Site icon சக்கரம்

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்

பிரியா

பிரியங்கா காந்தி… எப்போது தேர்தல் அரசியலுக்கு வருவார் என பலரும் எதிர்பார்த்த ஒன்று.

இந்த சூழலில் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ஒக்ரோபர் 23 ஆம் திகதி வேட்புமனுவும் தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி.

காங்கிரஸ் தொண்டர்கள் புடை சூழ சென்று வேட்புமனுவை தாக்கல் செய்த பிரியங்கா காந்தி, “எனது 35 ஆண்டுகால அரசியலில் முதல்முறையாக எனக்காக பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறேன்” என்று கூறியது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பேத்தி, ராஜீவ் காந்தி – சோனியா காந்தியின் மகள், ராகுல் காந்தியின் சகோதரி என்ற அடையாளங்களையும் தாண்டி பிரியங்கா இந்திய அரசியலின் ‘கீ ரோலர்’ என்று சொல்லக்கூடிய அளவுக்கு முக்கிய பங்கு வகிக்கிறார்.

தமிழ்நாட்டில் பிரச்சாரம்

உளவியல் படிப்பு, பௌத்தத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்துள்ள பிரியங்கா காந்தி தொழிலதிபர் ராபர்ட் வதோரவை திருமணம் செய்துகொண்டார்.

இந்தியாவின் முக்கிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தாலும் தன்னுடைய 52 வயது வரை அதாவது தற்போது வரை தேர்தல் அரசியலில் களமிறங்காமல் இருந்தார் பிரியங்கா காந்தி.

எனினும் தனது அப்பா, அம்மா, சகோதரர் என அனைவருக்காகவும் பிரச்சாரம் செய்தவர் பிரியங்கா.

1989 இல் 17 வயதில் தனது அப்பாவுக்காக பிரச்சாரம் செய்ததாக பிரியங்கா காந்தி கூறியிருக்கிறார். இதுதான் அவரது முதல் பிரச்சாரம்.

1991 இல் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு 7 ஆண்டுகள் கழித்து, தனது அம்மாவுடன் தமிழ்நாட்டுக்கு வந்து பிரச்சாரம் செய்தார் பிரியங்கா காந்தி.

“எல்லோரும் காங்கிரஸுக்கு ஓட்டு போடுங்க” என்று 1998 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி, தனது 26 வயதில் ஸ்ரீபெரும்புதூர் மக்களிடம் வாக்கு சேகரித்தார். பிரியங்காவின் இந்த ஒருவரி தமிழை கேட்டு கூட்டம் பரவசமடைந்தது.

அதன்பின்னர் 2004, 2009, 2014 தேர்தல்களில் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியிலும் ராகுல் காந்தியின் அமேதி தொகுதியிலும் பிரச்சாரம் செய்தார்.

தோல்வியும் வெற்றியும்

2019 வரை காங்கிரஸில் அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. 2019 பொதுத் தேர்தலின் போதுதான் உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார் பிரியங்கா காந்தி.

அந்த தேர்தலில் காங்கிரஸ் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸின் பாரம்பரிய தொகுதியான அமேதியில் கூட ராகுல் காந்தி வெற்றி பெறவில்லை. அப்போதுதான் மாற்றாக வயநாட்டில் போட்டியிட்ட ராகுல் காந்தி அங்கு வெற்றி பெற்றிருந்தார்.

பின்னர் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸின் கட்டமைப்பை வலுப்படுத்த 2020 ஆம் ஆண்டு முழு மாநிலத்துக்கும் காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளராகப் பிரியங்கா நியமிக்கப்பட்டார்.

அந்த சமயத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீவிரமான போராட்டம் நடந்துகொண்டிருந்தது. மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொன்றதற்கு எதிராக காங்கிரஸ் போராட்டத்தில் இறங்கியது. இதில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு தற்காலிகமாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.

தொடர்ந்து, ஆக்ராவில் காவல்துறை கஸ்டடியில் இறந்தவரின் குடும்பத்தினரைச் சந்திக்க சென்ற போதும் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார்.

இப்படியாக ஒரு அரசியல்வாதியாக இந்தியா முழுவதும் மக்களிடத்தில் பரிட்சயமானார் பிரியங்கா காந்தி.

இந்நிலையில் 2022 இல் உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அப்போது தேர்தலை கவனிக்கும் பொறுப்பு பிரியங்காவுக்கு கொடுக்கப்பட்டது. இளைஞர்கள் மற்றும் பெண்களை முன்வைத்து காங்கிரஸ் தீவிரமாக பணியாற்றியது. ஆனால் 399 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் இரண்டு இடங்களை மட்டுமே வென்றது

அந்த சமயத்தில் கட்சியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்றன. கட்சியின் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நீடித்த போதும், உத்தரப் பிரதேசத்தில் கட்சி ரீதியாக பிரியங்காவுக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.

அமேதியில் தோல்வி, உத்தரப் பிரதேசத்தில் தோல்வி என பின்னடைவைச் சந்தித்த காங்கிரஸ் 2022 ஹிமாச்சல பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த தேர்தலின் போது ஹிமாச்சல் பிரதேசத்திலேயே தங்கி தீவிர பிரச்சாரம் செய்தார் பிரியங்கா. இந்திரா காந்தி ஹிமாச்சலுக்கு என்ன செய்தார் என்பது தொடங்கி தற்போது அந்த மக்களுக்கு என்னென்ன வேண்டும் என்பது வரை அனைத்து விஷயங்களையும் கையாண்டு காங்கிரஸ் வெற்றிக்கு வித்திட்டார்.

இந்த வெற்றிக்கு பிரியங்காதான் காரணம் என்று உள்ளூர் காங்கிரஸ் கட்சியினர் பெருமிதத்தோடு பாராட்டினர்.

அதைத்தொடர்ந்து 2023 இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கர்நாடகாவில் பா.ஜ.கவை வீழ்த்தியும், தெலங்கானாவில் பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியையும் வீழ்த்தியும் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இந்த வெற்றிக்கும் ராகுலுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் பிரியங்காவுக்கும் பங்குண்டு,

2024 மக்களவைத் தேர்தல்

2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவை வீழ்த்தி காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக இந்தியா கூட்டணியாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தன.

ஆனால் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றாலும் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கச் செய்யாததே மிகப்பெரிய வெற்றியாக இந்தியா கூட்டணி பார்த்தது.

அதோடு, மக்களவை தேர்தலில் கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி அந்தஸ்துகூட பெற முடியாமல் தவித்த காங்கிரஸ், 99 இடங்கள் வென்று எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.

இதற்கும் பிரியங்கா காந்தியின் பிரச்சாரம் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது.

மோடியும் பிரியங்காவும்

குறிப்பாக பிரதமர் மோடிக்கு இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் மீதான விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்தார் பிரியங்கா.

ராஜஸ்தான் பிரச்சார கூட்டத்தில் பேசிய மோடி, ”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டு பெண்களின் தாலியை கூட விட்டுவைக்க மாட்டார்கள். அனைத்தையும் பறிமுதல் செய்து இஸ்லாமியர்களுக்கு கொடுத்துவிடுவார்கள்” என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த பிரியங்கா, “55 ஆண்டுகளில் காங்கிரஸ் யார் தாலியையும் பறிக்கவில்லை. இந்திரா காந்தி தனது தாலி உட்பட அனைத்தையும் நாட்டுக்காக தியாகம் செய்தார். தனது அம்மா சோனியா காந்தியும் தனது தாலியை நாட்டுக்காக தியாகம் செய்தார்” என்று கூறி உணர்ச்சிபொங்க பிரச்சாரம் செய்தார் பிரியங்கா காந்தி.

2014 பொதுத் தேர்தலின் போது உபியில் பேசிய பிரதமர் மோடி, “நான் பிரியங்கா காந்தியை எனது மகளாக கருதுகிறேன்” என்று கூறியிருந்தார்.  இதற்கு பிரியங்கா காந்தி, “நான் ராஜீவ் காந்தியின் மகள். மோடி கீழ்மட்டமான அரசியலில் ஈடுபட வேண்டாம்” என்று பதிலளித்திருந்தார்.

இவ்வாறு பிரதமர் மோடிக்கு பிரியங்கா பதிலளிக்கும் விதமும் அவ்வப்போது செய்திகளில் ஹெட் லைனாக வலம் வந்தன

வயநாட்டில் பிரியங்கா

இப்படி பிரச்சாரத்தின் மூலம் அரசியலில் செயல்பட்டு வந்த பிரியங்கா காந்தி, தன்னுடைய 52 வயதில் முதன்முறையாக தேர்தல் களத்தில் களமிறங்கியுள்ளார்.

2024 தேர்தலில் சோனியா காந்தி தேர்தல் அரசியலில் இருந்து விலகியதால் பிரியங்கா ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அல்லது அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஏன் தமிழ்நாட்டில்  ஏதேனும் ஒரு தொகுதியில் களமிறக்கப்படலாம் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் தற்போது வயநாட்டில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் ராகுலிடம் தோற்ற சிபிஐ வேட்பாளர் ஆன்னி ராஜாவே பிரியங்காவை வரவேற்றுள்ளார்.

வயநாட்டை பொறுத்தவரை காங்கிரஸ் 2009 தேர்தலின் போது 46.86% சதவிகித வாக்குகளையும், 2011 சட்டப்பேரவை தேர்தலில் 31.1 சதவிகித வாக்குகளையும், 2024 மக்களவைத் தேர்தலில் 41.21 சதவிகித வாக்குகளையும், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 26.9 சதவிகித வாக்குகளையும், 2019 தேர்தலில் 64.67 சதவிகித வாக்குகளையும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 34.5 சதவிகித வாக்குகளையும், 2024 பொதுத் தேர்தலில் 59.69 சதவிகித வாக்குகளையும் பெற்றிருக்கிறது.

சட்டப்பேரவைத் தேர்தலை காட்டிலும் மக்களவைத் தேர்தலில் வயநாட்டில் அதிக வாக்குகளை பெற்றிருப்பதால் இந்த முறையும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று அக்கட்சியினர் நம்பிக்கையில் இருக்கின்றனர்.

35 ஆண்டுகளாக மக்கள் முன்னிலையில் காங்கிரஸின் பிரசார குரலாக ஒலித்துவந்த பிரியங்கா, நாடாளுமன்றத்தில் மக்களின் குரலாக ஒலிப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Exit mobile version