–சு.வெங்கடேஸ்வரன்
நவீனமயமாதல் என்பது அதன் சரியான தடத்தில் இருந்து மாறி கண்ணை மூடிக்கொண்டு மேற்கத்திய கலாசாரத்தையும், அவர்களது பொருளாதாரக் கொள்கைகளையும் கடைப்பிடிப்பது என்பது எழுதப்படாத விதியாகி வருகிறது.
இந்தியாவில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில் பெரும்பான்மை மக்களின் கருத்தில் இருந்து அரசு மாறுபட்டு நிற்பதற்கு இதுவே காரணம்.
“நவீன காலத்தில் அரசு என்பவை முதலாளித்துவ வர்க்கம் அனைத்துக்குமான பொது விஷயங்களை நிர்வகிக்கும் குழுதானே தவிர வேறு இல்லை” என்ற மார்க்ஸ், ஏங்கெல்ஸிலின் கருத்துக்கு இக்காலத்தில் மிகச்சரியான உதாரணமாக மாறிவிட்டது இந்திய அரசு.
பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகளைப் புரிந்து கொள்ள சாமானிய மனிதர்கள் சிறிது மெனக்கெட்டு முயற்சிக்க வேண்டும். ஆனால் இன்றைய தலைமுறையினர் தாங்களாகவே சந்தைப் பொருளாதார விதிகளின்படி செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால்தான் “இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழக் கற்றுக்கொள்”, “போதுமென்ற மனம் பொன்செய்யும் மருந்து” எனக் கற்பிக்கும் பழமொழிகள் காலாவதியாகிவிட்டன.
மேற்கத்திய முறையில் நவீனமயமாகிவிட்ட இன்றைய தலைமுறை, அதிகமாக சம்பாதிக்கலாம், அத்தனையும் செலவிட்டு உலக இன்பங்களில் துய்க்கலாம் என்று பழக்கப்படுத்தப்பட்டு வருகின்றனர். எதிர்காலப் பொருளாதாரப் பாதுகாப்புகள் குறித்த சிந்தனைகள் குறையத் தொடங்கிவிட்டன.
தாராளமயம், நவீன தாராளமயம் ஆகிய கொள்கைகள் சந்தைப் பொருளாதாரத்தின் அச்சாணி ஆகி வருகின்றன. தேசப் பொருளாதாரத்துக்கு பங்குச் சந்தை தலைமை வகிக்கும் வகையில் அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன.
1980-ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர் அறிமுகப்படுத்திய “தாட்சரிஸம்’, அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனின் “ரீகனாமிக்ஸ்’ ஆகிய கொள்கைகள் அந்நாடுகளை இப்போது பாதித்துள்ளது மட்டுமல்லாது நமது நாட்டின் சித்தாந்தமாகவும் மாறிவிட்டது.
பொருளாதார நடவடிக்கைகளில் அரசின் பங்களிப்பையும், பொதுப் பணிகளுக்கான அரசின் செலவுகளையும் கணிசமாகக் குறைத்து, தனியார் மயத்தையும், தாராளமயத்தையும் ஊக்குவிப்பது, பெரும் கார்பரேட் நிறுவனங்களுக்கு வரிகளைக் குறைப்பது உள்ளிட்டவைதான் தாட்சரும், ரீகனும் காட்டிய பாதை.
அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் முதலில் பீடுநடை போட்டு பின்னர் கால்களை உடைத்துக் கொண்டு படுத்துக்கிடக்கும் அதே பாதையில் இந்தியாவும் அழைத்துச் செல்லப்படுகிறது.
எனினும் நிலைமை மோசமாகிவிடாததற்கு வேளாண்மை, தொழில், வர்த்தகம் போன்ற அடிப்படைத் துறைகள் வலுவாக உள்ளதே காரணமாகும். அனைத்துக்கும் மேலாக இந்தியர்களிடையே சேமிக்கும் பழக்கம் அதிகம் இருந்தது, 2008-ஆம் ஆண்டில் உலக அளவில் பெரும் சரிவு ஏற்பட்டபோது கூட இந்தியப் பொருளாதாரம் சரியாமல் காப்பாற்றப்பட்டதற்கு நமது சேமிப்பே காரணமாக இருந்தது.
