–கே.கே.மகேஷ்
அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்றபோது அவரிடம் ஒரு பத்திரிகையாளர், “தேர்தல் அரசியலில் குதித்த பத்தே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்திருப்பது, உங்கள் கட்சியின் தனிப்பெரும் சாதனையல்லவா?” என்று கேட்டார். அண்ணா பணிவோடு சொன்னார், “எங்களுடைய வெற்றி ஏதோ பத்தாண்டுகளில் கிடைத்த வெற்றி அல்ல. எங்கள் பாட்டன் நீதிக் கட்சி இட்ட அஸ்திவாரத்தின் மீது கட்டப்பட்ட வெற்றி இது.”
அண்ணா சொன்ன அந்தப் பாட்டன்களில் ஒருவர் மட்டும் அல்லாது, ‘திராவிட இயக்கத்தின் தாய்’ என்று போற்றப்படுபவர் டி.எம்.நாயர். இன்றைய கேரளத்தின் கள்ளிக்கோட்டை மாவட்டம், கொடுவாயூரில் சி.சங்கரன் நாயர் – கண்மினி இணையருக்கு 1869 ஜனவரி 15-ல் பிறந்தவர். தரவட்டு மாதவன் நாயர் என்பதன் சுருக்கமே டி.எம்.நாயர். அவரது தந்தை மாவட்ட நீதிபதியாகவும், பாரிஸ்டர் பட்டம் பெற்ற அவரது அண்ணன் துணை கலெக்டராகவும் பதவி வகித்தார்கள். சகோதரி ஓர் எழுத்தாளர். டி.எம்.நாயரோ காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர். எம்.டி. பட்டம் பெற்றவர். ‘ஆன்டிசெப்டிக்’ என்ற மருத்துவ இதழை நடத்தியவர்.
வீட்டில் வசதிவாய்ப்புக்குப் பஞ்சமே இல்லை. அரசியல் செல்வாக்கும் இருந்தது. விளைவாக, முப்பது வயதுக்குள்ளாகவே காங்கிரஸ் கட்சியின் கவர்ச்சியான பேச்சாளர் ஆகிவிட்டார் நாயர். 1904-ல் தொடங்கி தொடர்ந்து 12 ஆண்டுகள் சென்னை நகராட்சி கவுன்சிலராகப் பொறுப்புவகித்தார். 1912-ல் சென்னை மாகாண உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகவும் பதவி வகித்தார். ஆனாலும், அவரால் அன்றைய காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அனைவருக்கும் சம மதிப்பும் மரியாதையும் கிடைக்க வேண்டும் என்ற அவரது எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையில், காங்கிரஸை விட்டு வெளியேறி, தியாகராயருடன் இணைந்து 1916-ல் ‘தென்னிந்திய நல உரிமைச் சங்க’த்தைத் தொடங்கினார். இந்த அமைப்புதான் இன்றைய திராவிடக் கட்சிகளின் முன்னோடி.
சட்டமன்றத்திலும் அரசுப் பணிகளிலும் கல்வி நிலையங்களிலும் பிராமணர்கள் ஆதிக்கம் மிகுந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, “அனைத்துச் சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வேண்டும்” என்று வாதிட்டார் நாயர். தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் கருத்துகளைப் பரப்புவதற்காக ஆங்கிலத்தில் ‘ஜஸ்டிஸ்’, தமிழில் ‘திராவிடன்’, தெலுங்கில் ‘ஆந்திரப் பிரகாசிகா’ நாளேடுகள் தொடங்கப்பட்டன. ‘ஜஸ்டிஸ்’ பத்திரிகைக்கு ஆசிரியராக டி.எம்.நாயரே பொறுப்பேற்றார். அந்தப் பத்திரிகைக்குக் கிடைத்த புகழே, பின்னாளில் தென்னிந்திய நல உரிமைச் சங்கமானது, ‘ஜஸ்டிஸ் பார்ட்டி’ என்றும், ‘நீதிக் கட்சி’ என்றும் அழைக்கப்படக் காரணமானது. மிகக் குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்த நீதிக் கட்சி, 1920-ல் சென்னை மாகாணத்தின் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால், அதற்குள்ளாக டி.எம்.நாயர் இறந்துவிட்டார். இறக்கும் தறுவாயில்கூட, தான் நம்பிய கொள்கைக்காக மிகக் கடுமையாக உழைத்தவர் அவர்.
