-இந்து குணசேகர்
அகதிகளாக நாங்கள் எத்தனை வருடம் வாழ்வது… அகதி என்ற வேதனையை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எங்கள் குழந்தைகள் நிச்சயம் அகதிகளாக வாழக் கூடாது. இதிலிருந்து நிச்சயம் எங்களுக்கு இந்திய அரசு விடுதலை தரும் என்று நம்புகிறோம்
– சென்னை புறநகர்ப் பகுதியான புழல், காவாங்கரையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் செல்வநாயகி நம்முடன் பகிர்ந்த வார்த்தைகள் இவை.
1989, 1990-ம் ஆண்டுகளில் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள ஐரோப்பியா நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டனர். இதில் ஐரோப்பாவுக்குச் செல்ல முடியாத மக்கள் இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர். இதில் ஐரோப்பாவில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழ் மக்களின் பொருளாதார நிலையையும், இந்தியாவுக்குள் நுழைந்த தமிழ் மக்களின் பொருளாதார நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இங்குள்ள இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தும் குடியுரிமைக்கான தேவையை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
ஐ.நா.வின் அகதிகள் சாசனத்தில் ஐரோப்பிய நாடுகள் கையொப்பமிட்டிருப்பதால் அங்கு அகதிகளாகச் சென்ற இலங்கைத் தமிழ் மக்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டிடமிருந்து தேவையான அனைத்து உரிமையையும் அம்மக்களால் பெற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் இந்தியா, அகதிகள் தொடர்பான எந்த சாசனத்திலும் கையொப்பமிடவில்லை. இதன் காரணமாக இங்குள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் அவர்களுக்கான உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
சுமார் 70 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கைத் தமிழ்க் குடும்பங்கள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் வசித்து வருகின்றன. இவர்கள் அனைவருக்கும் கடந்த வாரம் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் பெரும் ஏமாற்றத்தையும், வருத்தையும் அளித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் அண்டை நாடான இலங்கையிலிருந்து வரும் தமிழ் மக்களுக்கு குடியுரிமை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து புழல், காவாங்கரையில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் முகாமில் தங்கியுள்ள மக்களின் கருத்தை ‘இந்து தமிழ்’ இணையதளம் சார்பாகக் கேட்டறிந்தோம்.
குடியுரிமைச் சட்டத்தை மீளாய்வு செய்ய வேண்டும்
என் பெயர் தர்மலிங்கம். நான் இலங்கையின் யாழ்ப்பாணத்திலிருந்து 90களில் இந்தியாவுக்கு வந்தேன். நாங்கள் இந்தியாவுக்கு வந்து 30 வருடங்கள் கடந்துவிட்டன. நான் இந்தியாவுக்கு வரும்போது அகதியாக வந்தேன். எனக்கு 3 பிள்ளைகள் பிறந்து, தற்போது அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்துவிட்டன. தொடர்ந்து நாங்கள் இந்த மண்ணில் அகதியாகத்தான் இருந்து கொண்டிருக்கிறோம். நிச்சயம் இந்திய அரசு எங்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும்.
எங்களுக்குக் குடியுரிமை வழங்க இந்திய அரசு மறுத்தாலும் இந்தியாவில் பிறந்த எங்கள் பிள்ளைகளுக்காவது குடியுரிமை வழங்க வேண்டும்.
இதற்கு இந்திய அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் இந்திய அரசைத்தான் நம்பிக் கொண்டிருக்கிறோம். இந்தியா எங்களுக்கு வழிகாட்டும் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் இங்கு வாழ்த்து கொண்டிருக்கிறோம். குடியுரிமைச் சட்டத்தை இந்திய அரசு மீளாய்வு செய்ய வேண்டும்.
எங்களின் இந்தக் கோரிக்கையை இந்திய அரசும், தமிழக அரசும் செய்யும் என்று இப்போதும் நம்புகிறோம். இந்த நம்பிக்கை தொடர்ந்து இருக்கும். இதற்காக இங்குள்ள அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.
இங்கு படித்த, எங்கள் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் என்றால் நிச்சயம் எங்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். படித்த எங்கள் பிள்ளைகள் கூலி வேலைக்குச் செல்லும் அவலம்தான் இங்கு நீடிக்கிறது. தனியார் நிறுவனங்களில் வேலைக்குச் சென்றாலும் இலங்கை அகதிகள் என்று வேலை தர பயப்படுக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். எங்களுக்குக் குடியுரிமை வழங்கினால் நிச்சயம் படித்த பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இது நிச்சயம் எங்களது எதிர்காலத்தை மாற்றும். இது நடக்கும் என்று நம்புகிறோம்.
