–வெ.சந்திரமோகன்
ஜோர்ஜ் ஃப்ளாய்டு மரணத்துக்கு நீதி கேட்டு அமெரிக்கா தொடங்கி உலகம் முழுவதும் நடந்துவரும் போராட்டங்களில், கறுப்பினத்தவர்களுடன் கணிசமான அளவில் வெள்ளையர்களும் பங்கேற்றிருப்பது குறித்துப் பலரும் ஆச்சரியமாகப் பேசி வருகிறார்கள்.
கறுப்பினத்தவர்களுக்குத் தங்கள் முன்னோர்கள் இழைத்த கொடுமைகளுக்காக அவர்கள் முன்பு மண்டியிட்டு கண்ணீர் சிந்தி மன்னிப்பு கேட்கும் வெள்ளையினத்தவர்களின் வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. இலண்டனில் அடிமை வியாபாரி ராபர்ட் மில்லிகனின் சிலை அகற்றப்பட்டது. வெள்ளையர்களின் இந்தக் குற்றவுணர்வு நிச்சயம் போலியானது அல்ல.
உள்நாட்டுப் போரும் கறுப்பின உரிமைகளும்
கறுப்பினத்தவர்களின் உரிமைகளுக்காக சக வெள்ளையினத்தவர்களை எதிர்த்துப் போராடிய வெள்ளையினத்தவர்கள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து அடிமைகளாக அழைத்துவரப்பட்டு அமெரிக்க மண்ணில் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்த கறுப்பினத்தவர்களின் வரலாறு கண்ணீரும் ரத்தமும் நிரம்பியது. 16-ம் நூற்றாண்டு முதல் நடந்துவந்த அடிமை வியாபாரத்தின் மூலம் வெள்ளையின அமெரிக்கர்களின் பண்ணைகளில் இரத்தம் சிந்த உழைத்தார்கள் கறுப்பினத்தவர்கள். இந்தக் கொடுமையை மனசாட்சியுள்ள வெள்ளையினத்தவர்கள் கண்டித்தார்கள்.
சொல்லப்போனால், அடிமை முறையை இரத்து செய்வதா வேண்டாமா எனும் முரண்பாடுதான் அமெரிக்க உள்நாட்டுப் போருக்கே வழிவகுத்தது. அடிமை முறையை இரத்து செய்யும் நடவடிக்கையை வட மாநிலங்கள் ஆதரித்தன. தென் மாநிலங்களைச் சேர்ந்த பண்ணை முதலாளிகள் எதிர்த்தனர். 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த அந்தப் போர், 1865 மே மாதம் முடிவுக்கு வந்தது. தென் மாநிலங்கள் சரணடைந்தன. 1865 டிசம்பரில், அடிமை முறையை ஒழிக்கும் 13-வது சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தது. அதைச் சாதித்துக் காட்டிய ஆபிரஹாம் லிங்கன் இனவெறியை வெறுத்த வெள்ளையர்தான்!
அதன் பின்னர், முன்னாள் அடிமைகளின் சட்ட உரிமைகளைப் பாதுகாக்க 14-வது சட்டத்திருத்தமும், முன்னாள் அடிமை ஆண்களுக்கு வாக்குரிமை வழங்கும் 15-வது சட்டத்திருத்தமும் கொண்டுவரப்பட்டன. எனினும், அந்த உரிமைகளைப் பெறுவதற்கே கறுப்பினத்தவர்கள் பெரும் போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அப்போதும் மனசாட்சியுள்ள வெள்ளையினத்தவர்கள் அவர்களுக்குத் துணை நின்றனர்.
வெள்ளையினத் தியாகிகள்
வெள்ளையினத்தைச் சேர்ந்த சிலர் அந்தப் போராட்டங்களில் தங்கள் உயிரையும் தியாகம் செய்திருக்கிறார்கள். 1965-ல், கறுப்பின மக்களுக்கு உரிமை கோரி அலபாமா மாநிலத்தின் செல்மா நகரிலிருந்து அம்மாநிலத் தலைநகர் மன்ட்காமரிக்குப் பேரணி நடந்தது. அந்தப் பேரணியில் கலந்துகொண்ட வியாலோ லுயிஸோ (Viola Liuzzo) எனும் வெள்ளையினப் பெண்மணி, வெள்ளை இனவாதக் குழுவான ‘கு க்ளக்ஸ் க்ளான்’ (Ku Klux Klan) அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டார். 5 குழந்தைகளின் தாய் அவர். அதே பேரணியில் கலந்துகொண்ட ஜேம்ஸ் ரீப் எனும் வெள்ளையின மனிதர் அடித்தே கொல்லப்பட்டார். ஜொனாதன் டேனியல்ஸ், ஜிம் லெதெரர், ஆன் பிராடென், பீட்டர் நார்மன் என்று பலர் கறுப்பினத்தவர்களின் உரிமைப் போராட்டங்களில் தங்கள் உயிரையும் துச்சமாக மதித்துக் கலந்துகொண்டார்கள்.
