Site icon சக்கரம்

இலங்கைத் தேர்தல் சொல்லும் செய்தி என்ன?

கே.கே.மகேஷ்

லங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் கூடிய வெற்றியைப் பெற்றிருக்கிறார் மஹிந்த ராஜபக்ச. இலங்கை அரசியலின் மையத்திலிருந்து ஓரங்கட்டப்பட்ட பிறகு, சொந்தக் கட்சி தொடங்கிய நான்காண்டுகளில், கடந்த 25 ஆண்டுகளில் எந்தக் கட்சியும் பெறாத பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறார்கள் ராஜபக்ச சகோதரர்கள்.

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 225. அதில் 196 பேர் நேரடித் தேர்தல் மூலமாகவும், 29 பேர் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பிரதிநிதித்துவ முறையிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 113 உறுப்பினர்களைப் பெறும் கட்சி, அறுதிப்பெரும்பான்மை பெறும். இந்தத் தேர்தலில், தற்போதைய ஆளுங்கட்சியான ராஜபக்ச சகோதரர்களின் பொது ஜன பெரமுனா கூட்டணி 145 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கிற வடக்கு மாகாணத்தில் ராஜபக்சவின் கட்சி போட்டியிடவில்லை என்றாலும், சில தமிழ் அமைப்புகளை அது களமிறக்கியது. இதன் மூலமாக 5 உறுப்பினர்கள் கிடைத்திருக்கிறார்கள். ஆக மொத்தம் 150 இடங்கள்!

ரணிலின் படுதோல்வி

நம்மூர் காங்கிரஸ் கட்சியைப் போல, இலங்கையில் சுதந்திரம் பெற்றது முதலே அந்நாட்டில் செல்வாக்குடன் திகழ்ந்த ஐக்கிய தேசியக் கட்சி இந்தத் தேர்தலில் படுதோல்வியடைந்திருக்கிறது. ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கேவும் தோற்றுவிட்டார். பிரதிநிதித்துவ அடிப்படையில் மட்டும் ஒரே ஒரு சீட் கிடைத்திருக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து ஐக்கிய மக்கள் சக்தியைத் தொடங்கிய சஜித் பிரேமதாசாவுக்குத் தெற்கிலும் வாக்கு வங்கி உண்டு. ராஜபக்சவைத் தீவிரமாக எதிர்ப்பவர் என்ற முறையில், வடக்கிலும் மரியாதையுண்டு. ராஜபக்ச அணி மூன்றில் இரு பங்கு பெற விடாமல் தடுக்கும் கருவியாக அவர் இருப்பார் என்று அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவரது அணி 54 இடங்களில் மட்டுமே வென்றிருக்கிறது.

பிரதமர் ராஜபக்சவுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்த கையோடு, மரபுகளையெல்லாம் உடைக்கும் வகையில், அவர் காலில் விழுந்து ஆசி பெற்றிருக்கிறார் தம்பியும் அதிபருமான கோத்தபய ராஜபக்ச. சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, நமல் ராஜபக்ச என்று மற்ற குடும்ப உறுப்பினர்களும் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரங்களைப் பெறப்போகிறார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முக்கியப் பொறுப்புகளைக் கையாளவிருக்கும் இந்த நேரத்தில் எதிர்க்கட்சிகள் வலிமை குறைந்திருப்பது துரதிர்ஷ்டம்.

தமிழர்களின் ஒற்றுமையின்மை

தேசிய அளவில் மும்முனைப் போட்டி என்றால், தமிழர் பகுதியில் பலமுனைப் போட்டி நடந்தது. தமிழர் பகுதிகளிலிருந்து அதிகபட்சமாக 25 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். விடுதலைப்புலிகள் ஆதரவோடு உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பானது, 2004 நாடாளுமன்றத் தேர்தலில் 22 தொகுதிகளைப் பெற்றிருந்தது. தமிழர்களின் முக்கியமான பிரதிநிதியாகப் பார்க்கப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த தேர்தலில் பெற்ற 16 இடங்களையும்கூட இம்முறை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை; 10 இடங்கள் என்பதாக அதன் பலம் சுருங்கிவிட்டது.

இந்தச் சரிவுக்குப் பிரதான காரணம், கடந்த தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றும், ஆளுங்கட்சியின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணைபோனதும், தமிழர் உரிமையைப் பறிகொடுத்ததும்தான் காரணம் என்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தமிழ் அமைப்புகளிடமும் ஒற்றுமையில்லை. விளைவாக, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்களும், முன்னாள் வடக்கு மாகாண முதல் அமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கு ஒரு இடமும் மட்டுமே கிடைத்திருக்கின்றன.

