Site icon சக்கரம்

சமூக ஊடகங்களுக்கு அடிமையாவதன் மூலம் சுயஅழிப்புக்கு நாம் தயாராகிறோமா?

ரிச்சர்ட் செய்மூர்

மூக ஊடகங்கள் பிறர் எழுதியவற்றைப் படிப்பதற்கு மட்டுமல்ல, நாம் எழுதுவதற்கும் மேடை அமைத்துத் தந்துள்ளன. நம் நண்பர்கள், அலுவலக சகாக்கள், பிரமுகர்கள், அரசியல்வாதிகள், பயங்கரவாதிகள், காமசூத்திரக் கலைஞர்கள் என்று நாம் விரும்பும் எவருடனும் பேச முடிகிறது.

நாம் அவர்களுடன் நேரடியாகப் பேசுவதில்லை; இயந்திரத்தின் வாயிலாகவே பேசுகிறோம். நாம் எழுதுகிறோம்; அந்த எழுத்துகளைப் பதிவுசெய்து பத்திரப்படுத்திக்கொண்டு, யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்கு அது அனுப்புகிறது.

ஒவ்வொரு நாளும் சமூக ஊடகத்தில் மணிக்கணக்காக நாம் எழுதுவதற்கான ஊக்குவிப்புதான் என்ன? செய்யும் தொழில்களை விட்டுவிட்டுத் தற்காலிக வேலையாக சமூக ஊடகங்களில் எழுதத் தொடங்குகிறோம். இதற்கு யாரும் ஊதியம் தர வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை, இதற்காக வேலை ஒப்பந்தங்களும் கிடையாது.

ஊதியத்துக்குப் பதிலாக இங்கே என்ன கிடைக்கிறது? நாம் ஏன் இவற்றால் ஈர்க்கப்படுகிறோம்? அங்கீகாரம், கவனக்குவிப்பு, பதிலுரைகள், பகிர்தல்கள், ஏற்புகள்!

மோசமான ‘வைரல்’ கலாச்சாரம்

ட்விட்டரின் நோக்கமே, மக்கள் உடனுக்குடன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதுதான். எதை உள்ளீடாக அளித்தாலும் உடனே அது பலமடங்காகப் பதில்களைப் பெருக்க வேண்டும். ட்விட்டரில் இட்டது வைரலாகப் பரவவில்லை என்றால், உடனடியாக மறக்கப்பட்டுவிடும்.

ட்விட்டரில் வெளியாகும் கருத்தைப் படிப்பது, பதிலுக்குப் பின்னூட்டமிடுவது, அதன்பேரில் விவாதிப்பது, மீண்டும் அவற்றுக்குப் பதில்களை இடுவது என்பதன் மூலம் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோர் தொடர்ந்து செயலில் ஈடுபடுகின்றனர்.

இதில் புதிதாக ‘ஹேஷ்டாக்’ உருவாவது, ‘டிரெண்ட்’ ஆவது எல்லாம் தனிநபர்களின் குரல்களுக்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பதை உணர்த்துகின்றன. ஒரு கருத்து வெளியானவுடன் அதன் முழுப் பின்னணியும் அல்லது உண்மைகளும் தெரிவதற்குள்ளாகக் கூட்டாக எல்லோரும் பொங்கி எழுந்து கருத்திடுவது இதன் தனிச்சிறப்பு.

யார் சொன்னார்கள், எதற்காகச் சொன்னார்கள் என்றெல்லாம் ஆராயாமல், ‘சொல்லப்பட்டது இது – இதன் மீது என்னுடைய கருத்து இதோ’ என்று எல்லோரும் பதிவிடுகின்றனர். சமூக ஊடகங்களில் ஊசலாட்டங்களுக்கும் மதிப்பு இருக்கிறது. அதிக குழப்பம் – அதிக பலன்! சமூக ஊடகத்துக்கு நாம் அடிமையா? நாம் நினைக்கிறோமோ இல்லையோ… அது அப்படித்தான் நம்மை நடத்துகிறது.