குறிப்பாக, அமெரிக்க யூதர்கள் பலர், கறுப்பின மக்களின் உரிமைப் போராட்டங்களுக்குத் துணை நின்றார்கள். அவர்களில் ஆண்ட்ரூ குட்மேன், மைக்கேல் ஷ்வெர்னர் இருவரும் முக்கியமானவர்கள்.
ஜேம்ஸ் சேனி எனும் கறுப்பின இளைஞருடன் காரில் சென்றபோது, மூவரும் படுகொலை செய்யப்பட்டனர். தீவிரத் தேடுதலுக்குப் பின்னர்தான் மூவரின் உடல்களும் கிடைத்தன. மூவரும் ‘ஃப்ரீடம் சம்மர்’ எனும் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். மிசிஸிப்பி மாநிலத்தில் கறுப்பின மக்களின் வாக்குரிமையை நிலைநாட்டப் போராடிவந்தவர்கள்.
அவர்களைக் கொலை செய்த வெள்ளையின வெறியர்களுக்கு உள்ளூர்க் காவல் துறையினரும் துணைபோயினர் என்பது முக்கியமான விஷயம். எனினும், ஜோன் ப்ராக்டர், ஜோஸப் சல்லிவான் ஆகிய வெள்ளையின எஃப்.பி.ஐ அதிகாரிகள் கடும் சவால்களுக்கு இடையில் அந்த வழக்கை விசாரித்து, குற்றவாளிகளைச் சட்டத்துக்கு முன்னர் நிறுத்தினர்.
கு க்ளக்ஸ் க்ளான் அமைப்பினர், கறுப்பின மக்கள் என்று பல்வேறு தரப்பினருடன் நேரடிப் பழக்கம் கொண்டிருந்த ஜோன் ப்ராக்டர் மிக உறுதியுடன் நின்று இந்த வழக்கை விசாரித்தார். ஜோஸப் சல்லிவானும் அப்படியானவர்தான். கறுப்பின உரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங் படுகொலை வழக்கையும் இவர் விசாரித்திருக்கிறார். இப்படி பல தரப்பைச் சேர்ந்த வெள்ளையினத்தவர்கள் கறுப்பினத்தவர்கள் மீது பரிவுடன் இயங்கியிருக்கிறார்கள். நியாயத்தின் பக்கம் நின்றிருக்கிறார்கள்.
மார்ட்டினும் மால்கம் எக்ஸும்
மார்ட்டின் லூதர் கிங்கின் குழந்தைப் பருவத்தில், வெள்ளையினத் தோழன் ஒருவன் இருந்தான். எனினும், அந்தச் சிறுவனின் பெற்றோர் ஒருகட்டத்தில் மார்ட்டின் கிங்குடன் விளையாட அவனை அனுமதிக்கவில்லை. அப்போதுதான் இனவெறியின் கொடூரத்தை மார்ட்டின் உணர்ந்தார். பின்னர் கறுப்பின மக்கள் மீது காட்டப்பட்ட பாரபட்சம், நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் எல்லாம் சேர்ந்து வெள்ளையினத்தவர் மீது கடும் வெறுப்பை அவரிடம் ஏற்படுத்தியிருந்தன. “ஒவ்வொரு வெள்ளையின அமெரிக்கரையும் வெறுக்கிறேன்” என்று ஒருகட்டத்தில் சொன்னவர்தான் அவர். எனினும், காந்தியின் அகிம்சைக் கொள்கை மீது பற்று கொண்டிருந்த மார்ட்டின், “எனது இயக்கத்தின் நோக்கம் வெள்ளையினத்தவர்களை வீழ்த்துவதோ அவமதிப்பதோ அல்ல. அவர்களிடம் நட்பை வளர்த்துக்கொள்வதும், எங்கள் மீதான புரிதலை ஏற்படுத்திக்கொள்வதும்தான்” என்று குறிப்பிட்டார்.
