Site icon சக்கரம்

தோழர் நீர்வை பொன்னையன் காலமானார்

1930 – 2020

லங்கை தமிழ் முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவரான தோழர் நீர்வை பொன்னையன் இன்று (2020.03.26) காலமானார்.

சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல படைப்புகளை ஈழத்து இலக்கிய உலகுக்கு தந்த இவர், எழுபது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர்.

ஒடுக்குமுறைகளுக்கு எதிராக வெகுண்டெழுந்த இளைஞனாக, தன்னை பொதுவுடமை கட்சிக்குள் இணைத்துக்கொண்டவர் நீர்வை பொன்னையன். தான் கொண்ட கொள்கையில் உறுதியான, எந்த விட்டுக்கொடுப்பும் செய்யாது இறுதி வரை வாழ்ந்த மனிதர்.

யாழ்ப்பாணம் நீர்வேலியில் பிறந்த இவர்,தன்னுடைய தொடக்க கல்வியை நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் கற்று பின்னர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி. ஏ. பட்டம் பெற்றார்.

கடந்த 24 ஆம் திகதி தன்னுடைய 90 ஆவது அகவையை பூர்த்திசெய்த அன்னாரின் இழப்பு இலங்கை தமிழ் இலக்கிய உலகுக்கும் இலங்கை இடதுசாரி இயக்கத்துக்கும் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூத்த முற்போக்கு எழுத்தாளர் தோழர் நீர்வை பொன்னையன்
உடனான இரண்டு அண்மைக்கால நேர்காணல்கள்
:

“எனது இலக்கியத்தை அரசியலே வழிநடத்தியது”

இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உயரிய தேசிய விருதான ”சாஹித்ய ரத்னா” விருது நீர்வை பொன்னையனுக்கு கிடைத்ததல்ல. இது எங்களது முற்போக்கு இலக்கிய இயக்கத்துக்கும் எனது கொள்கைக்கும் கிடைத்த விருது. நான் அரசியலில் இருந்து இலக்கியத்துக்கு வந்துள்ளேன. இலக்கியத்தில் இருந்து அரசியலுக்கு வரவில்லை. எனது அரசியல்பயணம் 1947 இல் ஆரம்பமானது. இலக்கியப்பயணம் 1957 இல் ஆரம்பித்தது… என்று பேசத் தொடங்குகிறார் மூத்த முற்போக்கு எழுத்தாளர் ‘சாஹித்ய ரத்னா’ நீர்வை, பொன்னையன்…

ஈழத்து முற்போக்கு இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான நீர்வை பேனாவை ஆயுதமாகக் கொண்ட ஒரு சமூக போராளி. தொழிலாளர் வர்க்கத்துக்காகவே பேனாவை எடுத்த இவர் அவர்களது உரிமைகள், போராட்ட விடயங்கள் தொடர்பில் தனது எழுத்து ஆளுமையினூடாக சமூகத்துக்கு வெளிகொணர்ந்துள்ளார்.

முற்போக்கு எழுத்துலகில் இன்று ஆறு தசாப்தங்களை எட்டியுள்ள நீர்வை இன்றும் எழுத்துத் துறையில் தன்னன ஈடுபடுத்தி வருகின்றார். அத்துடன் இலங்கை முற்போக்குக் கலை, இலக்கிய மன்றத்தின் ஊடாக இலக்கிய கூட்டங்கள், நினைவுப்பேருரைகள், நூல்வெளியீடுகள் என்பவற்றை முன்நின்று நடத்தி வருகின்றார்.

அண்மையில், இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உயரிய தேசிய விருதான ”சாஹித்ய ரத்னா” விருதைப் பெற்றுக்கொண்ட நீர்வை பொன்னையனை சந்திப்பதற்கு அவரது வீட்டுக்கு சென்றேன். 87ஆவது வயதைக் கொண்டுள்ள இவரது பணிவான தன்மை, பணிவான பேச்சு அவர் தான் கடந்து வந்த பாதையில் சந்தித்த இன்ப துன்பங்களை பகிர்ந்து கொண்ட போது மெய்சிலிர்த்தது. தான் ஒரு பட்டதாரியாக இருந்தாலும் தான் சார்ந்த சமூகத்துக்காக எவ்வாறு கொள்கைபிடிப்புடன் வாழ்ந்து வந்தார் என்பது ஆச்சரியமிக்கதாக இருந்தது.

இதன்போது அவர் பகிர்ந்து கொண்ட விடயங்கள் எமது வாசகர்களுக்காக…

இலங்கை அரசாங்கத்தின் அதியுயர் விருதான
 சாஹித்ய ரத்னா விருதை பெறுகின்றார்

அரசியல் துறையில் ஏழு தசாப்தங்கள் எழுத்துத்துறையில் ஆறு தசாப்தங்கள். இவ்வாறு தசாப்தங்களை கண்டுள்ள நீங்கள் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் ‘சாஹித்ய ரத்னா’ விருதை பெற்றுள்ளீர்கள். இதனை எவ்வாறு உணர்கின்றீர்கள்? உங்கள் துறைசார் அனுபவங்களை எம்முடன் பகிர்ந்துக்கொள்ள முடியுமா?

