Site icon சக்கரம்

அநீதிக்கு எதிராக இனப் போராட்டம்

முனைவர் வைகைச்செல்வன்

பெரும் தொற்று அபாயம் சூழ்ந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில், அமெரிக்க மக்கள் தெருவுக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். ‘கொரோனா தீநுண்மி நோய்த்தொற்று தாக்கி மரணிப்பதைவிட, போராட்டக் களத்தில் துணிந்து நின்று உயிரை இழப்பதே மேல்’ என்ற நிலைக்கு அமெரிக்க கருப்பினத்தவர்கள் வந்துவிட்டார்கள். அவர்களுக்கு வாக்குரிமை உண்டு. அவர்களுக்கான சுதந்திரமும் உண்டு. ஆனால், அந்தச் சுதந்திரத்தால் கிடைக்கும் உரிமைகள் உண்டா? இதுதான் மெய்யான ஜனநாயகமா என்ற கேள்வியை எழுப்பி வெள்ளை மாளிகையை நோக்கி போராட்டக்காரர்கள் நியாயம் கேட்டு நிற்கிறார்கள்.

வெள்ளை மாளிகையில் வசிக்கும் அந்த நாட்டின் அதிபர் ட்ரம்ப்போ பதுங்கு குழிக்குச் சென்று தங்கியிருப்பதாக அந்த நாட்டு ஊடகங்கள் பறைசாற்றுகின்றன. போராட்டத்துக்கான வலிமையும் கூர்மையும் எத்தகையது என்பதைப் பதுங்கு குழியே ஊருக்கும் உலகுக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

தங்கள் மீது காட்டப்படும் காழ்ப்புணர்ச்சி காரணமாக கடந்த மே 25-ஆம் தேதிமுதல் பல்வேறு அமெரிக்க மாகாணங்களில் கருப்பினத்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், டெக்ஸாஸ் மாகாணத்தில் காவல் துறை மூத்த அதிகாரி ஆர்ட் அசெவெடோ அமெரிக்க அதிபருக்கு ஓர் அறிவுரை கூறியிருக்கிறார். இது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “அனைத்து காவல் துறை அதிகாரிகளின் சார்பாகப் பேசுகிறேன்” என்று அவரின் பேச்சு தொடங்குகிறது. “அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறுவதற்கு ஆக்கபூர்வமான விஷயம் எதுவும் இல்லையென்றால் வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்கவும்” என்று பேசியிருக்கிறார்.

இனவெறிக்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்களை நோக்கி, அவர்கள் உள்நாட்டுப் பயங்கரவாதிகள் என்றும், வன்முறை – போராட்டத்தில் மேலும் ஈடுபட்டால் ராணுவம் வரவழைக்கப்படும் என்றும் கூறினார் அதிபர் ட்ரம்ப். மேலும், ஒருபடி மேலே சென்று அமெரிக்க சொத்தை யாராவது கொள்ளையடித்தால் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என்றும் அவர் பேசியிருக்கிறார். இந்தப் பேச்சுக்குப் பின்னர்தான் போராட்டங்கள் வன்முறைகளாக மாறியிருக்கின்றன. அதனால்தானோ என்னவோ காவல் துறையினரையும் எதிர்த்து போராட்டக் குழுக்கள் கடும் தாக்குதலிலும் ஈடுபட்டு வருவதாக ஊடகங்கள் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது.

அமெரிக்காவில் ட்ரம்ப்பை ஆதரிக்கும் – இன வெறுப்பையும், மத வெறுப்பையும் உமிழும் தீவிர வலதுசாரி அரசியல் குழுக்கள் வெள்ளை நிறமா, கருப்பு நிறமா என்ற போட்டியில் இந்தக் கொரோனா தீநுண்மி நோய்த்தொற்று பரவிக்கொண்டிருக்கும் இக்கட்டான காலகட்டத்தில், அடக்குமுறைக்கான போரை நிகழ்த்த இதுதான் சரியான தருணம் என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. கொரோனா தீநுண்மி நோய்த் தொற்று பரவும் வேகத்தைவிட, இன வெறுப்பு அதிவேகமாகப் பரவுகிறது.

