Site icon சக்கரம்

கொரோனா வைரஸ் தொற்றால் ஈரானில் இதுவரை 26 பேர் உயிரிழப்பு – உலகெங்கும் என்ன நிலவரம்?

கொரோனா வைரஸ்

ரானில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆம் உயர்ந்துள்ளது என ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 106 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 245ஆக உயர்ந்துள்ளது.

கலிஃபோர்னியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு

அமெரிக்க மாகாணமான கலிஃபோர்னியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பால் உண்டாகும் ஆபத்து மிகவும் குறைவு என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 தொற்று உள்ள நுரையீரலின் CTscan படம்.

எனினும் அமெரிக்க அரசு நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கு நிதி ஒதுக்கீட்டை குறைந்துள்ளதாக அவரது எதிர்ப்பாளர்கள் விமர்சிக்கின்றனர்.

அமெரிக்காவில் இதுவரை 59 பேருக்கு கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்களில் 42 பேர், கொரோனா பரவலால் தனிமைப்படுத்தப்பட்ட டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் இருந்து நாடு திரும்பியவர்கள்.

பிரான்ஸில் கொரோனா

“தொற்று நோய் ஆபத்து ஒன்று வருகிறது. நாம் நெருக்கடியை எதிர்நோக்க இருக்கிறோம்,” என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரூங் தெரிவித்துள்ளார்.

செவ்வாயன்று, பிரான்ஸில் முதன்முறையாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிரான்ஸுக்கு வந்த ஒரு சீன சுற்றுலா பயணி உட்பட பிரான்ஸில் இருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அங்கு இதுவரை 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தோனீசியாவில் இல்லை

இந்தோனீசியாவில் கொரோனா தொற்று சோதனை செய்யும் விதம் குறித்து கவலைகள் எழுந்துள்ளன.

அந்நாட்டிற்கு சீனாவுடன் பல வகையில் நெருங்கிய தொடர்புகள் இருந்தபோதும் அந்நாட்டில் இதுவரை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்படவில்லை.

இருப்பினும் அந்நாட்டில் கொரோனா தொற்று தாக்கியது போன்ற அறிகுறிகளால் இருவர் உயிழந்துள்ளனர். ஆனால் அந்நாட்டில் கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்படவில்லை.

இத்தாலியில் அதிகரித்த எண்ணிக்கை

கொரோனா வைரஸ் தாக்குதல் பாதிப்பு மற்றும் பரவலை கட்டுப்படுத்த சர்வதேச அளவில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதற்கு மத்தியில், இத்தாலியில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400-ஐ எட்டியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக முக்கிய கவனத்தை பெற்றுள்ள இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

இத்தாலியை தொடர்ந்து தற்போது பல ஐரோப்பிய நாடுகளும் தங்கள் நாட்டில் புதிதாக ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து அறிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய சீனாவை தாண்டி மற்ற நாடுகளில் முதல்முறையாக இந்த வைரஸ் தாக்குதல் மிக வேகமாக பரவிவருவதாக புதன்கிழமையன்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பரில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட 40 நாடுகளில் 80,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் இதில் பெரும்பான்மையான பாதிப்பு சீனாவில் தான்.

கோவிட்-19 என்றழைக்கப்படும் நுரையீரல் பாதிப்பு தொடர்பான இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை சீனாவில் மட்டும் 2,750க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. மேலும் பல பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இத்தாலியில் இந்த வைரஸ் தாக்குதலின் மையப்புள்ளியாக உள்ள ஏறக்குறைய 55 ஆயிரம் பேர் வாழும் 11 நகரங்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இத்தாலியில் என்ன நிலவரம்?

இதுவரை இத்தாலியில் கிட்டத்தட்ட 400 பேர் அளவுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற அறிவிப்பை அடுத்து, ஒரே நாளில் (புதன்கிழமை) பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 80க்கும் மேலாக அதிகரித்துள்ளது.

தொழில் வளம் அதிகம் உள்ள இத்தாலியின் வடக்கு பகுதிகளில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் மோசமாக உள்ளது.

மிலன் மற்றும் வெனிஸ் அருகே உள்ளே வெனிட்டா ஆகிய பகுதிகளில் இந்த வைரஸ் பாதிப்பு கடுமையாக உள்ளது. இதுவரை இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க தேவையான நடவடிக்கைளை அந்நாட்டு அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. நாட்டு மக்களுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கைகளை அரசு அளித்து வருகிறது.

மற்ற நாடுகளின் நிலவரம் என்ன?

பிபிசி தமிழ்
2020.02.27

Exit mobile version