-மு.இராமனாதன்
ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்
அக்டோபர் முதல் வாரத்தைச் சீனர்கள் ஆவலோடு எதிர் நோக்குவார்கள். அக்டோபர் 1 சீனாவின் தேசிய தினம். இந்த வாரம் முழுவதும் விடுமுறை இருக்கும். பிப்ரவரியில் வரும் சீனப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டும், மே முதல் வாரத்தில் வரும் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டும் இப்படியான ஒரு வாரகால விடுமுறைகள் வரும். ஆலைகளில் பணியாற்றும் கணவனும் மனைவியும் கிராமங்களில் இருக்கும் வீடு நோக்கிச் செல்வார்கள். அவர்களது பெற்றோர்களும் பெரும்பாலும் ஒற்றைப் பிள்ளையும் அவர்களுக்காக ஆவலோடு காத்திருப்பார்கள்.
இன்று (அக்டோபர் 1) பெய்ஜிங்கின் புகழ்பெற்ற தியானன்மென் சதுக்கத்தில் நடைபெறும் கொண்டாட்டத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உரையாற்றுவார். இதே இடத்திலிருந்துதான் 70 ஆண்டுகளுக்கு முன்னால், 1949-ல் மா சே துங் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை நிறுவினார். இன்று வாண வேடிக்கைகள் இருக்கும். ராணுவ அணிவகுப்புகள் இருக்கும். அதில் 12,000 கிமீ தூரத்தைத் துல்லியமாயும் துச்சமாயும் கடக்கவல்ல ஏவுகணைகள் பவனிவரும். ராணுவ வீரர்களின் சாகசங்கள் கண்ணைக் கவரும். 70 ஆண்டுகளுக்கு முன்னால் தியானன்மென் சதுக்கத்தில் செங்கொடியைப் பறக்கவிடுவது மா சே துங்குக்கு எளிதாக இல்லை. இன்று சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்திருக்கிறது. இந்த இடத்துக்கு வந்துசேர்வது ஜி ஜின் பிங்குக்கும் அவரது முன்னோடிகளுக்கும் அவ்வளவு எளிதாக இல்லை.
ஜப்பானிய ஆக்கிரமிப்பு (1937-1945)
இன்றளவும் இரண்டாம் உலகப் போரின் வரலாற்றாசிரியர்கள் அமெரிக்காவையும் ரஷ்யாவையும் பிரிட்டனையுமே நேச நாடுகள் என்று வர்ணிக்கிறார்கள். எனில், ஹிட்லரின் ஜெர்மனிக்குக் கூட்டாக நின்ற ஜப்பானின் ஆக்கிரமிப்பை 1937 முதல் 1945 வரை எட்டாண்டுகள் எதிர்கொண்டது சீனா. அன்று பலவீனமாக இருந்தது சீனா. ஆனால், விடாமல் போராடியது. இந்தப் போரில் மாண்டவர்கள் ஒன்றரைக் கோடிப் பேர், அகதிகளானோர் எட்டு கோடிப் பேர். இந்தச் சாம்பல் துகள்களின் மீதுதான் உள்நாட்டு யுத்தம் நடத்தி 1949-ல் ஆட்சி அமைத்தார் மாவோ.
பெரும் பாய்ச்சல் (1958-1962)
புதிய அரசு நிலங்களைப் படிப்படியாக அரசுடைமையாக்கியது. கூட்டுப் பண்ணைகளை உருவாக்குவதும் நாட்டைத் தொழில்மயமாக்குவதுமே சீனாவை உய்விக்கும் என்று நம்பினார் மாவோ. 1958-ல் முன்மொழிந்த தனது திட்டத்துக்கு ‘பெரும் பாய்ச்சல்’ என்று பெயரிட்டார். ஆனால், அப்படியான பாய்ச்சல் எதுவும் நிகழவில்லை. மாறாக, தொழில் துறை பின்தங்கியது. விளைச்சல் வெகுவாகக் குறைந்தது. பஞ்சமும் நோயும் சீனாவைப் பீடித்தன. இந்தக் காலகட்டத்தில் இரண்டு கோடி மக்கள் மாண்டிருப்பார்கள் என்று கருதப்படுகிறது. நான்காண்டுகளில் திட்டம் பின்வாங்கிக்கொள்ளப்பட்டது.
