Site icon சக்கரம்

மோடி மீண்டும் வருவார் என்றால் – அது இந்திய ஜனநாயகத்தின் அழிவே!

– ஜெயமோகன்

ன்புள்ள ஜெயமோகன்,

ராகுல்காந்தி தலைமையேற்கப் போவதில்லை என்று சொல்ல அதற்கெதிராகக் காங்கிரஸ் தலைவர்கள் கூட  ‘எங்கள் தொண்டர்கள் தற்கொலை செய்துகொள்வார்கள்’ என்று மிரட்டும் நிலையைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பரம்பரை ஆட்சியின் இந்த கேடுகெட்ட நிலையை ராகுல்காந்தியின் எளிமையை ரசித்த உங்களால் ரசிக்கமுடியும் என்று நினைக்கிறேன்.

எஸ்.ஸ்ரீனிவாஸ்

அன்புள்ள ஸ்ரீனிவாஸ்,

எளிமையான கேள்வி. இந்திய ஜனநாயகத்தில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா? இந்தியாவின் ஒருமைப்பாட்டில் நம்பிக்கை உள்ளதா? ஆம் என்று சொன்னீர்கள் என்றால் மேலே வாசியுங்கள். இல்லையென்றால் இங்கே நான் ஒரு புன்னகையை வைத்தேன் என எண்ணிக்கொள்ளுங்கள். நீங்கள் கட்சிக்காரர் என்றால் என்னிடம் நன்கொடை கேட்கவேண்டாம் என்று மட்டும் கூடுதலாகச் சொல்லிக்கொள்கிறேன். அரசியல்கட்சிகளிடம் நான் உச்சகட்டமாக எதிர்பார்க்கும் நன்மை அதுதான்.

இந்திய ஜனநாயகத்தில் உங்களுக்கு நம்பிக்கை
இருந்தால் இந்தியாவில் ஒரு வல்லமை வாய்ந்த
எதிர்க்கட்சி இருக்கவேண்டும் என ஒத்துக்கொள்வீர்கள்.
இன்றைய ஆட்சிமேல் சலிப்போ கோபமோ
எழுமென்றால் மக்கள் தேர்ந்தெடுக்க இன்னொரு
தரப்பு இருக்கவேண்டும். இன்றைய அரசின்
தோல்விகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்ட
நாடாளுமன்றத்திலும் மக்கள்மன்றத்திலும்
வலுவான ஓர் அமைப்பு இருக்கவேண்டும்.

அவ்வாறு நிலைகொள்ளும் எதிர்க்கட்சி இந்தியா
முழுக்க வேர்களுள்ளதாக இருக்கவேண்டும்.
இந்தியாவின் எந்த ஒருபகுதிக்கும் உரியதாக,
ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கோ வட்டாரத்தினருக்கோ
ஆதரவாகச் செயல்பட்டாகவேண்டிய கட்டாயம்
இல்லாததாக இருந்தாகவேண்டும்.

இன்றைய சூழலில் அத்தகைய கட்சி
காங்கிரஸ் மட்டுமே. அடுத்த காலகட்டத்தில்கூட
இன்னொரு கட்சி அவ்வாறு எழுந்துவரும் என்று
தெரியவில்லை. ஆகவே ஜனநாயகத்தையும் தேசிய
ஒருமைப்பாட்டையும் நம்பும் எவரும் காங்கிரஸ்
வாழவேண்டும், வல்லமைபெறவேண்டும்,
நிகரென நின்றிருக்கவேண்டும் என்றே விரும்புவார்கள்.

சரி, அதற்கு ராகுல்தான் ஒரே வழியா..?
பரம்பரை ஆட்சி அன்றி வேறுவழி இல்லையா..?

இருக்கும் தலைவர்களில் எவர் தேசமளாவ
தெரியப்பட்டிருப்பவர்,

வட்டார அடையாளங்கள் அற்றவர்
என்பதே கேள்வி. அது ராகுல்தான்.

ஆகவே அவர் தலைவராக இருந்தாகவேண்டும்.
அவர் தலைவராக இருந்தால் மட்டுமே கட்சியின்
தேசிய அடையாளம் நீடிக்கும். கட்சியை நாடெங்கும்
தொகுக்கும் மையம் வலுவாக இருக்கும். அப்படித்தான்
அக்கட்சி கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே அதுவே ஒரே வழி.