மனிதகுலத்துக்கு விடப்பட்டுள்ள சவால் என்கிற பல்வேறு கேள்விக்குறிகளைத் தாங்கி நின்றது அந்தக் கொடூரச் சம்பவம். இவை சமூக அநீதிக்கு இழைக்கப்பட்ட கொடூரத் தாக்குதலாகவும், இன வெறியின் உச்சகட்ட நடவடிக்கையாகவும் உலகம் முழுவதும் கொந்தளிப்புகள் எழுந்தன.

“இது இனவெறியின் வெளிப்பாடுதான்; அதில் என்ன சந்தேகம்” என்று கேட்பவர்களும் உண்டு. கருப்பினத்தவர்களுக்கு எதிராக நீண்ட நாள்களாகக் காட்டப்படும் வெறுப்புணர்ச்சியின் அடையாளம்தானே இந்த நிகழ்வு. இன்று, நேற்று நடக்கின்ற சம்பவமா இது? 17-ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கியிருக்கிறது இந்தப் போராட்டம்.

வாழ்வதற்கும், சாவதற்குமான நிகழ்வாக கடந்துபோக வேண்டியதாய் இருக்கிறது. மார்ட்டின் லூதர் கிங், ஆபிரகாம் லிங்கன் ஆகியோர் கருப்பினத்தவர்களின் விடுதலையை கண்ணீருடன் துடைத்தார்கள். ஆனால், அந்தக் கண்ணீர் காய்வதற்கு முன்பே அதே மண்ணில் மார்ட்டின் லூதர் கிங், ஆபிரகாம் லிங்கன் ஆகியோர் இனவெறிக்குத் தங்களின் உயிரைப் பரிசாகத் தரவேண்டிய துரதிருஷ்ட நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

அமெரிக்காவில் வசிக்கும் கருப்பினத்தவர்கள் லிங்கனின் ரத்த சாட்சியோடு தங்களின் இருண்ட பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். கொரோனா தீநுண்மி நோய்த்தொற்று காலகட்டத்தில் கருப்பினத்தவருக்கு நேர்ந்த கொடூரச் சம்பவம் மனிதத் தன்மையையே உலுக்கிவிட்டது.

மனிதனை மனிதனாகப் பார்க்க வேண்டும் என்று யார் இவர்களிடம் போய்ப் பாடம் நடத்துவார்கள்? விரைவில் அமெரிக்க தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வெள்ளை, கருப்பு என்கிற நிற பேதம் மனிதத் தன்மைக்கு சவால் விடும் செயல்கள் அல்லவா? கருப்பு உயிரா, வெள்ளை உயிரா என்ற கேள்வியை எழுப்பினால், அங்கு மானுடப் பற்று காணாமல் போய் விடாதா? எதற்கு நீங்கள் வாக்களிப்பீர்கள் என்ற சவால்கள் எழாமல் இல்லை.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் தலைநகரான மினியாபொலிஸ் நகரில் ஒரு காருக்கு அடியில் ஒரு மனிதர் கைவிலங்கிட்டிருப்பதைப் போன்றும், அவரின் கழுத்தின் மேல் முழங்காலை வைத்துக் காவலர் அழுத்துவதும், என்னால் மூச்சு விடமுடியவில்லை என்று அந்தக் கருப்பின இளைஞர் ஜோர்ஜ் ஃப்ளாய்ட் கூறுவதும், “தயவு செய்து என்னைக் கொல்லாதீர்கள்” என்று கதறுவதும், மனதை உருக்கி நெகிழச் செய்கின்ற ஒன்றாகும். அமெரிக்காவில் கருப்பினத்தவர்கள் போலீஸாரால் கொல்லப்படுவது குறித்து ஏற்கெனவே பல குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், இந்தச் சம்பவம் மேலும் பதற்றத்தை அதிகப்படுத்தியது.

கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் கொண்டு போராட்டக்காரர்களை போலீஸார் கலைத்துவிடலாம். நடைபெற்ற கொடூரச் சம்பவம் படிந்துவிட்ட வரலாற்றின் கருப்பு அத்தியாயத்தை எதைக் கொண்டு கலைக்க முடியும்? எதைக் கொண்டு அழிக்க முடியும்?

“எனது சகோதரர் திரும்பி வரப் போவதில்லை, எங்களுக்கு நீதி வேண்டும்’ என்று கண்ணீர்மல்க ஜோர்ஜின் சகோதரர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி, மனிதகுலத்துக்கு எழுப்பிய அதிர்வலையாகவே நாம் பார்க்க வேண்டும்.

