திருவனந்தபுரத்தில் மே 26, சனியன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், தேர்தலில் ஏற்பட்ட தோல்வி நிலையான மாற்றம் என யாரும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.மோடியின் அரசு மீண்டும் வந்துவிடக்கூடாது என்று விரும்பும் மக்கள் கேரளத்தில் உள்ளனர். அதில் ஒரு பகுதியினர் எங்களுக்கும் வாக்களிப்பவர்கள். அந்த வாக்குகள் இம்முறை எங்களுக்கு கிடைக்கவில்லை. அவர்கள் நினைத்தது காங்கிரஸ் கட்சியே மத்தியில் புதிய அரசுக்கு தலைமை தாங்கப்போகிறது என்று. அதுமட்டுமல்ல இது மக்களவைக்கான தேர்தல் என்கிற எண்ணமும் அவர்களிடம் ஏற்பட்டது. இந்த எண்ணங்களுக்கு ராகுல்காந்தி வயநாடு தொகுதி வேட்பாளராக போட்டியிட்டது வலு சேர்த்தது. அமேதியில் தோல்வி அடைவது உறுதி என்பதால்தான் அவர் வயநாட்டில் போட்டியிட்டார் என்பது இப்போது அனைவருக்கும் புரிந்துவிட்டது. காங்கிரசுக்கு பெரும் வாய்ப்பு இருப்பதாக மக்களை தவறாக சிந்திக்க வைத்த ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் அந்த கட்சி தகர்ந்தது என பினராயி விஜயன் சுட்டிக்காட்டினார்.
சபரிமலை பிரச்சனை தேர்தல் முடிவுகளை பாதிக்கவில்லையா என்கிற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், சபரிமலை பாதித்திருந்தால் அதன் பலன் கிடைத்திருக்க வேண்டியது பாஜகவுக்கு. ஆனால் பத்தனம்திட்டா உட்பட மூன்றாம் இடத்தையே பாஜகவால் பிடிக்க முடிந்தது. நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு மக்கள் மத்தியில் சில தவறான புரிதல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதை நாங்கள் பரிசீலிப்போம்.
பதவி விலகல் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், மாநிலத்தில் ஒரு அரசு அதிகாரத்தில் உள்ளபோது தேர்தலில் ஆளும்கட்சிக்கு தோல்வி ஏற்பட்டால் எதிர்கட்சி முன்வைக்கும் கோரிக்கை இது. அதன் பெயரால் பதவி விலக வேண்டிய தேவை இல்லை. மக்கள் மனங்களில் இந்த அரசுக்கு இடமுள்ளது. எனது செயல்பாடுகள் இந்த அடிப்படையில் தொடரும். எனது பாணி என்னுடையது. அதில் மாற்றம் ஏற்படாது. நான் இந்த நிலையை எட்டியது இத்தனை காலம் என்னிடம் உள்ள இதே பாணியிலான செயல்பாடுகளால்தான். அந்த பாணியிலான செயல்பாடுகள் இனியும் தொடரவே செய்யும். அதில் எந்த மாற்றமும் ஏற்படாது என கூறினார்.
-தீக்கதிர்
மே 27, 2019