கலாச்சாரப் புரட்சி (1966-1976)
மக்கள் கசந்தனர். கட்சிக்குள் மாவோ விமர்சிக்கப்பட்டார். நாட்டில் புரட்சிகரச் சிந்தனை குறைந்துவருவதாகக் கருதினார் மாவோ. ரஷ்யாவின் போக்கிலும் அவர் அதிருப்தியுற்றார். இதற்குத் தீர்வாக 1966-ல் அவர் கொண்டுவந்துதான் ‘கலாச்சாரப் புரட்சி’. பழைய மதிப்பீடுகள் தகர்க்கப்பட வேண்டும் என்பதே முழக்கமானது. செம்படைக் காவலர் எனும் பெயரில் குழுக்கள் அமைக்கப்பட்டன. இளைஞர்கள் பள்ளிகளையும் கல்லூரிகளையும் தொழிற்சாலைகளையும் புறக்கணித்து செம்படையில் இணைந்தனர். பல இடங்களில் முதியவர்களும் அறிவுஜீவிகளும் தாக்கப்பட்டதாகவும், பழமையான கலாச்சாரச் சின்னங்கள் தகர்க்கப்பட்டதாகவும் பதிவுகள் கூறுகின்றன. இதற்கிடையில் செம்படைகளுக்குள்ளே அதிகாரப் போட்டி ஏற்பட்டது. அதை அடக்க ராணுவம் வந்தது. தேசத்தில் உற்பத்தி குறைந்தது. கலாச்சாரப் புரட்சி மாவோவின் மரணம் (1976) வரை நீடித்தது. 1981-ல் கம்யூனிஸ்ட் கட்சியானது கலாச்சாரப் புரட்சி ஒரு தவறான முன்னெடுப்பு என்று அறிவித்தது. மாவோவின் நெருங்கிய சகாக்கள் சிறை வைக்கப்பட்டனர். எனினும், மாவோவே சீனாவின் திருவுருவாக நீடிக்கிறார். அவரது குணமும் குற்றமும் நாடியதில் குணமே மிகையானது என்றார் டெங் சியோ பிங். மாவோவுக்குப் பிறகு கட்சிக்கும் ஆட்சிக்கும் தலைமை ஏற்றார் டெங்.
சீனாவின் வளர்ச்சி (1978-2019)
1978-ல் அந்நிய முதலீடுகளுக்கு வாசல் திறந்தார் டெங். இந்த முதலீடு சீனாவில் தொழிற்சாலைகளை உருவாக்கியது. சீனாவை நகரமயமாக்கியது. வேலைவாய்ப்பு பெருகியது. புதிய தொழில்நுட்பங்கள் புயலெனெப் புகுந்தன. சீனா தனது உட்கட்டமைப்பைப் பன்மடங்கு மேம்படுத்திக்கொண்டது. புதிய சாலைகளும் ரயில் தடங்களும் துறைமுகங்களும் சர்வதேசத் தரத்தில் உருவாகின. முக்கியமாக, கல்வியறிவு பெற்ற சமூகத்துக்குத் தத்தமது ஆலைகளுக்குத் தேவையான தொழிற்கல்வி பயில்வது எளிதாக இருந்தது. அவர்கள் கிராமங்களிலிருந்து நகரங்களுக்குப் புலம்பெயர்ந்து தொழிற்சாலைகளின் உண்டு-உறைவிடக்கூடங்களில் தங்கிக்கொண்டனர். நேரங்காலம் பார்க்காமல் கடுமையாக உழைத்தனர். உலகம் முழுமைக்குமான உற்பத்திக்கூடமாக சீனா மாறியது. இப்படித்தான் கடந்த 40 ஆண்டுகளில் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருந்த 70 கோடிக்கும் மேற்பட்ட சீனர்கள் வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உலக வரலாற்றில் முன்னுதாரணம் இல்லாதது.
