Site icon சக்கரம்

பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு

பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பாக நடந்த போட்டியில் ஜெர்மி ஹண்ட்டை வென்று பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டன் பிரதமர் தெரீசா மேயின் அமைச்சரவையில் இதுவரை பணியாற்றியது தனக்கு பெருமை என்று கூறியுள்ள போரிஸ் ஜான்சன், கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பாக பிரதமர் பதவிக்காக நடந்த போட்டியில் வென்றது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.

பிரதமர் பதவிக்கான போட்டியில் ஜெர்மி ஹண்ட் 46, 656 வாக்குகள் பெற்ற நிலையில், போரிஸ் ஜான்சன் 92,153 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

இந்நிலையில், பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்சன் அறிவிக்கப்பட்டதற்கு பிரிட்டனின் தற்போதைய பிரதமர் தெரீசா மே தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தன் மீது கட்சி வைத்த நம்பிக்கைக்கு ஏற்ப தனது எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் இருக்கும் என்று கூறிய போரிஸ் ஜான்சன், அடுத்த சில நாட்களில் இது குறித்து தனது குழு பணியாற்றும் என்று கூறியுள்ளார்.

”எனது பிரசாரம் இத்துடன் முடிவடைந்த நிலையில், எனது பணிகள் இப்போது முதல் தொடங்குகிறது” என்று போரிஸ் ஜான்சன் மேலும் கூறினார்.

பிரிட்டனின் புதிய பிரதமரான போரிஸ் ஜான்சனுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

முன்னாள் லண்டன் மேயரான போரிஸ் ஜான்சன் புதன்கிழமையன்று பிரதமர் பதவிக்கான பொறுப்பை ஏற்கவுள்ளார்.

போரிஸ் ஜான்சன்: யார் இந்த பிரிட்டனின் புதிய பிரதமர்? 10 முக்கிய தகவல்கள்

பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் குறித்த பத்து சுவாரஸ்ய தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

-பிபிசி தமிழ்
23.07.2019

Exit mobile version