Site icon சக்கரம்

’தமிழ் மக்களின் ஆதரவு கிட்டினால் தீர்வும் கிட்டும்’

13ஆவது திருத்தமோ எதுவோ, மக்களுக்கு இப்போது எது தேவையோ, அதை வழங்க வேண்டும். எமக்கு வாக்களிக்காமல், எம்மிடம் அந்தத் தீர்வை, தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது. வடக்கிலுள்ள மக்களும் சரி, மக்கள் பிரதிநிதிகளும் சரி, எம்மோடு இணைந்துகொண்டு, தீர்வை நோக்கி நகர வேண்டுமெனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தவிர, தங்களுக்கு எதிராகச் சென்று எதையும் சாதிக்க முடியாதென்றும் தங்களுக்கு எதிராகச் சென்று, பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாதென்பதை தமிழ் அரசியல் தலைமைகள் புரிந்துகொள்ள வேண்டுமென்றும் சுட்டிக்காட்டினார்.

தமிழ்மிரருக்கு அவர் நேற்று (27) வழங்கிய ​விசேட செவ்வியின் போதே, மேற்கண்டவாறு கூறினார். செவ்வியின் முழு விவரம் வருமாறு,

கே: மீண்டும் அரசியல் களத்தில் குதிக்கக் காரணமென்ன?

பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பு. தேர்தலில் நான் தோல்வியுற்று சொந்தக் கிராமத்துக்குச் சென்றபோது, என்னை வரவேற்க, ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். அன்று முதல், தொடர்ந்து பல மாதங்களாகவே, என்னைப் பார்ப்பதற்காகப் பொதுமக்கள் வருகை தந்தனர். அவர்கள் முன்வைத்த ஒரே கோரிக்கை, மீண்டும் அரசியல் களத்துக்கு வாருங்கள் என்பதாகும். அ​தே கோரிக்கையை, பல அரசியல் கட்சிகளும் முன்வைத்தன. அந்த மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்தே, மீண்டும் அரசியல் களத்துக்கு வந்துள்ளேன்.

கே: உங்கள் தரப்பு வேட்பாளர் யாரென்பது பற்றிய எதிர்ப்பார்ப்பு பரவலாகக் காணப்பட்டது. இவ்வாறான நிலையில், வேட்பாளர் தெரிவிலும் அதை அறிவிப்பதிலும், இழுபறி இருந்ததா?

ஐ.தே.கவுடன் ஒப்பிடப்படுமிடத்து, நாங்கள் எங்கள் தரப்பு வேட்பாளரை, விரைவில் அறிவித்துவிட்டோம் என்றே தோன்றுகிறது. எவ்வாறாயினும், வேட்பாளர் பற்றித் தெரிந்துகொள்ளவும் அவரை முழுமையாக அறிந்துகொள்ளவும், பொதுமக்களுக்கும் ஒரு குறிப்பிட்ட காலம் தேவைப்படுகிறது. அதனால்தான், வேட்பாளர் பற்றி அறிவித்துவிட்டோம்.

கே: கோட்டாபய ராஜபக்‌ஷ தான் வேட்பாளர் என்பதை எவ்வாறு முடிவு செய்தீர்கள்?

ஜனாதிபதியாகி, அதற்குரிய பணிகளைச் செய்யக்கூடியவருக்கான அனைத்துத் தகுதிகளும் கோட்டாபயவுக்கு உண்டு. இது, நான் தனியாக எடுத்த முடிவல்ல. பொதுமக்களே அவரைத் தெரிவு செய்தனர். அதனால், மக்களுக்குத் தேவையான​வரைத்தான் நாங்கள் முன்மொழிய வேண்டும். தவிர, எங்களுக்குத் தேவையான​வரை நியமிக்க முடியாது. மக்கள் கோட்டாவைக் கோரினால், கோட்டாவுக்குத்தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும். வேறு ஒருவரைத்தான் மக்கள் கோருவார்களாயின், அவருக்கே வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கும். எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலையில், கோட்டாபயதான் மக்கள் தெரிவாக இருக்கிறார்.

கே: மஹாநாயக்கத் தேரர்கள் இணைந்து, அண்மையில் வெளியிட்ட கொள்கைப் பிரகடனமொன்றில், தேர்தலில் களமிறங்கும் ஜனாதிபதி வேட்பாளர், வழக்குகளுக்கு உட்படாதவராக இருக்க வேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், அதே மஹாநாயக்க தேரர்கள், நீங்கள் தான் நாட்டுக்குப் பொறுத்தமான தலைவரென, கோட்டாபயவுக்கு ஆசிர்வாதத்தையும் வழங்கியிருந்தனர். அவர்களின் இந்தக் கொள்கைப் பிரகடனம் பற்றிய உங்கள் தரப்பு நியாயம் என்ன?

