சீன அயல்துறை அமைச்சர் வாங் யி (Yi Wang) உடன் இந்திய தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் அஜீத் தோவல் (Ajit Doval) நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து கிழக்கு லடாக்கின் (Ladakh) கல்வான் பள்ளத்தாக்கு (Galwan Valley) பகுதியில் இருந்து 2 கி,மீ தொலைவுக்கு சீனா பின்வாங்கி இருக்கிறது. பதற்றத்தை தணிக்கவும், எல்லை தாவா தொடர்பாக ஆக்கப் பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவும் இந்த நடவடிக்கை பெருமளவு உதவிசெய்யும்.
உலகம் முழுவதையும் கொரோனா நோய்த் தொற்று அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. உலக அளவில் அதிக மக்கள்தொகையை கொண்ட இரு நாடுகளான இந்தியாவும், சீனாவும் மக்களை பாதுகாப்பதில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலம் இது. குறிப்பாக பொது சுகாதாரத்தை மேம்படுத்தி, மருத்துவத்துறையில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், கடந்த ஜூன் 15ஆம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருதரப்பு வீரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழப்பு ஏற்பட்டது முற்றிலும் தவிர்த்திருக்கப்பட வேண்டிய ஒரு நடவடிக்கையாகும். இதனால் எல்லைப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இந்த பின்னணியில் மோதல் போக்கு கூடாது. இருதரப்பும் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பிரதமர் மோடி நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்திலும் பெரும்பாலான கட்சிகள் இக்கருத்தையே முன்வைத்தன.
இந்நிலையில் இருதரப்புக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பயனாக சீன ராணுவம் 2.கி.மீ அளவுக்கு பின்வாங்கிச்சென்றிருப்பது, மோதல் போக்கை தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பேருதவியாக இருக்கும்.
இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு அமெரிக்கா இந்த பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக கூறியது. எந்த வகையி லும் அமெரிக்கா உள்ளிட்ட மூன்றாம் தரப்பு தலையீடு என்பது இந்தியாவுக்கோ, சீனாவுக்கோ உதவியாக இருக்காது.
இந்திய நலனை கருத்தில் கொண்டு அமெரிக்கா இந்த பிரச்சனையில் தலையீடு செய்ய முயலவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். உலக அளவில் பல்வேறு நாடுகளின் உள்நாட்டு பிரச்சனைகளில் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்தி தன்னுடைய ஆதிக்கத்தையும், அடாவடியையும் நிலைநிறுத்துவதே அமெரிக்காவின் நோக்கமாக உள்ளது.
கொரோனா நோய்த்தொற்று காலத்திலும் கூட இந்தியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டி அச்சுறுத்துகிற வேலையையே அமெரிக்கா செய்து வருகிறது. மருத்துவ உபகரணங்கள் கிடைக்க விடாமல் பறித்துக் கொள்வது, மருந்துகளை தனதாக்கிக் கொண்டு கொள்ளை லாபம் அடிக்கத் துடிப்பது என்று நயவஞ்சகப் போக்குடன்தான் அமெரிக்கா நடந்து கொள்கிறது. எல்லைப் பிரச்சனையில் புகுந்து இரு நாடுகளுக்கும் தொல்லை கொடுக்கும் நோக்கம் கொண்ட அமெரிக்காவை விலக்கி வைப்பதே இந்திய நலனுக்கு உகந்தது.
-தீக்கதிர்
2020.07.08