கறுப்பினத்தவர்களின் உரிமை விஷயத்தில் மார்ட்டின் மிதவாதப் போக்கைக் கொண்டிருந்தார் என்று கடுமையாக விமர்சித்தவர் கறுப்பினத் தலைவர்களில் முக்கியமான இன்னொரு ஆளுமையான மால்கம் எக்ஸ். வெள்ளையினத்தவர்களை மிகக் கடுமையாக வெறுத்த அவர், 1962-ல் நடந்த விமான விபத்து ஒன்றில் 100-க்கும் மேற்பட்ட வெள்ளையினத்தவர்கள் உயிரிழந்தபோது அதைக் கொண்டாடியவர். எனினும், அவரும் வெள்ளையின மக்கள் மீது ஒரு கட்டத்தில் நட்பு பாராட்டினார்.
இஸ்லாம் மதத்தைத் தழுவியவரான மால்கம் எக்ஸ், ஒருமுறை மெக்காவுக்குச் சென்றிருந்தார். அப்போது அங்கு வந்திருந்த வெள்ளையின முஸ்லிம்கள் அனைவருடனும் இயல்பாகப் பழகியதையும், ஒரே தட்டில் உணவு உண்டதையும் பார்த்து “என் வாழ்நாளில் முதன்முறையாகத் தங்களை வெள்ளையர்களாகக் காட்டிக்கொள்ளாத வெள்ளையர்களைச் சந்தித்தேன்” என்று சொன்னார். தங்களை வெறுக்கும் வெள்ளையர்களை எந்த அளவுக்கு அந்தத் தலைவர்கள் வெறுத்தார்களோ, அதே அளவுக்குத் தங்களை மதித்த, நட்புடன் பழகிய வெள்ளையினத்தவர்களிடம் மதிப்பு கொண்டிருந்தார்கள்.
அதிகரிக்கும் ஆதரவு
1960-களில் கறுப்பினத்தவர்களின் உரிமைப் போராட்டங்களில் கலந்துகொண்டவர்களைவிட, தற்போது ஜோர்ஜ் ஃப்ளாய்டின் மரணத்துக்கு நீதி கேட்டு நடக்கும் போராட்டங்களில் வெள்ளையினத்தவர்கள் அதிகம் கலந்துகொண்டிருப்பதாக ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழில் வெளியாகியிருக்கும் ஒரு செய்திக் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.
‘இனவெறி தொடர்பான புத்தகங்களை வாங்கி வாசிப்பது, கறுப்பின நண்பர்களுடன் மேலும் நெருங்கிப் பழகுவது, கறுப்பினச் சமூகத்தினர் எதிர்கொள்ளும் அவலம் குறித்து தங்கள் குடும்பத்தினரிடம் விவாதிப்பது என்று வெள்ளையின இளைஞர்கள் செயல்படத் தொடங்கியிருக்கிறார்கள்’ என்று அந்தச் செய்திக் கட்டுரை சொல்கிறது.
அட்லான்டாவில் வெள்ளையினப் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட ரேஷார்டு புரூக்ஸ் எனும் கறுப்பின இளைஞருக்காக நீதி கேட்டு நடக்கும் போராட்டங்களிலும் வெள்ளையினத்தவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். அமெரிக்காவில் மட்டுமல்ல, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடக்கும் போராட்டங்களிலும் கணிசமான வெள்ளையினத்தவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். இவை அனைத்துமே சக மனிதர்கள் மீது தங்கள் சமூகத்தினர் காட்டும் வெறுப்பைக் கேள்விக்குள்ளாக்கும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கும் மாற்றங்கள்.
அதேசமயம், இந்தியாவில் மதம், இனம், சாதி, வர்க்கம் போன்றவற்றின் அடிப்படையில் அடக்குமுறையும், பாரபட்சமும் காட்டப்படும்போது சுய சமூக விமர்சனத்துடன் மனிதத்தைப் பாதுகாக்க எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள் எனும் கேள்வியையும் நாம் கேட்டுக்கொண்டாக வேண்டும். ‘Black Lives Matter’ எனும் ஹேஷ்டேகைப் பகிர்ந்துகொள்ளும் பலரும் நம் மண்ணில் நடந்துவரும் அக்கிரமங்கள் குறித்தும் அக்கறை கொள்வது காலத்தின் தேவை.
–இந்து தமிழ்
2020.06.15