இந்திய அரசியல்சூழலில் உள்ள சில நடைமுறைக்
கூறுகளை நாம் கவனிக்கவேண்டும். இங்கே
அரசதிகாரத்தில் இருப்பவருக்கு ஒரு சாதகமான கூறு
உள்ளது. அவர் அரசைப் பயன்படுத்தி நாடெங்கும்,
மூலைமுடுக்குகளெங்கும், தன்னை விளம்பரப்படுத்திக்
கொள்ள முடியும்.

அரசாங்கமே மாபெரும் விளம்பரநிறுவனமாக
ஆகிவிடுகிறது இங்கே.

சென்ற ஐந்தாண்டுகளில் மோடியை விளம்பரம் செய்ய
அரசு செலவழித்த தொகை எத்தனைகோடிகள் என்று
எண்ணிப்பாருங்கள்.

ஒட்டுமொத்த காங்கிரஸையே விற்றாலும்
அந்தத் தொகை கிடைக்காது.

ஆகவே இங்கே ஆட்சியாளர் அரசு என்ற பீடம் மீது
ஏறி நின்று தேர்தலை எதிர்கொள்கிறார். எதிர்ப்பவர்
தரையில் நிற்கிறார்.
அங்கேயே சமமின்மை உருவாகிவிடுகிறது.

இந்தியத்தேர்தலென்பது எப்போதும் ஆளுமைகளுக்கு
இடையேயான போராகவே நிகழ்கிறது, மக்களால்
அவ்வண்ணமே உள்வாங்க முடிகிறது, என்பதனால்
ஜனநாயகப் போராட்டத்தில் ஆட்சியாளர்
வெல்வதற்கான வாய்ப்புகளே அதிகம்

முன்பு அரசே ஆட்சியாளர்களை விளம்பரப்படுத்தும்
வழக்கம் இருக்கவில்லை. நேருவின் காலகட்டத்திலும்,
காமராஜர், பக்தவத்சலம் ஆட்சிக்காலம் வரைக்கும் கூட
அரசும் ஆட்சியாளர்களும் வேறாகவே கருதப்பட்டனர்.

அரசுச் செலவில் ஆட்சியாளருக்கு நேரடி விளம்பரம்
செய்வது, அரசுத்திட்டங்களை ஆட்சியாளரான
அரசியல்வாதியின் கொடைகளாக விளம்பரப் படுத்துவது
ஆகியவை மு.கருணாநிதியால் இந்திய அளவில்
தொடங்கி வைக்கப்பட்டவை.

நான் சிறுவனாக இருக்கையிலேயே அவற்றை
ஏ.என்.சிவராமன் ( தினமணி ஆசிரியர் )
கடுமையாகக் கண்டித்து எழுதிய கட்டுரைகளை
வாசித்திருக்கிறேன்.

அவை மோசமான முன்னுதாரணங்கள் என அவர்
சொன்னார். அவ்வாறே ஆகியது.

அரசியலில் இந்திரா காந்தி பெரும்பாலும்
மு.கருணாநிதியின் வழிகளையே பின்தொடர்ந்தார்.
அவற்றிலொன்று இந்த விளம்பரம்.

பின்னர் வந்த எம்.ஜி.ஆர் பதினாறடி பாய்ந்தார்.
ஜெயலலிதா முப்பத்திரண்டு அடி.

மோடி முப்பத்திரண்டாயிரம் அடி.

இச்சூழலில் எதிர்க்கட்சியினரிடம் வலுவான
ஆளுமையாக ஒருவரை முன்னிறுத்தமுடியாத நிலை
உருவாகிறது. பொதுவாக கல்வியறிவு குறைவான
இந்த மாபெரும் நிலத்தில் நாடளாவ ஒருவரைக்
கொண்டுசென்று சேர்ப்பது எளிதல்ல.