போதையூட்டும் இயந்திரம்

சமூக ஊடகம் என்பது போதையூட்டும் இயந்திரம் என்றால் அந்த நடத்தையானது சூதாட்ட மனோபாவத்துக்குச் சமமானது. பெரும்பாலான நேரங்களில் சூதில் வைத்த பணத்தை இழந்து வெறும் கையராக வீடு திரும்ப நேரலாம். சூதாடிகளின் தனிச்சிறப்பு எதுவென்றால், தொடர்ந்து இழக்கும்போது கைப்பணம் முழுவதையும் வைத்து இழந்ததை மீட்க ஒரு இறுதி முயற்சியை மேற்கொள்வதில் மகிழ்ச்சி அடைவார்கள்.

சமூக ஊடகங்களில் சில வார்த்தைகளைத் தேடி வாக்கியம் அமைப்பீர்கள், குறியீடுகளைச் சேர்ப்பீர்கள், அனுப்புக என்ற பொத்தானை அமுக்கி உங்கள் கருத்துகளைச் சுற்றுக்குவிடுவீர்கள். நீங்கள் யார், உங்களுடைய பயணம் எதை நோக்கி என்பதை இணையதளம் மற்றவர்களுக்கு உணர்த்தும். அதைப் பகிர்வதும் எதிர்ப்பதும் தொடரும்.

சமூக ஊடகங்களிலிருந்து வெளியேற நினைத்தாலும் ஏன் முடிவதில்லை என்று 2015-ல் ஆய்வு நடத்தப்பட்டது. ஃபேஸ்புக்கிலிருந்து 99 நாட்களுக்கு விலகிவிடுவது என்று பலர் கூட்டாக முடிவெடுத்தனர். இவர்களில் ஒருசிலரால் ஓரிரு நாட்களுக்குக்கூட வைராக்கியமாக இருக்க முடியவில்லை. ஃபேஸ்புக்கை விட்டுவிட்டு ட்விட்டரை நாடினர்.

போதையை வேறு வடிவுக்கு மாற்றினர். உண்மையிலேயே வெளியேறியவர்கள் மகிழ்ச்சியான மனநிலையில் ஆழ்ந்தனர்; தங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதில் ஆர்வத்தைக் குறைத்துக்கொண்டனர்.

சமூக ஊடகங்களில் நாம் இடுகையிட்டால் நம்மைப் பாராட்டுவார்கள் என்று நினைப்பவர்கள், அப்படி ஆதரவாகவோ பாராட்டியோ இடுகைகள் வராதபோது மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர். பியுங்-சுல் ஹான் என்ற கலாச்சாரக் கருதுகோலாளர் இது ‘முதலாளித்துவத்தின் விளையாட்டியல்’ என்கிறார்.

சூதாடியையும் சமூக ஊடகத்தை விட்டு வெளியேறியவரையும் ஒப்பிட்டுப் பார்ப்பது தவிர்க்க முடியாதது. கூகுள் நிறுவனத்தின் வடிவியல் துறையில் பணியாற்றிய டிரைஸ்டான் ஹாரிஸ், ‘உங்களிடம் இருப்பது ஸ்மார்ட்போன் அல்ல; பொருட்களை அவ்வப்போது விற்கும் கையடக்கக் கருவி’ என்கிறார்.

ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் அடிக்கடி அதை எடுத்துப் பார்த்து, அதில் விளையாட்டுக்கு ஏதாவது ஆஃபர் வந்திருக்கிறதா, போட்டி எதையாவது அறிவித்து பரிசு என்னவென்று போட்டிருக்கிறார்களா, விற்பனைக்கு வரும் பொருட்களில் தள்ளுபடி எவ்வளவு என்றெல்லாம் அடிக்கடி தெரிந்துகொள்கிறார்கள். லைக் என்ற பட்டன் ஸ்மார்ட் போனில் இருப்பதால், ஒவ்வொரு கருத்திடலின்போதும் அதை வைத்திருப்பவர்கள் சூதாடுகிறார்கள் என்கிறார் ஆடம் ஆல்டர்.

