Site icon சக்கரம்

நீங்கள் புத்தகப் பிரியரா? புத்தகப் புழுவா? இல்லையென்றாலும் இது உங்களுக்குத்தான்!

C.P.சரவணன்

நூல்கள் மற்றும் நூலகம் குறித்து அறிஞர்கள் சொன்னதென்ன தெரியுமா..?

நூல் (book)
நூல்  என்பது  கருத்துகளை எழுத்து உருவில் காட்டும் ஒரு கருவி. இக்காலத்தில் அச்சிட்ட புத்தகங்களை உணர்த்த இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. காகிதம் உருவாக்கப்படுவதற்கு முன்னர் நூல் பனையோலையில் எழுதப்பட்ட பதிவாக இருந்தது. எழுதப்பட்ட பனையோலைகளைப் துளையிட்டு நூல்கயிற்றில் கோத்து வைத்தனர். பொத்துக் கோத்து வைத்த சுவடிகளைப் பொத்தகம் என்றனர். நாளடைவில் பொத்தகம் என்னும் சொல் புத்தகம் என மருவி வழங்கப்படுகிறது. 

“மண் புழுக்கள் மண்ணை வளமாக்கும், புத்தகப் புழுக்கள் மனதை வளமாக்குவர்”. நூல்கள் வாசிப்பது என்பது ஓர் அற்புதக் கலை. இசைக் கருவிகளை மீட்டுவது மட்டும் வாசிப்பல்ல. நூல்களைப் படிப்பதும் வாசிப்புதான். வாசிப்பு மனதை ஒருமுகப்படுத்தி நினைவுத்திறனைக் கூட்டும். கற்பனையையும் அறிவின் மேதா விலாசத்தையும் செழுமை செய்யும். புதிய புதிய பொருள்களைத் தந்து கொண்டே இருக்கும். வாசிப்பது என்பது சிறுகதையல்ல, அது ஒரு தொடர்கதை. கிரேக்க நாட்டுச் சிந்தனையாளர் சாக்ரடீசுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நஞ்சு தனக்குக் கொடுக்கப்படும் வரை படித்துக் கொண்டே இருந்தாராம். இலிபியா நாட்டு உமர் முக்தர் என்ற புரட்சியாளர் தூக்குக் கயிற்றை அவரது கழுத்தில் மாட்டும் வரை படித்துக் கொண்டிருந்தாராம். 

இலண்டன் நூலகத்தில் இருபது ஆண்டுக் காலம் படித்து ஆய்வு செய்த கார்ல் மார்க்ஸ் தான் பின்னாளில் பொதுவுடைமைத் தத்துவத்தின் தந்தையாக விளங்கினார்.

நேரு தான் மறைந்த பின் தமது சடலத்தின் மீது மலர் மாலைகள் வைக்கக்கூடாது புத்தகங்கள்தான் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். பேரறிஞர் அண்ணா புற்று நோயால் உயிரோடு போராடிக் கொண்டிருந்தார். சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் மருத்துவர்கள் இன்று உங்களுக்கு அறுவைச் சிகிச்சை என்றபோது, தாம் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் சில பக்கங்கள் பாக்கி இருப்பதால் அதை முடிக்கும் வரை உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சையைத் தள்ளி வைக்கச் சொன்னாராம். 

என்னை தேடி நீ வந்தால் உன்னை தேடி உலகம் வரும் என்கிறது நூலகம்.

நூல்கள் மற்றும் நூலகம் குறித்த அறிஞர்களின் கருத்துகள்

நூலகம் என்பது இயக்ககம் அல்ல! இயக்கம் என்கிறார் இந்திய நூலகவியல் தந்தை எஸ்.ஆர். ரங்கநாதன்.

அறிவால் உயர்ந்து அரியாசனம் செய்வோம் என்கிறார் தேசத்தந்தை மகாத்மா காந்தி.

நூல்களால் நைந்த நேயங்கள் தைப்போம் என்கிறார் அன்னை இந்திரா காந்தி.

நூலகம் நமக்கு ஓய்வு நேர உலகம் என்கிறார் பேரறிஞர் அண்ணா.

புத்துலகம் படைக்க புத்தகம் படிப்போம் என்கிறார் அப்துல் கலாம்.

புத்தகம் படிப்போம் வித்தகம் படிப்போம் என்கிறார் பெரியார்.

நுட்பங்கள் நுகல, நூலகங்கள் செல்வோம் என்கிறார் கிரகாம்பெல்.

அறிவால் உயர்வோம், அறிவாள் தவிர்ப்போம் என்கிறார் பில்கேட்ஸ்.

படிப்போம், படிப்போம், பதிப்போம் என்கிறார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

ஒரு நூலகம் திறக்கப்படும் போது 100 சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

அடுத்த தலைமுறைக்கு பரிசளிக்க விரும்பினால் புத்தகத்தை பரிசாக கொடு என்கிறது சீன பழமொழி.
 
