–வெ.சந்திரமோகன்
கொரோனாவின் கொடும் யுகத்தில், சக மனிதர்கள் மீதான வெறுப்புணர்வும், இன துவேஷமும் வளர்ந்திருப்பது வேதனையளிக்கும் விஷயம். இனம், நிறம், மதம், பிராந்தியம், வர்க்கம் என்று பல்வேறு அடையாளங்களின் அடிப்படையில் சக மனிதர்களைச் சந்தேகிக்கவும், பழி தூற்றவும், புறக்கணிக்கவும் இந்தப் பெருந்தொற்று ஒரு வாய்ப்பாக அமைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. மக்களிடம் நிலவும் தவறான புரிதலும், வழிகாட்டும் பொறுப்பில் இருக்கும் அரசியல் தலைவர்களின் பொறுப்பற்ற தன்மையும் இதன் பின்னணியில் இருக்கும் முக்கியக் காரணிகள் எனலாம்.
பெயரிடுவதில் கவனம்
புதிதாக உருவாகும் தொற்றுநோய்களுக்குப் பெயர் வைக்கும் விஷயத்தில் 2015-ல் ஒரு முக்கிய முடிவை எடுத்தது உலக சுகாதார நிறுவனம். அதற்கு முன்னர் கண்டறியப்பட்ட மெர்ஸ் (Middle East Respiratory Syndrome), ஜிகா (Zika) போன்ற தொற்றுநோய்களுக்கு, அவை தோன்றிய பிரதேசங்களின் அடிப்படையிலேயே பெயரிடப்பட்டன. எனினும், அதன் விளைவாக எழுந்த சமூகப் பிரச்சினைகளைத் தவிர்க்கும் பொருட்டு, அந்த வழிமுறையை உலக சுகாதார நிறுவனம் கைவிட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் நோய்க்கு, ‘கோவிட்-19’ (COVID-19) என்று பெயரிட்டதன் பின்னணி இதுதான். வைரஸ் தோன்றிய இடத்தைச் சுட்டிக்காட்டாமல் வருடம் மட்டுமே இம்முறை குறிப்பிடப்பட்டது.
எனினும், இது சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய வைரஸ் எனும் செய்தி உலகின் எல்லா மூலைகளுக்கும் தெரிந்துவிட்டதால், சீனர்களும், சீனர்களைப் போன்ற உருவ அமைப்பு கொண்ட கிழக்கு ஆசிய, தென் கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் பல நாடுகளில் அவமதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஐரோப்பிய நாடுகள் முதல் ஆப்பிரிக்க நாடுகள் வரை, சீனர்கள் மீதான துவேஷம் வெளிப்பட்டதைப் பல சம்பவங்கள் காட்டுகின்றன.
சீண்டப்படும் சீனர்கள்
பிரிட்டன் போன்ற நாடுகளில் பிப்ரவரி மாதத்திலேயே சீன வம்சாவளியினர் மீதான அவதூறுகள் தொடங்கிவிட்டன. வெறுப்பு நிறைந்த வசவுகளைப் பொதுவெளியிலும், சமூகவலைதளங்களிலும் சீனர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது. அமெரிக்காவில் கரோனா வைரஸைப் பரப்புவது சீனர்கள்தான் என்று பரவிவரும் வதந்தியால், சீன வம்சாவளியினர் பல பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். பள்ளிக் குழந்தைகள் சக மாணவர்களால் ஏளனம் செய்யப்படுகிறார்கள்; தாக்கப்படுகிறார்கள்.
டெக்சாஸ் மாநிலத்தின் மிட்லாண்ட் பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில், ஆசிய அமெரிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரைக் கத்தியால் குத்திய இளைஞன், “அவர்கள் கொரோனா பரப்பும் சீனர்கள் என்று நினைத்து அவர்களைக் கொல்ல முயன்றேன்” என்று வாக்குமூலம் அளித்தான். தாக்குதலுக்குள்ளானவர்களில் இரண்டு வயது பெண் குழந்தையும் அடக்கம் என்பது, இந்த இனவெறியின் தீவிரத்தை உணர்த்துகிறது.
நாங்கள் எதிரிகள் அல்ல!