நான் சார்ந்த இலக்கிய அமைப்புக்கும் என்னுடைய கோட்பாட்டுக்கும் கிடைத்த விருதாகவே இந்த ‘சாஹித்யரத்னா’ விருதை கருதுகின்றேன். இவ்விருதை பெற்றதில் மகிழ்ச்சியும் அடைகின்றேன்.

அரசியல் களத்திலிருந்து சிலர் எழுத்துலகிற்குள் பிரவேசிக்கின்றனர். எழுத்துத் துறையிலிருந்து சிலர் அரசியல் களத்திற்குள் நுழைகின்றனர். நான் அரசியல் களத்திலிருந்து எழுத்து உலகிற்குள் பிரவேசித்தேன். என்னுடைய அரசியல் பயணம் 1947ஆம் ஆண்டின் இறுதியில் ஆரம்பமானது. இலக்கிய பயணம் 1957இல் ஆரம்பமானது. நான் பாடசாலையில் படிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை தனியாக இயங்கியது கிடையாது. எப்பொழுதும் கூட்டாகத்தான் இயங்கி வந்துள்ளேன். கூட்டாக இயங்கினால் தான் உருப்படியாக எதனையும் சாதிக்க முடியும் என்று அனுபவரீதியாக நான் கண்டுணர்ந்தவன். படிக்கும் பொழுது எனக்கு சிறந்த நண்பர்கள் கிடைத்தனர். எந்த வேலையானாலும் நாம் கூட்டமாகத்தான் செயற்படுவோம்.

1957ஆம் ஆண்டே எனது முதலாவது சிறுகதை படைப்பு ஈழநாடு வாரப்பதிப்பில் வெளியானது. இந்த முதல் படைப்புக்கு நான் அந்த பத்திரிகை ஆசிரியரால் பாராட்டு பெற்றேன்.அதனை தொடர்ந்து அவரது ஊக்குவிப்பினால் தொடர்ச்சியாக எழுத்தளனானேன். கவிஞன் இ.நாகராஜன் என்ற எனது அமைப்பைச் சேர்ந்தவர் ‘தமிழர்’ என்ற பத்திரிகையை நடத்தினார். இது வாரப்பத்திரிகையாகும். இதில் எழுதுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க எழுத ஆரம்பித்தேன். சுமார் 12 சிறுகதைகளை எழுதினேன.

எனக்கு விருப்பமான தொழில் ஆசிரியர் தொழில். ஆனால், விவசாயம் செய்வது எனது விதியானது, ஆசிரியர் தொழிலை எடுப்பதற்கு பலமுறை முயற்சித்தும் கிடைக்கவில்லை. பட்டதாரியாக இருந்தும் சில,பல காரணங்களால் எனக்கு ஆசிரியர் தொழில் கிடைக்காமலே போய்விட்டது. கல்கத்தாவில் சென்று பட்டப்படிப்பை பூர்த்தி செய்து வந்தேன். ஆனால், முயற்சித்தும் தொழில் கிடைக்கவில்லை. எனது தந்தைக்கு அது பெரும் கவலை. அதன் பின்னரே நான் அரசியலுக்குள் நுழைந்தேன். என்னுடைய எழுத்து அரசியலில் இருந்தே பிறக்கின்றது.

நான் ஒரு விவசாயியின் மகன் என்ற ரீதியில் தொழிலாளர் சார் விடயங்களை எனது எழுத்தில் உள்வாங்கினேன் தொழிலாளர் சார் விடயங்களின் உணர்வுகளே தனக்கு அதிகமாக இருந்தது. அதில் முதலாவதாக எடுக்கப்பட்டது விவசாயிகளை மையப்படுத்தி எழுதப்பட்டதே ‘மேடும் பள்ளமும்’ எனும் சிறுகதை தொகுதி. எனது இலக்கியத்துக்கு அரசியலே தலைமை தாங்கியது.

சமூக மாற்றத்தை அரசியல் போராட்டங்கள் மூலம்தான் ஏற்படுத்த முடியும் என்பதையும் உணர்ந்தேன். சரியான அரசியல் களத்தைத்தேடி அலைந்த எனக்கு கம்யூனிஸ்ட் இயக்கம் கைகொடுத்தது. நாற்பதுகளின் இறுதிக்கால கட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்தேன். நான் மாணவனாக இருந்த காலத்தில் என் பேரன்பிற்குரிய ஆசிரியர் நீர்வேலி எஸ்.கே. கந்தையா ஆங்கில இலக்கியத்திலும் மார்க்ஸிசத்திலும் எனக்கு ஆர்வத்தையூட்டி, என் அறிவு வளர்ச்சிக்கு வழிவகுத்தார்.

அதேவேளை, கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த தோழர் கார்த்திகேசன் மார்க்ஸிசம் பற்றிய தெளிவை ஏற்படுத்தினார். இவ்விரு ஆசான்களது சரியான வழிகாட்டுதலும் இந்த சமூகத்தை மாற்றி அமைப்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களும் எனக்கு உறுதியான அரசியல் தளத்தை இட்டன.

புரட்சியின் தொட்டில் என்று கூறப்படுகின்ற கல்கத்தாவிற்கு நான் சென்ற பின் வங்காளத் தொழிலாளி வர்க்கத்தின் தீவிர போராட்டங்களிலிருந்தும் கலை , இலக்கிய இயக்கத்தின் செயற்பாடுகளிலிருந்தும் நான் பெற்ற புரட்சிகர உணர்வும் அனுபவங்களும் நான் படைப்பிலக்கிய களத்திற்குள் பிரவேசிக்க உந்துதலாயிருந்தன.

இக்கால கட்டத்தில்தான் நான் மார்க்ஸிம் கார்க்கி, முல்க்ராஜ், ஆனந்த், கே..ஏ. அப்பாஸ், பிரேம்சந், கிஷன்சந்தர், சரத்சந்ர சட்டர்ச்சி, மாணிக் பந்தோபாந்யாய, தரசங்கர் பாணார்ஜி, விபூதிபூஷன் பர்ணார்ச்சுஜி ஆகியோரது படைப்புகளை ஆங்கிலத்தில் பார்த்தேன். நான் முதல் முதல் படித்த சிறுகதைத் தொகுப்பு புதுமைப் பித்தன் கதைகள், அத்துடன் சிதம்பர ரகுநாதன் தமிழில் மொழிபெயர்த்த மார்க்ஸிம் கார்க்கியின் தாய் என்ற படைப்பு தான் நான் படித்த முதல் நாவல். எனது படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பெரும் உந்துதலாக இருந்தது.

ஐம்பதுகளின் இறுதியில் இலங்கை எழுத்தாளர் சங்கம் என்ற ஒரு அமைப்பு சுவாமி விபுலானந்தர் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த அமைப்பு சிறிது காலம்தான் செயற்பட்டது. இச்சங்கத்தின் இணைச் செயலாளர்களில் ஒருவரான டாக்டர் சரத் சந்ரா, கல்வி கற்க லண்டன் சென்றபின் இச்சங்கம் செயலிழந்தது. அறுபதுகளின் முற்பகுதியில் இச் சங்கம் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற பெயருடன் புனரமைக்கப்பட்டது.

முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அதன் குறிக்கோள்கள் பற்றி …

இலக்கியத்தை மக்கள் மயப்படுத்தல் மக்களை இலக்கிய மயப்படுத்தல், அரச, இன, மத, சாதி ஆகிய சகலவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடுதல், தொழிலாளர், விவசாயிகள், உழைக்கும் வெகுஜனங்கள் அனைவரையும் ஓரணியில் திரட்டி நிலப் பிரபுத்துவத்தின் எச்ச சொச்சங்கள், அனைத்தையும் துடைத்தெறிதல், முதலாளித்துவத்துக்கும் ஏகாதிபத்தி யத்துக்கும் எதிராகப் போராடுதல், சுரண்டலும் சூறையாடலுமற்ற ஒரு சோஷலிஸ சமுதாயத்தை அமைத்தல் ஆகியவைதான் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் குறிக்கோள்களாகும்.

இலக்கிய மாநாடுகள், விழாக்கள், கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், செயலமர்வுகள் போன்ற இலக்கியச் செயற்பாடுகளை நடத்தி பல அரிய சாதனைகளைப் புரிந்தது. ஒவ்வொரு மாதமும் ஒரு கலை இலக்கிய நிகழ்ச்சியை 2006 ஆம் ஆண்டிலிருந்து இ.மு.க.இ. மன்றம் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றது.

அரசியல் எல்லாவற்றிற்கும் தலைமை தாங்குகின்றது. இதற்கமைய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் பிரதிபலித்தது. இதனால் சங்கத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்தன. இச்சங்கத்தைப் புனரமைக்க சில மூத்த முற்போக்கு எழுத்தாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டனர். இம்முயற்சிகள் பலனளிக்கவில்லை. காலத்தின் தேவை கருதி சில மூத்த முற்போக்கு எழுத்தாளர்களால் இலங்கை முற்போக்குக் கலை இலக்கியப் பேரவை அமைக்கப்பட்டது.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நிறைவேற்ற வேண்டிய வரலாற்றுக் கடப்பாடுகளை இலங்கை முற்போக்குக் கலை இலக்கியப் பேரவை கையேற்று நிறைவேற்றுமுகமாக அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறது.

சிறிது காலத்தின் பின்னர் 2002 முற்பகுதியில் நண்பர் சமீமின் சர்வதேச பாடசாலையில் நாங்கள் கூடினோம். இக்கூட்டத்தில் சமீம், நான், கவிஞர் ஏ. இக்பால், களனி சஞ்சிகை ஆசிரியர் சண்முகம் சுப்பிரமணியம், சிவா சுப்பிரமணியம், கே. சோமசுந்தரம், எம். குமாரசாமி ஆகியோர் சந்தித்தோம். முஹம்மது சமீம் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

ஏற்கனவே இரண்டு தடவைகள் கூட்டம் கூட முயற்சித்து அது கைகூடாமை பற்றி நான் விளக்கினேன். பின்னர் இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பை இயக்குவதற்கு ஐவர் கொண்ட ஒரு செயற்குழு அமைக்கப்பட்டது. காலகதியில் க. சிவபுத்திரன், சுமதி குகதாசன், செல்விகள், றின்சா மொஹமட், தித்தலாவை ரிசானா, , எஸ். சதானந்தம் ஆகியோர் எம்முடன் இணைந்தனர். பின்னர் இராசரத்தினம், தர்மலிங்கம் அருளானந்தம், கருணைநாதன், ஆகியோரும் உள்வாங்கப்பட்டனர். இவர்கள் எமது பல்வேறு செயற்பாட்டுக் குழுக்களில் பொறுப்பாயிருந்து செயற்படுகின்றனர்.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஈழத்து முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் ஒரு மைல்கல் எமது மன்றத்தின் கலை இலக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் கொழும்பு இல. 6, தர்மராம வீதியிலமைந்துள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்தில் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. எமது நிகழ்வுகள் இந்த கேட்போர் கூடத்தில் எதுவித தங்கு தடையுமின்றி நடைபெறுவதற்கு இந்த நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி செல்வி திருச்சந்திரனும், இந்நிறுவனத்தின் பணியாளர்களும் பூரண ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கி வருகின்றார்கள்.

இலக்கிய உலகில் மறக்க முடியாத விடயம்..

எனது முதலாவது சிறுகதைத் தொகுதி 1961 ஆம் ஆண்டு சிறந்த சிறுகதை தொகுதியாக அவ்வாண்டின் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிகிறேன். ஆனால், அன்றைய சாஹித்திய குழுத் தலைவரான ஒரு பேராசிரியர் ‘சிறுகதை என்பது ஒரு இலக்கிய வடிவம் அல்ல அதற்குப் பரிசு கொடுக்க வேண்டியது அவசியமில்லை’ எனத் தடுத்துவிட்டதாகத் தெரிகிறது. அந்த ஒரே வருடம் மட்டும் சிறுகதைக்கென சாஹித்தியப் பரிசு வழங்கப்படவில்லை. இதனால் சிறந்த சிறுகதைத் தொகுதியாக பரிசிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டும் பரிசு கிடைக்காமல் போய்விட்டது. இது ஆச்சரியமான செய்தி மட்டுமல்ல. பரிசளிப்புகளின் போது திறமைகளைவிட வேறு விடயங்களும் கவனத்தில் எடுக்கப்படுகின்றன. தனிப்பட உள்நோக்கம் கொண்ட செயற்பாடுகளுக்கும் குறைவில்லை என்று உணர்ந்தேன். நான் ஒரு போதும் பரிசுகளைத் தேடி ஓடியதில்லை. ஒரு எழுத்தாளனுக்கான அங்கீகாரம் மக்களிடம் இருந்தே வரவேண்டும்.

உங்களது எழுத்துக்களில் எப்படி போராட்ட வடிவங்களும் இருக்கின்றன?

ஆரம்ப கல்வியைப் பிறப்பிடத்தில் கொண்ட நான் பட்டப்படிப்பை மேற்கொள்ள கல்கத்தா சென்றேன். அங்கு படிக்கும் போது மாணவர் எழுச்சிப் போராட்டங்களில் பங்கு பற்றி அடக்குமுறை எதிர்ப்பு, மக்கள் எழுச்சி, போராட்டம், போன்றவற்றில் நல்லதொரு அனுபவமும் கிடைத்தது. அத்துடன் அங்கு கற்கும் காலத்தில் ஆங்கிலம் முதல் இந்தியாவின் பல்வேறு மொழி இலக்கியங்களைப் படிக்கும் வாய்ப்பும் கிட்டியது. இவற்றை கற்பதனூடாக நவீன இலக்கியங்கள் பற்றி தெரிந்துக்கொள்ள வாய்ப்பாகவும் இருந்தது. இதுவே பிற்காலத்தில் எனது எழுத்தின் உயிர் ஓட்டத்துக்கும் காரணமாக அமைந்துவிட்டது.

நீங்கள் எழுதிய சிறுகதை தொகுதிகள் பற்றி…?

‘பாசம்’ எனது முதல் சிறுகதை. இது 1959 இல் புனையப்பட்டது. ‘மேடும் பள்ளமும்’ எனது முதலாவது சிறுகதைத் தொகுதி. இத்தொகுதி 1961 ஆம் ஆண்டில் வெளிவந்தது. பாதை, வேட்கை ஆகிய எனது இரண்டு சிறுகதைத் தொகுதிகள் பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர், உரிமையாளர், நண்பர் சிறீதர்
வெளியிட்டுள்ளார். ஈழத்து முற்போக்குச் சிறுகதைகள் என்ற 25 கதைகள் அடங்கிய தொகுதியையும் முற்போக்கு இலக்கிய எழுச்சி நான்கு முன்னோடி எழுத்தாளர்கள் என்ற இ.மு.க. மன்றத்தின் இருநூல்களும் பூபாலசிங்கம் புத்தகசாலையின் ஆதரவுடன் வெளியிடப்பட்டுள்ளன. இதுவரையில் 11 நூல்களை வெளியிட்டுள்ளேன்.

முற்போக்கு இலக்கியத்தினுடைய போக்கு இப்போது எப்படி இருக்கின்றது?

முற்போக்கு இலக்கியம் என்பது மக்கள் இலக்கியம். மக்களின் பிரச்சினைகள், போராட்டங்கள் என்பவற்றை பிரதிபலிப்பதாகவே முற்போக்கு இலக்கியம் இருக்கின்றது. வர்க்க அடிப்படையிலேயே இந்த இலக்கியம் அமைந்திருக்கின்றது. ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் இயங்காமல் இருந்த இந்த இலக்கியம் தற்போது இயங்குகின்றது. வர்க்கப்போராட்டம் இருக்கும் வரைக்கும் இந்த முற்போக்கு இலக்கியமும் இருந்துகொண்டிருக்கும்.. எமக்கு பின்னர் இப்போது தொடர்ந்து வரும்மு ற்போக்கு இலக்கிய எழுத்தாளர்கள் எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக இதனை முன்னெடுத்துச் செல்வார்கள்.

இன்றைய இளம் தலைமுறையினருக்கு நீங்கள் கூற விரும்புவது?

வாசிப்பு இப்போது மிகவும் குறைந்துள்ளது. எங்களுக்கு வாசிக்காமல் இருக்க முடியாது. இன்றைய தலைமுறையினரிடம் வாசிப்பு குறைவு. ஒரு எழுத்தாளர் எனும் போது அவர் வாசிப்பை நேசிப்பவர்களாக இருக்க வேண்டும். இன்றைய இளம் எழுத்தாளர்களை பார்க்கும் போது கவலையாக இருக்கின்றது. வாசிக்காமல் எழுதுகின்றார்கள் வெறும் கற்பனை எழுத்துக்களாகவே இருக்கின்றது. என்னிடம் பல சிறுகதைகள் திருத்துவதற்கு வரும் அதனை வாசித்து நான் கவலையடைந்திருக்கின்றேன். எழுத்து என்பது ஒரு தவம். அதனை சரியாக செய்ய வேண்டும்.

நேர்கண்டவர் : ஜீவா சதாசிவம்
2017.11.25

“இனவெறி தெற்கைப் போலவே வடக்கிலும், கடும்போக்கைக் கொண்டிருந்தது!”

ஒரு பொதுவுடமைவாதியாக, இதுவரை நீங்கள்
எதையெல்லாம் எட்டியிருப்பதாக திருப்தியடைகிறீர்கள்?

முழுமையாக இல்லையென்றாலும் பொதுவுடமைவாதிகள் நடத்திய தொடர் போராட்டங்கள் இலங்கையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஒடுக்குமுறையும் சாதி பேதமும் தம்வீரியத்தை இழந்துள்ளன. தொழிலாளர் நல உரிமைகள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. சுரண்டும் வீதம் குறைந்திருக்கிறது. விவசாயிகள் நலன் பேணப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படை மாற்றங்கள் அனைவருக்கும் நன்மையளிப்பவையே.

ஆனாலும், ‘இலங்கையில் பொதுவுடமை’ இதுவரை வெற்றிபெறவில்லையே!?

எந்தக் கோட்பாடும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதல்லவே. பொதுவுடமைக் கட்சிக்குள் இதுவரை ஏற்பட்ட பல்வேறு பிளவுகளை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் இதைக் கேட்கக்கூடும். ஆனால், அதன் வளர்ச்சி கண்கூடாகத் தெரியாமல் இருக்கிறது. கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு வேறு கட்சிகள் தோற்றம் பெற்றாலும் அவர்களும் பொதுவுடமை கொள்கையையே கொண்டிருக்கிறார்கள். இதனை வைத்துப் பார்த்தால் பொதுவுடமை கொள்கை வெற்றியடைந்திருக்கிறது. அதன் தோற்றநோக்கம் பின்னடைவை சந்திக்கவேயில்லை என்பதே உண்மை. எதிர்காலத்தில் இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே பொதுவுடமைவாதம்தான் பரவும் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும். அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு விட்டதை அவதானிக்கிறேன்.

அது குறித்து சற்று விரிவாகக் கூறுங்கள்.

பொதுவுடமை நாடுகளில் இது குறித்து இன்னமும் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பொதுவுடமைவாதக் கல்வியில் இளைஞர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுகிறார்கள். இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பொதுவடமைக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுகள் அல்லது உடைவுகளுக்கான காரணங்களையும்கூட பாடமாகக் கற்றுக்கொண்டு அவர்கள் சிறந்த தலைவர்களாக உருவாவார்கள்.

சரி உங்கள் எதிர்பார்ப்பு அல்லது நம்பிக்கையுடன் உடன்பட்டுக் கேட்கிறேன்… இனஇ மத பேதம் கடந்து பொதுவுடமையின்பால் இளைஞர்களை விரைந்து ஈடுபடுத்த யார் என்ன செய்தால் தகும்?

சாத்தியமான ஒவ்வொரு நபரும் உழைப்பில் ஈடுபடத் தயாராகவேண்டும். இதற்கு ஸ்தாபன ரீதியாக மக்கள் திரட்டப்படவேண்டும். அவர்கள் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும். சாத்தியமான ஒவ்வொரு மனிதனும் உழைப்பதில் கவனம் செலுத்தினால் உருப்படியான எண்ணங்கள்தான் தோன்றும். இன மத பேதம் உள்ளிட்ட முரண்பாடான சிந்தனை தோன்றாது. அவ்வாறு ஓன்றுபடும் சமூகத்தினால் பெறக்கூடிய இந்த பொருளாதார வளர்ச்சி சமூகத்தையும் நாட்டையும் விரைந்து முன்னேற்றும். அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி அனைவரையும் உந்திச் செல்லும். வேலைவாய்ப்பு பெருகும். எனவே மனித மனங்களை செம்மைப்படுத்த தொழில்தான் மிகச்சிறந்த ஊக்கி என்பதை ஆள்பவர்களும் ஆளப்படுபவர்களும் ஒருசேர மனதில் கொண்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும்.

இலங்கையில் ‘விபவி’ மாற்று கலாச்சார மையத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளீர்கள். இந்த அமைப்பு ஏன் தொடங்கப்பட்டது? அது அதன் இலக்கை எட்டுவதற்குள் ஏன் மூடப்பட்டது?

தமிழ் சிங்கள இலக்கியவாதிகளை ஒன்றிணைத்து இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் மூலம் ‘இலக்கியம் சமூகத்திற்காகவே’ என்பதை அழுத்தி உரைத்தோம். முதல்படியாக தமிழ் சிங்கள பாடசாலை மாணவர்களுக்கு கலை இலக்கியப் பயிற்சி அளித்தோம். அவர்களின் படைப்புகளை சமூகம் இலகுவில் புரிந்துகொள்ளவேண்டும் பேதம் களைந்து அனைவரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும். என்பதில் கவனமாக இருந்தோம். குறிப்பாக பின்தங்கிய மாவட்ட மாணவர்கள் மீதே அதிக கவனம் செலுத்தினோம். அதில் வடக்கு கிழக்கு தவிர்ந்த பிற மாவட்டங்களைச் சேர்ந்த சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் பங்குபற்றி பயன்பெற்றனர். ‘விபவி’ என்ற பெயரில் ஒரு இலக்கிய மடலையும்கூட நடத்தினோம். ஆனாலும் நிதி உள்ளிட்ட சில பிரச்சினைகளால் விபவியின் இயக்கம் 1997 இல் முற்றாக நின்றுபோனது.

உங்கள் நோக்கில் பார்த்தால் ‘விபவி’ தொடர்ந்து இயங்கியிருந்தால் மூவின இளைஞர்களுக்கும்இ அவர்கள் மூலம் சமூகங்களுக்கும் இடையே ஓரளவேனும் நல்லிணக்கம் ஏற்பட்டிருக்குமோ?

நிச்சயமாக. இன முரண்பாடுகளை இலக்கியத்தின் வழிநின்று தீர்ப்பதே விபவியின் முதல் நோக்கமாக இருந்தது. ஏனென்றால் இனவெறி தெற்கைப் போலவே வடக்கிலும் கடும்போக்கைக் கொண்டிருந்தது. இதை யாராலும் மறுக்கமுடியாது. இனங்களுக்கிடையிலான பரஸ்பர புரிதலுக்கு கலை இலக்கியங்கள் வழிவகுக்கும் என்பது யதார்த்தம். ஆனால் அப்படியொரு புரிதல் ஏற்படக்கூடாது என்பதற்காகவே ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் கலையோ இலக்கியமோ கட்டாய பாடம் ஆக்கப்படவில்லை. இது அவருடைய திட்டமிடல். மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவல் உலகளவில் ஏற்படுத்திய மாற்றத்தை அறிவீர்கள். இளைஞர்களை எது நோக்கியும் இலகுவாக திசை திருப்ப முடியும். ஆனால் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் யாரும் அனைவருக்கும் பொதுவான நலன் கருதி இளைஞர்களை இயக்குவதில்லை. இனம் அல்லது மதம் சார்ந்துதான் இளைஞர்கள் இயக்கப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் விளைவுகள் துர்லபமானவை. இந்த நிலை மாறினாலே எல்லாம் சரியாகிவிடும்.

பொதுவுடமையைத் தாண்டி உங்களால் இலக்கியம் எழுதமுடியாது என்கிற விமர்சனத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா?

இது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையும் நேர்மையுமான இந்தக் கருத்தை உளப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். நான் தேர்ந்தெடுத்த பாதையிலிருந்து இன்னமும் விலகாமல் செல்கிறேன் என்பதற்கான அங்கீகாரமல்லவா இது.

ஈழத்தில் சமகால படைப்பாளிகளுடைய எழுத்துக்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

விருதுக்காக எழுதுகிறார்கள். அது கிடைப்பதற்காக, புறக்கதவு வழியாகச் செல்கிறார்கள். கிடைத்ததும் காணாமல் போய்விடுகிறார்கள். கவிதை கட்டுரை சிறுகதைஇ நாவல் என்று அனைத்துப் பிரிவிலும் ஒருவர் தொடர்ந்து சாகித்திய விருது பெற்றார். அதன் பிறகு அவரைக் காணவில்லை. தற்போது எழுதிக்கொண்டிருக்கிற பெரும்பாலான இளைஞர்களுக்கும் கூட விருதே நோக்கம். சமூக அக்கறையுடன் யாரும் எழுதுவதாக எனக்குத் தெரியவில்லை.

விருதுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தவர் நீங்கள். உங்களுக்கு விருது அறிவிக்கப்பட்டபோது அதை எதிர்க்காமல் பெற்றுக்கொண்டீர்களே.?

நான் இந்த விருதுக்காக விண்ணப்பிக்கவில்லை. விருதுத் தெரிவுக்குழுவில் இருந்தவர்கள் யார் என்பதையும் அங்கீகரித்தவர்கள் யார் என்பதையும் அறிந்துகொண்ட பின்னர்தான் இந்த விருதினைப் பெறத் தீர்மானித்தேன். அந்தக் குழுவில் சிங்கள தமிழ் முஸ்லிம் புத்திஜீவிகள் பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி சாமானிய வாசகர்களும் இருந்திருக்கிறார்கள்.

ஈழத்தில் பொதுவுடமை முற்போக்கு என இரண்டு தளங்களிலும் ஒருசேரப் பயணித்த இலக்கியகாரர்களுடனும் நீங்கள் சுமுகமான நட்புறவைக் கொண்டிருக்கவில்லை. இதுபற்றி ‘நினைவுகள் அழிவதில்லை’ என்ற உங்கள் நூலில் நீங்களே குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது குறித்து… ?

ஈழத்து இலக்கியவாதிகளில் பலர் பொதுவுடமைக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டே இலக்கியம் படைக்கத்தொடங்கியவர்கள். ஆனால் பின்னாளில் அவர்களில் பலர் அதிகாரத்தின் பின்னாலும் பணம் புகழின் பின்னாலும் சென்றதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இவ்வாறானவர்களுடன் ஒருபோதும் என்னால் உடன்படமுடியாது.

அதிகாரமும் பணமும் இல்லாமல் இலக்கியத்தை மக்களிடம் கொண்டுசேர்ப்பதில் இடர்ப்பாடுகள் உள்ளது வெளிப்படைதானே.

பணத்திற்கு விலைபோகிறவர்களாலும் அதிகார அடிமைகளாலும் சமூக நலன்கொண்ட இலக்கியத்தை எழுத்தை மக்களிடம் கொண்டுசேர்க்க முடியாது.

நீங்கள் கடவுள் மறுப்பு கொள்கையாளனா? பொதுவுடமைவாதிக்கு மத ஈடுபாடு இருக்கக்கூடாது என்றா கருதுகிறீர்கள்?

நான் கடவுளை மறுக்கவில்லை. பொதுவுடமையாளனுக்கு பக்தி இருக்கக்கூடாது என்றும் கருதவில்லை. பொதுவுடமை ஒரு கோட்பாடு என்பது போல் மதமும் ஒரு கோட்பாடே. ஒருவர் இரண்டு கோட்பாடுகளைப் பின்பற்றக்கூடாது என்பது எங்கும் விதிப்பல்ல. ஆனால் எனக்கு மதம் ஒரு அதிகார கட்டமைப்புடன் செயல்படும்போதுதான் பிரச்சினை எழுகிறது. அதனால் மதமோ அல்லது அதுசார்ந்த கடவுள் வழிபாடோ குறித்து எனக்கு அக்கறையில்லை. அவ்வளவுதான்.

இந்துசமயம் ஆழ வேரூன்றித் தளைத்த வடக்குப் பகுதியில் பிறந்து வளர்ந்து மிக நீண்ட காலமாக அங்கேயே வாழ்ந்தவர் நீங்கள். இந்த ‘அக்கறையின்மை’க்கு ஏதாவது காரணம் அல்லது சம்பவம் பின்புலமாக இருக்கிறதா?

