Site icon சக்கரம்

ரஷ்யப் புரட்சியின் வரலாற்று நாயகன் விளாடிமிர் லெனினின் 150-வது பிறந்த தினம் இன்று!

ப.கா.ரேவந்த் ஆண்டனி

தோழர் லெனினும் அவரது மனைவியும்

நாட்டில் நடக்கும் அநீதிகளைக் கடந்து போகும் மனிதர்களுக்கு மத்தியில் லெனின் என்ற சாதாரண மனிதன் மக்களை ஒன்றுதிரட்டி ஆதிக்கத்தை எதிர்த்து வென்று காட்டியுள்ளார். 150-வது பிறந்தநாள் காணும் லெனின் இன்னமும் உலக மக்களின் நினைவுகளில் இடம்பெற்றிருப்பதற்கான காரணம் இந்தக் கட்டுரையில்.

அடக்குமுறைகள் எப்போதுமே இந்த சமூகத்துக்காக, மக்களுக்காக உழைக்கப் பிறந்த புரட்சியாளர்களை அடையாளம் காட்டும். அந்த வகையில் ரஷ்யாவில் ஆதிக்கத்துக்கு எதிராக போராடி, சோவியத் ஆட்சி மலரக் காரணமாக இருந்த வரலாற்று நாயகன் லெனினை வரலாறு நமக்கு அடையாளம் காண்பித்துள்ளது.

1870-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் நாள் ரஷ்யாவின் வால்கா நதிக்கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் எனும் நகரத்தில் பிறந்தார் விளாடிமிர் இலீச் உல்யானவ் என்ற லெனின். அந்த நகரம் இப்போது லெனினின் நினைவாக உல்யானவ்ஸ் என்று அழைக்கப்படுகிறது. லெனினுக்கு அலெக்ஸாண்டர், டிமிட்ரி என்ற சகோதரர்களும், ஆனர், மரியா, ஆல்கா என்ற சகோதரிகளும் இருந்தனர். அன்பே உருவானவராய் விளங்கினார் அவரின் தாய். லெனின் தந்தை கல்வி அதிகாரியாக இருந்தார். குடும்பமே தெய்வப் பற்று உடையவர்களாக இருந்தாலும் லெனினும் அவர் சகோதரர் அலெக்சாண்டரும் ஆலயம் செல்ல விரும்பாதவர்களாக இருந்தனர். லெனினின் பெற்றோரும், குழந்தைகளின் சுதந்திரத்தில் தலையிடவில்லை. அதனால், லெனினும் அலெக்சாண்டரும் சிறுவயது முதலே, சுதந்திரமாகச் செயல்படுதல், சுயமாகச் சிந்தித்தல் என்று இருந்தனர். லெனினின் அண்ணன் அலெக்ஸாண்டர் முற்போக்குக் கொள்கை உடையவராகவும், அப்போதைய ரஷ்ய ஆதிக்க அரசுக்கு எதிரான தீவிரவாத சிந்தனை கொண்டவராகவும் இருந்தார்.

அப்போது ரஷ்யாவை ஆண்டு வந்த ஜார் மன்னர் மக்கள் நலன் மீது அக்கறை இல்லாதவராக இருந்தார். அவரை அழித்தால் மட்டுமே நாட்டு மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என நம்பிய லெனினின் அண்ணன் அலெக்ஸாண்டர் ஜார் மன்னரைக் கொலை செய்ய முயற்சி செய்து பிடிபட்டார். 1887-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி கைது செய்யப்பட்ட அலெக்ஸாண்டர், அதே ஆண்டு மே 8-ம் தேதி ஜார் மன்னரின் காவல்துறையால் மரண தண்டனை வழங்கப்பட்டு உயிரிழந்தார்.

1887-ம் ஆண்டு கசான் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சட்டம் பயின்றார் லெனின். அப்பொழுது அன்னையுடன் சில்பர்க் நகரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார். லெனின் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும்போதே தனது சக மாணவர்களுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டு காவல்துறையினரால் அடிக்கடி கைது செய்யப்பட்டார். அதன் காரணமாக அவர் படித்துவந்த பல்கலைக்கழகத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதையடுத்து, தானே சட்டப்படிப்பை ஒன்றரை வருடத்தில் படித்துத் தேர்ச்சி பெற்றார் லெனின்.