ஏற்கெனவே சீனா மீது கடும் அதிருப்தியில் இருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கொரோனா விஷயத்தில் சீனாவைச் சீண்டும் வகையில் அவ்வப்போது பேசிவந்தார். ‘சீன வைரஸ்’, ‘குங் ஃப்ளூ’ என்றெல்லாம் ட்ரம்ப் அரசு நிர்வாகம் பயன்படுத்திய பதங்கள் மிக மோசமான சம்பவங்களுக்கு வழிவகுத்தன. இதனால் மிகுந்த வருத்தமடைந்த அமெரிக்கவாழ் சீனர்கள் எழுதிய பகிரங்கக் கடிதம், ‘இன்டிபென்டன்ட் ட்ரிபியூன்’ (Independent Tribune) எனும் நாளிதழில் வெளியானது.
“அமெரிக்காவில்தான் பன்றிக் காய்ச்சல் பரவல் தொடங்கியது. ஆனால், அதற்கு ‘அமெரிக்கக் காய்ச்சல்’ என்று நாங்கள் பெயரிடவில்லை. எச்.ஐ.வி / எய்ட்ஸுக்கான சிறப்பான சிகிச்சைக்கு வித்திட்ட ஆராய்ச்சியை மேற்கொண்ட டாக்டர் டேவிட் ஹோ (Dr. David Ho) ஒரு சீனர்தான். ட்ரம்ப் அரசால் அவமதிக்கப்பட்ட டாக்டர் வெய்ஹோங் டான் எனும் சீன விஞ்ஞானி, சீனாவுக்குத் திரும்பி கொரோனா வைரஸுக்கான துரிதப் பரிசோதனை முறையை உருவாக்கியிருக்கிறார்” என்றெல்லாம் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தனர் சீனர்கள். அவர்களுடன் ஹிஸ்பானிக், கறுப்பின சமூகங்களைச் சேர்ந்தவர்களும் அந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டிருந்தனர். கடிதத்தில் இடம்பெற்றிருந்த, “நாங்கள் எதிரிகள் அல்ல” எனும் ஒரு வாசகமே, இந்தக் கொடுமையான சூழலை உணர்த்த போதுமானது.
அமெரிக்காவில் அடிமட்டப் பணிகளில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் கறுப்பின மக்களும் ஹிஸ்பானியர்களும்தான். பெரும்பாலானோரிடம் கார் இல்லாததால் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டிய நிலை, ஜன நெருக்கடி நிறைந்த குடியிருப்புப் பகுதிகளில் வசிக்க வேண்டிய கட்டாயம், போதிய பணம் இல்லாததால் கைக்கு எட்டாத சிகிச்சை என்று பல்வேறு காரணங்களால், கொரோனா தொற்றுக்கு இம்மக்களில் பலர் பலியாகிறார்கள். ஆக, வர்க்க வேறுபாடுகளும் இந்தப் பெருந்தொற்றின் பாதிப்பைப் பன்மடங்காக்குகின்றன என்பது புலனாகிறது.
சீனாவுக்குள்ளேயே பாரபட்சம்
இந்த வெறுப்புணர்வு சீனாவுக்கு வெளியில் மட்டுமல்ல, அந்த நாட்டின் பல பகுதிகளிலும் நிலவுவது மற்றொரு அவலம். கொரோனா வைரஸின் பிறப்பிடம் என்று கருதப்படும் வூஹான் நகரம், ஹூபேய் மாகாணத்தில் உள்ளது. வூஹானிலிருந்து பிற இடங்களுக்குக் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பின்னர், பிற பகுதிகளில் வசித்துவந்த ஹூபேய் மக்கள் கடும் வெறுப்புக்கு ஆளானார்கள்.
‘வூஹானிலிருந்து வந்தவர்களுக்கும், ஹுபேய் மாகாணத்திலிருந்து வந்த கார்களுக்கும் இங்கு அனுமதி இல்லை’ என்று எழுதப்பட்ட வாசகங்களைச் சீனாவின் பல இடங்களில் பார்க்க முடிந்தது. ஹூபேய் மாகாணத்தைச் சேர்ந்தவர்களின் அடையாள அட்டைகளில் இருக்கும் சுய விவரங்கள், தொலைபேசி எண்கள் விஷமிகளால் இணையத்தில் கசியவிடப்பட்டன. இதையடுத்து அம்மக்களை அழைத்து மிரட்டியவர்கள், அவதூறாகப் பேசியவர்கள் பலர். பல இடங்களில் அம்மக்கள் தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். தங்கும் விடுதிகளில் அவர்கள் தங்குவதற்கும் அனுமதிக்கப்படவில்லை.
