இலங்கை தொடர் குண்டுவெடிப்பின் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவரும் விசாரணைகள் தெற்காசிய நாடுகளிலும் ‘ஐ.எஸ்.’ அமைப்பு பரவுகிறதே என்ற அச்சத்தை எல்லோர் மத்தியிலும் உருவாக்குவதை உணர முடிகிறது. இராக்கிலும் சிரியாவிலும் மிகப் பெரிய நிலப்பரப்பைத் தங்களது கட்டுப்பாட்டில் நீண்ட காலம் வைத்திருந்த அபு பக்கர் அல்-பக்தாதி தலைமையிலான ‘ஐ.எஸ்.’ அமைப்பு அங்கு ஒடுக்கப்பட்ட பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும் என்றே பெரும்பாலானோர் நம்பினர். அமெரிக்காவும் சிரியாவிலுள்ள குர்துகளும் பாக்தாதி வசமிருந்த கடைசி நிலப்பரப்பையும் கைப்பற்றி, ‘ஐ.எஸ். அழிந்துவிட்டது’ என்று அறிவித்தபோது உலகம் பெருமூச்சுவிட்டது. ஆனால், பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிரான போரில் படைகள் அழிக்கப்படுவதோடு காரியங்கள் முடிவதில்லை. அவர்கள் பின்பற்றும் சித்தாந்தங்களும் வலுவிழக்கச்செய்யப்பட வேண்டும் என்பதையே இலங்கை இழப்புகள் நமக்குச் சொல்கின்றன.
2015 தொடக்கத்தில் பன்னாட்டுப் படைகளால் தோற்கடிக்கப்படத் தொடங்கியவுடனேயே தனது உத்திகளை மாற்றிக்கொண்டுவிட்டது ‘ஐ.எஸ்’. நிலப்பரப்பைக் கைப்பற்றி தனது அரசைப் பெருக்கிக் கொள்வதற்குப் பதிலாக, உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் தன்னை நோக்கி வரும் இiளுஞர்களுக்கு நாச வேலைகளில் பயிற்சி அளித்து, அடிப்படைவாதக் கருத்துகளைப் புகுத்தி மூளைச்சலவை செய்து அவரவர் நாடுகளிலோ, இலக்காக எடுத்துக் கொள்ளப்படும் நாடுகளிலோ திடீர்த் தாக்குதல் நடத்தப் பழக்கியது. தெற்காசிய நாடுகள் எப்போதும் அதன் கவனத்தில் இருந்தன.
ஆப்கனின் கிழக்குப் பகுதியிலுள்ள நங்கரஹர் மாகாணத்தை ‘ஐ.எஸ்’ தனது கட்டுப்பாட்டில் இன்னமும் வைத்திருக்கிறது. அங்கிருந்துதான் தெற்காசிய நாடுகளில் தனது பணிகளை விரிவுபடுத்திக்கொண்டிருக்கிறது. ஆப்கனில் மட்டுமல்லாது பாகிஸ்தான், வங்கதேசத்திலும்கூட ‘ஐ.எஸ்’ தொடர்புள்ள அமைப்பினர் நாசவேலைகளில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் இராக், சிரியா சென்று வந்தவர்கள். ஒருகாலத்தில், எந்தத் தீவிரவாத அமைப்பிலுள்ளவர்களின் பின்னணியை ஆராய்ந்தாலும் வறுமை, கல்வியறிவின்மை, வேலைவாய்ப்பின்மைக்கு முக்கிய பங்கு இருக்கும். ஆனால், இலங்கையில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியவர்களோ நன்கு படித்தவர்கள், பணக்காரக் குடும்பப் பின்னணியைச் சார்ந்தவர்கள், நல்ல வேலைவாய்ப்புகளை அமைத்துக்கொள்ளும் இடத்தில் இருந்தவர்கள். அப்படியென்றால், எது அவர்கள் கண்களை மறைக்கிறது? சித்தாந்தத்துக்கு இதில் முக்கியப் பங்கிருக்கிறது. அடிப்படைவாதம் எல்லாக் கண்களையும் அடைத்துவிடும்.
பயங்கரவாதம் ஒரு பாதையிலிருந்தபடி செயல்பட முடியும். ஆனால், பயங்கரவாத எதிர்ப்பானது பல பாதைகளின் வழியே செயல்படுத்தப்பட வேண்டியது. எனவே, ‘ஐ.எஸ்’ அமைப்பைத் தகர்ப்பதற்கு இணையான முக்கியத்துவம் அதன் சித்தாந்த செல்வாக்கைத் தடுப்பதற்கும் கொடுக்க வேண்டியது முக்கியம். வெறுப்பை வெறுப்பால் எதிர்கொள்ள முடியாது. நம் முன்னுள்ள மிகப்பெரிய சவால் அதுதான்.
நன்றி: ‘த இந்து’ ஆசிரிய தலையங்கம் – மே 09