கோட்டாபயவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும், அரசியல் வழக்குகளாகும். அதனால்தான் அவருக்கு ஆசிர்வாதம் வழங்கியுள்ளனர். கோட்டாபயவை புறக்கணிப்பதற்காக, தற்போதுள்ள ஆட்சியாளர்கள் ஆரம்பக்காலம் முதலே திட்டமிடல்களை மேற்கொண்டனர். அவர்கள், கோட்டாதான், எப்போதாவது அவர்களுக்கு அச்சுறுத்தலாக அமைவார் என்பதை, அவர்கள் முன்கூட்டியே அணுமானித்திருந்தனர்.

அதனால்தான், அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யக்கூடிய அனைத்து வழக்குகளையும் தாக்கல் செய்துள்ளனர். தேவையற்ற விடயங்களுக்காகவே, அந்த வழக்குகளைத் தாக்கல் செய்திருக்கிறார்கள். பொய் வழக்குகளைத் தாக்கல் செய்யும்போது, வீதியில் இறங்கிச் செல்ல முடியாத நிலைமை தோன்றும். அதைத்தான் அவர்கள் எதிர்பார்த்தார்கள். வழக்குகளைத் தொடர்ந்தால், பெயரைக் கெடுத்துவிடலாம் என்று, தவறாக கணக்குப் போட்டார்கள்.

கே: இன, மத பேதமின்றி, அனைத்து பொதுமக்களும், கோட்டாபயவை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளதா?

இந்த உலகில், எல்லோராலும் ஏற்றுக்கொள்பவர் என்று எவரும் இல்லை. அப்படியிருந்தால், போட்டியொன்று இருக்காது. ஆனால், இந்நாட்டிலுள்ள அனைவரும், கோட்டாபய நல்ல வேலைக்காரன் என்பதை அறிந்திருக்கிறார்கள். ஏதாவதொரு வேலையைக் கொடுத்தால், அதைச் சரிவரச் செய்வாரென்பதை, அனைத்தின மக்களும் அறிந்திருக்கிறார்கள், உணர்ந்திருக்கிறார்கள். அத்துடன், ஐ.தே.கவினர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரும் அதை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

கே: எம்.ஆர் என்ற பிராண்ட் பெயருக்காகத்தான் கோட்டாபயவுக்கு ஆதரவு வலுக்கிறதென்றும், அந்த எம்.ஆர் எனும் பிராண்ட் பெயர் இல்லாவிடின், கோட்டாவுக்கு இடமில்லை என்றும் கூறப்படுகிறதே…

அரசியலென வந்துவிட்டால், கட்சியொன்றும் அதற்குத் தலைவரொருவரும் இருக்க வேண்டும். அந்த வகையில், நான் அந்தத் தலைமைத்துவத்தில் இருக்கிறேன். அதனால், இன்னுமொரு தலைவர் எமக்குத் தேவையில்லை. நாட்டுக்காகக் கடமையாற்றுகின்ற ஒருவரே தேவைப்படுகிறார். அந்தக் கடமையைச் செய்யும் பொறுப்பைத்தான், கோட்டாவிடம் ஒப்படைத்திருக்கிறேன். ஊழல், மோசடி​களை ஒழித்து, நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச்செல்வதே அவருக்கான பணியாகும்.

கே: நீங்கள் மீண்டும் அரசியல் களத்துக்குள் குதிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் காரணகர்த்தாவாக இருந்தார். ஆனால், இப்போது உங்கள் இரு தரப்புக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளதே…

ஜனாதிபதியுடன் ஆரம்பம் முதலே விரிசல் காணப்பட்டது. இருப்பினும், அரசியலில் சிற்சில விடயங்கள் நடக்கும். அவை சாதாரணமானவையே. இருப்பினும், அவற்றையெல்லாம் நினைவில் வைத்துக்கொண்டிருப்பவன் நானல்ல. பின்னர் அவர் எனக்கு, பிரதமர் பதவியை வழங்கினார். என்மீது நம்பிக்கை வைத்துதான் அவர் அந்தப் பதவியை எனக்கு வழங்கினார். அதனால் நான் அதை ஏற்றுக்கொண்டேன்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் காணப்பட்ட பந்தத்தை உடைக்க வேண்டுமென்ற நோக்கத்துக்காகவும், நான் அந்தப் பதவியைப் பொறுப்பேற்றேன் என்றும் கூறலாம். அதையும் நாம் வெற்றிகரமாக முன்னெடுத்தோம். இதனால், இந்த நாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக விற்பனை செய்யும் நடவடிக்கை, சற்று தாமதமாகியுள்ளது. அதற்கு, நாங்கள்தான் காரணம்.

ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து கொண்டுவந்த அரசமைப்பின் 19ஆவது திருத்தம் காரணமாக, அதிகாரம் இரு திசைகளுக்குச் சென்றுகொண்டிருக்கிறது. அவ்வாறு அதிகாரம் இரண்டு திசைகளுக்குச் சென்றால், ஆட்சி நடத்த முடியாது. எமது நாட்டின் துரதிர்ஷ்டம், அதுதான் இங்கு நடந்தது.

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களுக்கும், இவ்வாறான அரசியல் அதிகாரத் திசைமாற்றம்தான் காரணமாகியது. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் ஏற்பட்டிருந்த முரண்பாடுகள் காரணமாக, தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் கிடைத்திருந்தும், உரிய நடவடிக்கைகள் எடுக்க முடியாமற்போனது. இதற்கு, இவ்விருவரும்தான் காரணம்.
என்னைப் பொறுத்தவரையில், இருவரும் ஒரே திசையில் பயணிக்கக்கூடிய ஆட்சியொன்றுதான் அவசியமாகிறது. அதற்கு, கோட்டாபயவே சிறந்தவர். நான் அவருடன் சேர்ந்து, இந்தப் பயணத்தைச் சிறப்பாக முன்னெடுப்பேன் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தபின்னர் தான், மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.

கே: அதாவது, உங்களுடைய ஆட்சி மலர்ந்தவுடன், அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்கத்தான் செயற்படப்போகிறீர்களா?

நிச்சயமாக ஆம். 19ஐ நீக்கிவிட்டு, அதிகாரத்தை நாடாளுமன்றத்திடம் கையளிக்க வேண்டும். அல்லது, ஜனாதிபதிக்கு முழு அதிகாரத்தையும் வழங்க வேண்டும். அதற்கான ஆலோசனைகளை நடத்திக்கொண்டு இருக்கிறோம். ஆட்சிக்கு வந்தபின்னர், உரிய வகையில், உரிய நடவடிக்கைகளை எடுப்போம். தவிர, இரு திசைகளில் பயணிக்க முடியாது.

கே: ஜனாதிபதிக்கும் உங்களுக்கும் இடையில் ஓரளவு இணக்கப்பாடு இருப்பதாகக் கூறுகிறீர்கள். ஆனால், ஏன் இன்னமும் சுதந்திரக் கட்சியுடன் இணைந்துச் செயற்படாமல் இருக்கிறீர்கள்?

இரு கட்சிகள் என்ற நிலைமையே இதற்குக் காரணமாகும். இருவர் இணைந்து செயற்படுவதற்கும் இரு கட்சிகள் இணைந்துச் செயற்படுவதற்கும் வித்தியாசம் உண்டு. கட்சிக்குள் பலரும் பல்வேறு கருத்துகளைக் கொண்டிருப்பார்கள். அவை பற்றிப் பேசவேண்டும். அனைவரும் பேசி, ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்தபின்னர் தான், கட்சிகள் இரண்டும் இணைந்து, ஓரணியில் பயணிக்க முடியும்.

கே: சர்வதேசம் உங்களை நிராகரிப்பது வெளிப்படையானது. அதனால்தான், ஐ.எம்.எப், ஜீ.எஸ்.பி பிளஸ் போன்ற சர்வதேச உதவிகள் கிடைக்காமல் போயின. அவ்வாறிருக்கையில், மீண்டும் நீங்கள் ஆட்சியமைத்தால், அதே சவால்களை எதிர்நோக்கக் கூடுமல்லவா?

ஐ.எம்.எப் எனப்படும் சர்வதேச நிதியம், எங்களுக்கு உதவி செய்வதற்காகப் பின்னால் வந்தது. ஆனால், ஜீ.எஸ்.பி பிளஸ் இல்லாமல் போனது உண்மை. அதிலும் ஒரு நன்மை இருக்கிறது. அவ்வாறு ஜீ.எஸ்.பி பிளஸ் இல்லாமல் போனதால்தான், நம் நாட்டு உற்பத்தியாளர்கள், தங்களுடைய உற்பத்திகளின் தரங்களை அதிகரித்து, அந்தச் சந்தையைக் கைப்பற்றினர். இதனால், இலங்கையின் உற்பத்திகளுக்கான தரம் அதிகரித்துள்ள அதேவேளை, அதனூடாக நல்ல வருமானமும் கிடைக்கத் தொடங்கியது.

