ஆபிரிக்க நாடுகளான சாட் (Chad) மற்றும் செனகல் (Senegal) தங்கள் நாட்டில் உள்ள பிரான்ஸ் இராணுவத்தை வெளியேற்றுவதாக அறிவித்துள்ளன. சாட், செனகல், நைஜர், மாலி, புர்கினோ பாசோ உள்ளிட்ட பல ஆபிரிக்க நாடுகளில் பிரான்ஸ் தங்கள் இராணுவத்தை நிலைநிறுத்தி அந்நாடுகளில் உள்ள மிக அதிக மதிப்பு வாய்ந்த யுரேனியம், தங்கம், வைரம், கோக்கோ உள்ளிட்ட இயற்கை வளங்களை கொள்ளையடித்தன.
பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய மற்றும் மேற்கு நாடுகள் ஆபிரிக்காவின் இயற்கை வளங்களை பயன்படுத்தி தங்கள் நாட்டை வளர்ச்சிக்கு கொண்டு சென்றன. இந்த வளங்களை கொள்ளையடிப்பதற்காக இந்த நாடுகள் ஆபிரிக்க நாடுகளில் தீவிர வாதத்தை வளர்த்துவிட்டும் அந்நாடுகளுடன் இராணுவ ஒப்பந்தங்களை உருவாக்கிக்கொண்டும் தங்கள் இராணுவத்தை அங்கு நிலை நிறுத்தின.
குறிப்பாக பிரான்ஸ் பல ஆபிரிக்க நாடுகளில் தங்கள் இராணுவத்தை நிலை நிறுத்திக்கொண்டு தங்கள் நாட்டு தொழில் நிறுவனங்களை உருவாக்கி அங்கிருந்து இயற்கை வளங்களை கொள்ளையடிக்க துவங்கியது. இதற்காக அந்நாடுகளில் ஆட்சிக் கவிழ்ப்புகள், பொம்மை ஆட்சிகள் ஆகியவற்றையும் உருவாக்கியது. கடந்த சில ஆண்டுகளாக நைஜர், மாலி, புர்கினோ பாசோ ஆகிய மூன்று நாடுகளும் பிரான்ஸ்க்கு ஆதரவான, தங்கள் நாட்டின் பொம்மை ஆட்சியை அகற்றிவிட்டு இராணுவ ஆட்சியை நிலைநாட்டி பிரான்ஸ் இராணுவத்தை நாட்டை விட்டு வெளியேற்றின. பிரான்ஸ் உடனான இராணுவ பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் முடிவுக்கு கொண்டு வந்தன.
இந்நிலையில் சாட், செனகல் ஆகிய இரண்டு நாடுகளும் தங்கள் நாட்டில் உள்ள பிரான்ஸ் இராணுவத்தை வெளியேற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளன. சாட் சுதந்திரம் அடைந்த 66 ஆண்டுகளாக தற்போது வரை பிரான்ஸ் தன்னுடைய படைகளை அங்கு நிறுத்தி வைத்திருந்தது. அந்நாட்டு ஜனாதிபதியின் இந்த அறிவிப்பின் மூலம் கிட்டத்தட்ட 1000 பிரான்ஸ் இராணுவ வீரர்கள் மற்றும் போர் விமானங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட உள்ளன.
சாட் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்டெராமன் கௌலமல்லா கொடுத்த பேட்டியில் பிரான்ஸ் எங்கள் நாட்டின் மிக முக்கியமான பங்குதாரராக உள்ளது. எனினும் எங்கள் நாடு (சாட்) வளர்ந்து விட்டது. முதிர்ச்சியடைந்துள்ளது. எங்களின் இறையாண்மையின் மீது அதிக அக்கறை கொண்ட ஒரு இறையாண்மை நாடாக உள்ளது என்பதையும் பிரான்ஸ் இப்போது கருத்தில் கொள்ள வேண்டும் என்றார். மேலும் தங்களது நாட்டின் சுயநிர்ணய அடிப்படையில் இம்முடிவை எடுத்து உள்ளதாக தெரிவித்தார். பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் சாட் நாட்டிற்கு சென்ற போது நடந்த பேச்சு வார்த்தைக்குப் பிறகே இராணுவத்தை வெளியேற்றுவதாக சாட் அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
சாட் கடந்த காலங்களில் மேற்கு நாடுகளுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வந்தது. ஆனால் சமீபத்தில் இவர்கள் ரஷ்யாவுடனான உறவுகளை அதிகரித்து வருகின்றனர்.
செனகல்
இதே போல செனகலில் 1960 முதல் பிரான்ஸ் இராணுவம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இந்நிலையில் அங்குள்ள 350 பிரான்ஸ் இராணுவ வீரர்களை வெளியேற்றுவதாகவும் எங்கள் நாட்டில் பிரான்ஸ் இராணுவம் இருப்பது பொருத்தமற்றது எனவும் செனகல் ஜனாதிபதி பஸ்ஸிரோ டியோமயே ஃபயே தெரிவித்துள்ளார். 2024 மே மாதமே அந்நாட்டு பிரதமர் உஸ்மான் சோன்கோ, பிரான்ஸ் இராணுவம் அந்நாட்டில் இருப்பதை விமர்சித்திருந்தார். இறையாண்மை கொண்ட தேசத்தில் அவர்களின் தேவை எதற்கு என கேள்வி எழுப்பினார்.
பிரான்ஸ் 2 என்ற செய்தி நிறுவனத்திற்கு கொடுத்த பேட்டியில் செனகல் ஜனாதிபதி, பிரான்சில் செனகல் ராணுவ வீரர்கள் இராணுவ உடையுடன் இராணுவ டாங்கிகள் அல்லது இராணுவ வாகனங்களுடன் இருப்பதை நீங்கள் கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார். மேலும் வரலாற்று ரீதியாக, பிரான்ஸ் அடிமையாக, காலனித்துவப்படுத்தப்பட்ட நாடாக இருந்ததில்லை. சிறிது மாற்று யோசித்து பாருங்கள். சீனா, ரஷ்யா, செனகல் அல்லது வேறு எந்த நாட்டின் இராணுவமாவது பிரான்சில் ஒரு இராணுவ தளத்தை வைத்திருக்க முடியுமா? அது கற்பனை செய்வதற்கே கடினமாக உள்ளது. செனகல் ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடு. இறையாண்மை கொண்ட ஒரு நாடு தனது நாட்டு எல்லைக்குள் வேறொரு நாட்டின் இராணுவ தளங்கள் இருப்பதற்கு இடமளிக்காது என பேசியுள்ளார்.
மேலும் பிரான்ஸ் இராணுவத்தை தங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றிய ஆபிரிக்க நாடுகள் சர்வதேச அளவில் இராணுவ கூலிப்படையாக செயல்படுகிற ரஷ்யாவின் வாக்னர் இராணுவக்குழுவை தங்கள் நாட்டில் நிலை நிறுத்தி வருகின்றன. லிபியா, சூடான், நைஜர் ஆகியன நாடுகள் வாக்னர் இராணுவக்குழுவை ஏற்கனவே தங்கள் நாட்டில் அனுமதித்துள்ளன. 2023 இல் சாட் நாட்டில் தங்கள் படையை நிலைநிறுத்த வாக்னர் திட்டமிட்டிருந்த நிலையில் வரும் நாட்களில் சாட் மற்றும் செனகலிலும் வாக்னர் படை நிலைநிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.