Site icon சக்கரம்

AI உங்களை எப்படி ஏமாற்றுகிறது?

-வினோத் ஆறுமுகம்

ன்றைக்கு நாம் பயன்படுத்தும் செயலிகள் அனைத்துக்கும் இருக்கும் ஒரு பொதுவான விஷயம் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI). பெருநிறுவனங்கள் நினைக்கும் முடிவை நம் மீதே திணித்து, அது சார்ந்த முடிவை நம்மையே எடுக்கவைக்கும் அளவுக்குச் செயற்கை நுண்ணறிவு பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது. நீங்கள் பயன்படுத்தும் பல செயலிகள் குறிப்பாக – சமூக வலைதளச் செயலிகள் இலவசமாகவே கிடைக்கின்றன.

ஆனால், நீங்கள் தினமும் உருவாக்கும் தகவல்கள், ஒளிப்படங்கள், காணொளிகளைச் சேமிக்கப் பெரும் தொகையைச் செலவு செய்யும் சமூக வலைதள நிறுவனங்கள் உங்களுக்கு எப்படி இலவசமாகச் செயலிகளைக் கொடுக்கின்றன? உங்​களைப் பற்றிய தகவல்​களைச் சேகரித்து, சந்தை நிறுவனங்​களுக்கும் பெருநிறு​வனங்​களுக்கும் விற்பனை செய்வதால் அவற்றுக்கு நிறைய பணம் கிடைக்​கிறது. ஓம்! உங்களுக்கு ஒரு பொருள் இலவசமாகக் கிடைக்கிறது என்றால், உண்மையில் விற்பனை செய்யப்​படுவது பொருள் அல்ல… நீங்கள்​தான்.

நோக்கப் பொருளா​தாரம்:

இங்குதான் ஆய்வாளர்கள் ‘நோக்கப் பொருளா​தாரம்’ (Intention Economy) என்னும் கோட்பாட்டை முன்வைக்​கிறார்கள். அதாவது, இந்தச் சமூக வலைதள நிறுவனங்​களும் இணையச் சேவைச் செயலிகளும் உங்களின் இணைய நடவடிக்கைகள் (Digital Behaviour) அனைத்​தையுமே சேகரிக்​கின்றன. சேகரித்த தகவலைச் செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்குக் கொடுத்துப் பகுப்​பாய்வு செய்கின்றன. அதன் மூலம் உங்கள் நோக்கங்​களைக் கண்காணித்து, பின்பு நிறுவனங்களுக்கு நல்ல இலாபத்​துக்கு விற்கின்றன.

முதலில் உங்களைப் பற்றிச் சேகரித்த தகவலைத்தான் விற்றுக்​கொண்​டிருந்​தார்கள். ஆனால், இப்போது செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உங்களின் தகவல்களை, நடவடிக்கைகளைப் பகுப்​பாய்வு செய்து, அதிலிருந்து உங்கள் நோக்கம் என்ன, நீங்கள் என்ன வாங்க நினைக்​கிறீர்கள், என்ன விரும்​பு​கிறீர்கள் என விரிவாகப் பட்டியலிட்டு, அந்தத் தகவலை விற்பனை செய்கிறார்கள். கோடிக்​கணக்கில் பணம் கொடுத்து இந்தத் தகவலை வாங்கப் பல நிறுவனங்​களும், அரசியல் கட்சிகளும் தயாராக இருக்​கின்றன. இதை ‘நோக்​கத்தைத் தெரிவிக்கும் டிஜிட்டல் சமிக்ஞை’ (Digital signal of intent) என அழைக்​கிறார்கள்.

இது, ஒரு நபர் இணையத்தைப் பயன்படுத்​தும்போது அவர் என்ன செய்யத் திட்டமிடுகிறார் அல்லது விரும்​பு​கிறார் என்பதைக் காட்டும் அடையாளங்கள் – தகவல்களைக் குறிக்​கிறது. இதைச் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் / மென்பொருள்கள் கணித்து உள்நோக்​கங்​களைப் புரிந்​து​கொள்​வதற்குப் பயன்படுத்துகின்றன.

