– களந்தை பீர்முகம்மது
ஓய்வாக இருந்த ஒரு நாளில் எங்காவது போய்வரலாம் என்ற எண்ணம் எழுந்தபோது, மறுசிந்தனைக்கு இடம் கொடுக்காமல் தேங்காய்ப்பட்டினம் புறப்பட்டேன். ஒரே காரணம், அது தோப்பிலாரின் ஊர் என்பதுதான். கடற்கரையில் நின்றபோது அபாய எச்சரிக்கை இருப்பதைக் கண்டேன். என் வாழ்நாளில் பல ஊர்கள் சென்று கடலோடு அளைந்து மகிழ்ந்தாலும் தேங்காய்ப்பட்டினம் கடல்தான் எனக்குப் பெரும் அச்சத்தைத் தந்தது. கரைக்கு அப்பால் இருபதடி தூரமேனும் விலகி நின்றேன். ஓங்கியுயர்ந்து வந்த அலைகளின் கூச்சலும் ஆர்ப்பரித்தெழும் அதன் பிரம்மாண்டமும் என்னை மருள வைத்தன. அலைகள் நீள வடிவாக மடிந்து மடிந்து கரையைத் தாவ எண்ணிப் பனைமர உயரத்துக்கு எழுந்தன; இந்தச் சமயத்தில் ஏனோ நான் தோப்பிலாரையே நினைத்துக்கொண்டிருந்தேன்.
தன் படைப்புலகில் அவர் தன்னை ஒரு மனிதனாகவே நிலைநிறுத்திக்கொண்டிருந்தார்; மனிதனாக மட்டுமே! ஒரு கலைஞனாகத் தனக்கும் தன் படைப்புக்கும் இடையே எவ்விதமான இரும்புத் திரைகளும் எழுந்துவிடாமல் கவனம்கொண்ட நிலையில் ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’, ‘கூனன் தோப்பு’, ‘அஞ்சுவண்ணம் தெரு’ என விரிந்தார்.
அசலான மனிதர்களை உலவவிட்டவர்
அதுவரை எழுதப்பட்டுவந்த முஸ்லிம்களின் கதைகள் வாழ்வியலில் பொருந்தி நின்றிருக்கவில்லை. ஒய்யாரமான கற்பனைகளுக்குள் அவ்வகை எழுத்துகள் தஞ்சம் கொண்டிருந்தன. அவற்றில் ஏழ்மையில்லை; போட்டியில்லை; பொறாமையில்லை; ஏற்றத்தாழ்வுகள் இல்லை! சொல்லப்போனால் இவ்வாறெல்லாம் இருக்க வேண்டும் என்றே ஒவ்வொரு மானுடனும் விரும்புகிறான். ஆனால், இடையிலுள்ள நிலத்தில் கால் பாவாமல் எப்போதும் வானில் சிறகசைத்து அத்தனை இடர்களையும் தாண்டிச்செல்லக்கூடிய வாய்ப்பை நம் காலம் தந்திருக்கவில்லை. அப்படைப்புகளில் வந்த கதாபாத்திரங்களின் மொழி வாழ்வைப் பேசியதைவிட மதத்தை மட்டுமே பேசிக்கொண்டிருந்தது.
நல்ல மாற்றத்தை வெற்றுப் பேச்சினால் உருவாக்கிவிட முடியாது. சமூகத்தை ஆழமாகத் தோண்டிப் பரிசீலிக்கும் இலக்கியங்களால் மாத்திரமே அந்த எழுச்சியை உருவாக்க முடியும். ஓர் அசலான மனிதன் அசலான பேச்சுவழக்கோடு முதன்முதலாக உள்ளே நுழைய முடிந்தது தோப்பிலாரின் நாவல்களுக்குள்தான். அவன் தன் வாழ்வையே வாழ முயன்றான். அவனுக்கு நவீனக் கல்வி அச்சத்தை ஊட்டுகிறது. ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’யில் வரும் இந்தக் காட்சி அக்காலத்திய மனநிலையைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.
தன் கடைக்கு வந்த மஹ்மூதைக் கண்டதும் உஸன்பிள்ளை கேட்கிறார், “தெரியுமா?”
“தெரியாது.”
“கியாம நாள் (உலக முடிவு நாள்) அடுத்தாச்சு.”
“தெரியல்லியே.”
“சூரியன் எங்கே உதிக்குது?”
“கிழக்கே.”
“இல்ல, மேக்க. இப்பம் மேக்கத்தான் சூரியன் உதிக்குது.”
“உஸன்பிள்ளாக்க என்ன சொல்லியோ?”
“உஸன்பிள்ளைக்குப் பைத்தியமில்ல. உண்மைதான் சொல்லேன். இங்க இங்கிலீசுப் பள்ளிக்கூடம் வரப்போவுது தெரியுமா?”
“தெரியாது.”
“அப்படின்னா தெரிஞ்சுக்கோ.’’
