இஸ்ரேல் – துருக்கி ஆதரவால் உருவாக்கப் பட்ட பயங்கரவாத அமைப்புகளான ஐ.எஸ். ஐ.எஸ், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (எச்.டி.எஸ்) உள்ளிட்ட சில பயங்கரவாத பிரிவினைவாத குழுக்கள் கைப்பற்றிய சிரியாவின் அலெப்போ நகரின் முக்கியப்பகுதிகளை சிரியா இராணுவம் மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தொடங்கியுள்ளது
இஸ்ரேல் – துருக்கி ஆதரவுடன் பல ஆண்டுகளாக சிரியா உள்ளிட்ட நாடுகளில் பிரிவினை வாதக்குழுக்களாக செயல்பட்டு பயங்கரவாத தாக்குதல் நடத்தி வரும் இக்குழுக்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 29) சிரியாவின் அலெப்போ நகர் பகுதியில் கார் வெடி குண்டு மூலம் தாக்குதல் நடத்தினர். பின் எந்த முன்னறிவிப்பும் இன்றி அந்த நகரை கைப்பற்றும் முனைப்புடன் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் தாக்குதலை தீவிரப்படுத்தினர். அலெப்போ நகரின் மேற்கு பகுதியில் ஹனா என்ற முக்கிய நகர் உள்ளிட்ட சுமார் 47 கிராமங்களை கைப்பற்றினர்.
2020 இற்குப்பிறகு அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அல்-அசாத்துக்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான நெருக்கடியாக இந்த தாக்குதல் அமைந்துள்ளது என கூறப்படுகிறது. தாக்குதல் மிகத்தீவிரமாக மாறியவுடன் அலெப்போ பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அதிக இராணுவ வீரர்களையும் அனுப்ப ஜனாதிபதி உத்தரவிட்டார்.
சிரியாவிற்கு ஆதரவு
தாக்குதல் தீவிரத்தை கட்டுப்படுத்த ரஷ்ய போர் விமானம் பயங்கரவாத குழுக்களின் மீதும் அவர்கள் இராணுவ வாகனங்கள் மீதும் குண்டு வீசியது. சிரியா இராணுவமும் அப்பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மிகப்பெரிய தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல் களில் சுமார் 300 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
பயங்கரவாதிகளின் தாக்குதல் சிரியாவின் இறையாண்மை மீதான மீறல் எனவும் சிரியாவிற்கு தொடர்ந்து உதவுவோம் எனவும் ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கொவ் தெரிவித்துள்ளார். ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்கியும் பயங்கரவாதத்திற்கு எதிரான சிரியாவின் நடவடிக்கைகளுக்கு ஈரான் உறுதுணையாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
பொய்ச் செய்திகளை பரப்பி “ஊடகப்போர்”
இதனிடையே, தாக்குதல் தொடங்கி ஒரு நகரத்தை கூட முழுமையாக கைப்பற்றாத நிலையில், இது சிரியா அரசாங்கத்தை கவிழ்கும் முயற்சி எனவும், சிரியாவின் இராணுவம் பயந்து பின்வாங்கி ஓடிவிட்டது எனவும் மேற்கு நாடுகளின் ஊடகங்களும் பயங்கரவாத ஆதரவு நாடுகளும் பொய் செய்திகளை பரப்பத் தொடங்கின. இதனை சிரியாவிற்கு எதிரான ஊடகப்போர் என குறிப்பிடுகின்றனர். இவை பொய்ச் செய்திகள் என சிரியா அரசாங்கம் மறுத்ததுடன், இந்த நடவடிக்கைகளை கண்டித்துள்ளது.
இந்த தாக்குதலால் சுமார் 14 ஆயிரம் மக்கள் (50 சதவீதம் குழந்தைகள்) அப்பகுதியை விட்டு இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா மனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது.