
நான்கு ஆண்டுகளாக நடந்து வரும் உக்ரைன்-ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டு வர எடுக்கப்படும் முயற்சிகளை ஐரோப்பிய நாடுகள் நாசமாக்கி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தத்தை கொண்டு வருவதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்பு 28 அம்சங்கள் கொண்ட “அமைதித் திட்டம்” முன்மொழியப்பட்டது. இந்தத் திட்டம் பெருமளவு ரஷ்யாவின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இருந்தது. அதாவது ரஷ்யா வசம் உள்ள உக்ரைன் நிலங்கள் ரஷ்யாவிற்கே சொந்தம். உக்ரைன் தனது இராணுவத்தின் அளவை குறைக்க வேண்டும், நேட்டோ உறுப்பினராகக் கூடாது என்பது போன்ற முன்மொழிவுகள் இருந்தது என உக்ரைன் குற்றம் சாட்டியது.
இதன் பிறகு அமெரிக்கா, உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் நவம்பர் 23 அன்று ஜெனீவாவில் சந்தித்துத் திட்டம் குறித்து விவாதித்தனர். அதன் பிறகு இந்த திட்டத்தில் ரஷ்யாவிற்கு சாதகமாக உள்ளதாக கூறப்பட்ட முன்மொழிவுகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
அதன் பிறகு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் ஞாயிற்றுக் கிழமை (நவம்பர் 30) புளோரிடாவின் ஹாலண்டேல் கடற்கரையில் உக்ரைன் தூதுக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன் பிறகு இந்த முன்மொழிவுகள் குறித்து ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக விட்காஃப், டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் தலைமையிலான அமெரிக்கப் பிரதிநிதிகள் குழு ரஷ்யா சென்றுள்ளது. இந்த குழுவுடன் சந்திப்பு நடத்துவதற்கு முன் பத்திரிகையாளர்களிடம் பேசிய புட்டின்,
‘உக்ரைனின் கூட்டாளியாக உள்ள ஐரோப்பிய நாடுகளிடம் அமைதிக்கான திட்டம் இல்லை. அவர்கள் போரின் பக்கமே உள்ளனர். போர் நிறுத்த முன்மொழிவுகளை, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளுடன் திருத்தி, முழு சமாதானத்தை நோக்கி செல்லும் செயல்முறையையும் தடுத்து நிறுத்திவிட்டது. ஆனால் போர் தொடர்வதற்கு காரணம் ரஷ்யா எனக் குறை கூறுகிறது. ரஷ்யாவுக்கு ஐரோப்பாவைத் தாக்கும் திட்டம் இல்லை. ஆனால், ஐரோப்பா திடீரென்று எங்களுடன் போர் தொடுக்க விரும்பினால், போரைத் தொடங்கினால் அதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்.’
எனவும் புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர புட்டினுக்கு விருப்பம் – ட்ரம்ப் பேட்டி
கடந்த 2022 பெப்ரவரி முதல் நடந்து வரும் உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்ய அதிபர் புட்டின் விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக புதன்கிழமையன்று (03.12.2025) ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டர்ம்ப்பின் மருமகன் உள்ளிட்டோர் அடங்கிய அமெரிக்க தூதுக்குழு சுமார் 5 மணி நேரம் ரஷ்ய அதிபர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. மாஸ்கோவில் இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தை முழுக்க முழுக்க உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக மட்டுமே மேற்கொள்ளப்பட்டது.
இந்த சந்திப்பு குறித்துதான் ஓவல் அலுவலகத்தில் பேட்டியளித்த ட்ரம்ப், “ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரட் க்ரூஷ்னருடன் புட்டின் நல்லதொரு சந்திப்பை மேற்கொண்டார். அந்த பேச்சுவார்த்தையின் முடிவு என்னவென்பதை நான் இங்கே வெளிப்படையாகச் சொல்ல முடியாது. ஆனால் புட்டின் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார் என்று ஸ்டீவ், க்ரூஷ்னர் தெரிவித்தனர். இதுவே அச்சந்திப்பின் சாராம்சம்” என்றார்.
ஆனால், கிரெம்ளின் மாளிகையின் மூத்த ஆலோசகர் யுரி உஷ்கோவ் கூறுகையில், “உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் அமெரிக்கா – ரஷ்யா இடையேயான மிக விரிவான பேச்சுவார்த்தை இது. ஆனால் எல்லைப் பிரச்சினை தொடர்பாக எந்தவொரு சமரசமும் எட்டப்படவில்லை. இருப்பினும், இரு தரப்புமே பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்தது.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதன் பின்னணியில் இன்னும் ஏராளமான விஷயங்கள் செய்ய வேண்டியுள்ளன. இந்த சந்திப்பு குறித்த தகவல்களின் இரகசியம் காப்பாற்றப்பட விரும்புகிறோம். என்ன மாதிரியான சமரசங்கள் பேசப்பட்டன என்பன குறித்த தகவல்களை வெளியிடப்போவதில்லை. இந்த சந்திப்பு குறித்து ட்ரம்ப்பிடம் அமெரிக்க தரப்பு பேசும். பின்னர் அவர்கள் எங்களை தொடர்பு கொள்வார்கள்” என்றார்.

