-சோம வள்ளியப்பன்
உலகின் மிகப்பெரிய பரப்பளவு, சக்தி வாய்ந்த இராணுவம், அதீத நுகர்வு சக்தி, பெரும் பொருளாதாரம், உலகளாவிய வர்த்தகம் என பலவற்றிலும் முதலிடத்தில் இருக்கிற ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப்’ அமெரிக்காவின் (USA) உச்சபட்ச அதிகார பீடமான, அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில் தெளிவான வெற்றி பெற்று, 78 வயதாகும் டொனால்டு ட்ரம்ப், 47 ஆவது அதிபராகி உள்ளார். தேர்தலின்போது ட்ரம்ப் கொடுத்த, வாக்குறுதிகள் அமெரிக்காவின் எதிர்க்கட்சிகளை மட்டுமல்ல, உலக நாடுகளையும் அதிர, அச்சப்பட வைத்தன.
ட்ரம்ப் தனது பதவி காலத்துக்குள் உலக அமைதியில், தேசங்களுக்கு இடையிலான அரசியலில், பங்குகள், கரன்சி, பாண்டுகள் மற்றும் கமாடிட்டி சந்தைகளில், தேசங்களின் பொருளாதாரங்களில், பூமிப்பந்தின் சுற்றுச்சூழலில் என பலவற்றிலும் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும் என்பது போல அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
தனது முதல் அதிபர் பதவி காலத்தில் ட்ரம்ப் மொத்தம் 220 நிர்வாக உத்தவுகளை பிறப்பித்திருந்தார். அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த ஜோ பைடன் 160 நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். ஆனால் 2 ஆவது முறையாக பொறுப்பேற்ற ட்ரம்ப், முதல் நாளிலேயே சுமார் 200 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். அதில் முதல் 78, முந்தைய ஜோ பைடன் அரசு எடுத்த பல்வேறு முடிவுகளை முழுவதும் மாற்றும் ஆணைகள். அவற்றில் முக்கிய உத்தரவுகளை பார்ப்போம்.
ட்ரம்ப் அவருடைய மனைவி மெலானியா ட்ரம்ப் பெயர்களில் ‘மீம் கிரிப்டோ’ நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்கா மட்டுமல்லாமல் அயல்நாடுகளில் இருந்தும் அவருக்கு பணம் வர வழி இருக்கிறது.
உலக நன்மைக்கு எதிராக:
உலக சுகாதார நிறுவனத்துக்கு (WHO) அமெரிக்கா ஆண்டுதோறும் வழங்கி வரும் 130 பில்லியன் டொலர்கள் இனி வழங்கப்பட மாட்டாது என ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க நிறுவனங்கள் சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்காக செலவு செய்து, பொருட்களின் விலைகள் உயர்ந்திருக்கின்றன. விலைவாசியை குறைப்பதற்காக அமெரிக்க நிறுவனங்கள் இனி அந்த செலவினங்களை தவிர்த்து விடலாம்.
‘பாரிஸ் பருவநிலை மாற்ற’ ஒப்பந்தத்தில் ஜோ பைடன் அரசு கையெழுத்திட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
புதைபடிவ எரிபொருள் சுற்றுச் சூழலுக்கு கேடு என்று புத்தாக்க எரிசக்திக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலை மாறி, இனி அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் இருக்கக்கூடிய கச்சா எண்ணெய் வளத்தைப் பயன்படுத்தி, அமெரிக்கா உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளராகி, செல்வமிக்க நாடாகும். தவிர, அமெரிக்கா அதன் எரிபொருள் தேவைகளுக்கு பிற நாடுகள் மீது சார்ந்து இருக்காது.
அண்டை நாடுகளுடன்…
அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து அமெரிக்கா வரும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும். ‘கல்ப் ஆப் மெக்சிகோ’ என்று அழைக்கப்படுகிற ’மெக்சிகோ வளைகுடா’ இனி, ’கல்ப் ஆப் அமெரிக்கா’ என்று அழைக்கப்படும். அதேநேரம் தேர்தல் நேரத்தில் சீனாவை மிகக் கடுமையாக சாடினார் ட்ரம்ப், ஆனால் முதலில் வெளியிட்ட நிர்வாக உத்தரவுகளில் சீன இறக்குமதி மீதான வரி உயர்வு பற்றி அறிவிக்காதது அரசியல் நோக்கர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
உலக சந்தைகள்:
‘அமெரிக்கா பர்ஸ்ட்’ மற்றும் அவர் அறிவிக்கிற பிற மாற்றங்கள் காரணமாக அமெரிக்க பங்குச்சந்தை தவிர ஏனைய பங்குச் சந்தைகளில் பெரும் கலக்கம் ஏற்பட்டிருக்கிறது. விலைகள் கடுமையாக இறங்குகின்றன. தங்கம் விலை உயர்கிறது. அமெரிக்க டாலருக்கு எதிராக, மற்ற நாட்டு கரன்சிகளின் மதிப்பு குறைகின்றன. அதனால் அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று, பணத்தை அமெரிக்காவில் முதலீடு செய்ய எடுத்துப் போகிறார்கள்.