இந்திய அரசியலில் மாபெரும் தலைவர்கள் கூட
அவ்வாறு நாடெங்கும் அறியப்பட்டவர்கள் அல்ல.
ராம் மனோகர் லோகியா, ஜெயப்பிரகாஷ் நாராயணன்,
மொரார்ஜி தேசாய் , வி.பி.சிங் வரை எவரும்
நாடெங்கும் அறியப்படவில்லை.

இந்த வசதியை ஐம்பதாண்டுகளாகக் காங்கிரஸ்
பயன்படுத்திக்கொண்டது. இந்திரா முதல் ராஜீவ் வரை
இந்த வாய்ப்பையே முதன்மை ஆற்றலாகக் கொண்டிருந்தனர்.

நெருக்கடிநிலைக்குப்பின் இந்திரா மேல் மிகக்கடுமையான
கசப்பு உருவான காலகட்டத்தில்கூட அவ்வெறுப்பை
நாடளாவத் திரட்ட ஓர் எதிர்க்கட்சித்தலைவர் இங்கே
இருக்கவில்லை. கூட்டு ஆட்சியையே கொண்டுவர
முடிந்தது. அந்தக்கூட்டாட்சி நீடிக்கவில்லை. அதையே
காரணமாகக் காட்டி காங்கிரஸ் மீண்டும் வந்தது.

ஆளுமையை மையமாக்கிய இந்தியத்தேர்தலில்
ஆளுமை இல்லாமல் தேர்தலைச் சந்தித்து
வெல்லமுடியாது. நாடெங்கும் அறியப்படும் தலைவர்
இல்லையேல் மையத்தொகுப்பு நிகழாது.

இந்திய அரசியலில் கூட்டுஅரசுகள் தலைமையின்றி
வெற்றுப்பூசலாக சிதையும். அதையே அவர்களின்
பலவீனமாகச் சுட்டிக்காட்டி ‘நிலையான அரசு’ என்ற
கோஷத்துடன் மையவிசை கொண்ட கட்சி ஆட்சியில்
நீடிக்கமுடியும். இந்திரா, ராஜீவ் வரை இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டனர்.

இன்று அந்த இடத்தில் பாரதிய ஜனதா இருக்கிறது.
அன்று எதிர்க்கட்சிகள் இருந்த இடத்தில் காங்கிரஸும்
பிற கட்சிகளும் உள்ளன

காங்கிரஸில் நாடெங்கும் அறியப்படும் தலைவர்
ராகுல் காந்திதான். இதுவும் இந்தியாபோன்ற ஒரு
முதிர்ச்சியற்ற ஜனநாயகத்தில் தவிர்க்கமுடியாதது.

ஒரு தலைவரை நாடெங்கும் கொண்டுசென்று சேர்ப்பது
கோடானுகோடி ரூபாய் முதலீடு தேவையான ஒன்று
என்னும்போது இன்னாரின் மகன் என்பது மிகப்பெரிய
செல்வம். அது அவரை எளிதில் கொண்டு சென்று
சேர்க்கிறது. அவருடைய தந்தை, அவருடைய
குடும்பம் ஈட்டி வைத்திருக்கும் பெயர் என்பது
ஒரு முதலீடு. அதை அவர் துறக்கவேண்டும் என்றும்
அதை காங்கிரஸ் கட்சி இழக்கவேண்டும் என்றும்
எவர் சொல்லமுடியும்?

பாரதிய ஜனதாக் கட்சி ‘தொண்டர் அடிப்படை’ யில்
கட்டப்பட்டது.

அதற்குத் தொண்டர்களை உருவாக்குவதற்கான
மாபெரும் அடித்தளமாக ஆர்.எஸ்.எஸ் உள்ளது.

இருந்தும் அரைநூற்றாண்டாக அதனால் நாடெங்கும்
அறியப்பட்ட ஒரு தலைவரை உருவாக்க முடியவில்லை.
அது அவர்களின் மிகப்பெரிய குறைபாடாக நீடித்தது.
முழுப் பெரும்பான்மையை எட்டமுடியாது
அக்கட்சி பலகாலம் திணறியது அதனால்தான்.

மோடி எழுந்துவந்தது ஒரு வரலாற்று வாய்ப்பு.
குஜராத் கலவரங்களுக்குப் பின் மோடிமேல் கொண்ட
அச்சம், காழ்ப்பால் எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும்
அவரைப்பற்றிப் பேசிப்பேசி நாடெங்கும் கொண்டு
சென்று சேர்த்தன.