நீங்கள் இணையத்தில் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையும் உங்கள் விருப்​பங்​களின் குரலாக இருக்​கிறது; செயற்கை நுண்ணறிவு அவற்றைக் கேட்டு உங்கள் எதிர்கால உள்நோக்​கங்​களைக் கணிக்​கிறது. இந்தக் கணிப்புகள் பெரும் இலாபம் ஈட்டித் தருகின்றன. இதைத்தான் ‘நோக்கப் பொருளா​தாரம்’ என அழைக்​கிறோம்.

வருங்​காலத்தில் ஒருவரின் இணையப் பயன்பாட்டை வைத்து, அவரின் நோக்கத்தைக் கணிப்​பதும், அதைச் சந்தையில் லாபத்​துக்கு விற்பதும் மிகப் பெரிய பொருளாதாரமாக மாறும். இதற்கான நிபுணர்கள், மென்பொருள்கள், வன்பொருள்கள், தொழில்​நுட்​பத்​துக்கு மிகப் பெரிய தேவை உருவாகும். ஆனால், நோக்கப் பொருளாதாரம் என்பதே ஆபத்து; பெருநிறு​வனங்​களும் அரசியல் கட்சிகளும் இதைத் தவறாகப் பயன்படுத்து​கின்றன என்ற குரல்கள் எழத் தொடங்கியிருக்​கின்றன.

“நோக்கப் பொருளா​தா​ரத்தை அரசு உடனே கட்டுப்​படுத்தி நெறிப்​படுத்த வேண்டும். இல்லை என்றால் மக்களின் ஆசை, நோக்கம், விருப்பம் எல்லாம் பெருநிறு​வனங்​களின் இலாப வேட்டைக்குப் பலியாகும் வாய்ப்புள்ளது” என்று எச்சரிக்​கிறார், இது சார்ந்து ஆராய்ந்து வரும் ஜொன்னி பென் (Jonnie Penn).

மேலும் சுதந்​திரச் சந்தை, சுதந்திர விருப்பம், நியாயமான தேர்தல், சுதந்திர ஊடகம், குழப்ப​மில்லாத நல்ல தகவல் பரிமாற்​றத்​துக்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்​காட்டு​கிறார். செயற்கை நுண்ணறிவு இயங்க மிகப் பெரிய மின்சார, மின்னணுக் கட்டு​மானம் தேவை. பல மில்லியன் டொலர் முதலீடு இருந்தால் மட்டும்தான் இவையெல்லாம் சாத்தியம்.

அப்படிப் பெரும் தொகையைக் கொட்டி இந்த மென்பொருளை உருவாக்க ஒரே காரணம்:

இனி வெறும் தகவல் மட்டும் போதாது, தகவலைப் பகுத்​தாய்ந்து சரியான நோக்கத்தைக் கணிக்கும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்​குத்தான் சந்தை, இலாபம் எல்லாம்!

தந்திரமான வழிமுறை:

அடுத்​ததாக, உரையாடல் மென்பொருள்கள் உங்களின் அந்தரங்கத் தகவலைப் பெறப் பயிற்று​விக்​கப்​படலாம். ஏற்கெனவே உங்களின் தகவலைச் சேகரிக்கும் நிறுவனங்கள் உங்களின் அந்தரங்கத் தகவலைச் சேகரிக்கப் படாதபாடு படுகின்றன. ஆனால், உரையாடல் ஏ.ஐ. அந்த வேலையை மிக எளிதாகச் செய்து​விடும்.

உங்களின் கேள்வி​களுக்குப் பதில் அளிக்கும் உரையாடலில் மிக எளிதாக உங்களின் சிந்தனை, அந்தரங்கத் தகவல், விருப்பம் போன்ற​ வற்றைத் தந்திரமாக உரையாடல் மென்பொருள் பெற்று​விடும். பின்னர், உங்கள் நோக்கத்தை எளிதாகக் கணித்து​விடலாம். இங்கு எளிதாகக் கணிப்பது என்பதைவிட, எவ்வளவு சரியாகக் கணிக்​கிறது என்பதே இலாபத்தைத் தரும்.