“இங்கிலீசு பள்ளிக்கூடம் வந்தா என்னா, வரட்டுமே.”
“உனக்குத் தலைக்கு வட்டா? வந்தா என்னான்னா, வந்தா புள்ளைகளெல்லாம் காபிரா மரிக்கும்.”
“அப்படி மரிச்சாலும் பரவாயில்லை. பள்ளிக்கூடம் வந்து புள்ளியோ ரெண்டு எழுத்து படிக்கட்டு. நம்மளெல்லாம் குருடன். அவங்க கண்ணாவது தொறக்கட்டு.”
“உனக்கு நல்ல பைத்தியம் புடிச்சிருக்கு தப்பளம் வைக்கணும்.”
இந்த உரையாடலின் ஜீவன் அதற்கு முன்னரான ஏனைய இஸ்லாமியப் படைப்புகளில் இல்லை. இந்த மண்ணின் மக்கள் எப்படி ஆங்கிலக் கல்விக்கு மருண்டுகொண்டிருந்தார்களோ அதே மருளல்தான் இந்த முஸ்லிம்களுக்கும். ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுத்திப் பார்க்கத் தெரியாத மனிதர்கள். இஸ்லாமிய இன வரைவியலை அதன் ஒழுங்குகளோடு புனைந்ததில் தோப்பிலாருக்கு எந்தச் சாய்மானமும் இல்லை. அவர் விலகி நின்று தன் சமூகத்தைச் சுயவிமர்சனம் செய்யும் பாங்கு அது.
தமிழ் அலையில் மலையாள வாடை
காலம் மாறும்போது சமூகமும் மாறியாக வேண்டும். இதனிடையே எழும் எல்லா அச்சங்களும் போக்கடிக்கப்பட வேண்டும். அப்படியானால், முழு வாழ்க்கையை அசலாகப் படைக்கும்போது அந்த அசலிலிருந்து அடுத்தக்கட்டப் பாய்ச்சலுக்கு வழிவகுக்கிறார். அப்படி வழிவகுத்தால் தன் மார்க்க உணர்வு கலைந்துபோகும் என்கிற பதற்றம் தோப்பிலாருக்கு இல்லை; ஆனால், அதை வாசிப்பவர்களுக்கு இருந்தது.
அவரின் படைப்புக்கான சுதந்திர வெளியை மலையாள இலக்கியத்தின் மூலம் அவர் பெற்றிருக்க வேண்டும். அவரது நிலம் தமிழைப் பேசியபடியே மலையாளத்தைத் தழுவிக்கொண்டிருந்தது. நீலக்கடலலைத் தமிழை முழங்கினால், வீசிய காற்றில் மலையாள வாடை வந்தது. இத்துடன் அவருடைய கதைகள் சம்பவக் கோவைகளாக மட்டும் ஆகாமல் அதனூடான விசாரணையாகவும் இணைந்தே நிகழ்ந்தன. இந்த இசைவு இல்லாதிருப்பின் அவருடைய கதைகள் நம்பகத் தன்மையை இழந்திருக்கும்; இவற்றையெல்லாம்தான் வெகு தைரியமாகச் செய்துவருகிறோம் என்ற உணர்வுநிலையில் அவர் இருந்ததில்லை.
காலத்தை வெல்லும் படைப்புகள்
சாத்தியமற்ற அம்சங்களைச் சாத்தியமாக்குவதில் ஒரு கலைஞன் தோற்கக் கூடாது. அவருடைய கதைகளில் சமூகம் ஆரம்பக் காலத்தில் ரொம்பவும் ஒவ்வாமை கொண்டிருந்தது. இலக்கியத்தை ஒரு வரமாகப் பார்க்கத் தெரியாதிருந்த சூழல் அது. அதை இறுகப் பற்றிப் பிடித்திருந்தால் சமூகம் மேலும் சில படிகள் முன்னேறியிருக்கும்தான்.
தன் படைப்புக்குள் மதம் எந்த அளவில் ஊடாடி நிற்பதாக அவர் கருதினாரோ அந்த அளவுக்கு அது இல்லாதிருந்தால் என்னவாக இருந்திருக்கும் எனவும் அவர் பரிசீலனை செய்திருக்கிறார். ஆகவே, காலத்தை வெல்லும் படைப்புகள் தோன்றின அவரிடமிருந்து.
ஒரு புரட்சிக்காரனைப் போலவே தமிழ்ப் படைப்புலகுக்குள் நுழைந்தார்; கூடவே, கற்பனையின் விரிவையும் தாண்டிய தொன்மங்களின் வழியே ஒரு நாட்டுப்புறக் கலைஞனாகவும் அவர் ஜொலித்தார். அப்படிப்பட்ட கலைஞனின் – படைப்பாளியின் முகத்தைச் சலனமற்ற நிலையில் பார்க்க நேர்ந்ததே பெரும் துரதிர்ஷ்டம்.
–தமிழ் இந்து, 12.05.2019