–த.ராஜன்
முதன்முறை ‘க்ரியா’வில் நான் ராமகிருஷ்ணனைச் சந்திக்கச் சென்றபோது, என் கையில் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் எழுதிய ‘லவ் இன் தி டைம் ஆஃப் காலரா’ புத்தகம் இருந்தது. ‘ஜோனதன் கேப் பதிப்பகம்’ வெளியிட்ட கெட்டி அட்டைப் பதிப்பு அது. புத்தகத்தை வாங்கிப் பார்த்தார் ராமகிருஷ்ணன். ஜோனதன் கேப், எடித் கிராஸ்மனைப் பற்றிப் பேசியவர், கெட்டி அட்டைப் பதிப்புக்கு நம் ஊரில் இருக்கும் மதிப்பு குறித்தும் பேசினார். நான் யாரையெல்லாம் வாசித்திருக்கிறேன், அவர்களைப் பற்றிய என்னுடைய அபிப்பிராயம் என்ன என்று கேட்டார். புனைவுகள் வாசிப்பதில் மட்டுமே எனக்கு ஆர்வம் இருந்ததை உணர்ந்த அவர், “வெவ்வேறு துறை சார்ந்த புத்தகங்களை நாம் வாசிப்பதுதான் பரந்துபட்ட பார்வையை உண்டாக்கும். இலக்கிய வாசிப்புக்கேகூட அது உதவும். நல்ல இசை கேட்க வேண்டும். ஓவியம் பார்ப்பதை வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். இவை எல்லாமும் ஒன்றோடு ஒன்று பிணைந்ததுதான்” என்றார்.
நான் அவருடைய மேஜையில் இருந்த ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யைக் கையில் எடுத்துப் பார்த்தேன். தமிழுக்கு அளிக்கப்பட்ட முக்கியமான கொடைகளில் ஒன்று அது. ஒவ்வொரு தமிழரின் வீட்டிலும் இருக்க வேண்டியதும்கூட. ஆனால், அப்போது எனக்கு அகராதி பார்க்கும் பழக்கம் இருக்கவில்லை. “வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். “இணையத்தில் பார்த்துக்கொள்வேன்” என்றேன். “நல்ல விஷயம். ஆனால், நாம் ஒரு வார்த்தைக்கு அகராதியைத் தேடும்போது வேறு வார்த்தைகளும் நம் கண்ணில் படும். அவற்றையும் தெரிந்துகொள்வோம். இணையத்தில் அது நமக்குச் சாத்தியம் இல்லை, இல்லையா?” என்றவர், “ஒவ்வொருவரிடமும் அவசியம் இருக்க வேண்டியவை அகராதியும் அட்லஸும்” என்றார்.
வேற்றுமை என்றால் ஒற்று மிகும். ‘குளிர்ந்த தண்ணீர்’, ‘பார்த்த பறவை’ – இவற்றில் ஒற்று வராது. பெயர்ச்சொல், ஆங்கில வார்த்தைகள் வரும்போது ஒற்று மிகாது. ‘தங்கம் – தங்கத் தட்டு’, ‘தெய்வம் – தெய்வக் காரியம், – ‘ம்’ விடுபடும்போது ஒற்று வரும். ‘ஆக’ வந்தால் ஒற்று மிகும். ‘விழுந்துவிட்ட’ என்பதைச் சேர்த்து எழுத வேண்டும். தக்கது, முடியும், கூடாது, மாட்டாது – இவையெல்லாம் தனி வார்த்தைகள். ‘மேஜைமீது’ சேர்ந்து வரும். ‘மேஜையின் மீது’ பிரிந்து வரும். பிரச்சினை என்ன தெரியுமா? நாம் தமிழராகப் பிறந்துவிட்டதாலேயே தமிழுக்கு மெனக்கெட வேண்டியதில்லை; அது தானாக வர வேண்டும் என்று நினைக்கிறோம். உலகில் எந்த மொழியினருக்கும் அது சாத்தியம் இல்லை. நம்மூரில் அகராதி என்றால் ஆங்கில அகராதி என்றுதானே அர்த்தப்படுத்திக்கொள்கிறார்கள்? யோசித்துப்பாருங்கள் அப்படியென்றால், ஏன் ஆங்கிலேயர்கள் ஆங்கில அகராதிகளை வாங்க வேண்டும்?”
அதற்குப் பின் அடிக்கடி ராமகிருஷ்ணனைச் சந்தித்தேன். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விஷயத்தைப் பகிர்ந்துகொள்வார். ஒருநாள், ‘aeon.co’ இணையதளத்தை அறிமுகப்படுத்துவார். இன்னொரு நாள், ஸஹிருதீன்-ஃபையாஸுதீன் சகோதரர்கள், பண்டிட் ராம் நரேன், ஹரிபிரசாத் சௌராஸியா, பீம்சென் ஜோஷி, உஸ்தாத் பிஸ்மில்லா கான் குறித்துப் பேசுவார். “பிஸ்மில்லா கான் கால்ல விழணும். இவங்களைத்தான் கும்பிடணும்” என்பார். சால்வதார் டாலியின் ஓவியங்களைக் காட்டுவார். சாத்திரி எழுதிய ‘அவலங்கள்’ பிரமாதமாக இருக்கிறது என்று சொல்லி வாசிக்கப் பரிந்துரைப்பார். நாமும் ஆர்வம் காட்டினால் அவரே இரண்டொரு நாட்களில் வாங்கிவைத்திருப்பார். நாமக்கல் கவிஞரின் ‘என் கதை’, உ.வே.சா.வின் ‘என் சரித்திரம்’, ராபெர் காட்டிலிப்பின் ‘அவிட் ரீடர்’ போன்ற சுயசரிதைகளைப் பரிந்துரைப்பார். “யுவான் சுவாங் இருந்தார் இல்லையா… அவர் போன பாதையிலயே ஒரு பொண்ணு டிராவல் பண்ணி, அந்த அனுபவத்தை ‘டென் தவுசண்ட் மைல்ஸ் வித்தவுட் அ க்ளவுட்’ என்ற பெயரில் புத்தகமாக எழுதியிருக்கிறார். படிச்சுப்பாருங்க” என்பார். “ஸ்ட்ரேய்ட் எழுதின ‘வைல்ட்: அ ஜர்னி ஃப்ரம் லாஸ்ட் டு ஃபவுண்ட்’ புத்தகம் படிச்சிருக்கீங்களா? கட்டாயம் வாசிக்கணும்.”
தமிழில் ‘க்ரியா’வின் புத்தகங்கள் உருவாக்கத்தில் தமக்கென்று ஒரு உயரத்தை உருவாக்கிக்கொண்டு நிற்கக் காரணம், ராமகிருஷ்ணனுக்குள் உள்ள அபாரமான வாசகர்தான். கையடக்க அளவில் உள்ள ஒரு ஜென் புத்தகத்தைப் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து அவர் வாங்குவார். அதன் தயாரிப்பிலுள்ள நுட்பமான அம்சங்களை விவரிப்பார். கடைசியில் அந்த உரையாடல் இப்படி முடியும்: ‘சங்கத் தமிழ்க் கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தொகுப்பை இப்படி ஒரு தயாரிப்பில் கொண்டுவரும் நாள் எப்போது வரும்?’ இந்தக் கனவுதான் ராமகிருஷ்ணன், இந்தக் கனவுதான் ‘க்ரியா’.
ராமகிருஷ்ணனைப் பொறுத்த அளவில், ஒரு புத்தகத்தை நல்ல விதமாகப் பதிப்பிப்பது அந்த எழுத்தாளருக்கும் படைப்புக்கும் செய்யும் மரியாதை. மலிவு விலையில் கொடுக்கிறேன் என்கிற பெயரில், அலட்சியமாக ஒரு புத்தகத்தைப் பதிப்பிப்பது என்பது அந்தப் படைப்புக்கான அவமானம். ஒரு புத்தக உருவாக்கத்துக்கு அவர் கொடுக்கும் உழைப்பு பிரமிக்கத்தக்கது. அட்டை ஓவியம், அட்டை வடிவமைப்பு, பக்க வடிவமைப்பு, எழுத்துரு, தாள், அச்சகம் என எல்லாவற்றிலும் அவருக்குத் தனித்துவமான தேர்வு இருந்தது. மிக முக்கியமாக, உள்ளடக்க விஷயத்தில் அவர் காட்டும் அக்கறையும் அசாத்தியமானது. எடுத்துரைக்கும் விதம், மொழி, வாக்கிய அமைப்பு, புனைவுக் கட்டமைப்பு, மெய்ப்புப் பார்ப்பது என ஒரு பிரதியின் சகல பரிமாணங்களிலும் ஆழ்ந்த பிரக்ஞை அவருக்கு உண்டு. ‘க்ரியா’ புத்தகத்தை வெறுமனே கையில் ஏந்தியிருப்பதுமேகூட ஒரு தனி அனுபவம்தான்.
