கொரோனே கொள்ளை நோய் பரவலை தடுத்திருக்க முடியும். அதைத் தடுப்பதற்கான போதிய தகவல்களும், இருந்தன. உண்மையில் அக்டோபர் 2015 வாக்கிலேயே கொள்ளை நோய் மனித குலத்தின் மீது தாக்குதல் தொடுப்பதற்கு முன்னரே, அமெரிக்காவில் பெருமளவில் இவ்வகை கொள்ளை நோய் தாக்குதல் குறித்து, நலப் பாதுகாப்பிற்கான ஜான் ஹாப்கின்ஸ் மையமும் உலக பொருளாதார மன்றமும், பில் & மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளையும் (World Economic Forum and the Bill & Melinda Gates Foundation) இணைந்து “2019ன் நிகழ்வு” என்ற தலைப்பில் நடத்திய ஆய்வு கருத்தரங்கில் உருவகப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் இது குறித்து ஒரு நடவடிக்கையுமில்லை. அதன் பின் கடுமையாகியுள்ள நிலவரங்களுக்கு, போதிய தகவல்கள் தெரிந்த பின்னரும், அதனைப் பற்றி கவலை ஏதுமின்றி, அலட்சியப்படுத்திய மக்களுக்கு துரோகமிழைத்த அரசு அமைப்புகளே காரணம்.
டிசம்பர் 31, 2019லேயே சீனா, உலக சுகாதார அமைப்பிடம் (WHO), நிமோனியா காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன், இதுவரை அறியப்படாத கிருமிகள் குறித்த தகவல்களை அளித்தது. ஒரு வாரம் கழித்து, சில சீன அறிவியலாளர்கள் கொரோனோ தொற்றுக் கிருமிகளை அடையாளம் கண்டனர். அதன் தொடர் சங்கிலிகள், விளைவுகள் குறித்தும், உலக நாடுகளுடன் தகவல் பரிமாறிக்கொண்டனர். அதனூடே, உலக சுகாதார அமைப்பிற்கு சீனா அளித்த அறிக்கைகளைப் படித்த கிருமியியல் வல்லுநர்களுக்கும், இதரர்களுக்கும், கொரோனோ தொற்றுக் கிருமி பற்றியும், அதனை கையாள வேண்டிய அவசரம் குறித்தும் தெரியும். அவர்கள் ஏதாவது செய்தார்களா? எல்லோருமில்லை. ஆனால் சிலர் செய்தார்கள்.
சீனா, தென் கொரியா, தைவான், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் சில நடவடிக்கைகளை மேற்கொண்டன. அந்நாடுகள்தான் கிருமி தாக்குதலால் உண்டான முதல் கட்ட நெருக்கடியை பெருமளவு வகைப்படுத்தி சந்தித்து கட்டுக்குள் கொண்டுவர முடிந்துள்ளது.
மேற்குலக நாடுகள் இதனை எவ்வாறு சந்தித்தன? ஐரோப்பாவால், ஓரளவிற்கு இந்நெருக்கடியை எதிர்கொள்ள முடிந்துள்ளது. ஜெர்மனி, தன்னிடமுள்ள நோய் அறிதிறனளவை முழுக்க தன் நாட்டுக்கு மட்டும் பயன்படுத்தியுள்ளது. பிற நாடுகளுக்கு உதவவில்லை அல்லது உதவிட இயலவில்லை. ஆனால் குறைந்தளவு அந்நாட்டைப் பொறுத்தவரையிலாவது, காணக்கூடிய முறையில் ஓரளவிற்கு கட்டுப்படுத்தியுள்ளது.
பிற நாடுகள் அலட்சியமாய் இப்பிரச்சினையை ஒதுக்கி வைத்தன. இதில் மோசமான நாடாக பிரிட்டனும், மிக மிக மோசமான நாடாக அமெரிக்காவும் திகழ்கின்றன. நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் என்பது அமெரிக்க அதிபரின் நிலைப்பாடாக உள்ளது. ஒரு நாள் “நெருக்கடி ஒன்றும் இல்லை. இது ஃபுளூவைப் போன்றதுதான்” என்கிறார். அடுத்த நாள் “இது கடுமையான நெருக்கடி. எனக்கு இதைப் பற்றி முழுதும் தெரியும் என்கிறார்.” அதற்கடுத்த நாள் “நாம் இயல்புக்கு திரும்ப வேண்டும். தேர்தலில் நான் வெற்றி பெற வேண்டும்” என்கிறார். இவரைப் போன்ற நபர்களின் கையில் இன்று உலகம் இருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. 05.03.2020 அன்று “இந்த வாரம் மிகக் கொடுமையானது. மேலும் நிறைய இறப்புகளை அமெரிக்கா சந்திக்க வேண்டியிருக்கும்” எனச் சொல்கிறார்.