ஒரு பாதிப்பு ஏற்பட்டால்தான், நாம் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள முடியும். அந்த வகையில், ஜீ.எஸ்.பி பிளஸ் இல்லாமல் போனதால்தான், எமது உற்பத்திகளுக்கான தரம் அதிகரித்து, கேள்வியும் கூடியுள்ளது. இது நல்லது தானே? ஏனைய நாடுகளுடன் ஒப்பிடப்படுமிடத்து, எமது நாட்டின் பணிக்குழாம், நல்ல படிப்பறிவுள்ளதாகும். அதனால், எமக்கே நன்மை ஏற்பட்டுள்ளது.

எமது ஆட்சி நிலவிய காலப்பகுதியின்போது காணப்பட்ட அந்த நிலைமையால்தான், மக்கள் கைகளில் பணப் புழக்கம் இருந்தது. அதற்கேற்றாற்போல, நாட்டில் அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டதால், பொருளாதார ரீதியில், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருக்கவில்லை. ஆனால் இந்த ஆட்சியின்போது, மக்கள் பணமின்றி அல்லல் படுகின்றனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எப்போது பார்த்தாலும், எமது அரசாங்கம் எடுத்திருந்த கடன் பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறார். நாங்கள் எடுத்த கடனையும் அவர்கள் எடுத்த கடனையும் ஒப்பிட்டுப் பார்த்தால், நாங்கள் எடுத்த கடனுக்கான வேலைத்திட்டங்களைக் கூற முடியும். ஆனால், அவர்களால் அவ்வாறு கூற முடியாது.

ஹம்பாந்தோட்டைத் துறைமுகம், மத்தல விமான நிலையம், அதிவேக நெடுஞ்சாலைகள், ரயில் போக்குவரத்துப் பாதைகள், வைத்தியசாலைகள், நீர்வழங்கல் திட்டங்கள், மின்சாரம், உட்கட்டமைப்பு வசதிகள் எனப் பல திட்டங்களை, நாம் பெற்ற கடனைக் கொண்டு முன்னெடுத்துள்ளோம் என்று கூற முடியும்.

ஆனால் ஐ.தே.கவினர், நாங்கள் பெற்றிருந்த கடனையும் விட அதிக மடங்குக் கடனைப் பெற்றுள்ளனர். அந்தக் கடனைக்கொண்டு, அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? கண்களுக்குத் தெரியும் வகையில், அவர்கள் அந்தக் கடனைக்கொண்டு எதையாவது செய்திருக்கிறார்களா? நாங்கள் பெற்ற கடனைச் செலுத்துவதற்காகத்தான் மீண்டும் கடன் பெற்றோம் என்று கூறுகிறார்கள். அப்படியானால், அரச சொத்துக்களை எதற்கான விற்பனை செய்தீர்கள், கடனைச் செலுத்துவதற்காகவா?

இன்னும் கொஞ்ச நாள்களில், பலாலி விமான நிலையத்தையும் விற்பனை செய்வார்கள். அதற்கான ஆயத்தங்களைத்தான் இப்போது செய்துகொண்டு இருக்கிறார்கள். அதற்குப் பின்னர், மத்தல விமான நிலையத்தையும் விற்பனை செய்வார்கள். இப்படியாக, விற்பனை செய்வதைவிட, அவர்கள் வேறு என்ன செய்கிறார்கள்?

ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு முன்னர், அங்கிரந்த காணிகளுக்கு பெறுமதி இருக்கவில்லை. ஆனால், துறைமுகம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர், அந்தக் காணிகளில் பெறுமதி அதிகரித்துள்ளது. ஏ9 வீதி நிர்மாணிக்கப்பட்ட பின்னர், கிளிநொச்சியில் காணிகளின் பெறுமதி அதிகரித்துள்ளது. இப்படியாக, நாம் முன்னெடுத்த அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும், இந்நாட்டிலுள்ள சொத்துக்களின் பெறுமதிகளை அதிகரித்தனவே தவிர, குறைக்கவில்லை. அதுதான் அபிவிருத்தி எனப்படுவதாகும்.

கே: சர்வதேச ரீதியில், மனித உரிமை மீறல் பிரச்சினைகளையும், உங்களுடைய ஆட்சி எதிர்நோக்கியிருந்தது. நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அதேபோன்ற பிரச்சினைகள் மீண்டும் வலுக்கும் வாய்ப்புள்ளதல்லவா?