முடிவுகள் சொல்லும் செய்தி

தமிழர்களால் தேசிய நீரோட்டத்திலும் கலக்க முடியவில்லை, ஒன்றுபட்டு நின்று அரசியல் அதிகாரத்தையும் பெற முடியவில்லை என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து வெறுமனே 15 தமிழர்கள் மட்டுமே இம்முறை தேர்வாகியிருக்கிறார்கள். மலையகத்தில் வென்றவர்களையும் சேர்த்தால், 28 தமிழ் எம்.பி.க்கள். இன்னொரு சிறுபான்மையினரான இஸ்லாமியர்களையும் சேர்த்தால் 47 பேர். “தமிழ் எம்.பி.க்கள் 28 பேரில் 13 பேர் மட்டுமே தமிழ்த் தேசியம் பேசுபவர்கள். மற்றவர்கள் எல்லாம் ராஜபக்ச, சுஜித் ஆதரவுடன் வெற்றி பெற்றவர்கள் என்பதால், அவர்களால் அவையில் சுயாதீனமாகச் செயல்படக்கூட முடியாது. அடுத்த 5 ஆண்டுகளில் சிறுபான்மையினரின் இருப்பு பெரும் கேள்விக்குள்ளாகும். தமிழ்த் தேசிய உணர்வுகள் இனி மேலும் மழுங்கடிக்கப்படும்” என்கிறார் இலங்கை ஊடகவியலாளர் இரா.மயூதரன்.

ஏற்கெனவே, தமிழர்களின் பிடியிலிருந்து நிர்வாகரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் கிழக்கு மாகாணம் பறிபோய்விட்டது. வடக்கு மாகாணத்தையும் பெரும்பான்மை அரசியல் கையகப்படுத்துவதற்கான தொடக்கப் புள்ளியாக இந்தத் தேர்தல் முடிவுகளைப் பார்க்கலாம். “தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இனி கூற முடியாது. இனி ஆதரவுக்காக யாரும் எங்களை நிர்ப்பந்திக்க முடியாது. அரசமைப்புச் சட்டத்தில் எந்தத் திருத்தத்தையும் மேற்கொள்ள மக்கள் எங்களுக்குப் பெரும்பான்மை தந்திருக்கிறார்கள்” என்று ராஜபக்சவின் கட்சி பகிரங்கமாகச் சொல்லியிருப்பது சர்வதேசச் சமூகம் கவனிக்க வேண்டிய விஷயம்.

19-வது திருத்தம் என்னாகும்?

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் உச்சத்தில் இருந்தபோது ராஜபக்ச, இலங்கை அரசமைப்புச் சட்டத்தில் 18-வது திருத்தத்தைக் கொண்டுவந்தார். அதன்படி, இலங்கை அதிபராக ஒருவர் இருமுறை மட்டுமே இருக்க முடியும் என்ற விதி நீக்கப்பட்டது. அதிபருக்குக் கூடுதல் அதிகாரம் தருவதற்கும் வழிவகுக்கப்பட்டது. ஜனநாயகத்திலிருந்து சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்வதற்கான இந்த முயற்சிக்குத் தடைபோடும் வகையில், அடுத்து வந்த ஆட்சியாளர்கள் 19-வது சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தார்கள். ஆனால், இந்தத் தேர்தலிலோ இலங்கை பெரிய ஆபத்தில் இருப்பதைப் போலவும், “தேசியப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமெனில் அரசமைப்புச் சட்டத்தைத் திரும்பவும் திருத்தியே ஆக வேண்டும்; குறைந்தது 20 ஆண்டுகளுக்கு நாங்கள் ஆட்சியில் தொடர வேண்டும்” என்றும் ராஜபக்ச சகோதரர்கள் பிரச்சாரம் செய்தார்கள். மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் அவர்கள் வென்றிருக்கும் சூழலில், சொன்னபடியே அவர்கள் சட்டத்தைத் திருத்தவும்கூடும். கூடவே, 13-வது சட்டத் திருத்தத்தையும் அவர்கள் ரத்துசெய்யக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. அது, 1987-ல் ஏற்பட்ட இந்திய இலங்கை அமைதி உடன்படிக்கையைத் தொடர்ந்து நடந்த திருத்தம். அந்தத் திருத்தம்தான் இலங்கையில் மாகாண அரசுகளைத் தோற்றுவித்தன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களுக்கு ஓரளவுக்கேனும் அதிகாரம் கிடைத்தது. இப்போது அதுவும் கேள்விக்குறியாகியிருக்கிறது.

இலங்கையில் நீடித்த அமைதிக்கு இரு தரப்பு பேச்சுவார்த்தையே ஒரே வழி; அதேசமயம், அந்தப் பேச்சுவார்த்தையில் கொஞ்சமேனும் தமிழர்கள் பேர சக்தியோடு பேச தமிழ் மக்கள் இடையே ஒற்றுமை முக்கியம். ஆக, இந்தத் தேர்தல் முடிவு அந்தப் பேர சக்தியைக் குறைத்திருப்பது தெரிகிறது.

(இந்தியாவின் முன்னணி ஆங்கிலப் பத்திரிகையான THE HINDU குழுமத்தைச் சேர்ந்த, தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ‘இந்து தமிழ்’ பத்திரிகையினது இலங்கைத் தேர்தல் தொடர்பான பார்வை எப்படியுள்ளது என்பதை விளக்குவதற்காக இக்கட்டுரை வெளியிடப்படுகின்றது)

Exit mobile version