அமெரிக்கா இன்று கிருமி தொற்று அதிகம் உள்ள நாடு. 400549 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இறந்தவர்கள் எண்ணிக்கை 13000த்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. சீனத்தில் தொடங்கி இன்று உலகம் முழுவதும் 180 நாடுகளில் 14 லட்சம் பேருக்கு தொற்று பரவியுள்ளது, 83000க்கு மேல் தொற்று தாக்கி இறந்துள்ளனர். சமூக எதிர்நிலை கோமாளி (sociopathic buffoon) என டிரம்பை நோம் சோம்ஸ்கி விமர்சித்துள்ளார். கொரோனோ கிருமி ஆபத்தானதுதான். ஆனால் இதைவிட மிகப்பெரிய பயங்கரம் உலகை நெருங்கி வருகிறது – மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்த அனைத்தையும் மீறிய, அழிவின் விளிம்பை நோக்கி இன்று நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். டொனால்ட் ட்ரம்பும், அவருடைய கூட்டாளிகளும் உலகை படுகுழியில் தள்ள ஓட்டத்தில் முந்தி நிற்கிறார்கள். உண்மையில் உலகம் சந்திக்கப் போகும் மிகப்பெரிய ஆபத்துக்கள் இரண்டு, வளர்ந்து வரும் அணு யுத்த சூழல், ஒன்று. இரண்டாவது வெப்பமயமாகும் உலகின் சுற்றுச் சூழல் விடுக்கும் கடும் எச்சரிக்கை ஆகும்.
கொரோனோ கிருமித் தாக்குதல் அச்சுறுத்தும் விளைவுகளை உண்டாக்கும். ஆனால் அதிலிருந்து உலகம் மீண்டு விடும். ஆனால் குறிப்பிட்ட இரண்டு ஆபத்துக்களிலிருந்தும் உலகம் மீள முடியாது. அனைத்தும் முடிந்து விடும்.
கடுமையான கொரோனோ தொற்றினால் 3900 பேருக்கு மேல் பலிகொடுத்து,கிருமித் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர போராடும் ஈரான் நாட்டின் மீது, இந்நிலையிலும், அந்நாட்டை தண்டிக்கும் வகையிலான கொடுமையான பொருளாதாரத் தடையை நீட்டித்து, அந்நாட்டு மக்களுக்கு கொடுந்துன்பங்களுக்கு ஆளாக்கியுள்ள ட்ரம்ப்பின் கொடூரம் வன்மையான கண்டனத்திற்குரியது எனக் கூறியுள்ளார் நோம் சோம்ஸ்கி.
பேரழிவுண்டாக்கும் பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதிக்கும் பொழுது -அது மட்டுமே அவ்வாறு தடை விதிக்க முடியும் , பிற நாடுகள் அதை பின் தொடர வேண்டும்… அமெரிக்காதான் உலகம் முழுவது நாட்டாமை. செய்யும் எஜமான். அப்படி பின் தொடராத நாடுகள் உலக நிதியமைப்பிலிருந்து நெட்டித் தள்ளப்படும் என விளாசுகிறார் சோம்ஸ்கி.
கொரோனோ கிருமித் தொற்று ஏன் உலக நெருக்கடியாக மாறியது?
உலகச் சந்தையின்… வணிகமுறையின் மாபெரும் தோல்வி… பின்னடைவு இது. இதன் கரு காட்டுமிராண்டித்தனமாக தீவிரமாக செயல்படுத்தப்பட்ட புதிய தாராளமயக் கொள்கைகளால் அதிகரித்த சந்தையின் வணிகத்தின் ஆழமான, சமூகப் – பொருளாதார விளைவுகளில் உயிர் கொண்டுள்ளது.
புதிய தாரளமயக் கொள்கைகளுக்கு எதிராக வாதாடும் அதே நேரத்தில்,எதிர்காலத்தின் மீது நம்பிக்கைகொள்ள காரணங்கள் உண்டு என்கிறார் அவர். கொரோனோ கிருமித் தொற்றின், சாத்தியமான நேர்மறை விளைவு என்பது, மக்களை, எந்த மாதிரியான உலகை நமக்கு வேண்டும் என்பது குறித்து சிந்திக்க வைத்திருக்கிறது.
இந்த நெருக்கடி ஏன் உருவானது? கொரோனோ கிருமி நெருக்கடி எப்படி வந்தது?