அகதிகளாக வாழ்க்கையை நாங்கள் எத்தனை வருடம்தான் வாழ்வது?
என் பெயர் செல்வநாயகி. நான் இந்தியாவுக்கு வந்து 30 வருடங்கள் ஓடிவிட்டன. எனது கணவர் 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். எனது இரண்டு பிள்ளைகளும் இந்தியாவைச் சேர்ந்தவர்களைத்தான் திருமணம் செய்துள்ளனர். வறுமை காரணமாக எங்கள் பிள்ளைகள் படிப்பைத் தொடர முடியவில்லை.
இந்திய அரசு எங்களுக்குக் குடியுரிமை வழங்காததால் தொடர்ந்து நாங்கள் பொருளாதாரரீதியான சிரமத்தில் தவிக்கிறோம். இங்கு பட்டப்படிப்பை முடிந்த ஏராளமான பிள்ளைகள் வேலை கிடைக்காமல்தான் வீட்டிலேயே உள்ளனர். இரட்டைக் குடியுரிமை கொடுத்தாலும் சரி, இந்தியக் குடியுரிமை கொடுத்தாலும் சரி, எங்களுக்குக் கூடிய விரைவில் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். இதுமட்டுமே எங்களின் கோரிக்கை.
அகதிகளாக நாங்கள் எத்தனை வருடம்தான் வாழ்வது? இன்றளவும் நாங்கள் அனைவராலும் அகதிகளாகவே அடையாளப்படுத்தப்படுகிறோம். இந்த வேதனையை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எங்கள் குழந்தைகளும் அகதிகளாக வாழக் கூடாது. இதிலிருந்து எங்களுக்கு நிச்சயம் இந்திய அரசு விடுதலை தரும் என்று நம்புகிறோம்.
இந்தியாவில் பிறந்த நாங்கள் இந்தியாவை எங்கள் சொந்த நாடாகவே பார்க்கிறோம் என்று கூறும் இளைஞர்கள், எங்கள் எதிர்காலத்துக்கும், எங்களுக்கான அடையாளத்துக்கும் நிச்சயம் இந்திய அரசு குடியுரிமை வழங்கியே தீர வேண்டும் என்ற கோரிக்கையை நம் முன் வைத்தனர்.
இந்தியாவால் புறக்கணிக்கப்படும் இலங்கைத் தமிழர்கள்
இந்தியாவுக்குள் வரும் அகதிகளில் இலங்கைத் தமிழ் அகதிகள் எப்போதும் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்கிறார் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.
”இந்தியாவைப் பொறுத்தவரை இங்கு அகதிகளாக திபெத்தைச் சேர்ந்தவர்கள், மியான்மரைச் சேர்ந்தவர்கள், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் வந்திருக்கிறார்கள். இவர்களைப் போல இலங்கையைச் சேர்ந்தவர்களும் அகதிகளாக வந்திருக்கிறார்கள். ஆனால் இதில் இலங்கைத் தமிழர்கள்தான் இந்திய அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். அதற்கு தற்போது கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டமே சிறந்த உதாரணம்.
சர்வதேச அளவில் அகதிகள் தொடர்புடைய எந்த ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்திடவில்லை. இதன்படி பார்த்தால் அகதிகளை ஏற்றுக்கொள்வதில் இந்தியா எந்தவிதமான கொள்கையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் கடந்தகால குடியுரிமைச் சட்டங்களிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டுள்ளது.
இதில் இலங்கை அகதிகளை மத்திய அரசு புறக்கணித்துள்ளது என்றே கூற வேண்டும். ஏனென்றால் இதில் இந்தியா, இலங்கை அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இருக்கிறது. அதன் காரணமாகவே இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை அளிக்க இந்திய அரசு யோசிக்கிறது.
இலங்கைத் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்று இரட்டைக் குடியுரிமை. ஆனால், இந்திய அரசு அதற்குத் தயாராகவே இல்லை. இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கி, அவர்களை இலங்கையில் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த சர்வதேச அளவில் முக்கியக் காரணியாக இந்தியா செயல்பட வேண்டிய பொறுப்புள்ளது” என்று வெற்றிச்செல்வன் தெரிவித்தார்.
தமிழகத்தில் அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகள் அவர்களது அப்போதைய தேவையைப் பூர்த்தி செய்தாலும், மூன்று தலைமுறைகளாக இங்கு வசிக்கும் தங்களைக் குடிமக்களாக இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அம்மக்கள் உறுதியாக உள்ளனர். இலங்கைத் தமிழர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் என்று நம்புவோம்.