ராமகிருஷ்ணனுக்கு இப்போது 75 வயது ஆகிறது. இதில் 45 ஆண்டுகளை ‘க்ரியா’வுக்குக் கொடுத்திருக்கிறார். தன்னுடைய 45 ஆண்டு காலப் பதிப்புலகப் பயணத்தில் சராசரியாக ஒரு ஆண்டுக்கு மூன்று புத்தகங்களையே பதிப்பித்திருக்கிறார். ஆனால், தமிழ்ப் பதிப்பகங்களில் அவர் தொட்டிருக்கும் துறைகளைத் தொட்ட பதிப்பகம் வேறு இல்லை. அசோகமித்திரன், ந.முத்துசாமி, சுந்தர ராமசாமி, மௌனி, ஜி.நாகராஜன், எஸ்.வி.ராஜதுரை, பூமணி, திலீப் குமார், இமையம் என்று ‘க்ரியா’ வழி ராமகிருஷ்ணன் கொண்டுவந்த படைப்பாளுமைகளின் படைப்புகளும் சரி; காஃப்கா, காம்யு, அந்த்வான் து எக்சுபரி, ழாக் ப்ரெவர் என்று மொழிபெயர்த்துத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய படைப்பாளிகளும் சரி; நவீன தமிழ் வெளியின் இன்றைய கட்டமைப்பில் ஆற்றியிருக்கும் பங்களிப்பு மிக முக்கியமானது.
மருத்துவக் கட்டமைப்பு பலவீனமாக உள்ள சமூகங்களில் பயன்படுத்தத் தக்க நூலான டாக்டர் வெர்னரின் ‘டாக்டர் இல்லாத இடத்தில்’ போன்ற புத்தகங்கள் ராமகிருஷ்ணனின் சமூக அக்கறைக்கான சான்று. ‘ஹார்வர்டு பல்கலைக்கழக’த்துடன் இணைந்து ‘க்ரியா’ வெளியிட்ட, தமிழின் தொன்மையை நிறுவும் ஐராவதம் மகாதேவனின் ‘எர்லி தமிழ் எபிகிராபி’ (Early Tamil Epigraphy) ‘க்ரியா’வின் மைல்கற்களுள் ஒன்று. ‘க்ரியா’ நீங்கலாக ‘கூத்துப்பட்டறை’, ‘மொழி அறக்கட்டளை’, ‘ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்’ போன்றவற்றின் உருவாக்கத்திலும் ராமகிருஷ்ணனுக்குக் குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. இந்த அக்கறைகளுக்கு எல்லாம் ஆதாரமும் மையமும் தமிழ்.
இந்தக் கொள்ளைநோய்க் காலகட்டத்திலும் ராமகிருஷ்ணன் அசரவில்லை. கடுமையான நிதித் தட்டுப்பாடு, புத்தகக் கடைகள் – புத்தகக்காட்சிகள் ஆகிய புத்தகங்களுக்கான விநியோக அமைப்பின் சீர்குலைவு, பதிப்புத் துறையின் முன்னே எழுந்து நிற்கும் சவால்கள் இவை யாவற்றுக்கும் மத்தியில், அகராதியை விரிவுபடுத்தி அடுத்த பதிப்பைக் கொண்டுவரும் வேலைகளில் மூழ்கியிருக்கிறார். ‘தமிழுக்கான பணி யாருக்காகவும் காத்திருக்காது, எதன் பொருட்டும் நிற்காது’ என்கிறார்!
ஜூன் 18: ராமகிருஷ்ணனின் 75-வது பிறந்த நாள்