Site icon சக்கரம்

பாசிசத்தின் ஏழு அறிகுறிகள்: பாஜகவை தெறிக்கவிட்ட திரிணாமூல் எம்.பி. !

Kolkata,West Bengal,TMC
மோடி அரசின் அறுதிப் பெரும்பான்மை வெற்றியின் ஆபத்து குறித்தும், இந்தியாவில் தென்படத்தொடங்கியுள்ள பாசிசத்தின் ஆரம்ப அறிகுறிகள் குறித்தும் மொய்த்ரா உரையாற்றினார்

மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் தொகுதியிலிருந்து மக்களவைக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மௌவா மொய்த்ரா. குடியரசுத் தலைவரின் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானித்தின் போது மஹுவா மொய்த்ரா (Mohua Moitra) உரையாற்றினார்.

நரேந்திர மோடி அரசின் அறுதிப் பெரும்பான்மையான வெற்றியின் ஆபத்து குறித்தும், இந்தியாவில் தென்படத் தொடங்கியுள்ள பாசிசத்தின் ஆரம்பக்கட்ட அறிகுறிகள் குறித்தும் மொய்த்ரா உரையாற்றினார்.

“நான் பட்டியலிட்டுள்ள அனைத்து அறிகுறிகளும் அந்த சுவரொட்டியில் சுட்டிக் காட்டப்பட்டவையே” என்ற மொய்த்ரா, பாசிசத்தின் ஏழு அறிகுறிகளைப் பட்டியலிட்டு அது எவ்வாறு இன்று நாடு முழுவதும் வியாபித்திருக்கிறது என்பதையும் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

முதல் அறிகுறி :

இப்போது இங்கே சக்திவாய்ந்த மற்றும் தொடர்ச்சியான தேசியவாதம், எங்கள் தேசியப் பரப்பில் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது மேலோட்டமானதாகவும் இனவெறியுடனும் குறுகிய தன்மையுடனும் இருக்கிறது. இதற்கு பிரித்தாளும் இச்சை இருக்கிறது. ஒன்றிணைக்கும் விருப்பம் இல்லை. நாட்டின் குடிமக்கள் தங்களுடைய இல்லங்களிலிருந்து தூக்கியடிக்கப்பட்டு, சட்டவிரோத குடியேறிகள் என அழைக்கப்படுகிறார்கள்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டில் வாழும் இந்தியர்களிடம், ஒரு காகிதத்தைக் கொண்டு இந்தியர்கள்தானா என நிரூபிக்கச் சொல்கிறார்கள். ஆனால், இதே நாட்டில் உள்ள அமைச்சர்களால் தாங்கள் இந்தக் கல்லூரியில்தான் பட்டம் பெற்றோம் என்பதை நிரூபிக்க முடியவில்லை. ஆனால், வெளியேற்றப்பட்ட ஏழை மக்களிடம் நீங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரத்தை மட்டும் நீங்கள் எதிர்ப்பார்க்கிறீர்கள்?

இரண்டாவது அறிகுறி :

ஆளுகையின் ஒவ்வொரு மட்டத்திலும் மனித உரிமைகள் மீதான பெரும் அவமதிப்பு ஊடுருவி வருகிறது. 2014-19 வரை வெறுப்புணர்வின் காரணமாக நடந்த குற்றங்களின் எண்ணிக்கை பத்து மடங்காக உயர்ந்துள்ளது. ஒரு இணைய வர்த்தக நிறுவனத்தின் தொடக்ககால மதிப்பீட்டைப் போன்றது இது. ராஜஸ்தானின் பெக்லு கான் முதல் ஜார்கண்டின் தப்ரேஸ் அன்சாரி வரை இந்தப் பட்டியல் நிறுத்தப்படவே இல்லை.

மூன்றாவது அறிகுறி :

இன்று வெகுஜன ஊடகங்களின் மீது கற்பனைக்கு எட்டாத அடிபணிதலும் கட்டுப்பாடும் உள்ளது. இந்தியாவில் உள்ள ஐந்து மிகப்பெரிய செய்தி ஊடகங்கள் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ நாட்டின் ஒரு மனிதருக்கு கடன்பட்டிருக்கிறது. ஆளும் அரசின் கொள்கைகளை பரப்புவதற்கென்றே டிவி சானல்களின் பெரும்பாலான ஒளிபரப்பு நேரம் ஒதுக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் குறித்த செய்திகள் வெட்டித் தள்ளப்படுகின்றன.