இலங்கையின் முடிவுகளை, வேறு நாடுகளுக்குத் தேவையான வகையில் எடுக்க முடியாது. உதாரணத்துக்கு, இராணுவத் தளபதியாக ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமையானது, ஜனாதிபதியின் தீர்மானமாகும். அதை எம்மால் எதிர்க்க முடியாது. தற்போது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர், ஐக்கிய நாடுகள் சபையிலும் பணியாற்றியவராவார். ஆனால், அப்போது இருக்காத பிரச்சினை, தற்போது அவர் இந்த நாட்டின் இராணுவத் தளபதியாகப் பதவி உயர்வு பெறும்போது வருவது வேடிக்கையானது. அப்படிப் பார்த்தால், இந்நாட்டில் எவருக்கும் பதவி உயர்வு வழங்க முடியாது போகும்.

ஜனாதிபதிதான் இந்த நாட்டின் தலைவர். அதனால், அவருடன் பணியாற்றக்கூடிய ஒருவரைத்தான் இந்த நாட்டின் தலைவராக நியமிக்க வேண்டும். தவிர, வேறு நாடொன்றுக்குத் தேவையான ஒருவரை நியமித்து, அந்த நாட்டுக்குத் தேவையான விதத்தில் பணியாற்ற முடியாது. அதனால், ஜனாதிபதியின் முடிவு சரியானதே. இருப்பினும், அதை எதிர்ப்பதை, பொதுவான விடயமாகவே பார்க்க முடியும்.

கே: உங்களுடைய ஆட்சிக் காலத்தில், உங்களைச் சுற்றியிருந்தவர்கள் செய்த ஊழல், மோசடிகள் தான், நீங்கள் ஆட்சியை விட்டுப்போக வழிசமைத்ததென்று கூறப்பட்டது. இவ்வாறானதொரு நிலையில், நீங்கள் மீண்டும் அரசியல் களத்துக்கு வந்திருக்கிறீர்கள். ஆனால், அதே குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்கள்தான் உங்களைச் சுற்றி இருக்கிறார்கள். அது உங்கள் தரப்பு வெற்றிக்கு பாதகமாகாதா?

அவ்வாறானவர்கள் தற்போது ரணிலிடம்தான் இருக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். என்னிடம் இப்போது அவ்வாறானவர்கள் இல்லை.

கே: விமல் போன்றவர்கள், அவ்வாறான குற்றச்சாட்டுக்கு இலக்கானவர்கள்தானே…

விமல் வீரவன்ச என்பவர், அரசியல் தலைவரொருவர் அரசியல் மேடையில் கருத்துப்படப் பேசக்கூடியவர். தவிர, அவருடைய தனிப்பட்ட பிரச்சினைகள், நாட்டுக்கு இழைக்கப்பட்ட மோசடிகளாகக் கருதப்பட மாட்டாது.

கே: மீண்டும் ஆட்சிக்கு வந்து, மக்களுக்கான சேவையென்று எதைச் செய்ய ​எதிர்பார்த்துள்ளீர்கள்?

அவை பற்றி, எங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளிப்படுத்துவோம்.

கே: தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளைக் குவிக்க முடியுமென்ற நம்பிக்கை உள்ளதா?

உண்மையில், அவர்களுடைய வாக்குகளை எதிர்பார்த்து, அவர்களுக்காகப் பணியாற்ற நாம் நினைக்கவில்லை. அவர்களுடைய வாக்குகள் எங்களுக்கு முக்கியம்தான். ஆனால், அதுவொன்றையே எதிர்பார்த்துக்கொண்டு, அவர்களுக்கான நாம் பேசவில்லை. அவர்களுடைய நலனுக்காகத்தான், அவர்கள் பற்றி நாம் பேசுகி​ன்றோம்.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், நான் என்னுடைய ஆட்சிக் காலத்தில் முன்னெடுத்த அபிவிருத்தித் திட்டங்களைத் தவிர்த்து, வேறெந்த அபிவிருத்தியும் அங்கு இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை. ஒருவர் கூறியிருந்தால், வடக்குக்கான ஆறு பிரதான வீதிகள் இருந்தன, அவற்றில் ஐந்து, மஹிந்த காலத்தில் புனரமைக்கப்பட்டதோடு சரி, மற்றொன்று இதுவரையில் செய்யப்படவில்லை என்று தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலைமைகள் பற்றி, இந்த அரசாங்கம் கவனத்திற்கொள்ளவில்லை.