ஆனால் தாராளமய பொருளாதாரத்தால் இளையதலைமுறையினரிடையே அருகிவரும் சேமிக்கும் பழக்கத்தால் இந்தியாவும் இந்தப் பொறியில் விரைவில் சிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நிலைமை இப்படியிருக்க, ஏற்கெனவே கணிக்கப்பட்ட ஒரு விஷயத்தை அதிகாரப்பூர்வ அறிக்கையாக அளித்துள்ளது அமெரிக்க புலனாய்வுத் துறை. 2030-ஆம் ஆண்டில் சர்வதேச பொருளாதார சக்தியின் மையமாக ஆசியக் கண்டம் திகழும் என்பதே அந்த அறிக்கை.
இதிலும் சீனாவும், இந்தியாவும் முக்கியப் பங்காற்றும். முக்கியமாக சீனா அடுத்த இருபது ஆண்டுகளில் அமெரிக்காவைவிட பொருளாதார வலிமைபெற்ற நாடாக உருவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தண்ணீர், உணவு, எரிசக்தி போன்ற அடிப்படைப் பிரச்னைகளுக்கு இந்தியா முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த இருபதாண்டுகளில் சிக்கலைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பொருளாதாரத்தின் போக்கு தொடர்பாக அமெரிக்க புலனாய்வுத்துறை அளித்துள்ள 5-ஆவது அறிக்கை இது. முதல் அறிக்கை 2008-ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதுநாள்வரை, அசைக்க முடியாத சக்திகள் என்ற மாயையை உருவாக்கி வந்த அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார ரீதியாக ஆசியக் கண்டத்தால் தோற்கடிக்கப்பட இருக்கின்றன.
உலகின் ஒரே அதிகார மையம் அமெரிக்கா என்ற நிலை விரைவில் மறைய இருக்கிறது. சீனா, இந்தியாவை மையமாக வைத்து சில அதிகார மையங்கள் உருவாக இருக்கின்றன.
ஐரோப்பிய நாடுகள் அனைத்துமே அசைக்க முடியாத சக்திகள் என்ற எண்ணம் சிறிது சிறிதாக சிதறுண்டு வருகிறது. அக்கண்டத்தில் பல நாடுகள் பொருளாதார நெருக்கடி முற்றி, உதவிக்காக பிற நாடுகளின்கையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.
பல ஆண்டுகளாக பொருளாதாரரீதியாக இந்தியாவை சற்று அலட்சியமாகவே கருதி வந்த மேற்கத்திய நாடுகள் இப்போது தங்கள் பார்வையை மாற்றிக் கொண்டுள்ளன.
இந்தியர்களுக்கும் மேற்குலகம் குறித்த பிரமிப்பு விலகத் தொடங்கி வருகிறது. பொருளாதார வல்லமை என்பது “மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி” நகர்வதே இதற்குக் காரணம்.
இந்தியாவுடன் உறுதியான நட்புறவையும், வர்த்தக உறவுகளையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சர்வதேச அளவில் அதிகரித்து வருகிறது. இயல்பாகவே சூழ்நிலைகள் நமக்குச் சாதகமாக திரும்பும்போது அதனைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டை முன்னேற்றும் அரசுதான் பாராட்டுதலுக்கு உரியதாக இருக்கும்.
இத்தகைய சூழலில் நமது பலம் எது, பலவீனம் எது என்பதை அறிந்து அதற்குரிய கொள்கைகளை வகுக்கும் அரசுதான் தேவை. “ஏற்கெனவே பல நாடுகள் கையைச் சுட்டுக் கொண்ட அதி தாராளமயமாக்கல் சித்தாந்தம் நமக்கு அவசியமா? அல்லது நமது கலாசாரத்தோடு இணைந்த பாதுகாக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியே தொடருட்டுமா?” என்று அரசியல் தலைவர்களும், பொருளாதார நிபுணர்களும் சிந்திக்க வேண்டிய தருணமிது.
-தினமணி
டிசம்பர் 18, 2012