மாண்டேகு – செம்ஸ்போர்டு குழுவினரின் இந்திய அரசியல் நிர்வாகச் சீர்திருத்த அறிக்கையில் (1919), பிராமணரல்லாத மக்களின் நல்வாழ்வுக்கான சலுகைகள் இடம்பெறாமல் போனது. அந்த உரிமைகளைப் பெற பிரிட்டிஷாரிடம் நேரடியாக முறையிட முடிவெடுத்த நாயர், லண்டன் புறப்படத் தயாரானார். இதை விரும்பாத சில அமைப்புகள், நாயருக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டை ரத்துசெய்யும்படி சென்னை ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்தன. சிகிச்சைக்காகச் செல்வதாகக் கூறி, மருத்துவச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து 1918 ஜூன் 19-ம் தேதி கப்பல் மூலம் லண்டன் போய்ச் சேர்ந்தார் நாயர். அங்கே அவரது வருகைக்காகக் காத்திருந்த பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி ஒருவர், “சிகிச்சைக்கு மட்டுமே அனுமதி. இங்கிலாந்தில் எந்த இடத்திலும் எதைப் பற்றியும் பேசக் கூடாது” என்ற தடை உத்தரவை அளித்தார். தனது பிரிட்டன் நண்பர்கள் மூலம் அந்தத் தடையை உடைத்த நாயர், பிரிட்டன் நாடாளுமன்றத்திலேயே தனது வகுப்புரிமை கோரிக்கையை முன்வைத்தார்.
மகிழ்ச்சியோடு தாயகம் திரும்பிய நாயருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 16.5.1919 அன்று வெளியான மாண்டேகு – செம்ஸ்போர்டு கமிட்டி பரிந்துரையில், பிராமணரல்லாதோருக்கு எவ்வித வகுப்புவாரி பிரதிநிதித்துவமும் அளிக்கப்படவில்லை. எனவே, மீண்டும் நாயர் தலைமையில் ஒரு குழுவை லண்டனுக்குப் பேச்சுவார்த்தைக்கு அனுப்ப நீதிக் கட்சி முடிவெடுத்தது. நீரிழிவு மற்றும் இதய நோயால் அவதிப்பட்ட நிலையிலும்கூட, சென்னையிலிருந்து பம்பாய்க்கு ரயிலில் சென்று அங்கிருந்து கப்பல் மூலம் லண்டன் போய்ச் சேர்ந்தார் நாயர். மொத்தம் 45 நாட்கள் பயணம். இதுவே இறுதி வாய்ப்பு என்பதால், பிரிட்டன் நாடாளுமன்றக் கூட்டுக் குழு திருப்தியடையும் அளவுக்கு ஆதாரங்களைச் சமர்ப்பிக்கக் கடுமையாக உழைத்தார். “மக்கள் எல்லோருடைய உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். சட்டமன்றங்களிலும் அரசுப் பணிகளிலும் அந்தந்த வகுப்புகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வேண்டும்” என்பதே அவரது இலக்கு.
அலைச்சலும் கடும் வேலை நெருக்கடியும் அவரை மேலும் நலிவுறச் செய்தது. மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். நாடாளுமன்றக் கூட்டுக்குழு நாயரின் கருத்துகளை வாக்குமூலமாகப் பதிவுசெய்ய மருத்துவமனைக்கே ஆட்களை அனுப்பத் தயாராக இருந்தபோதும் அதற்குள் இறந்துவிட்டார் நாயர். நீதிக் கட்சி ஆட்சிக்கு வரும் முன்பே நாயர் மறைந்திருக்கலாம். ஆனால், அவரது எண்ணமே ‘கம்யூனல் ஜி.ஓ.’ (1928) ஆகப் பரிணமித்தது. தமிழ்நாட்டிலிருந்து இந்தியா முழுமைக்கும் ஒளி கொடுக்கும் சமூக நீதி அரசியலுக்கு நாயரின் சமத்துவக் கனவும் ஒரு முக்கியமான காரணம்.
ஒரு மலையாளியான நாயர், அன்றைய சென்னை மாகாணம் பிரதிபலித்த தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளச் சமூகங்களின் கூட்டு சக்தியாகவே நீதிக் கட்சியைக் கனவு கண்டார். பிற்பாடு ‘திராவிட நாடு’ முழக்கம் வரை சென்ற திராவிட இயக்கத்தின் வரையறையும், தென்னிந்தியச் சமூகங்களின் கூட்டு சக்தி கற்பனையும் ஏதோ ஒரு புள்ளியில் சந்திப்பவை. நாயர் மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் என்னவாகி இருக்கலாம்? திராவிட இயக்கம் குறைந்தபட்சம் தென்னிந்தியா தழுவிய அமைப்பாகக்கூட விரிவடைந்திருக்கலாம். ஆனால், அவர் விட்டுச்சென்ற புள்ளியிலிருந்தும்கூட அது அற்றுப்போய்விடவில்லை என்பதே முக்கியமான செய்தி. இதற்குக் காரணம், இந்த மண்ணின் இயல்போடு இணைந்த ஒரு அரசியலை அவர் அடையாளம் கண்டார். அந்த வகையில், இந்திய அரசியலின் முக்கியமான தொலைநோக்கர்களில் ஒருவராக அவர் ஆகிறார்.
–இந்து தமிழ்