Site icon சக்கரம்

புலிகள் மீதான தடை நீட்டிப்பு: இந்திய மத்திய அரசு அறிவிப்பு

தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்தல், தேசத்துக்கு எதிரான செயல்பாடு ஆகியவற்றில் ஈடுபடுவதால் விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

”தமிழ் ஈழத்துக்காகப் போராடும் விடுதலைப் புலிகளின் நோக்கம் இந்தியாவின் இறையாண்மைக்கும், எல்லைப்புற ஒற்றுமைக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கிறது. இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் இதுபோன்ற பிரிவினை வாதங்களையும், சட்டவிரோதச் செயல்களையும் அனுமதிக்க முடியாது.

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், அந்த அமைப்பில் இருந்து விலகியவர்கள், அனுதாபிகள், ஆதரவாளர்கள் ஆகியோரை சமீபத்தில் தமிழக அரசு கண்டுபிடித்தது. இவர்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட எல்டிடிஈ அமைப்பால் பயன்படுத்தப்பட உள்ளார்கள் என்பது குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் (எல்டிடிஈ) அமைப்பு தொடர்ந்து இந்திய அரசுக்கு எதிரான செயல்களிலும், இந்திய அரசின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் செயல்பட்டு வருகிறது.

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் மக்கள் இன்னும் தொடர்ந்து இணையதளங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றனர். இலங்கையில் விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிப்பட இந்திய அரசுதான் காரணம் என்று இணையதளங்களில் பிரச்சாரம் செய்யப்படுவதால், இலங்கை வாழ் தமிழர்கள் மத்தியில் இந்தியாவுக்கு எதிரான மனநிலை தொடர்ந்து வருகிறது. 2009-ம் ஆண்டு போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டும், அவர்கள் தமிழ் ஈழம் கோரிக்கையை கைவிடவில்லை. அதற்கான பிரச்சாரங்கள், நிதி திரட்டுதலில் ஈடுபட்டு வருகிறார்கள். விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள், ஆதரவாளர்கள் மீண்டும் சர்வதேச அளவிலும், உள்நாட்டளவிலும் ஒன்று சேர்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்

இதனால், இந்தியாவில் உள்ள மிக முக்கிய விவிஐபி மனிதர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளையலாம்.ஆதலால், விடுதலைப் புலிகள் அமைப்பை சட்டவிரோத அமைப்பு என அறிவித்து உடனடியாகத் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச்சட்டம் 1967-ன் கீழ் இதுவரை விடுதலைப் புலிகள், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, அல் கொய்தா உள்ளிட்ட 41 அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்து, 14.05.2019

Exit mobile version