– அ. அன்வர் உசேன்
இஸ்லாத்தில் முத்தலாக் எனும் மணவிலக்கு தொலைபேசி வழியாக அல்லது ‘வாட்சப்’ மூலமாக சொல்லப்பட்டது என பல செய்திகள் உண்டு. இது கணவனால் அப்படி சொல்லப்படும் விவாகரத்து! முன்னர் இது வழக்கமாக இருந்தது. தற்சமயம் இது வெகுவாக குறைந்துவிட்டது. இப்பொழுது டுபாய் இளவரசி ‘இன்ஸ்டாகிராம்’ மூலமாக தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார். இது பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றன. எனினும் இந்த செய்தி இந்தியா அல்லது மேற்கத்திய நாட்டு ஊடகங்களில் வெளிவந்த அளவுக்கு அல் ஜசீரா உட்பட வளைகுடா பத்திரிகைகளில் வரவில்லை.
ஏன் இளவரசியின் மணவிலக்கு?
தனது ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் டுபாய் இளவரசி கீழ்கண்ட செய்தியை பதிவு செய்துள்ளார்: “அன்பான கணவரே! நீங்கள் மற்ற துணைகளோடு மூழ்கி இருப்பதால் என்னுடைய மணவிலக்கை அறிவிக்கிறேன். உங்களை விவாகரத்து செய்கிறேன்; விவாகரத்து செய்கிறேன்; விவாகரத்து செய்கிறேன். உங்களை கவனித்துக் கொள்ளுங்கள். இப்படிக்கு உங்கள் முன்னாள் மனைவி.”
மணவிலக்குக்கு காரணம் என இளவரசி சொல்வது அவரது கணவருக்கு மற்ற சிலரோடு தொடர்பு இருப்பதால் என தெரிகிறது. ஷேக்கா மெஹரா (Sheikha Mahra) எனும் பெயர் கொண்ட (முழுப் பெயர் மிக நீளமானது) இந்த இளவரசியின் தந்தைதான் டுபாயின் பிரதமர் மற்றும் உதவி ஜனாதிபதி. இவர்களது குடும்பம்தான் டுபாயை நிர்வகித்து வருகிறது. 2023 ஆம் ஆண்டு மே மாதம் இவர்களது திருமணம் மிக ஆடம்பரமாக நடைபெற்றது. திருமணத்துக்கு முன்பே இருவரும் பழகினர். காதல் திருமணம் இல்லை என்றாலும் இரு குடும்பங்களின் பரிபூரண சம்மதத்துடனும் மகிழ்வுடனும் இந்த திருமணம் நடைபெற்றது.
2024 ஆம் ஆண்டு மே மாதம் இளவரசி குழந்தை பெற்றார். அதுவரை இவர்களின் வாழ்க்கை மிகவும் மகிழ்வாகவே நகர்ந்தது என்பதை அவர்களின் சமூக ஊடகங்கள் செய்திகளும் புகைப்படங்களும் வெளிப்படுத்தின. எனினும் இரு வாரங்களுக்கு முன்பு குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை போட்டு “நாங்கள் இருவர் மட்டுமே” என பதிவிட்டது சிலருக்கு சந்தேகத்தை கிளப்பியது. பின்னர் இளவரசியும் அவரது கணவரும் சமூக ஊடகங்களில் ஒருவரையொருவர் பின் தொடர்வதை நிறுத்தினர். இப்பொழுது மணவிலக்கை இளவரசி அறிவித்துள்ளார்.
இஸ்லாத்தில் மணவிலக்கு வடிவங்கள்
மூன்று முறை மணவிலக்கு என்று சொல்லி விலகுவது ஆண்களுக்குரியது; அதனை எப்படி பெண் செய்யலாம் என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இஸ்லாத்தில் மணவிலக்கு என்றால் ஆண்கள் முன்மொழியும் முத்தலாக் மட்டும்தான் என பொதுவான சிந்தனை உள்ளது. உண்மையில் இஸ்லாத்தில் குறைந்தபட்சம் 10 வகையான மணவிலக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆண்களுக்கு 4 வகையான மணவிலக்கு உரிமைகள் உள்ளன. அதில் ஒன்றுதான் “தலாக்-உல்-பிதத்” எனப்படும் முத்தலாக். ஆணும் பெண்ணும் பரஸ்பர ஒப்புதலோடு செய்யப்படும் மணவிலக்கு “முபாரத்” எனப்படுகிறது. பெண்களுக்கு 5 வகையான மணவிலக்கு உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமானது “குலா நாமா” எனப்படும் உரிமையாகும். இந்த உரிமை அடிப்படையில் பெண் விவாகரத்து கேட்டால் எவ்வித காரணத்தையும் சொல்ல வேண்டியது இல்லை. கணவன் விவாகரத்து தந்துதான் தீர வேண்டும்.