இந்தியாவோடு..
இந்தியா ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் நாடுகளில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா. ‘நம்பர் ஒன் டிரேடிங் பார்ட்னர்’. ஆண்டொன்றுக்கு சுமார் 120 பில்லியன் டொலர் வர்த்தகம். மற்ற நாடுகளிடமிருந்து நிகர கூடுதல் இறக்குமதி செய்து கொள்ளும் இந்தியா, அமெரிக்காவோடு மட்டும் சுமார் 37 பில்லியன் டொலர் அளவுக்கு கூடுதல் ஏற்றுமதி செய்கிறது. தவிர, அமெரிக்கா வழங்குகிற H1B விசாக்களில் பெருமளவு வழங்கப்படுவது, இந்தியர்களுக்குதான்.
அமெரிக்காவில் சம்பாதித்து, தாய் நாடான இந்தியாவுக்கு பணம் அனுப்பும் இந்தியர்கள் ஏராளம். இதன்மூலம் இந்தியாவுக்கு கணிசமான அந்நிய செலாவணி கிடைக்கிறது. ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வாங்கி, ஆதாயம் பார்த்துக் கொண்டிருக்கிற இந்தியா மீது நேட்டோ அமைப்பு நாடுகளின் தலைமையிடத்தில் இருக்கிற அமெரிக்காவுக்கும் கோபம். மேலும், இராணுவ தளவாடங்களையும், விமானங்களையும் அமெரிக்காவிடம் இருந்து வாங்காமல் பிரான்ஸ் போன்ற மற்ற நாடுகளிலிருந்து இந்தியா வாங்குகிறது.
‘இறக்குமதியை குறைத்து, அனைத்தையும் இந்தியாவில் உற்பத்தி செய்வோம்; என்ற ‘மேக் இன் இந்தியா’ திட்டம் அவருக்கு உவப்பானது இல்லை. உங்களிடம் நாங்கள் வாங்குகிறோம் எங்களிடம் நீங்கள் வாங்குவதில்லை. எங்கள் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கிறீர்கள்.
இந்தியா ஒரு ‘டேரிப் கிங்’ என்று இந்தியாவைட்ரம்ப் சாடி இருக்கிறார். ‘உங்கள் சந்தையை எங்களுக்கு திறந்து விடுங்கள்’ என்று கேட்கிறார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 18,000 இருக்கலாம்.
அவர்களை வெளியேற்றும் முடிவுக்கு ட்ரம்ப் வந்திருக்கிறார். அதற்கு இந்தியாவும் ஒத்துழைக்க சம்மதித் திருப்பதாகத் தெரிகிறது. காரணம், ஒத்துழைக்காத நாடுகளின் ஏற்றுமதிக்கு விதிக்கப்படக்கூடிய கூடுதல் இறக்குமதி வரிகளை தவிர்ப்பதும், தொடர்ந்து H1B விசாக்களை கணிசமான அளவில் பெறுவதும்தான்.
ஆறுதல்:
இப்படிப்பட்ட கடுமையான சூழலில் இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு இருக்கக்கூடிய சில ஆறுதல்கள்:
- அதிரடியாக முடிவுகள் எடுக்கும் அதே வேகத்தில் எடுத்த முடிவுகளை மாற்றும் போக்கும் உடையவர் ட்ரம்ப். அவருக்கு நெருங்கியவராக அரசியலிலும் இருப்பவர், பெரும் தொழிலதிபர் எலான் மஸ்க்.
- நிர்வாக உத்தரவுகள் நடப்பிலுள்ள சட்டங்களுக்கு மாறாக இருந்தால், அவற்றை நீதிமன்றங்களில் எதிர்க்கலாம் (ஆரம்பித்துவிட்டார்கள்). பிறப்பு அடிப்படையில் குடியுரிமை வழங்கும் நடைமுறையை ரத்து செய்யும் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
- 4 ஆண்டு காலமும் அவர் எல்லா முடிவுகளையும் இப்படியே தன்னிச்சையாக எடுக்க முடியாது. அவரது கட்சியினரே ஆதரிக்க மாட்டார்கள்
- உள்நாட்டு பணவீக்கம் போன்றவை இறக்குமதி தீர்வை மீதான முடிவுகளை மறுஆய்வு செய்யத் தூண்டும்.
- ஏதாவது ஒரு நாட்டின் தேர்தல் முடிவு உலகம் முழுவதையும் பதறச் செய்திருக்கிறதென்றால் அது, நிச்சயமாக ட்ரம்ப் இரண்டாவது முறை அதிபரானதுதான் என்று வரலாறு பதிவு செய்யும் அளவு இருக்கிறது மாற்றங்கள்.
- தேன்கூட்டைக் கலைப்பது போல பலவற்றையும் ஒரே நேரத்தில் கிளறிவிட்டிருக்கிறார் ட்ரம்ப். உறங்கிக் கொண்டிருந்த பல்வேறு நாடுகளும் அதிர்ச்சியில் இருக்கின்றன. பல தேசங்களும் இந்த சிக்கல்களை தீர்த்துக் கொள்ள ஆயத்தம் ஆகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.