Site icon சக்கரம்

முதன் முதலாக நடைபெறும் சர்வதேச நூலக மாநாடு!

-சாவித்திரி கண்ணன்

நூலகங்கள் அறிவு வளர்ச்சிக்கும்,  தன் நம்பிக்கைக்கும் உதவுகின்றன. அந்த நூலகங்களை நவீன தொழில் நுட்பத்துடனும், சர்வதேச தொடர்புகளை மேம்படுத்தவும் ஆகச் சிறந்த ஆளுமைகளைக் கொண்டு டெல்லியில் சர்வதேச  நூலக உச்சி மாநாடும், சென்னையில் அதற்கான முன்னோட்ட நிகழ்வும் நடக்க உள்ளன. முழு விவரங்கள்:

இந்தியாவில் முதல் முறையாக  நடக்கும் சர்வதேச நூலக உச்சி மாநாடு இது தான். இந்த முதல் மாநாடு நூலக நல்லுறவு  என்ற தலைப்பில் சர்வதேச நாடுகளுக்கு இடையே நூலக கூட்டுறவு, தகவல் பரிமாற்றம் மற்றும் கலாச்சார பரிமாற்றத்தை மேம்படுத்துதல்  ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டதாகும்.

சர்வதேச நூலக உச்சி மாநாடு 2025,  பெப்ரவரி  5 முதல் 7 வரை தலைநகர் டெல்லியில் நடக்கவுள்ளது. இந்த மாநாட்டை டெல்லியில் உள்ள தெற்கு ஆசிய பல்கலைக்கழகம், பெங்களூரின்  நூலக மற்றும் தகவல் அறிவியல் கழகம் ஆகியவை இணைந்து புதுடெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கார் சர்வதேச மையத்திலும், தெற்கு ஆசிய பல்கலைக்கழக வளாகத்திலும் நடத்த உள்ளனர்.

தொடக்க விழா 2025, பெப்ரவரி 5 அன்று புதுடில்லி டாக்டர் அம்பேத்கார் சர்வதேச மையத்திலும், அதனைத் தொடர்ந்து தொழில் நுட்ப அமர்வு பெப்ரவரி 6 மற்றும் 7 திகதிகளில் டெல்லி தெற்கு ஆசிய பல்கலைக்கழக வளாகத்திலும் நடைபெற உள்ளன. இந்த மாநாட்டை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்  ஜெய்சங்கர் தொடங்கி வைக்க உள்ளார்.

மாநாட்டின் விவாதப் பொருள்,  நூலக நல்லுறவு மற்றும் நூலக கூட்டுறவு மூலம் நாடுகளை இணைத்தல் ஆகியவையே!

பல நூற்றாண்டுகளாக நூலகங்கள் அறிவுச் சுரங்கம், கலாச்சார பரிமாற்றம், சுதந்திர சிந்தனைக்கு அரணாக பணியாற்றி வந்துள்ளன. இந்த ஆண்டின் நூலக உச்சி மாநாட்டில் நூலக கூட்டுறவு மூலம் நாடுகளை இணைத்தல் என்ற தலைப்பில் சர்வதேச  நட்புறவுக்கு நூலகங்கள் எவ்வாறு பங்கு வகிக்க முடியும் என்பது பற்றிய விவாதங்கள் மற்றும் கருத்து பரிமாற்றங்கள் நடைபெற உள்ளன.