இதுபற்றி நபிகள் நாயகம் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை ஜியாவுஸ் சலாம் எனும் பத்திரிகையாளர் குறிப்பிடுகிறார். ஒரு பெண் குலா நாமா அடிப்படையில் மணவிலக்கு கோருகிறார். ஆனால் அவளது கணவரோ நபிகள் நாயகத்திடம் அவள் இல்லாமல் தன்னால் வாழ இயலாது என முறையிடுகிறார். அந்த பெண்ணை வரச்சொல்லி நபிகள் நாயகம் ஏன் மணவிலக்கு கேட்கிறீர்கள் என தெரிந்து கொள்ளலாமா என வினவுகிறார். அதற்கு அந்த பெண், நீங்கள் கேட்பது ஆணையா அல்லது வேண்டுகோளா என திருப்பிக் கேட்கிறார். அதற்கு நபிகள் நாயகம் நீங்கள் குலாநாமா அடிப்படையில் மணவிலக்கு கேட்பதால் நான் ஆணையிட முடியாது. வேண்டுகோளாகவே கேட்கிறேன் என பதிலளிக்கிறார். இந்த ஆணின் முகத்தை பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை; எரிச்சல் வருகிறது; எனவே எனக்கு மணவிலக்கு வேண்டும் என அந்த பெண் பதில் சொல்கிறார். உடனே நபிகள் நாயகம் மணவிலக்கை அங்கீகரித்து ஆணையிடுகிறார். இது குலா நாமாவின் கீழ் பெண்களுக்கு இருந்த உரிமையை வெளிப்படுத்துகிறது.
கலகக்குரலை வரவேற்போம்
எனினும் இந்த உரிமை கூட காலப்போக்கில் சிதைக்கப்பட்டுவிட்டது. கணவன் ஏற்றுக்கொண்டால் மட்டுமே குலா நாமா அடிப்படையில் மணவிலக்கு கிடைக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் பெறும் சில உரிமைகள் கூட எப்படி காலப்போக்கில் மறுதலிக்கப்படுகிறது என்பதற்கு இது உதாரணம். மேலும் குலா நாமா உரிமை இருந்தால் கூட அதனை பயன்படுத்தும் வாய்ப்பு எல்லா பெண்களுக்குமே கிடைத்துவிடுவது இல்லை. உதாரணத்துக்கு ஓர் இஸ்லாமிய ஏழைப்பெண் வாழ்வாதாரத்துக்கு வாய்ப்பு இல்லையெனில் குலாநாமா உரிமை கூட அவர் பயன்படுத்த இயலாது. உரிமை பெயரளவுக்கு மட்டுமே இருக்கும். ஆனால் துபாய் இளவரசி அத்தகைய உரிமையை பயன்படுத்த இயலும். அதற்கான பொருளாதார வாய்ப்புகள் அவருக்கு உண்டு. எனினும் அவர் பெண்களுக்கு தரப்பட்ட 5 வகை மணவிலக்குகளில் எதனை தேர்வு செய்தார் என்பது தெளிவாக தெரியவில்லை.
இளவரசி மெஹரா பிரிட்டனில் சர்வதேச உறவுகள் குறித்து படித்து பட்டம் பெற்றுள்ளார். பின்னர் டுபாயில் மேற்படிப்பு முடித்துள்ளார். அவரது பல புகைப்படங்களில் பர்தா அல்லது ஹிஜாப் அணியாமல் உள்ளார். இவையெல்லாம் அவர் சில வட்டத்துக்குள் நிற்கக் கூடியவரல்ல என்பதை வெளிப்படுத்துகிறது. பெண்கள் உரிமைகளுக்கும் முன்னேற்றத்துக்கும் குரல் கொடுப்பவர் என செய்திகள் கூறுகின்றன. டுபாயில் உருவாகும் கட்டடங்கள் மற்றும் இதர வடிவமைக்கும் பணிகள் உள்ளூர் பெண்களுக்கு தரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளார். இத்தகைய பின்னணி கொண்டவர் வேறு சிலருடன் தொடர்பில் இருக்கும் தனது கணவரை விவாகரத்து செய்ததையும் அதனை பகிரங்கமாக அறிவித்ததும் ஆச்சரியமில்லைதான்! ஒப்பீட்டளவில் இது பெரிய பெண்ணுரிமை செயல் இல்லை என்றாலும் வளைகுடாவில் ஒரு அரச குடும்பத்தை சேர்ந்த பெண் இவ்வாறு செய்திருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றுதான்! எனவே இளவரசியின் கலகக்குரலை வரவேற்பதில் எந்த தவறும் இருக்க இயலாது.