அரசியலை தாங்களே விரும்பிக் கவனிக்கும்
வழக்கமற்ற பெரும்பாலான மக்கள் உள்ள இந்த
நாட்டில் எதிர்மறை விளம்பரமும் விளம்பரமே.
அதுவே மோடியை நாடெங்கும் கொண்டுசென்று
சேர்த்தது.

இன்று மோடி இந்திய மைய அரசின் விளம்பர
வல்லமையால் நாடெங்கும் நன்றாக
அறியப்பட்டிருக்கிறார். இன்று மாபெரும் ஆளுமை
என்ற படைக்கலம் பாரதிய ஜனதாவிடம் உள்ளது.
பாரதிய ஜனதா குதிரைமேல் இருந்து போரிட
காங்கிரஸ் தரையில் நின்றிருக்கிறது

ஆகவே, இன்று ஜனநாயகம் செயல்படவேண்டும்
என்றால் ராகுல் தலைமையில் காங்கிரஸ்
பணியாற்ற வேண்டும். மக்களால் நாடெங்கும்
அறியப்பட்டிருத்தல் என்னும் வாய்ப்பு அவருக்கே.
அதற்கு அவருடைய குடும்பப்பின்னணி காரணம்
என்றாலும் அதில் பிழையில்லை.

காங்கிரஸ் வலுவிழக்கும் என்றால் இந்தியாவை
கட்டி ஒன்றாக்கியிருக்கும் விசைகளில் ஆற்றல்மிக்க
ஒன்று இல்லாமலாகிறது.

பாரதிய ஜனதாவுக்கு மாற்றாக மாநிலக்கட்சிகளோ
உதிரிக்கட்சிகளோ வருமென்றால் அது –
நாட்டுநலனுக்கு நல்லது அல்ல.

இந்தத்தேர்தலில் இத்தகைய தோல்விக்கான
காரணங்கள் என்னென்ன?

தேர்தலே ஆளுமைகளுக்கு எதிரான போர்
என்றிருக்க ராகுலை பிரதமர் வேட்பாளராக,
மைய ஆளுமையாக முன்னிறுத்த எதிர்கட்சிகள்
தவறிவிட்டன. அவர்கீழ் இணைந்து நின்று
பணியாற்றுவோம் என்னும் வாக்குறுதியை அவை
மக்களுக்கு அளிக்கவில்லை.

காங்கிரஸ் கட்சியேகூட அவரை முன்னிறுத்துவதில்
மென்றுவிழுங்கியது. அக்கட்சிக்குள்லேயே
மூத்த தலைவர்கள் அதை விரும்பவில்லை.
ராகுலே கூட தயக்கமான மொழியில் பேசினார்.
மோடி தயக்கமில்லாமல் தன்னை தலைவராக
முன்னிறுத்தினார். அவருடைய கட்சியும்
கூட்டணிக்கட்சிகளும் அவரை பின்துணை செய்தன.
அந்த தயக்கமின்மை ராகுலிடம் இருக்கவில்லை.
இந்திய அரசியலுக்கு அதெல்லாம் உதவாது.

ராகுலிடம் இருக்கும் அடக்கம் போன்றவை
தனிப்பட்ட முறையில் நற்பண்புகளே.(ஆனால், )
அரசியலில் – முன்னிற்கும் தன்மை, தயக்கமின்மை,
ஒருவகையில் கூச்சமின்மை ஆகையவை
தேவையாகின்றன.

வெல்லும் முனைப்பே தலைவர்களை
உருவாக்குகிறது. தன்னை வழிநடத்துவோனாக
எண்ணிக்கொள்பவன் வழிநடத்த ஆரம்பிக்கிறான்.

உலக அளவிலேயே மாபெரும் தலைவர்கள்
அனைவருமே தன்மைய நோக்கு கொண்டவர்கள்.
தன்னை முன்வைக்கவும் தற்பெருமை பேசவும்
தயங்காதவர்கள். தருக்குதல் என்பது தலைமையின்
இயல்பு. அது மக்களிடையே நம்பிக்கையை
உருவாக்குகிறது.அவர் சொற்களுக்கு மதிப்பை
அளிக்கிறது.