கொள்ளை நோய்கள் தாக்குதல் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்னரே தெரிந்திருந்தும், அவைகள் குறித்து அலட்சியமான மதிப்பீடுகளே நிலவின. “சார்ஸ்” கொள்ளை நோய்க் கிருமியின் மாறிய வடிவக் கிருமிகள்கொண்ட, கொரோனோ கொள்ளை நோய் தாக்குதல் இருக்கக்கூடும் என்பது 15 ஆண்டுகளுக்கு முன்பே நன்கு தெரிந்திருந்தது.
அப்பொழுது சார்ஸ் கொள்ளை நோயை முறியடித்து கட்டுக்குள் வைக்க முடிந்தது.கிருமிகள் அடையாளங் காணப்பட்டு, வகைப்படுத்தப்பட்டன. தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டு சந்தையில் கிடைத்தது.
அப்பொழுதே. உலகம் முழுவதும் இருந்த மருந்து ஆய்வகங்கள்,ஆற்றல்மிக்க கொரோனோ கொள்ளை நோயிலிருந்து பாதுகாப்பதற்கான மருந்துகள் உருவாக்கி இருக்க முடியும். ஏன் அதனை பின்னர் செய்யவில்லை?
உலக மருந்து சந்தையை தனது கட்டுப்பாட்டுக்கள் வைத்திருந்த மருந்து உற்பத்தி ஆலைகள் என்பதே தவறுகளின் ஆரம்ப அடையாளம். கடல் கடந்த கழகங்களாக விளங்கிய தனியார் மருந்து உற்பத்தி ஆலைகள் என்ற கொடும் சர்வாதிகாரிகளிடம் நமது வாழ்க்கையை ஒப்படைத்திருந்தோம். பன்னாட்டு பெரும் மருந்து உற்பத்தி ஆலைகள் என்ற கார்ப்பரேட் முதலாளிகள் வசம் மருந்து உற்பத்தி முழுவதும் இருந்தது. ஆனால் மக்களுக்கு பொறுப்பான முறையில் பதிலளிக்கும் கடமை அவர்களுக்கில்லை. அவர்களுக்கு, மக்களை பெரும் அழிவிலிருந்து பாதுகாக்கும் தடுப்பூசி மருந்துகளை கண்டுபிடிப்பதைவிட புதிய அழகு கிரீம்களின் உற்பத்தியே கொழுத்த லாபம் தரக்கூடியதாயிருந்தது.
அமெரிக்கா இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டதை நினைவுகூறும் சோம்ஸ்கி அன்று அரசு நிறுவனம் கண்டுபிடித்த சால்க் தடுப்பூசியால் அந்நோய் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதையும் என்பதையும் கூறுகிறார். 1950களின் தொடக்கத்திலேயே அத்தடுப்பூசி கிடைத்தது என்பது குறிப்பிடத் தகுந்தது. காப்புரிமை எதுவுமில்லை. அனைவருக்கும் அம்மருந்து கிடைத்தது. இப்பொழுதும் அதேபோல் செய்திருக்க முடியும். புதிய தாராளமயக் கொள்கை எனும் பிளேக் போன்ற கொள்ளை நோய் அதனை தடுக்கிறது.
மருத்துவ ஊழியர்கள் கொரோனோ யுத்த முன்னணியில் பணிபுரிவதாகவும், ஐ.நா. பொதுச் செயலாளர், இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகின் முன் இருக்கும் பெரும் சவால் எனவும், போர்க்கால மொழி பயன்படுத்தப்படுவதைப் பற்றி கேட்டபொழுது, மக்களை அணிதிரட்ட இச்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன என்கிறார் நோம் சாம்ஸ்கி.
இக்கொள்ளை நோயை வெற்றிகொண்ட பின்னர் உலகத்தின் முன் இரண்டு தேர்வுகள் உள்ளன. அனைத்து வழிகளிலும் நிறுவப்படும் கொடும் சர்வாதிகார அரசுகள் இருக்க வேண்டுமா அல்லது மக்களின் தேவைகளை முழுமையான மனிதாபிமானத்தோடு அணுகி தீர்த்து வைக்கும், தனியார் லாப கொள்ளையை அனுமதிக்காத, அடிப்படையில் தீவிர மாற்றங்களுடன் புனரமைக்கப்படும் சமூக அமைப்பு வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என எச்சரிக்கிறார் சோம்ஸ்கி.
கொடும் சர்வாதிகாரத்தை செயல்படுத்தும் தீய அரசுகள் யாவும் புதிய தாராளமயக் கொள்கைகளுடன் இணக்கமாகவே செயல்படுகின்றன என்பதை எப்பொழுதும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
– மொழி பெயர்ப்பு : வைகறைச் செல்வன்
நன்றி : அல் ஜசீரா