விவசாயிகள் பற்றிக் கவனிப்பார் யாருமில்லை இப்போது. அதனால், தனியார் நெல் கொள்வனவாளர்கள் வந்து, 26, 28 ரூபாய்க்கென, நெல்லைக் கொள்வனவு செய்துகொண்டு செல்கிறார்கள். இதுபற்றி, எந்தவோர் அரசியல் தலைவரும் பேசவில்லை. எங்களுடைய ஆட்சிக் காலத்தில், நெல்லுக்கான உத்தரவாத விலையொன்றை நிர்ணயித்து, விவசாயிகளுக்கு அதைப் பெற்றுக்கொடுத்தோம். இன்று தாம் உற்பத்தி செய்துள்ள மரக்கறிகளைக்கூட, நல்ல விலைக்கு விற்பனை செய்துகொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது.

வடக்கில் விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரைக் கொடுக்க மறுக்கிறார்கள். இப்படியாக, வடக்குக்கென்று எதையும் செய்துகொடுக்கவில்லை. ஜப்பான் உதவியுடன், வடக்கின் வைத்தியசாலையைப் புனரமைத்துக் கொடுத்தேன். கொழும்பிலுள்ள வைத்தியசாலையிலும் பார்க்க, அங்கு பல வசதிகள் உள்ளன. இப்படியாக, மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து​ கொடுத்துள்ளோம். ஆனால், இந்த அரசாங்கம் எதைச் செய்துள்ளது.

பாடசாலைகள், விஞ்ஞானகூடம் போன்றவற்றைக் கொடுத்தோம். யுத்தத்தால் பல ஆண்டு பின்னோக்கி நகர்ந்த பிரதேசம் முன்​னேற வேண்டுமாயின், இவ்வாறான வசதிகளைக் கொடுத்துதான், அங்கிருக்கும் பிள்ளைகளை முன்னேற்ற வேண்டும். அப்போது, சரியானவர் யார், தவறானவர் யாரென்ப​தை மக்கள் புரிந்துகொள்வார்கள்.

கே: தமிழ், முஸ்லிம் மக்களுக்கு, உங்களுடைய தரப்பு மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் உங்கள் சகோதரரைப் பார்த்தால் பயப்படுகிறார்கள். அந்த அச்சநிலையைப் போக்குவதற்கான உங்கள் தரப்பு நடவடிக்கைகள் என்ன?

உண்மையில், இந்தக் “கோட்டா பயம்” என்பது, தவறான கண்ணோட்டமாகும். யுத்தத்துக்குப் பின்னர் உருவாக்கி விடப்பட்ட பொய்ப் பிரசாரமே இந்தக் “கோட்டா பயம்” ஆகும். கோட்டாபய வருகிறார் என்ற அறிவிக்கப்பட்ட பின்னர்தான், அவர் மீதான அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. அதுவரையில், அவர் பற்றிய அச்சம் இருக்கவில்லை.

வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற சில திருமண வைபவங்கள், மரணச் சடங்குகளிலும் கோட்டாபய பங்கேற்றிருந்தார். அப்போது, கோட்டாபய யாரெனத் தெரியாததால் அவர் பற்றி எவரும் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் இன்று, கோட்டாபய தான் வேட்பாளர் என்ற நிலை வந்ததும், அவரைப் பார்த்து பலரும் அச்சப்படுகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியால் உருவாக்கி விடப்பட்டதே இந்த கோட்டா பயமாகும். அதனால் எவருக்கும், குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்களுக்கு, “கோட்டா பயம்” தேவையில்லை. நானும் அவர் கூடவேதான் இருக்கப்போகிறேன். அதனால், எவரும் அச்சப்படத் தேவையில்லை என்பதை, அழுத்தம் திருத்தமாகக் கூறிக்கொள்கிறேன்.

உண்மையில் இந்தப் பயம், மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவானால்தான் ஏற்பட வேண்டும். ஒரு நாட்டில், பயங்கரவாதம் தலைதூக்குமாயின், அந்தப் பயங்கரவாதியைப் பாதுகாக்க, எவரும் விரும்பமாட்டார்கள்.

வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். முஸ்லிம் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகள், அரசாங்கத்துடன் இணைந்துகொண்டு, அமைச்சுப் பொறுப்புகளைப் பெற்றுக்கொண்டு, தமது முஸ்லிம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தார்கள்.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்ன செய்தார்கள்? அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கினார்கள், அரசாங்கத்தைக் காப்பாற்றினார்கள், எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பைப் பெற்றுக்கொண்டார்கள். ஆனால், மக்களுக்குத் தேவையானது எதுவெனப் பார்த்து, அரசாங்கத்தினூடாக அவற்றைச் செய்துகொடுக்கவில்லை.