ராகுலை முதலில் அவருடைய கட்சி முழுமையாக
ஏற்கவேண்டும்.

ஐயமின்றி அவர் தலைமையை ஏற்காதவர்கள், அவரை
பிரதமருக்கான வேட்பாளராக முன்னிறுத்தாதவர்கள் களையெடுக்கப்படவேண்டும்.

எப்படி தலைமையில் பாரம்பரியவழி ஏற்கத்தக்கது.
மாநிலங்களில் அவ்வாறு அல்ல. ஏனென்றால்
பாரம்பரியம் ஏற்கப்படுவது ஒரு தலைவர் நாடெங்கும்
தலைவராக அறியப்படவேண்டும் –
ஏற்கப்படவேண்டும் என்பதற்காக மட்டுமே.

மாநிலங்களில் தலைமையை கீழ்மட்டம் வரை
கொண்டுசென்றுசேர்க்கும் துடிப்பான இளந்தலைவர்கள்,
அடிமட்டத்திலிருந்து உருவாகிவந்தவர்கள்,
களம் அறிந்தவர்களே தேவை.

இந்தத் தேர்தலில் மோடிக்கு மாற்றான வலிமையான
தலைவராக ராகுல் முன்னிறுத்தப்பட்டாரா என்று
மட்டும் கேட்டுப் பார்க்கலாம்.

குறைந்தது தமிழகத்திலாவது அவருடைய முகம்
தென்பட்டதா? காங்கிரஸ் வென்ற கேரளத்திலேயே
கூட அவர் முன்னிறுத்தப்படவில்லை.

மோடிக்கு மாற்றாக நிகராக ஒரு தலைவர் குறைந்தது
இரண்டு ஆண்டுக்காலம் தெளிவாக
முன்னிறுத்தப்பட்டாலொழிய அவரை வெல்லமுடியாது.
இன்று அதற்கான வாய்ப்பு கொண்டவர் ராகுல் மட்டுமே.

தேர்தலுக்குப்பின் தலைவரைத் தேர்ந்தெடுப்போம்
என்பதைப்போன்ற பசப்புகளுக்கெல்லாம்
இந்திய தேர்தலில் இடமில்லை.

எவர் தலைவராவார், அவர் என்னென்ன
வாக்குறுதிகளை அளிக்கிறார், அவர் எப்படிப்பட்டவர்
என்பவை மட்டுமே கேள்விகள்.

அதற்கான விடையென ஒருவரை முன்னிறுத்தி
குறைந்தது மூன்றாண்டுக்காலம் நாடெங்கும் செல்லும்
தொடர்ப்பிரச்சாரம் வழியாக மட்டுமே அவரை
மைய ஆளுமையாக நின்றிருக்கும் மோடிக்கு எதிராக
நிறுத்த முடியும். அப்போதுதான் அவர்
வெற்றிவேட்பாளர் ஆகிறார். இந்திய ஜனநாயகத்தில்
அவ்வாறுதான் மாற்றுத்தலைமை உருவாக முடியும்

ராகுல் தலைமை ஏற்கவேண்டும்.
நாடெங்கும் அடுத்த பிரதமருக்கான ஆளுமையாக
நிமிர்ந்து நின்றிருக்கவேண்டும்.

சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும்
பொறுப்பேற்கவேண்டும்.
அடுத்த ஐந்தாண்டுகளில் அத்தனை மாநிலங்களிலும்
அவர் பெரும் மக்கள் பங்கேற்பு நிகழ்ச்சிகளை
நடத்தவேண்டும்.

ஐந்தாண்டுகளுக்குப்பின் மோடி
மக்களை சந்திக்கையில் மக்கள் முன் – மாற்றும்
அதே அளவுக்கு வலுவாக நின்றிருக்கவேண்டும்.

இன்னொருவர் கண்ணுக்குப் படாமையால்
மோடி மீண்டும் வருவார் என்றால் –
அது இந்திய ஜனநாயகத்தின் அழிவே.

Exit mobile version