பல்வேறு இனங்களுக்கும் பாதிப்பு
சமீபத்தில், சீனாவின் குவான்ஜோவ் நகரத்தில் நைஜீரியா, கென்யா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், மாணவர்களும் இன ரீதியாக அவமதிக்கப்பட்ட சம்பவங்கள் சர்ச்சையைக் கிளப்பின. பெரும்பாலான ஆப்பிரிக்கர்களுக்குக் கட்டாயமாகக் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பலர் தனிமைப்படுத்தப்பட்டனர். அந்நகரத்தின் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில், ‘இங்கு கறுப்பினத்தவர்களுக்கு அனுமதி இல்லை’ என்று நோட்டீஸ் ஒட்டப்பட்ட கொடுமையும் நடந்தது.
“ஆப்பிரிக்கர்களுக்குக் கட்டாயப் பரிசோதனை நடத்துவது, தனிமைப்படுத்துவது என்பன போன்ற நடவடிக்கைகளுக்கு அறிவியல் ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் எந்த அடிப்படையும் இல்லை. இது சீனாவில் வசிக்கும் ஆப்பிரிக்கர்கள் மீதான இன துவேஷம் என்றே கருத வேண்டியிருக்கிறது” என்று ஆப்பிரிக்க நாடுகளின் தூதர்கள் ஒன்றிணைந்து, சீன வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்கள்.
சுதாரித்துக்கொண்ட சீன அரசு, ‘சீனாவும் ஆப்பிரிக்கக் கண்டமும் நண்பர்கள்’ என்று சமாதானம் சொன்னாலும், அடிப்படையில் மக்களிடம் இனரீதியான வெறுப்பை அவ்வளவு எளிதில் தணிக்க முடியவில்லை.
கொரோனாவால் ஆயிரக்கணக்கானோரை இழந்திருக்கும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வெள்ளையினத்தவரும், பிற நாடுகளில் வெறுப்புணர்வைச் சந்திக்க நேர்ந்தது. “நம் நாட்டுக்கு வந்திருக்கும் மேற்கத்தியர்கள் அழுக்கானவர்கள். கொரோனா வைரஸைப் பரப்புபவர்கள்” என்று தாய்லாந்து சுகாதாரத் துறை அமைச்சர் அனுதீன் சார்ன்விராகுல் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். பின்னர் அதற்கு அவர் மன்னிப்பு கோரியது வேறு விஷயம். ஆனால், அந்நியர்களால் உள்ளூர் மக்களுக்குக் கொரோனா தொற்று ஏற்படுகிறது எனும் அச்சம் கலந்த வெறுப்புணர்வு உலகின் பல்வேறு மூலைகளிலும் பரவியிருக்கிறது என்பதை இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன.
இந்தியாவிலும் இன்னல்கள்
இந்தியாவுக்குள்ளேயே, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் இதுபோன்ற அவமதிப்புகளையும் தாக்குதல்களையும் சந்திக்க நேர்ந்தது. சீனர்களைப் போன்ற அவர்களின் தோற்றம்தான் அதற்குக் காரணம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
கொரோனா வைரஸ் பரவலுக்குக் குறிப்பிட்ட மதத்தினர்தான் முக்கியக் காரணம் என்று பரவிய வதந்திகள் வெறுப்புணர்வை வளர்த்ததைப் பார்க்க முடிகிறது. கொரோனாவுக்கு எல்லா மனிதரும் ஒன்றுதான். ஆட்சியாளர்கள் முதல் அடிமட்டத் தொழிலாளர் வரை அனைவரையும் பாதிக்கும் வைரஸ் இது என்பதை ஏனோ பலரும் உணர்வதில்லை.
சமீபத்தில், இந்தியாவின் செய்தி சேனல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வரலாற்று ஆய்வாளர் யுவால் நோவா ஹராரி, “இந்தத் தொற்றுநோய்க்குச் சிறுபான்மையினர் மீது சிலர் குற்றம்சாட்டுவது மிகுந்த கவலையளிக்கிறது. இது வேண்டுமென்றே நடத்தப்படும் பயங்கரவாதம் எனும் அளவுக்கு அவர்கள் பேசுவது, முற்றிலும் அறிவற்ற செயல்; மிகவும் ஆபத்தானதும்கூட. வெறுப்பு நமக்குத் தேவையில்லை. நமக்குத் தேவை ஒற்றுமை. நமக்குத் தேவை மக்களுக்கு இடையிலான அன்பு” என்று சொன்னார்.
நெருக்கடியான இந்தக் காலகட்டத்தில் இதுபோன்ற வார்த்தைகளின் மதிப்பை உணர்ந்து கொள்வதுதான் மனித குலத்தின் மாண்பை மீட்டெடுக்க உதவும்!
–இந்து தமிழ்
2020.04.18