“காரல் மார்க்ஸின் தத்துவங்களை உள்வாங்கிய லெனின், சுரண்டும் வர்க்கத்துக்கு எதிராக மக்களை அணி திரட்டாமல் சமூகப் புரட்சி சாத்தியமில்லை” என்பதை உணர்ந்தார். இதற்காக தான் படித்த சட்டத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு ஆலோசனைகளை வழங்க ஆரம்பித்தார். வாழ்வில் தான் கற்றுக்கொண்ட பாடங்களைப் புத்தகமாக எழுத ஆரம்பித்தார். மக்களை அணி திரட்டும் முயற்சியில் முழு மூச்சாக இறங்கினார். அதற்காக, விடுதலைக்கான போராட்டக் கழகம் என்ற ஓர் அமைப்பையும் 1895-ம் ஆண்டு தோற்றுவித்தார். அந்தப் பெயரே அவரைக் கைது செய்ய வழிவகுத்தது.

பெரும்பாலும் ஆதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் மாபெரும் புரட்சியாளர்களை, மக்கள் இனம் காண்பதற்கு முன்னர், சர்வாதிகாரிகளே அடையாளம் காண்கிறார்கள். அவர்களே மாபெரும் தலைவர்களை உருவாக்குகிறார்கள். அவ்வழியில் ஜார் மன்னன் லெனினைக் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். கிழக்கு சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்ட லெனின் அங்கு தன்னைப்போலவே ஒற்றைக் கருத்துடைய குரூப்ஸ்கயாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். கைது செய்யப்பட்டிருந்த நிலையிலும் இருவரும் ஒன்றாகவே வாழ்ந்தார்கள்.

1900-ம் ஆண்டு, லெனின் – குரூப்ஸ்கயா ஆகிய இருவரும் தண்டனைக்காலம் முடிந்து ரஷ்யா திரும்பியபோது, நாடு முழுவதும் பஞ்சம், பட்டினி, தொழிலாளர் நலன் சார்ந்த போராட்டங்கள் வேகமெடுத்திருந்தன. இதற்குக் காரணம் லெனின்தான் என்று கருதி அவரை திரும்பவும் நாடு கடத்தினார்கள். 1905-ம் ஆண்டிலிருந்து சுமார் 9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த லெனின், சுவிட்சர்லாந்து, லண்டன், ஜெனிவா, பின்லாந்து ஆஸ்திரியா எனப் பலநாடுகளிலிருந்து சோவியத் ரஷ்யாவுக்காகத் திட்டங்களைத் தீட்டினார். ஜார் மன்னரின் கொடுங்கோன்மை ஆட்சிக்கு எதிராக தொழிலாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் மிக விரிவாக எழுதினார். மன்னர் ஆட்சியில் ஏற்பட்ட நிலக்கரித் தட்டுப்பாட்டால் பல தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டன. வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்தது. ரொட்டித் துண்டுக்காக மக்கள் ஒருவரையொருவர் வெட்டிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.

வெளி நாடுகளில் இருந்தாலும் லெனினின் செயல் சிந்தனை என அனைத்தும் `சோவியத் ரஷ்யா’ கனவாகவே இருந்தது. வெகு தூரத்தில் இருந்தாலும் மக்களுக்கு தன் கருத்துகள் சென்று சேர வேண்டும் என எண்ணினார் லெனின். அதற்காக தொடங்கப்பட்டதே `புதுவாழ்வு, தீப்பொறி, உண்மை, சமூக ஜனநாயகவாதி’ ஆகிய பத்திரிகைகள். இதில் பல புரட்சிகரக் கருத்துகளை கட்டுரைகளாக வடித்தார். படிப்போர் நெஞ்சங்களில் போராடத் தூண்டும் வகையில் அவரின் எழுத்துகள் இருந்தன. ஜார் ஆட்சியை வீழ்த்துவதைக் குறைந்தபட்ச செயல்திட்டமாகவும், அதே இடத்தில் சோசலிச அமைப்பை உருவாக்குவதை அதிகபட்ச செயல் திட்டமாகவும் கொண்ட ரஷ்ய சமூக ஜனநாயக் கட்சியை உருவாக்கினார். மக்களை ஒருமுகப்படுத்தி அணி திரட்டினார்.