ஒற்றைக் கை கொள்ளையர்கள்

திரைப்படங்களில் நீங்கள் பார்த்த அந்தக் கால சூதாட்ட விடுதிகளைப் போன்றவை அல்ல இக்கால சூதாட்டக் களங்கள். இப்போது மேஜை – நாற்காலிகள் போட்டு சூதாடுவதில்லை. அவரவர் பைகளில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் மூலமே சூதாட்டம் நடக்கிறது.

‘ஒற்றைக் கை’ கொள்ளைக்காரன் சிரித்துக்கொண்டே சூதாடி எல்லாவற்றையும் சுருட்டிச் செல்லும் காட்சிகளை இனி காண முடியாது. பாக்கெட்டில் இருக்கும் பணம், கண்ணுக்குத் தெரியாமலேயே சூதாட்டம் நடத்துவோருக்குக் கோடிக்கணக்கில் போக ஆரம்பித்துவிட்டது.

இயந்திரமும் காலமும் முக்கியமான அம்சம். சூதாட்டக் களங்கள் அனைத்தையுமே, வெளியில் பொழுது சாய்ந்துவிட்டதா, வெளிச்சம் வந்துவிட்டதா என்றெல்லாம் பார்க்க முடியாதபடிக்கு வாயில் கதவு, ஜன்னல்கள் எல்லாவற்றையும் மூடியே வைத்திருப்பார்கள்.

சூதாடும் இடங்களில் ஜன்னல்கள் இருக்காது, இருட்டைப் பகலாக்கும் விளக்குகள் எப்போதும் எரிந்துகொண்டிருக்கும். சூதாடிகளுக்கு அவ்வப்போது பானங்களும் சிற்றுண்டிகளும் உள்ளேயே சூடாகவும் சுவையாகவும் தரப்பட்டுவிடும். நேரம் காலம் போவது தெரியாமல் சூதாடிகள் தங்களை மறந்து ஆடிக்கொண்டிருப்பார்கள்.

ட்விட்டர் இயந்திரத்தில் திரைச்சீலைகளை இழுத்து மூடவோ, கதவுகளை அடைக்கவோ அவசியமே இல்லை. இங்கே சாளரத்தைத் திறந்து வைக்கும் வாடிக்கையாளர் தன்னுடைய வேலையை, தன்னுடைய சூழலை, தன்னை மறந்தவராகிவிடுகிறார். வேளைக்குச் சாப்பிடுவதில்லை, உடற்பயிற்சி செய்வதில்லை, மற்றவருடன் பேசுவதில்லை, காலார நடப்பதில்லை, விளையாடுவதில்லை.

தொடர்ந்து சாளரத்தில் தெரியும் காட்சி மாற்றங்களையும் கருத்துப் பதிவுகளையுமே பார்த்துக்கொண்டிருக்கிறார். இதில் பெரும்பாலான நேரம் அவர் உற்சாகமாகவும் இருப்பதில்லை. சூதாடிகளுக்கும் சமூக ஊடகப் பயன்பாட்டாளர்களுக்கும் போதை உச்சத்துக்குப் போவதும் கீழிறங்குவதும் ஒன்றுபோலவே நடக்கின்றன. ட்விட்டர் எப்போதும் நேரம், தேதி ஆகியவற்றைக் காட்டாது.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறவர்களில் சிலர், இது தங்களுடைய தொழிலையும் உறவுகளையும் நாசப்படுத்திவிட்டதாக மனம் திறந்து ஒப்புக்கொண்டுள்ளனர். புகார்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியானவை. சமூக ஊடகப் பயன்பாட்டாளர்கள் தொடர்ந்து கவனச் சிதறலுக்கு ஆளாகின்றனர், ஆக்கபூர்வமான உற்பத்தி அல்லது செயல்பாட்டைத் தருவதில்லை, எப்போதும் பதற்றமாகவே காணப்படுகின்றனர், மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர், மற்றவர்களின் உதவி, வழிகாட்டல், துணை இல்லாமல் எதையும் செய்ய முடிவதில்லை. இத்தனைக்கும் இடையில் விளம்பரங்களுக்கும் அவர்கள் இரையாகின்றனர். சமூக ஊடகத்தில் ஆழ்ந்துவிடுவதால் மன உளைச்சல் அதிகமாகிவிடுகிறது. பதின்பருவக் குழந்தைகளின் தற்கொலைகள் அதிகரிக்க இது முக்கியக் காரணமாகத் திகழ்கிறது.