வடக்கு, கிழக்கு விவசாயிகளுக்கு பிரச்சினைகள் உள்ளன, பட்டாரிகள் வேலையற்று இருக்கிறார்கள். இவை பற்றி அவர்கள் பேசவில்லை. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதை விடுத்து, அரசமைப்பு உருவாக்குவது பற்றி மட்டுமே பேசினார்கள். கூட்டமைப்பினர் அவர்களுக்கான கடமைகளைச் செய்யவில்லை என்று அதனால்தான் சொல்கிறேன். இதற்கு, கூட்டமைப்பினரே பொறுப்புக்கூற வேண்டும். அவர்கள் அவர்களுடைய மக்களைப் பார்த்துக்கொள்ளவில்லை என்பதை, குற்றச்சாட்டாகவே நான் முன்வைக்கிறேன்.

கே:. தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கான வேலைத்திட்டமொன்று உள்ளதா?

ஆம். அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். முதலில், கோட்டாபயவை அந்த மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். கொழும்பிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள், அவரை அறிவார்கள். அதனால் கொழும்பிலுள்ளவர்களுக்கு அவரைப் புதிதாக அறிமுகப்படுத்தத் தேவையில்லை. ஆனால், வடக்கு, கிழக்கு, மலையக மக்களுக்கு அவரை அறிமுகப்படுத்தி, அவர் மீதுள்ள அச்சத்தைப் போக்க வேண்டும்.

இப்படியாக, மக்கள் மத்தியில் சென்று, மக்கள் ஆதரவைத் திரட்டுவோம். காரணம், என்மீது தமிழ் மக்களுக்கு அன்பு இருக்கிறது. அதை நான் நம்புகிறேன். அதனால், அவர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள். அந்த ஆதரவை, என் சகோதரனுக்கும் அவர்கள் வழங்குவார்கள். ஆனால், ஊழலின்றி, அபிவிருத்திகளைச் சரியாகச் செய்வதற்கு கோட்டாவே சிறந்தவர். அதை அவர் நிரூபித்தும் உள்ளார்.

கே: உங்களுடைய ஆட்சி மீண்டும் வந்தால், வடக்கு, கிழக்கில் இராணுவப் பிரசன்னம், இராணுவ முகாம்கள் அதிகரிக்கப்படும் வாய்ப்பு ஏற்படலாம், மக்கள் மீதான நெருக்கடி அதிகரிக்கலாம் என்ற அச்சமும் மக்கள் மத்தியில் உள்ளது. இதற்கான பதில் என்ன?

இது பொய்ப் பயம். இராணுவ முகாம்களோ இராணுவத்தினரோ அதிகரிக்கப்பட வாய்ப்பில்லை. காரணம், இப்போதைக்கே வடக்கு, கிழக்கிலுள்ள முகாம்களின் எண்ணிக்கையும் இராணுவத்தினரின் எண்ணிக்கையும், வரையறைக்குள் கொண்டுவரப்பட்டு விட்டது. அதனால், அதுபற்றி அச்சம் தேவையில்லை. தேசியப் பாதுகாப்புக்கு மேலதிகமாக, எந்தப் படையும் நிலைநிறுத்தப்படாது.

இராணுவம் என்பது, சிங்கள இராணுவம் அல்ல. இது, இந்த நாட்டினதும் நாட்டு மக்களதும் பாதுகாப்புக்காக உள்ள படையாகும். அந்தப் படை, அரசாங்கத்தின் கட்டளைக்கிணங்கவே பணியாற்றும். தவிர, தமக்குத் தேவையான மாதரி பணியாற்ற, இராணுவத்துக்கோ பாதுகாப்புப் படையினருக்கோ அதிகாரம் இல்லை.

கே: அப்படியானால், படை அதிகரிப்போ, முகாம் அதிகரிப்போ மேற்கொள்ளப்பட மாட்டாதென, உங்களால் உறுதியளிக்க முடி​யுமா?

ஆம், பொதுமக்களுக்கு இடையூறாக, வடக்கில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பாதுகாப்புத் தரப்பினரை உருவாக்க மாட்டோம். அதை நிச்சயமாக என்னால் கூறிக்கொள்ள முடியும்.

கே: நீங்கள் ஆட்சிக்கு வந்ததும், அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று, 6 மாதக் காலப்பகுதிக்குள் தீர்வு வழங்கப்படுமென்று டக்ளஸ் தேவானந்த எம்.பி கூறியுள்ளார். இது சாத்தியமா?

