, ஏகாதிபத்தியம் தூண்டுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.
மண்டேலாவை மதிக்கிறாரா ஸ்டார்மர்?
இஸ்ரேலில் பலஸ்தீனத்தில் உள்ள சாமானிய மக்களின் குரல்களுக்கு செவி சாயுங்கள்! உலகம் முழுவதும் பலஸ்தீனருக்கு ஆதரவாக குரல் எழுப்பி வரும் பல்கலைக்கழக மாணவர்களின் குரல்களுக்கு மதிப்பு அளியுங்கள்! வரலாற்றில் நீங்கள் எந்தப் பக்கம் இருக்கிறீர்கள்? இனப்படுகொலை பக்கமா? அல்லது அமைதியின் பக்கமா? உலகம் முழுவதும் உள்ள பலஸ்தீன அகதிகளுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று கருதுகிறீர்களா?
நெல்சன் மண்டேலா எனது குருநாதர் என கெய்ர் ஸ்டார்மர் கூறுகிறார். தென் ஆப்பிரிக்காவில் நிலவிய நிறவெறியை விட, இஸ்ரேலின் இனவெறி மோசமானது; கொடூரமானது என மண்டேலா கூறினார். 27 ஆண்டுகளாக நிறவெறி கொடுமையினால் சிறைவாசம் அனுபவித்த, நெல்சன் மண்டேலா, பலஸ்தீன மக்களின் விடுதலை இன்றி, தென் ஆப்பிரிக்க மக்களின் விடுதலை முழுமை அடையாது என்றார். இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருப்பதை பிரிட்டன் நிறுத்திக் கொள்ள வேண்டும்; உடனடியாக பலஸ்தீனம் அங்கீகரிக்கப்பட வேண்டும்; ஐநா நிவாரண நிதிக்கு பிரிட்டிஷ் புதிய அரசு நிதி வழங்க வேண்டும்.
மதுரோவை கொல்லச் சதி
வெனிசுவேலாவில் ஜனாதிபதியாக நிக்கோலஸ் மதுரோ உள்ளார். ஜூலை 28 இல் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில், இவர் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இடதுசாரியான இவரின் வெற்றியை தடுத்து நிறுத்த, அமெரிக்க ஏகாதிபத்தியம் முயன்று வருகிறது. அண்டை நாடான கொலம்பியாவிலிருந்து ஆயிரம் துணை இராணுவப் படை கொண்ட குழுவை, வெனிசுவேலாவிற்குள் வரவழைத்து, வெனிசுவேலாவின் மின்சார கட்டமைப்பை சீர்குலைக்கவும், மதுரோ வெற்றி பெற்றால் நடைபெறும் பேரணிகளில் ஊடுருவி கலகம் ஏற்படுத்துவதற்கும், வெனிசுவேலாவின் தீவிர வலது சாரி எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. இதை கொலம்பியாவின் துணை இராணுவக் குழுவே, மதுரோவிற்கு தெரிவித்து, எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டது. இன்னொரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட மாட்டோம் என கொலம்பியா துணை இராணுவக் குழு தெரிவித்துள்ளது.