அறிவுப் போராட்டத்துக்கான படைக்கலன்கள் செய்யும் படைவீடு நூலகம்! – இங்கர்சால்
எனது நூலகமே எனக்குப் போதிய பெருஞ்செல்வமாகும்! -ஷேக்ஸ்பியர்

 நூலகங்கள் பண்டை உலகின் சின்னங்கள்;
இக்கால உலகின் புகழ்க்கொடிகள்!            
-லாங்ஃபெல்லோ

இக்காலத்தின் உண்மைப் பல்கலைக்கழகம் நூல்களின் தொகுதிதான்! – கார்லைல்

நூலகமே ஒரு தனி உலகம். அதன் உள் சென்று வந்தால் அறிஞனாகலாம் – கலைஞனாகலாம் கவிஞனாகலாம்! – அபீப் முகமது ஜின்னா

என் நூலகமே என் பணிக்கு அடிப்படை; என் உள்ளும் புறமும் இன்பமும் ஆறுதலும் தருவதாகும்! -கிப்பன்

நூல்கள் இல்லாத வீடு சாளரம் (ஜன்னல்) இல்லாத வீடு! -ஹோம்ஸ்மான்

தோழனுக்காகக் கூடத் திறந்து சொல்லாத சொற்கள், கருத்துகள் உனக்காகத் தெளிவாக விளக்கப்பட்டுக் காத்திருக்கின்றன! -எமர்சன்

எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று இலண்டன் தோழர்கள் கேட்டபோது எந்த விடுதி நூலகத்திற்கு அருகில் உள்ளது எனக் கேட்டாராம் -டாக்டர் அம்பேத்கர்.

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம் பகத்சிங்.

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும் போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்குப் புத்தகம் வாங்குவாராம் சார்லி சாப்ளின்.

எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ அங்கே விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் – சேகுவாரா.

ஒரு புத்தகத்தைத் திறக்கும்போது உலகினை நோக்கிய ஒரு சன்னலைத் திறக்கிறோம் -தோழர் சிங்காரவேலர்.

வாசிப்பதற்கு ஒரு புத்தகத்தைத் தேடும் மனிதனுக்கும் சோர்வில் கண் அயரப் புத்தக வாசிப்பை நாடும் மனிதனுக்கும் வேறுபாடு உண்டு – சி.கே. செஸ்டர்டன்.

புத்தகங்கள் மிகவும் ஆபத்தானவை; அவற்றின் மேல், ‘கவனம் இது உங்கள் வாழ்வை மாற்றிவிடக் கூடும்’ என எச்சரிக்கை வாசகம் பொறிப்பது நல்லது – எலன் எக்ஸ்லே.

உங்களது தலைசிறந்த புத்தகங்களைத் திருடிச் செல்பவர்கள் உங்களது தலைசிறந்த நண்பர்களாகவே இருக்க முடியும் – வால்டேர்.

ஒரு புத்தகத்தை இரவல் தருபவன் முட்டாள். அதைத் திருப்பித் தருபவன் அதைவிடப் பெரிய முட்டாள் -அரேபியப் பழமொழி.

உலகிலுள்ள அனைத்துவகைத் துயரங்களின் விடுதலை ஒரு புத்தகத்தில் உள்ளது – கூகிவா திவாங்கோ.

ஒரு நல்ல வாசகனைக் கொண்டே ஒரு நல்ல புத்தகம்  அடையாளம் காணப்படுகிறது – ஜார்ஜ் பெர்னாட்ஷா.

போரில் கலந்து கொள்வதைவிட, கூடுதல் தைரியம் ஒரு சில புத்தகங்களை வாசிக்கத் தேவைப்படுகிறது! -எல்பர்ட்கிரிக்ஸ்.

புத்தகங்கள் இருந்தால்போதும் சிறைக் கம்பிகளும் கொட்டடிகளும் ஒரு வரை அடைத்து வைக்க முடியாது -மாவீரன் பகத்சிங்.

ஒரு புத்தகத்தின் பயன் அதன் உள்ளே தேடப்படுவதைவிட வெளியே ஏற்படுத்திய தாக்கத்தை வைத்தே இருக்கிறது – பிரடெரிக் எங்கெல்ஸ்.

காலக்கடலில் நமக்கு வழி காட்ட, அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கு புத்தகம் -எட்வின் பி. விப்பிள்.

ஒரு நாட்டின் வருங்காலச் சந்ததியினர் தேடித்தேடி அடைய வேண்டிய அற்புதப் புதையல்கள் புத்தகங்களே – ஹென்றிதொறோ.

நம்மால் வேறு எப்படியும் பயணிக்க முடியாத உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் ஒரு மந்திரக் கம்பளம் புத்தகம் – கரோலின் கோர்டன்.

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை எனக் கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர்கிங்.

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.

ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம் காந்தியடிகள்.

தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேட்கப்பட்டபோது, புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தார் நேரு.

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று -பெட்ரண்ட்ரஸல்.

மனிதனின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று  வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் எனப் பதிலளித்தார் -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் -நெல்சன் மண்டேலா.