நறுமணத்தால் ஈர்க்கப்பட்ட பூச்சிகள்

நறுமணம் வீசும் ஒருவகை நஞ்சைத் தன்னகத்தே கொண்ட செடி, காற்றில் அந்த வாசனையைப் பரப்பி சிறு பூச்சிகள், வண்டுகள், சிறிய பிராணிகளை ஈர்த்து அவற்றைச் சுற்றி வளைத்துக் கொன்று சீரணிப்பதைப் போலத்தான் சமூக ஊடகங்களும் என்கிறார் ஆலன் கர்.

செடியின் நறுமணத்தால் ஈர்க்கப்பட்ட பூச்சிகள், சர்க்கரை போன்ற இனிப்புத் தன்மையுள்ள விஷத்தை நக்கிக்கொண்டே வழுவழுப்பான மெழுகு போன்ற அதன் தண்டு வழியே ஆழத்தில் போய் விஷம் கலந்த திரவத்தில் மூழ்கி இறந்துவிடுகின்றன.

சமூக ஊடகங்கள் அளிக்கும் இன்பமும் சிறிது நேரத்துக்குத்தான். இதில் பிரச்சினை என்னவென்றால், சமூக ஊடகத்தில் நெடுநேரம் ஆழ்ந்துவிடுவதால் என்ன தீமைகள் என்று தெரிந்துகொண்டே அதை நீண்ட நேரம் பயன்படுத்துவோர் அதிகமாகிவருவதுதான்.

நாம் அனைவரும் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகிவருகிறோம் என்றால், அந்த ஊடகம் நன்றாகச் செயல்படுகிறது என்று பொருள். நம்முடைய வாழ்க்கை நாசமாகிவிட்டது என்றால், அவை மேலும் நன்றாகச் செயல்படுகின்றன என்றே அதை எடுத்துக் கொள்ள வேண்டும்!

சமூக ஊடகங்களுக்கு அடிமையாவதன் மூலம் சுயஅழிப்புக்கு நாம் தயாராகிறோமா என்பது அடுத்த கேள்வி. மெதுவாகத்தான் சாவோம் என்று தெரிந்துகொண்டு, நஞ்சு கலந்த செடிக்குள் குதிக்கிறோமா? புற்றுநோய் பற்றிய எச்சரிக்கையும் புகைப்படங்களும் சிகரெட் அட்டையில் அச்சிட்டு விற்கப்படும் நிலையிலும், அப்பழக்கத்தை விடாமல் தொடர்ந்து புகைப்பதன் மூலம் நாம் தெரிவிக்கும் செய்தி என்ன? கஞ்சா புகையை உள்ளே இழுத்துவிடும்போது கிடைக்கும் பரவச நிலைக்காகவே, அதன் தீமை தெரிந்தும் போதைப் பழக்க நோயாளிகள் அதைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றனரா? என்றைக்காவது ஒருநாள் தங்களுடைய உத்தி பலன் அளித்து பெரிய அளவில் பணம் சம்பாதிப்போம் என்ற நம்பிக்கையில்தான் சூதாடிகள் தினம் பணம் வைத்து ஆடி இழக்கின்றனரா? இவற்றையெல்லாம் விளக்குவது கடினம்.

பெரிய தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள், அரசியல் தலைவர்கள், பிற துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ள, விளைவுகளைச் சிந்திக்காமல் ட்வீட் செய்துவிடுகிறார்கள். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் மேரி பியர்டை எடுத்துக்கொள்ளுங்கள்.

அவருடைய ட்விட்டரில் ஏற்கும்படியான செல்ஃபி படங்களும் இடதுசார்புள்ள மையவாதக் கருத்துகளும் ஆதரவாளர்களுடனான உரையாடல்களும் நிறைந்திருக்கும். ஆக்ஸ்ஃபாம் எய்ட் ஊழியர்கள் ஹைதியில் குழந்தைகளைப் பாலியல்ரீதியாகச் சீரழிக்கிறார்கள் என்ற கடுமையான குற்றச்சாட்டைப் பொதுவெளியில் இட்டு, அது தொடர்பாகத் தனது கருத்தையும் தெரிவித்தார்.