மதம் தன்னிச்சையாக அன்றி அதிகார கட்டமைப்புடன் செயற்படும்போது முரண்பாடு ஏற்பட்டேயாகும். சிறு வயதில் கோயிலுக்குச் சென்றுவந்தவன்தான் நான். அறிவு தெளிந்த பராயத்தில் கோயிலில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளைக் கண்டு கொதிப்படைந்தேன். சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. அது மனுதர்மமோ மனுநீதியோ அல்ல என்பதை உணர மறுத்த பூசாரிகள் ஐயர்மார் மற்றும் கோயில் முதலாளிகளை வெறுத்தேன். இதைவிட முக்கியமாக எனக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்கள் பிராமணர்கள் மீது பெரும் வெறுப்பை ஏற்படுத்தியது. இதனால் கோயிலுக்குப் போவதை அறவே தவிர்த்தேன். இன்றுவரைகூட மத வழிபாட்டிடங்களில் ஐயர் மற்றும் பூசாரிகளால் பேதம் தானே பாராட்டப்பட்டு வருகிறது.

நீங்கள் குற்றம் சாட்டியவர்கள் அனைவரும் மத வழிகாட்டிகளே அன்றி மத ஸ்தாபகர்கள் அல்ல. அவர்களுடைய நடவடிக்கைகள் தவறு என்பதற்காக மனித மேம்பாட்டுக்காக உயர்ந்த கருத்துக்களைக் கொண்டிருக்கிற இந்து மதத்தை ஒட்டுமொத்தமாகப் புறந்தள்ளுவது சரிதானா?

அக்கறையின்மை புறந்தள்ளுவது ஆகாது. நான் பிறந்து வளர்ந்த மதம் பற்றி சிந்திக்க மறுக்கிறேன் அல்லது தேவையில்லை என்று விடுக்கிறேன். அறிவு தெளிந்து நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட பொதுவுடமைக் கொள்கைக்காகவே என் முழு நேரத்தையும் ஒதுக்க விரும்புகிறேன். ஆனாலும் மத வழிபாட்டாளர்கள் என் மதிப்புக்கு உரியவர்கள். அவர்களை நானும் என்னை அவர்களும் ஒருபோதும் தொந்தரவு செய்வதில்லை.

சரி அக்கறையில்லை அல்லது தேவையில்லை என்று நினைக்கிற ஒன்றைப் பற்றி கருதுகோள் கொண்டிருப்பது தவறா என்ன? நான் கேட்பது மதம் குறித்து நீங்கள் கொண்டிருக்கிற ஆணித்தரமான கருத்தை.

ஒவ்வொரு கோட்பாடும் அங்கீகாரம் பெற்றதுதான். எதை யார் வேண்டுமானாலும் ஏற்றுக்கொண்டு பின்பற்ற முடியும். இந்துமதம் என்றில்லை எல்லா மதங்களும் மனித மேம்பாட்டுக்கான கருத்துக்களையே கொண்டிருக்கின்றன. ஆனால் அதைக் கையில் எடுத்துக்கொள்கிற வழிகாட்டிகள் ஒருபோதும் அதன்பால் செயல்பட்டதில்லை. அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு பக்தனுக்கு உரிய முறையில் இவர்கள் வழிகாட்டியதில்லை. இந்த மதவாதிகளால் சமூகத்தில் படுமோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. வன்முறைகள் வெடித்திருக்கின்றன. இலங்கையில் பௌத்த மதம் என்ன செய்கிறது? சுதந்திரத்திற்கு முன்பு கிறிஸ்தவம் என்ன செய்தது? இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். என்ன செய்துகொண்டிருக்கிறது? உலகளவில் இஸ்லாம் மதத்தால் இஸ்லாமியர்கள் நிம்மதியாகவா இருக்கிறார்கள்? மதவாதிகளால் நன்மையை விட தீமையும் பேரழிவும்தான் ஏற்பட்டது ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும். இந்த இடைத் தரகர்களைப் புறந்தள்ளி மதக் கருத்துக்களை சுயமாக உள்வாங்கும் ஆற்றல் பெற்றீர்களானால் மன அமைதி கிட்டும்.

இதை அனுபவ ரீதியாக உணர்ந்தா கூறுகிறீர்கள்?

நிச்சயமாக. திருவாசகத்தை அடிக்கடி விரும்பிப் படிக்கிறேன். திருமந்திரம் மற்றும் திருப்புகழும் எனக்கு மனநிறைவைத் தருகின்றன. திருக்குறளில் சொல்லப்படாத ஏதாவதொரு விடயம் நம் வாழ்க்கையில் இருக்கிறதா என்ன?

ஆக, மதவாதிகள் மற்றும் மத வழிகாட்டிகளின்மீது வெறுப்படைந்த நீங்கள் ஒடுக்கப்பட்ட மக்களைக் காக்கத்தான் பொதுவுடமைக்குள் விரைந்து நுழைந்தீர்கள் என்று கொள்ளலாமா?

நிச்சயமாக. கண்ணுக்கு முன்னால் நடைபெற்றுக்கொண்டிருந்த ஒடுக்குமுறைகளையும் பாரபட்சங்களையும் களையவே என்னை பொதுவுடமைக்குள் ஈடுபடுத்திக்கொண்டேன். அதுவே எனக்கு முழுநிறைவைத் தந்தது. தந்துகொண்டும் இருக்கிறது.

நேர்கண்டவர் : லதா துரைராஜா
2018.10.21

Exit mobile version