அரசுக்கு எதிரான செய்திகளை கண்காணிப்பதற்கென்றே மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் 120-க்கும் அதிகமான நபர்களை நியமித்திருக்கிறது.

நான்காவது அறிகுறி :

தேசிய பாதுகாப்பு குறித்த அதீத ஆர்வம் – எதிரிகளை கண்டறிவதில் உள்ள ஆர்வம். நாம் குழந்தைகளாக இருக்கும்போது அம்மாக்கள் இதை செய்யாதே, அதைச் செய்யாதே இல்லையென்றால் கருப்பு பூதம் வந்துவிடும் என பயமுறுத்துவார்கள். அதுபோலவே இப்போது இந்த நாட்டில் வாழும் நாமும் பெயர் தெரியாத, பெயர் இல்லாத கருப்பு பூதகங்களால் பயமுறுத்தலுக்கு ஆளாகிவருகிறோம். அனைத்து இடங்களிலும் பயம் பரவிக்கொண்டுள்ளது. இராணுவத்தின் சாதனைகள் அனைத்தும் ஒரு நபரின் பெயரில் கைப்பற்றப்படுகிறது. இது சரியா?

ஐந்தாவது அறிகுறி :

அரசும் மதமும் இப்போது இந்த நாட்டில் பின்னிப் பிணைந்துள்ளன. நான் இதுகுறித்து பேச வேண்டுமா என்ன? தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடிமக்கள் சட்டத்திருத்த மசோதா ஆகியவற்றின் மூலம் ஒரு குடிமகனாக இருப்பதன் பொருளை நாங்கள் மறுவரையறை செய்துள்ளோம் என்பதை நினைவுபடுத்தும் அவசியம் இருக்கிறதா என்ன? குடியேற்றத் தடுப்பு சட்டங்களின் இலக்காக ஒரே ஒரு சமூகம் மட்டுமே இருக்கிறது என்பதை உறுதி செய்கிறோம்.

பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் இந்த நாட்களில் 2.77 ஏக்கர் நிலத்தின் மீது அதிக ஆர்வத்துடன் இருக்கிறார்கள். மீதியுள்ள இந்தியாவில் உள்ள 812 பில்லியன் ஏக்கர் நிலம் குறித்து எவரும் ஆர்வம் கொள்ளவில்லை.

ஆறாவது அறிகுறி :

இது மிகவும் ஆபத்தானது. அறிவுஜீவிகள் மற்றும் கலை மீது இப்போது முழுமையான அவமதிக்கும் போக்கு உள்ளது. அனைத்து எதிர்ப்புகளும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றன. தாராளவாத கல்விக்கும் அறிவியல் ஆர்வத்துக்கும் நிதி குறைக்கப்படுகிறது. நாம் செய்யும் அனைத்தும் இந்தியாவையும் இருண்ட காலத்துக்கு மீண்டும் இழுத்துச் செல்கின்றன. கேள்வி கேட்பதைக் கூட உங்களால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.

ஏழாவது அறிகுறி :

நம்முடைய சுதந்திரமான தேர்தல் அமைப்பில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பு முக்கியமான அதிகாரிகளை தேர்தல் ஆணையம்  இடமாற்றம் செய்துள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தம் ரூ. 60 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் 50 சதவீதம், ரூ. 27 ஆயிரம் கோடியை ஒரே ஒரு கட்சி செலவு செய்திருக்கிறது.

மஹுவா  மொய்த்ரா தனது அனல் பறக்கும் உரையின் மூலம், பாராளுமன்றத்தில் பாஜகவினரை வறுத்து எடுத்தது மட்டுமின்றி சமூக ஊடகங்களிலும் பேசுபொருளாகியிருக்கிறார்.

கலைமதி
செய்தி ஆதாரம்: டெலிகிராப் இந்தியா
நன்றி: வினவு இணையத்தளம்

Exit mobile version