உலக நாடுகள் பலவும் இந்தப் படுகொலை குறித்து நிறையப் பேசுகின்றன. இது குறித்தான நீதியை அவர்களால் எப்படிப் பெற முடியும்? இருந்தபோதிலும், ஒரு ஜனநாயக நாடான அமெரிக்கா அதற்கான பதிலை ஜனநாயக மாண்புகளுக்குச் சொல்லித்தானே ஆக வேண்டும்.

வடக்கு கரோலினா மாகாணத்தில், ஃபேயட்வில் நகரத்தில் 1973-இல் பிறந்த கருப்பினத்தவரான ஜோர்ஜ் ஃப்ளாய்ட் வளர்ந்ததெல்லாம் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஹஜஸ்டன் நகரத்தில்தான். பள்ளிப் பருவத்தில் ஒரு சிறந்த விளையாட்டு வீரனாக வேண்டும் என்ற கனவைக் கண்டு கால்பந்து, கூடைப்பந்து அணிகளில் சேர்ந்து விளையாடி தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். 2014-இல் மினிசோட்டா மாகாணத்தில், மினியாபொலிஸ் நகரத்துக்குப் புலம்பெயர்ந்து, ஒரு கிளப்பில் காவலாளியாக சற்றேறக்குறைய 5 ஆண்டுகள் தனது பணியை ஆர்வத்துடன் நிறைவேற்றி வந்தார்.

இந்தக் கொரோனா தீநுண்மி நோய்த்தொற்று உலக நாடுகளில் பல பேரைப் புரட்டிப் போட்டிருக்கிறது. உள்ளுர் பொருளாதாரம் முதல் உலகளாவிய பொருளாதாரம் வரை, வேலைவாய்ப்பின்மை என்று பல்வேறுபட்ட நெருக்கடிகளைத் தந்து, இந்த உலகைச் சூறையாடியது போதாது என்று இன்னும் தீராத வெறியோடு நோய்த்தொற்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்தக் கொரோனா தீநுண்மி நோய்த்தொற்று நெருக்கடியால் வேலை இழந்த சில கோடி அமெரிக்கர்களில் ஜோர்ஜ் ஃப்ளாய்டும் ஒருவர். அவரின் கனவு வாழ்க்கையில் 22 வயதிலும், 6 வயதிலும் இரண்டு செல்வ மகள்கள் இருக்கிறார்கள். மே 25-ஆம் தேதி மாலை மினியாபொலிஸ் நகரத்தில் உள்ள கடைக்குச் சென்று 20 டாலர்களைக் கொடுத்து சிகரெட் வாங்கியிருக்கிறார் ஜோர்ஜ் ஃப்ளாய்ட். அவர் கொடுத்த டாலர் கள்ள நோட்டாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் அந்தக் கடையின் ஊழியர் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். சற்று நேரத்தில் இரண்டு போலீஸ்காரர்கள் அங்கு வர, ஃப்ளாய்டைக் கைது செய்யும் படலம் தொடர்கிறது.

தனக்கு “கிளாஸ்ட்ரோ போபியா’ (Claustrophobia – அடைத்து வைத்திருக்கின்ற இடங்களில் உருவாக்கும் பீதி) என்கிற நோய் இருக்கிறது என்கிறார் ஃப்ளாய்ட். இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாத காவல் துறையினர், ஃபிளாய்டை காரில் ஏற்ற முயற்சிக்கும்போது அவர் கீழே விழுகிறார். இப்படி இரண்டு, மூன்று முறை காரில் ஏற்றும்போது கீழே விழுகின்ற காரணத்தினால், ஃப்ளாய்டின் கையையும், காலையும் பிடித்திருக்க அவர்கள் கழுத்தின் மீது முழங்காலை வைத்து டேவிட்சாவின் என்ற காவலர் அழுத்துகிறார். இந்தச் செயல் 8 நிமிஷங்கள் நீடித்தது. பின்னர், நாடித் துடிப்பை பரிசோதித்துப் பார்க்கையில் துடிப்பில்லை. ஆம், அவர் இறந்து விட்டார்.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பது அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் தாரக மந்திரம். இந்த அநீதிக்கு என்ன சொல்லப் போகிறது?

தினமணி
2020.06.13

Exit mobile version