பின்னடைவுகள்
இந்த வளர்ச்சியைப் பெறுவதற்கு சீனா கொடுத்த விலையும் அதிகம்தான். சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வாயுக்களை வெளியேற்றுவதில் சீனாதான் உலகில் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்ததாக, சீனாதான் உலகில் மக்கள்தொகை அதிகமுள்ள நாடு. மக்கள்தொகை வளர்ச்சி பெரிதும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்காக 1980-ல் ஒற்றைக் குழந்தைத் திட்டதைக் கொண்டுவந்தது அரசு. அது கடுமையாக அமல்படுத்தப்பட்டது. இதனால், ஆண் மோகமிக்க சமூகத்தில் பல பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்பட்டன. இன்று பாலியல் சமநிலை இல்லாத நாடாக இருக்கிறது சீனா. 2015-ல் அரசு ஒற்றைக் குழந்தைத் திட்டத்தை நிறுத்திக்கொண்டது என்றாலும் மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட சில காலம் பிடிக்கலாம்.
மூன்றாவதாக, கிராமங்களிலிருந்து நகரங்களுக்குப் புலம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினரை அழைத்துச்செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. கடந்த சில ஆண்டுகளாக நகர நிர்வாகங்கள், புலம்பெயரும் தொழிலாளர்கள் தத்தமது குடும்பத்தினரையும் அழைத்துவருவதற்கு ஏற்ற விதமாக நகரங்களின் உட்கட்டமைப்பையும் கல்விச்சாலைகளையும் மருத்துவமனைகளையும் மேம்படுத்திவருகின்றன.
கடைசியாக, சீனா எதிர்கொள்ளும் பிரதான விமர்சனம் எதிர்க்குரல்களும் ஜனநாயகமும் அனுமதிக்கப்படுவதில்லை என்பது. 1989-ல் தியானன்மென் சதுக்கத்தில் நிகழ்ந்த மாணவர் போராட்டம் ஒடுக்கப்பட்டது. இப்போதும் வடிகட்டப்பட்ட பின்னரே இணையம் பயனர்களுக்குக் கிடைக்கிறது. ஹாங்காங் கடந்த நான்கு மாதங்களாக ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடிவருகிறது.
எதிர்காலம்
சீனா பொருளாதாரத்திலும் ராணுவ பலத்திலும் இன்று முன்வரிசையில் நிற்கிறது. யுத்தங்களையும் பஞ்சங்களையும் வறுமையையும் படுகொலைகளையும் சதிகளையும் கடந்துதான் சீனா இந்நிலையை எட்டியிருக்கிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று தியானன்மென் சதுக்கத்தில் ஏற்றும் செங்கொடியில் அந்தப் பெருமிதம் தெரியும். அதேவேளையில், முன்னேறும் ஒரு நாடு வரலாறு ஏற்படுத்திய காயங்களுக்கு மருந்திடவும் வேண்டும் என்கிறார் ஹாங்காங் செய்தியாளர் கேரி ஹூவாங். 1989-ல் நடந்த தியானன்மென் அடக்குமுறைக்குக் கட்சி மன்னிப்புக் கோர வேண்டும் என்கிறார் அவர். பொது விவாதங்கள் அனுமதிக்கப்பட வேண்டும், படிப்படியாக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் மாற்றங்களுக்கும் கட்சி முன்வர வேண்டும் என்கிறார். அப்போது மக்களின் நேரடிப் பங்களிப்புடன் சீனச் சமூகம் முன்னேறும்!
-தமிழ் இந்து
ஒக்ரோபர் 1, 2019