டெல்லியில் நிகழ்ந்த முன்னோட்ட நிகழ்வு

டெல்லியில் உச்சி மாநாடு நடைபெறுவதற்கு முன்பாக அது தொடர்பான முன்னோட்ட நிகழ்வுகள்   புது டெல்லியில்  நவம்பர் 4 ஆம் திகதியன்று  நடைபெற்றது. அதே போல தற்போது  சென்னையில் வரும் டிசம்பர் 4 ஆம் திகதியன்று  காலை 11 மணிக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக சிற்றரங்கத்தில் மதராஸ் நூலகச் சங்கத்தின் முன்னெடுப்பில்  நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இதன் தலைவர் க. நித்தியானந்தன், டாக்டர் தனஞ்ஜெய் திருப்பதி,பேராசிரியர் பி.வி.கொன்னூர், salis என்ற அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஹரிகரன் அவர்களும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை நிகழ்விற்கு டெல்லியில் உள்ள தெற்கு ஆசிய பல்கலைக்கழக தலைவர் பேராசிரியர் கே.கே. அகர்வால் தலைமை ஏற்க உள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வேல்ராஜ் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். மேலும் புதுடெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மைய இயக்குனர் திரு. ஆகாஷ் பட்டேல் பங்கஜ் ஜெயின், (டெல்லி தெற்காசிய நூலகத்தின் துணை தலைவர்) ஆகியோர்  சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளார்.  நிகழ்வில் நூலகராக இருந்த பாலம் கல்யாணசுந்தரம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையளர் விருது வழங்கப்பட உள்ளது.

சர்வதேச நூலக உச்சி மாநாட்டை முன்னின்று நடத்தும் தெற்காசியப் பல்கலைக்கழகமானது (SAU) சார்க்  நாடுகளின் கூட்டு முயற்சியால் உருவானதாகும். அந்த வகையில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலதீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அகிய நாடுகளின் கூட்டு முயற்சியில் 2010-ஆம் ஆண்டு தெற்காசியப் பல்கலைக்கழகம்  நிறுவப்பட்டது.

இந்த அமைப்பு  தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள இளைஞர்களை அறிவுசார் சமுதாயமாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டதாகும். இது உலகத் தரம் வாய்ந்த வசதிகளோடு ஆற்றல்மிக்க  பேராசிரியர்களைக் கொண்ட  மையமாக செயல்படுகிறது. தெற்கு தில்லியில் அமைந்துள்ள இப்பல்கலைக்கழகம் ஒரு தனித்துவமான பன்முக கலாச்சார சூழலுடன், பண்பாடு மற்றும் சமூக அறிவியலில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை வழங்குகிறது. ஐந்து துறைகளுடன் செயல்படும் இப் பல்கலைகழகத்தில் 5,000 மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.

பெங்களூரின்  நூலக மற்றும் தகவல் அறிவியல் கழகம் என்பது ஒரு தொழில் முறை சார்ந்த அறக்கட்டளையாகும்.  இது நவீன தொழில் நுட்பத்துடன் நூலகங்களுக்கு உதவும்  நோக்கத்தில் நிறுவப்பட்டதாகும். இந்த அமைப்பு பல்வேறு வகையான நூலகங்களுக்கு தேவை அடிப்படையிலான சேவையை வழங்கி வருகிறது.   அத்துடன் இலக்கியம், ஆராய்ச்சி, வெளியீடுகள், தனியார் பங்களிப்பு, பயிற்சி, திட்டங்கள், ஆலோசனை, ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றை செயல்படுத்துகிறது.

சர்வதேச நூலக உச்சி மாநாட்டின் சிறப்பு அம்சங்கள்:

#  நூலகங்களின் மூலம் சர்வதேச கூட்டுறவை உருவாக்குதல் பற்றி பல்வேறு நாடுகளின்  தூதரகப் பிரதிநிதிகள் கருத்துக்களை பகிர்வர்.

# பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணர்களின் விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள்!

# நூலகத்தின்  வழியே சர்வதேச உறவுகளை ஏற்படுத்துதல் பற்றிய செயல்முறை விளக்கங்களும், பயிற்சிகளும் வழங்கப்படும்.

# சர்வதேச அளவில் தொழில் நுட்பவியலாளர்களுடன் இணைப்பை ஏற்படுத்துதல்,

# வருங்கால நூலகங்கள் சர்வதேச உறவுகளை ஏற்படுத்துவதற்கு தேவையான திட்டங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய நடைமுறைகளை இனம் காணுதல்.

இந்த மாநாட்டில் கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், நூலகர்கள், தகவல் அறிவியல் அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பயன் பெறலாம். இதன் மூலம் உலக நாடுகளில் நூலகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிந்து கொள்வதோடு சர்வதேச தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

Exit mobile version