‘மிகவும் இடர்ப்பாடுள்ள இடங்களில் நாகரிக நடத்தையுடன் எல்லோரும் நடப்பார்கள் என்று எதிர்பார்ப்பதற்கில்லை’ என்ற ரீதியில் கருத்து தெரிவித்திருந்தார். அதை அவர் குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக எடுத்துக்கொண்டு அதிர்ச்சியடைந்தனர்.

‘பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளை நிறச் சிறுமிகள் என்றால், மேரி பியர்ட் இப்படிக் கூறியிருப்பாரா?’ என்று கேட்டனர். மேரி இதை நிற அடிப்படையில் பார்த்து கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், கருத்து தெரிவித்தது ட்விட்டரில். இதனால், அவருடைய மதிப்பு ஒரே நாளில் குலைந்தது.

ட்விட்டரின் இந்த தனித்தன்மை கருதியே ட்விட்டர் பரிசும் வழங்கும், தண்டனையும் வழங்கும் என்று சுட்டிக்காட்டுகிறார் அமெரிக்க கணினி அறிவியலாளர் ஜேரன் லேனியர். சமூக ஊடகங்கள் மக்களுக்காக மட்டுமல்ல பாதி சாப்பாட்டிலும் உரையாடல்களுக்கு நடுவிலும் காலை கண் விழித்தவுடனேயும் ஸ்மார்ட்போன் எங்கே என்று தேடுவதற்குக் காரணம், அந்த சாதனத்தின் மீதான மோகமும், லேசாக ஒளிர்ந்து நம் கவனத்தை ஈர்க்கும் அதன் வடிவமைப்பும்தான். நம்முடைய வாழ்க்கை என்பது தீர்க்கக்கூடிய சவால்கள், அவற்றைத் தீர்ப்பதால் அடையக்கூடிய பரிசுகள், அதற்கான முயற்சிகள் என்று பலவற்றை ஒரு வரிசையில் கொண்டது.

ஆனால், ஸ்மார்ட்போனில் உள்ளவை பலதரப்பட்டவை. பிறரின் அந்தரங்கத்தைப் பார்க்கும் இன்பம், மற்றவர்களுடைய கருத்துகளை ஏற்பது – நிராகரிப்பது, விளையாட்டு, செய்தி, நினைவேக்கத் தகவல்கள், சமூகமாவதற்கான வாய்ப்புகள், சமூக ஒப்பிடல்கள் என்று பல அம்சங்களைக் கொண்டவை. இவற்றுக்கு நாம் அடிமையாகிவிட்டால் சூதாடுதல், பொருட்களைக் கொள்முதல் செய்தல், நண்பர்களை வேவுபார்த்தல் என்று பிறவற்றையும் இதிலேயே செய்துகொள்ளலாம்.

இந்த சமூக ஊடகங்கள் தங்களுடைய உண்மையான வாடிக்கையாளர்களான பிற நிறுவனங்களின் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டவை, மக்களுக்காக மட்டுமல்ல. நம்முடைய எதிர்வினைகளிலிருந்து சிலவற்றை அறிந்துகொண்டு, சந்தைக்கேற்ப நம்மைத் தயார்செய்கின்றன.

நாம் அவற்றுடனேயே நீண்ட நேரம் இருக்க வேண்டுமென்று அவை கட்டாயப்படுத்துவதில்லை, நாம் என்ன செய்ய வேண்டும் என்றும் அவை கூறுவதில்லை. போதை மருந்திலிருந்து விஷத்தை ஏற்றிக்கொள்வதுகூடப் பயனாளிகளால்தான் நடக்கிறதே தவிர, போதை மருந்துகளால் அல்ல.

-இந்து தமிழ்
2019.11.11
தி நியூயார்க் டைம்ஸ், சுருக்கமாகத் தமிழில்: சாரி

Exit mobile version