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிடக் குவிந்த புத்தகங்கள் பல லட்சம்.

குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தூக்கியெறியப்பட்டபோது பேரறிஞர் இங்கர்சால் சென்ற இடம் நூலகம்.

பதப்படுத்தப்பட்ட மனங்களின் வெளித்தோற்றத்தைப் புத்தகம் என்று அழைக்கின்றோம் – போவீ.

புதிய புத்தகத்தை வாசிக்கும்போது புதிய நண்பன் ஒருவனைச் சந்திக்கிறோம் அதை மீண்டும் வாசிக்கும் போதோ நீண்ட கால நண்பனைச் சந்திக்கிறோம் -சீனப் பழமொழி.

நீங்கள் ஒரு புத்தகத்தை விற்கும்போது நீங்கள் காகிதமும் கோந்தும் மையும் விற்கவில்லை. ஒரு புதிய வாழ்வையே அவருக்கு விற்கிறீர்கள். – கிறிஸ்டோபர் மார்லே.

புத்தகம் என்பது பையில் சுமந்து செல்ல முடிந்த ஒரு பூந்தோட்டம் – சீனப் பழமொழி.

ஒரு நல்ல புத்தகம் வாசித்து முடிக்கப்படுவதே இல்லை – ஆர்.டி. கம்மிஸ்.

ஒரு புத்தகத்தைவிடப் பொறுமையான ஆசிரியரை நான் பார்த்தது இல்லை – சார்லஸ் இலியட்.

விமானத்தில் போகாமல் பம்பாய்க்குக் காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக் கெட்டது ஏன்? என்று வினவியபோது பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது! எனப் பதிலளித்தாராம் அறிஞர் அண்ணா.

ஒரு மிகச் சிறந்த புத்தகத்தை நீங்கள் படிக்க விரும்புகிறீர்கள். ஆனால் அது இன்னும் யாராலும் எழுதப்பட வில்லை என்கிற நிலை இருந்தால் அதற்கு ஒரே தீர்வு அதை நீங்கள் எழுத வேண்டியதுதான் -டோனி மாரிஸன்.

ஒரு நல்ல புத்தகம் முடிவில்லாதது; அது பல வாழ்க்கைகளைப் பற்றி உங்களை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும் – ஆர்.டி. கம்மிங்.

ஒரு நல்ல புத்தகத்தைப் படிக்காதவன், அந்தப் புத்தகத்தை படிக்கத் தெரியாதவனைவிட எந்த விதத்திலும் உயர்ந்தவன் அல்லன் – மார்க் ட்வைன்.

உன் மூளைக்குள் இருக்கும் சிந்தனை மகரந்தங்களை மற்றொரு மூளைக்குள் கொண்டு செல்லும் தேனீக்கள் தான் புத்தகங்கள் -ஜேம்ஸ்ரஸல்.

என் மனம் விரும்பும் நூல்களைக் கொடுங்கள். வாழ்நாள் முழுதும் சிறையில் வாழச் சம்மதிப்பேன் -மாஜினி.

பயன்படுத்தப்படாத புத்தகம் வெறும் காகிதக் கட்டுதான் – சீனப் பழமொழி.

நான் தெரிந்துகொள்ள வேண்டியவை புத்தகங்களில் இருக்கின்றன. நான் படிக்காத நூல் ஒன்றை எனக்குத் தருபவர்களே எனக்கு மிகவும் விருப்பமானவர்கள் -ஆபிரகாம்லிங்கன்.

அக்கறை உள்ள பெற்றோரும், அலமாரி நிறையப் புத்தகங்களும் வாய்க்கப்பெறும் குழந்தையே அதிர்ஷ்டசாலி – ஜான்மெக்காலே.

ஒரு நல்ல படிப்பாளி கொஞ்சம் விஷயங்களைப் பற்றியாவது முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். பல விஷயங்களைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும் -மார்க்ஸ் அரேலியஸ்.

மூடத்தன நோயை முற்றாக விரட்டும் மூலிகைகளே புத்தகங்கள் – சீனப் பொன்மொழி.

ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை – சிசரோ.

நூலகம் இல்லாத ஊரை நான் ஒரு ஊராக மதிப்பதே இல்லை – மாமேதை லெனின்.

எந்த வீட்டில் நூல் நிலையம் இருக்கிறதோ, அந்த வீட்டில்தான் ஒளிவிளக்கு இருக்கிறது – பிளாட்டோ.

“மனிதனைப் போலத்தான் புத்தகமும் ஒரு வாழ்வின் தோற்றமாகும்; அதற்கும் உயிருண்டு; அதுவும் பேசும். மனிதன் இதுவரை படைத்த இன்றைக்கும் படைத்து வருகிற மற்ற பொருட்கள் போன்ற அளவுக்கு அது ஒரு “பொருள்” மட்டும் அல்ல” – மாக்சிம் கார்க்கி.

எனவே வாசிப்போம்…………….

-தினமணி
2019.09.27

Exit mobile version