கொடுக்க முடிந்தால் நாம் கொடுப்போம். காரணம், இதுபற்றி நாம் பேசவேண்டும். உடனடியாக, சரி கொடுப்போம் என்று கூறிவிட முடியாது. 13ஆவது திருத்தமோ எதுவோ, மக்களுக்கு இப்போது எது தேவையோ, அதை வழங்க வேண்டும். எனக்கு வாக்களிக்காமல், என்னிடம் அந்தத் தீர்வை அவர்கள் எதிர்பார்க்க முடியாது. வடக்கிலுள்ள மக்களும் சரி, மக்கள் பிரதிநிதிகளும் சரி, எம்மோடு இணைந்துகொண்டு, தீர்வை நோக்கி நகர வேண்டும்.

தவிர, எங்களுக்கு எதிராகச் சென்று எதையும் சாதிக்க முடியாது. எங்களுக்கு எதிராகச் சென்று, பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாதென்பதை, தமிழ் அரசியல் தலைமைகள் புரிந்துகொள்ள வேண்டும். அதனால், எங்களுடன் இணைந்து ​ஒரு கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ளலாம்.

கே: நீங்கள் என்னதான் வாக்குறுதிகளை வழங்கினாலும், மீண்டும் தாம் ஏமாற்றப்படுவோம் என்ற எண்ணமே இப்போது தமிழ் மக்களுக்கு உள்ளது. அந்த எண்ணத்தைப் போக்க, நீங்கள் என்ன செய்யவுள்ளீர்கள்?

வாக்குறுதியளித்துவிட்டு, எதை நாம் செய்யாமல் விட்டிருக்கிறோம் என்பதைக் கூறுங்கள். மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் 99 சதவீதமானவற்றை நிறைவேற்றியிருக்கிறோம். மக்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கவில்லை.

தெற்கிலுள்ள மக்கள், எனக்கு முதன்முறையாக வாக்களிக்கும் போது, யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவாருங்கள் என்றுதான் கோரினார்கள். அதை நான் நிறைவேற்றினேன். அந்த நம்பிக்கையில் தான், இரண்டாவது முறையாகவும் அவர்கள் என்னையே தேர்ந்தெடுத்தார்கள். அந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டுவந்ததால் தானே, இன்று தமிழ் மக்கள் சுதந்திரமாக இருக்கின்றனர். இவ்வாவிட்டால், எத்தனை உயிர்களை இந்த யுத்தம் காவுகொண்டிருக்கும்.

தமிழ் மக்கள் மட்டுமன்றி, இந்நாட்டு மக்கள் அனைவரும், இந்த யுத்தத்திலிருந்து காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள். அதனால் நான் உறுதியாகக் கூறுவதென்னவென்றால், நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறேன்.

கே: மலையத் தமிழ் மக்கள் குறித்த பிரச்சினைகளுக்கான ​உங்களுடைய வேலைத்திட்டங்கள் என்ன?

உண்மையில், மலையக மக்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைக்க வேண்டும். அங்கிருந்து வரும் இளைஞர் – யுவதிகள், புதிய வேலைவாய்ப்புகளை நோக்கி நகர வேண்டும். அதற்காக, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பாடசாலைக் கல்வி முறைகள், தொழில்நுட்பக் கல்லூரிகளை ஏற்படுத்தி, அவர்களுக்கான புதிய கல்வித் திட்டங்களைப் புகுத்த வேண்டியது கட்டாயம்.

மலையக மக்கள், எப்போது தேயிலைக் கொழுந்து பறிப்பவர்களாக இருக்க முடியாது. அவர்களுடைய வாழ்க்கையும் முன்னேற்றங்காண வேண்டும். அம்மக்களுடைய வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். அவர்களுக்கென்ற நிலையான சம்பளம் வழங்கப்பட வேண்டும். அதை வழங்க வேண்டுமாயின், தேயிலைத் தோட்டங்கள் இலாபம் பெறுவனவாக மாற வேண்டும். அதற்கு, தேயிலைகளின் தரம் அதிகரிக்கப்பட வேண்டும். உற்பத்திகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

இதன்மூலமே, தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை முறையில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். அதனால், அவர்கள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் அமைக்கப்பட்டு, பணிகள் முன்னெடுக்கப்படும்.

-நேர்காணல்: மேனகா மூக்காண்டி
தமிழ் மிரர்
ஓகஸ்ட் 28, 2019

Exit mobile version