
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக பொலிட் பீரோ உறுப்பினரான எம்.ஏ. பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மதுரையில் நடந்த கட்சியின் 24 ஆவது மாநாட்டில் அவர் தேர்வு செய்யப்பட்டார்.
தமிழகத்தின் மதுரையில் 06.04.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நிறைவடைந்த மாநாட்டில் 8 புதிய உறுப்பினர்களுடன், 18 உறுப்பினர்களைக் கொண்ட பொலிட் பீரோவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதேபோல், பொலிட் பீரோ உறுப்பினரான பினராயி விஜயனுக்கு கேரள முதல்வராக இருக்க, கட்சி பதவி வகிக்க உச்ச வயது வரம்பு 75 என்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீதாராம் யெச்சூரி மறைந்ததைத் தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பு காலியாக இருந்தது. இந்த நிலையில், பிரகாஷ் காரத் இடைக்கால ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளராக பொலிட் பீரோ உறுப்பினரான எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த பேபி? கடந்த 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் திகதி கேரள மாநிலம் கொல்லத்தில் எம்.ஏ.பேபி பிறந்தார். இவரது பெற்றோர் பி.எம்.அலெக்ஸாண்டர் மற்றும் லில்லி அலெக்ஸாண்டர். பள்ளிக் காலத்தில் என்என்எஸ்-ல் இருந்த போது பேபியிடம் அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. இந்த ஆரம்பக்கட்ட ஆர்வம், அவர் கொல்லம் எஸ்என் கல்லூரியில் சேர்ந்து படித்த போது தீவிரமடைந்தது. அங்கு அவர் பி.ஏ. அரசியல் அறிவியல் எடுத்து படித்தார். ஆனால் பட்டத்தை முடிக்கவில்லை.
கட்சியின் இளைஞர் அமைப்புகளில் தீவிரமாக இயங்கி பேபி, இந்திய மாணவர் அமைப்பு – எஸ்.எஃப்.ஐ (Students’ Federation of India – SFI), மற்றும் ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு – டைஃபி (Democratic Youth Federation of India – DYFI) ஆகியவற்றில் பல பொறுப்புகளை வகித்துள்ளார்.
பின்னர் சிபிஐ (எம்)-ன் மத்திய குழு உறுபினராகவும் ஆனார். கடந்த 1986 – 1998 வரை இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2006 முதல் 2016 வரை இரண்டு முறை குந்தாரா தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். பேபி, கேரளா அரசியலில் கடந்த 2006 – 2011 ஆண்டில் பொதுக்கல்வி மற்றும் கலாச்சாரத்துறையின் அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் முடிவுகளை எடுக்கும் அமைப்பான பொலிட் பீரோவில் உறுப்பினராக இருந்து வருகிறார். 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கொல்லம் தொகுதியில் போட்டியிட்டார் ஆனால் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் என்.கே.பிரேமச்சந்திரனிடம் தோல்வியைத் தழுவினார்.
இவர், அரசியல், பொருளாதாரம் மற்றும் கலை, இலக்கியம் அனைத்து துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“எனது எஸ்.எஃப்.ஐ காலம்”, “வாருங்கள் இந்த இரத்தத்தைப் பாருங்கள்: புஷினுக்கு எதிராக கலைஞர்கள்” (ஷிபு முகம்மடுடன் இணைந்து), “எம்.ஜி.எஸ். வெளிப்படுத்தப்படுகிறார்”, “அறிவின் ஒளி, நாட்டின் வெளிச்சம்”, “கிறிஸ்து, மார்க்ஸ், ஸ்ரீநாராயண குரு” (பாபு ஜோனுடன் தொகுத்தது), “நோம் சோம்ஸ்கி: நூற்றாண்டின் மனசாட்சி” (தொகுப்பு), “டாக்டர். வேலுக்குட்டி அரியன்” (தொகுப்பு), “ஒ.என்.வி-யின் காதல் எழுத்துக்களில் உப்பு”, “பிலிப்போஸ் மார் கிறிஸோஸ்டம் வலிய மெதிரன்”, “இளைஞர் இயக்கங்களின் வரலாறு” ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.