1917-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வீதிகளில் திரண்ட ரஷ்ய மக்கள் மன்னருக்கெதிராக கோஷங்கள் எழுப்பி ரஷ்யாவையே அதிரச் செய்தனர். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மிதவாத சோஷியலிஸ்ட் என்று தங்களை அடையாளம் காட்டிக்கொண்ட ஒரு குழு ஆட்சியைக் கைப்பற்றியது. பெரும் கோபத்தில் இருந்த கம்யூனிஸ்டுகள் ஜார் மன்னரையும், அவரின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் நிற்க வைத்து சுட்டுக் கொன்றனர். ஆனால், புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களாலும் உணவுத் தட்டுப்பாட்டைப் போக்க முடியவில்லை. ஜார் மன்னர் மறைந்தாலும் நாட்டின் அவலங்கள் மறையவில்லை. அதுதான் சரியான தருணம் என்று நம்பிய லெனின் தன் தாய்நாடு நோக்கிப் புறப்பட்டார். அவருடைய சகாக்கள் உருவாக்கியிருந்த செஞ்சேனையைக் கொண்டு அதே ஆண்டு அதாவது 1917-ம் ஆண்டு நவம்பர் 7-ம் நாள் தலைநகர் பெட்ரோகிராடை சுற்றி வளைத்தது லெனினின் படைகள். இடைக்கால ஆட்சியின் வீரர்கள் துப்பாக்கிகளை கீழே போட்டு விலகி நிற்க, ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல், வன்முறை நிகழாமல் ஆட்சியைக் கைப்பற்றினார் லெனின். ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி மலர்ந்தது.இதுவே ரஷ்யப் புரட்சி என்றும் நவம்பர் புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது.

பிரசாரத்தில் கூறியிருந்ததைப் போலவே ஆட்சிக்கு வந்த மறுநாளே நில பிரபுக்களின் விளைநிலங்களைக் கைப்பற்றி விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுத்தார் லெனின். தொழிலாளிகளிடம் தொழிற்சாலைகளின் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. `உழைப்பவனுக்கே நிலம் சொந்தம்’ எனும் கொள்கையை வகுத்தார். லெனின் ரஷ்யாவின் கம்யூனிஸ்டு ஆட்சியை அமைத்த பிறகுதான் பெரும்பாலான நாடுகளில் கம்யூனிசம் பரவத் தொடங்கியது. கார்ல் மார்க்ஸின் கொள்கைகளை அவர் பின்பற்றினாலும் அடக்கு முறையை வன்முறையால்தான் எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் நம்பினார்.

லெனின் சோவியத் குடியரசில், அந்தந்த குடியரசின் தாய்மொழி எதுவோ, அதுதான் நிர்வாக மொழியாகவும், போதனை மொழியாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ரஷ்யர்கள் பெரும்பான்மையராக இருப்பதால், ரஷ்ய மொழியைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்றார். எந்த ரூபத்திலும் இது கட்டாயமாக்கப்படக் கூடாது என்றார். அவர் ஒரு ரஷ்யர் ஆனால், பேரினவாதத்தை அறவே வெறுத்தார். மொழி விஷயத்தில் மிகத் தெளிவான கொள்கையைக் கொண்டிருந்தார். எந்த தேசிய இனமும் இதில் அதிருப்தி அடைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார் லெனின்.

இலக்கியங்களை நேசித்த லெனினுக்கு புத்தகங்கள் படிக்கும் பழக்கமும் இருந்தது. அவரே பல புத்தகங்களை எழுதி மக்களுக்கு கருத்தூட்டும் செய்திகளைப் பரப்பியுள்ளார். அவரது எழுத்துகள் 55 தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றது. 1924-ம் ஆண்டு ஜனவரி 21-ம் நாள் தனது 54-வது வயதில் லெனின் காலமானார்.

நாட்டில் நடக்கும் அநீதியை கடந்து போகும் மனிதர்களுக்கு மத்தியில் லெனின் என்ற சாதாரண மனிதன் மக்களை ஒன்றுதிரட்டி ஆதிக்கத்தை எதிர்த்து வென்றுகாட்டியுள்ளார். இன்றைய தினம் 150-வது பிறந்தநாள் காணும் லெனின் இன்னமும் உலக மக்களின் நினைவுகளில் இடம்பெற்றிருப்பதற்கான காரணம் `லெனின் ஒரு வரலாற்று நாயகன்’ என்பதே.

விகடன்
2020.04.22

யுகமாகி நின்ற லெனின் உலகாகி நின்ற லெனின்
உறவாகி நின்ற லெனினே!
அகமாகி நின்ற லெனின் அறிவாகி நின்ற லெனின்
அரசாள வந்த லெனினே!
சுகமாகி வந்த லெனின் துணையாகி வந்த லெனின்
சுதந்திர மான லெனினே!
இகமாகி நின்ற லெனின் எமையாள வந்த லெனின்
இறையாகி வந்த லெனினே!
நறவூறுகின்ற மொழி பொருளர்க்கும் என்ற வழி
நடை கொண்டு வந்த லெனினே!
உறவாகி உலகெங்கும் உழைப்பாளர் ஆட்சிநெறி
உரமாக்கி வைத்த லெனினே!

                   – பாவேந்தர் பாரதிதாசன் (1918) 

Exit mobile version