ஒரு பொருளை விற்கும் நிறுவனத்​துக்கு எந்த ஏ.ஐ. நிறுவனம் சரியான நோக்கக் கணிப்பைத் தருகிறது என்பதை வைத்துத்தான் ஏலம் நடக்கும். கூகுளின் நோக்கக் கணிப்பு​களைப் பயன்படுத்​தினால் தங்கள் தயாரிப்புகள் 10 விற்கின்றன; ஆனால், ஃபேஸ்புக் தரும் நோக்கக் கணிப்பு​களைப் பயன்படுத்​தினால் தங்களின் தயாரிப்புகளில் 100 விற்பனை​யாகின்றன என்றால், ஃபேஸ்​புக்கின் தகவலுக்​குத்தான் மரியாதை, அதிகப் பணம், அதிக இலாபம் எல்லாமே.

சில ஆண்டு​களுக்கு முன் அரசியல் வியூகங்கள் வகுத்துத் தரும் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா (Cambridge Analytica) என்னும் நிறுவனம், ஃபேஸ்புக் பயனாளர் தகவல் – அவர்களின் உளவியல் தகவலை அறுவடை செய்து, பகுப்​பாய்வு செய்து, அதன் அடிப்படையில் போலிச் செய்திகள், வெறுப்பை உமிழும் செய்தி​களைக் காட்டி ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக அவர்களை ஓட்டுப் போட வைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.

இதை சைபர் சைகலாஜிக்கல் ஒப்ரேஷன் (Cyber psychological operation) என அந்நிறுவனம் அறிவித்தது. சர்ச்​சைகளுக்குப் பின் அந்த நிறுவனம் மூடப்​பட்​டதாக் காட்டிக்​கொள்ளப்பட்டது. ஆனால், உண்மையில் வேறு பெயரில் அந்நிறுவனம் இயங்கு​வ​தாகச் செய்திகள் கூறுகின்றன.

செய்ய வேண்டியது என்ன?

இந்த டிஜிட்டல் யுகத்தில் அரசியல் கட்சிகள் நவீன இணையத் தொழில்​நுட்​பங்கள், சமூக வலைதளங்​களைப் பரப்பு​ரைக்​காகப் பயன்படுத்து​கின்றன. அதேநேரம், தேர்தல் வியூகம் என்னும் பெயரில் பொய்ச் செய்திகள், வெறுப்பை உமிழும் செய்திகள், அவதூறுப் பிரச்​சாரம் செய்வதை ஓர் அரசியல் உத்தி​யாகவே சில கட்சிகள் வைத்திருக்கின்றன.

அவர்களிடம் இந்த நோக்கக் கணிப்பு பற்றிய தகவல்கள் கிடைத்​தால், போலிச் செய்திகள், வெறுப்புப் படங்கள், அவதூறுக் காணொளி​களைக் கச்சிதமாக உருவாக்கி மக்களைக் குழப்ப நிறைய சாத்தியம் உள்ளது. ஏ.ஐ. தொழில்​நுட்பம் நாள்தோறும் வளர்ந்து, மனிதர்​களின் எண்ணங்கள் – உள்நோக்​கங்களை முன்னறி​வித்து, அவற்றைச் செயல்​படுத்தும் திறனைப் பெறுகிறது.

ஒருகட்​டத்​தில், மக்களின் தனியுரிமைக்கும் சுயமுயற்சிக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு கருவியாகவும் இது மாறக்​கூடும். ஆகவே, நம்முடைய இணையச் செயல்​பாடுகளை உரிய விழிப்பு​ணர்​வுடன் அணுகு​வதும், ஏ.ஐ. தொழில்​நுட்பம் எவ்வாறு செயல்​படு​கிறது என்பதைப் பற்றிய அறிவையும் சிந்தனையையும் வளர்த்​துக்​கொள்ள வேண்டியதும் அவசியம்.

நோக்கப் பொருளா​தாரம் என்னும் புதிய ஆபத்தைப் பற்றி இந்திய அரசு ஒரு கொள்கை முடிவெடுக்க வேண்டும். இது தொடர்​பாகத் தேர்தல் ஆணையமும் உரிய விவாதங்களை மேற்கொண்டு, ஒரு மகத்தான நவீனத் தொழில்​நுட்​பத்தை அரசியல் கட்சிகள் தவறாகப் பயன்​படுத்​தாதவாறு கட்டுப்​பாடுகளை விதிக்க வேண்​டும்​!

Exit mobile version