Site icon சக்கரம்

சீனா மீதான 100% வரி கைவிடப்படுகிறது : சீனா – அமெரிக்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு 

தென்கொரியாவின் பூசான் (Busan) நகரில் ஒக்ரோபர் 30 வியாழக்கிழமையன்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சந்தித்து இரு நாட்டு வர்த்தக உறவுகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பில் இரு நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தகக் குழுக்கள் முக்கியப் பிரச்சனைகள் குறித்து விவாதித்து தீர்வு காண்ப தில் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளன.  

இரு நாட்டு தலைவர்களும் பொருளாதாரம், வர்த்தகம், எரிசக்தி மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், மேலும் மக்களுக்கு இடையேயான பரிமாற்றங்களை ஊக்குவிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள எரிசக்தி மற்றும் மின்சார வாகனங்கள், சிப் உற்பத்தி, போர் விமானங்கள் நிறுவனங்களுக்கு தேவையான அரிய மண் காந்தங்கள் (கனிமங்கள்) மீதான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக பேச்சுவார்த்தையில் சீனா அறிவித்துள்ளது. அமெரிக்கச் சோயாபீன்ஸ்களை வாங்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல அமெரிக்காவும் சீனப் பொருட்கள் மீது விதிக்கவிருந்த 100 சதவீத வரியை கைவிடுவதாக அறிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவில் இருந்து சிப்கள் சீனாவிற்கு ஏற்றுமதி ஆகும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  

அத்துடன், பென்டனைல் (Fentanyl) மருத்துகள் சட்டவிரோதமாக கடத்தப்படுகின்றன. அதனை சீனா தடுக்க வேண்டும் என அமெரிக்கா குற்றம்சாட்டி சீனா மீது  20 சதவீத வரிகளை விதித்திருந்தது. அந்த வரியை 10 சதவீதமாகக்  குறைப்பதாக ட்ரம்ப் தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தையின்படி சீனப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரி 47 சதவிகிதமாக இருக்கும். அதேபோல அமெரிக்கப் பொருட்கள் மீதான சீனாவின் வரி 32 சத விகிதமாக இருக்கும்.

இந்தியாவில் 4 நிறுவனங்கள் இறக்குமதி செய்யும்

அரிய மண் காந்தங்கள் மீதான கட்டுப்பாடுகளை சீனா தளர்த்தியுள்ள நிலையில் இந்தியாவில் உள்ள நான்கு நிறுவனங்கள் பலன் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஜெய் உஷின் லிமிடெட், டி டயமண்ட் எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட், இந்தியாவில் உள்ள ஜெர்மன் வாகன உதிரிபாகத் தயாரிப்பு நிறுவனத்தின் பிரிவான கான்டினென்டல் ஏஜி,  ஜப்பானின் ஹிட்டாச்சி அஸ்டெமோ ஆகிய நான்கு நிறுவனங்கள் சீனாவிடம் இருந்து அரிய மண் காந்தங்கள் இறக்குமதி செய்யும் ஒப்பந்தத்தை அடைந்துள்ளன.  இதனை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் உறுதிப்படுத்தியுள்ளார். 

நாடுகளுக்கும் உலகுக்கும் நன்மை பயக்க…

பேச்சுவார்த்தைக்குப் பிறகு இம் முடிவுகளை விரைவாக இறுதி செய்து நடைமுறைப்படுத்துவதன் மூலம் உலகப் பொருளாதாரத்திற்கு நம்பிக்கையை அளிக்க வேண்டும். வர்த்தக உறவானது, சீன-அமெரிக்க உறவுக்கு அது ஒரு தடையாகவோ (Stumbling Block) அல்லது மோதலின் புள்ளியாகவோ இருக்கக் கூடாது. அது ஒரு ஆதாரமாகவும் உந்து சக்தியாகவும் தொடர வேண்டும் என சீன ஜனாதிபதி ஜிஜின் பிங் தெரிவித்துள்ளார்.  

மேலும் இரு நாடுகளும் சமத்துவம், பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர நன்மை என்ற உணர்வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். முரண்பாடுகளைக் குறைத்து, ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் ஜிஜின் பிங் வலியுறுத்தினார்.

‘இரு நாடுகளின் நிலைமைகள் வேறுபடுவதால், கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பு. உலகின் இரண்டு முன்னணிப்  பொருளாதாரங்கள் அவ்வப்போது மோதல்களைக் கொண்டிருப்பதும் சாதாரணமே. பெரிய நாடுகளாகிய சீனாவும் அமெரிக்காவும் நமது பொறுப்பை இணைந்து சுமக்க முடியும். மேலும் நம் இரு நாடுகளுக்கும், ஒட்டுமொத்த உலகிற்கும் நன்மை பயக்கும் வகையில் மேலும் சிறப்பான மற்றும் உறுதியான விஷயங்களைச் செய்வதற்காக நமது நாடுகள் ஒன்றாகச் செயல்பட முடியும்’ எனவும் ஜிஜின் பிங் கூறியுள்ளார்.

ட்ரம்ப் கருத்து

‘அமெரிக்காவின் மிகப்பெரிய வணிகக் கூட்டாளியாக சீனா உள்ளது. இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டால், உலகிற்காக பல சிறந்த விஷயங்களைச் செய்ய முடியும், மேலும் பல ஆண்டுகளுக்கு நாம் வெற்றியடைய முடியும். சீனா ஒரு சிறந்த நாடு, ஜனாதிபதி ஜி ஜின்பிங் மிகுந்த மரியாதை பெற்ற ஒரு சிறந்த தலைவர். அவருடன் நான் பல ஆண்டுகளாக நல்ல நண்பராக இருக்கிறேன், எப்போதும் நன்றாகப் பழகி வருகிறேன்.  அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையில் எப்போதும் ஒரு அற்புதமான உறவு இருந்தது. அது இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்’ என  ட்ரம்ப் கூறினார்.

Exit mobile version