Site icon சக்கரம்

முடிவுக்கு வருகிறதா ரஷ்யா – உக்ரைன் போர்?

டந்த இரண்டு நாட்களில் உலக அரசியலில் மூன்று முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. டிரம்ப் –  புட்டின் தொலைபேசி உரையாடல். பிறகு டிரம்ப் – ஜெலன்ஸ்கி தொலைபேசி உரையாடல். அதே போல உக்ரைனுக்கு இராணுவரீதியாக நட்பு நாடுகளாக உள்ள நாடுகளின் பிரதிநிதிகள் இடையே அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் ஹெக்செத் (Pete Hegseth) பேச்சு. இந்த மூன்று நிகழ்வுகளும் உக்ரைன் – ரஷ்யா போரை முடிவை நோக்கி நகர்த்துமா என  உலகம் முழுவதும் கேள்வியை எழுப்பியுள்ளது.

டிரம்ப் – புட்டின் பேச்சுவார்த்தை சுமார் 1.30 மணிநேரம் நடந்ததாக ரஷ்ய ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.  இந்த பேச்சு வார்த்தையில் விரைவில் அமைதிக்கான பேச்சு வார்த்தையை துவங்குவது குறித்து  முடிவெடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப் நடத்திய பேச்சுவார்த்தையில் புடினை போலவே  ஜெலன்ஸ்கியும் அமைதியை, போர் நிறுத்தத்தை நோக்கி செல்ல விரும்புவதாகவும் டிரம்ப் தெரி வித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிகழ்வாக அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலரின் உரை அமைந்துள்ளது. உக்ரைனுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக அந்நாட்டை நேட்டோ உறுப்பினராக்க இயலாது. அதேபோல 2014 க்கு முன்பு இருந்த உக்ரைன் எல்லைகளுடன் கொண்ட எல்லையை மீண்டும் திரும்பப்பெற முடியாது என அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதுவே போர் நிறுத்தத்தை நோக்கி செல்லும் வழி என அவர் தெரிவித்துள்ளார்.  இந்த பேச்சுவார்த்தைகளுக்கு முன்பு, ரஷ்யா கைப்பற்றியுள்ள கிரீமியா உட்பட உக்ரைனின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அதனுடைய இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் அப்போது தான் போர் நிறுத்தம் சாத்தியமாகும் என அவர் தெரிவித்து வந்தார்.

மேலும்  போர் நிறுத்தம் மேற்கொள்ள  உக்ரைனை நேட்டோ உறுப்பினர் ஆக்க வேண்டும். அதுவரை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ‘எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும்’ உக்ரைனை ஆதரிக்க வேண்டும் என ஜெலன்ஸ்கி கூறியிருந்தார். இந்நிலையில் ஹெக்செத் உரை உக்ரைனின் கோரிக்கை நிறைவேறாது என உணர்த்தியுள்ளது. மேலும் உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் இராணுவ உதவி செய்ய வேண்டும் எனவும் ஜெலன்ஸ்கி பேசியுள்ளார்.

போர் நிறுத்தம் அமுலானால் அதன் பிறகு உக்ரைனில் உள்ள கனிமங்களை அமெரிக்கா கைப்பற்றி பொருளாதாரப் போரை மேலும் தீவிரமாக்கும் என கூறப்படுகின்றது.

Exit mobile version