Site icon சக்கரம்

கொரோனா வைரஸ் புற்றுநோய் நோயாளிகளை பாதிக்குமா?

டாக்டர் அனிதா சி.ரமேஷ்

கொரோனா வைரஸ், புற்றுநோய் நோயாளிகளை பாதிக்கும் அபாயம் உள்ளதா என்பதற்கு, எந்த ஆதாரமும் தற்போது வரை இல்லை. இது, புதிதாக பரிணாமம் பெற்றிருக்கும் வைரஸ். இதைப் பற்றி முழுமையாக தெரிந்துக் கொள்ள, இன்னும் சில வாரங்கள் ஆகலாம். எது எப்படி இருந்தாலும், புற்றுநோய் நோயாளிகள் இந்த தொற்று பாதிக்காமல், முன்னெச்சரிக்கையுடன் இருப்பதே நல்லது. காரணம், புற்றுநோய் நோயாளிக்கு வேறு எந்த தொற்று பாதித்தாலும், அதன் பக்கவிளைவுகள், மற்றவர்களைக் காட்டிலும் மிக மோசமானதாகவே இருக்கும் என்பதால், அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். வீடே மருத்துவமனை! முடிந்த வரையிலும் வீட்டில் இருந்தபடியே, புற்றுநோய் சிகிச்சையை மேற்கொள்வது நல்லது. பொருளாதார நிலையில் பிரச்னை இல்லாதவர்கள், கவனித்துக் கொள்ள முறையான ஆதரவு இருப்பவர்கள், முடிந்த வரையிலும், வீட்டிலேயே இருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல, சிகிச்சைக்கு பின் நோயாளிகள் பின்பற்ற வேண்டிய, சில வழிமுறைகளையும் வீட்டில் இருந்தபடியே செய்யலாம். அவசர, அவசியம் இல்லாத வரை, டாக்டர் குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவே, பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு வர வேண்டிய கட்டாயம் இல்லை. காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள், புற்றுநோய் நோயாளிக்கு இருந்தால், அதற்கான இரத்த, சளி பரிசோதனை செய்வதற்கு, பரிசோதனை கூடத்திற்கு வருவதை தவிர்த்து, வீட்டிற்கே வந்து மாதிரிகளை எடுக்கச் சொல்ல வேண்டும்.

தகவல் தொழில்நுட்பம்

நவீன தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள, நல்ல வாய்ப்பாக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும். புற்றுநோய் சிகிச்சைக்கு பின், தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள், தங்களின் சந்தேகங்களை, ‘வாட்ஸ் ஆப், இ – மெயில்’ போன்றவற்றின் மூலம், டாக்டரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்; தேவையில்லாமல் மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்க, இது உதவும். கொரோனா அறிகுறிகளுடன் இருப்பவர்களை, எந்த தாமதமும் இல்லாமல், டாக்டர்கள் பரிசோதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்; உடனடியாக சிகிச்சையை அவர்களுக்கு தர வேண்டிய அவசரமும் உள்ளது. எனவே, கடைசி நிமிடத்தில் வராமல், அறிகுறிகள் தெரிந்த உடனேயே பரிசோதித்து, உறுதி செய்து கொள்வது நல்லது. அதேபோல, இரத்த தானம் செய்பவர்களையும், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். இரத்தம் செலுத்துவதால் வைரஸ் பரவும் என்பதற்கு, எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. சிகிச்சையில் இருக்கும் புற்றுநோய் நோயாளிகள், எந்த மாதிரியான சிகிச்சையாக இருந்தாலும், அதை தொடர்ந்து செய்து கொள்ள வேண்டும். அவசர நிலையில் இருக்கும் புற்றுநோய் நோயாளிகளுக்கு, தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை தர வேண்டும். எந்த கட்டத்திலும் அதை தள்ளிப் போடவே கூடாது. புற்றுநோய்க்காக தரப்படும் மருந்துகள், கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு தரலாம்.

அதே சமயத்தில்,புற்றுநோய் நோயாளிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், புற்றுநோய்க்கான சிகிச்சையை தற்காலிகமாக நிறுத்தி விட்டு, தொற்றை கட்டுப்படுத்தும் சிகிச்சை செய்வதே பாதுகாப்பானது. கீமோதெரபி சிகிச்சையில் இருக்கும் புற்றுநோய் நோயாளிகளுக்கு, அவர்களின் உடல் நிலையையும், நோயின் தன்மையையும் வைத்து, மாத்திரைகள் சாப்பிடச் சொல்லலாம்.

ஆலோசனை

இது, அவர்கள் மருத்துவமனைக்கு வருவதில் இருந்து தற்காலிக தீர்வு தரும். ஆனால், இதை அந்தந்த மருத்துவர்கள், தங்களின் நோயாளியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, பாதுகாப்பாக இருக்கும் என்பதை உறுதி செய்த பின், முடிவு செய்ய வேண்டும். காரணம், கீமோதெரபியை பாதியில் நிறுத்தினால், என்ன விளைவுகள் ஏற்படும் என்பதற்கு, மருத்துவ ஆதாரங்கள் எதுவும் இல்லை.கொரோனா தொற்று இருக்கும் புற்றுநோய் நோயாளிகள் அல்லது தொற்று ஏற்படும் அபாயத்தில் இருப்பவர்கள் என்று யாராக இருந்தாலும், அவர்களின் வயது, நோயின் தன்மை, சிகிச்சை முறைகள் என்று அனைத்தையும் ஆலோசித்து, முடிவு செய்ய வேண்டியது டாக்டரின் கடமை. புற்றுநோய் நோயாளிக்கு என்று பொதுவான அணுகுமுறையை பின்பற்றாமல், ஒவ்வொரு புற்றுநோய் நோயாளிக்கும், தனி நபரின் தேவைக்கு ஏற்ப முடிவுகளை எடுப்பதே, தற்போதைய நிலையில் பாதுகாப்பானது.

Exit mobile version