Site icon சக்கரம்

யானைகள் வழித்தடம் மாறுவது யாரால்?

திருநாரணன்

லகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு நம் பாரதம். மக்கள் தொகை பெருக்கத்தில் முதல் இடத்தை தொட்டுவிடும் தூரத்தில் உள்ளோம். ஆனால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறியீட்டில் 101வது இடத்தில் உள்ளோம். மக்கள் தொகை பெருகப் பெருக பாரதத்தின் பரப்பளவில் எந்தவிதமான மாற்றமும் வரப்போவதில்லை. மாறாக ஆக்கிரமிப்புகள் தான் அதிகரிக்கும்.

அசுர வேகத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு, வேலை வாய்ப்பு, நீர் ஆதாரங்கள், தொழிற்சாலைகள், போக்குவரத்து வசதிகள் அனைத்தையும் உருவாக்க வேண்டிய நிர்பந்தத்தில் தள்ளப்படுகிறோம். இதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் நாம் பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட வனப்பகுதிகளை இழந்து வருகின்றோம். 2003ம் ஆண்டு வன கணக் கெடுப்புப்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் நாம் இழந்த வனப்பகுதியின் பரப்பளவு 26 ஆயிரம் சதுர கிலோ மீட்டர். இந்த இழப்பு வனங்களையே பூர்வீகமாக கொண்ட காட்டுயிர்களுக்கு மட்டுமல்லாமல், மனித இனத்திற்கும் பேரழிவை உண்டாக்கும்.இந்தியாவின் புவியியல் பரப்பளவு 1997ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி 32,87,263 சதுர கிலோ மீட்டர் ஆகும்.

இந்த பரப்பில் பாதுகாக்கப்பட்ட பரப்பளவு (சரணாலயங்களும், தேசிய பூங்காக்களும்) 1,52,957.95 ச.கி.மீ., அதாவது 4.66 சதவீதம். சிறந்த காட்டுயிர் பேணுதலுக்கு பாதுகாக்கப்பட்ட பரப்பளவு குறைந்தபட்சம் 5 சதவீதமாக இருப்பது அவசியம்.வனப் பகுதிகள் சுருங்கி வருவதால் மக்களைச் சார்ந்த முன்னேற்றத்திற்கு உதவும் எந்தவிதமான திட்டங்களானாலும் அதில் கடுமையாக பாதிக்கப்படுவது காட்டுயிர்களே. மனிதன், தான் வாழ வனம், வனத்தைச் சார்ந்த இடங்களுக்குள் நுழைவதால், காட்டுயிர்களின் உணவுச்சங்கிலி பல காரணங்களால் துண்டிக்கப்பட்டு, விளை நிலங்களுக்குள் வேறு வழியின்றி மேய்ச்சலுக்காக வருகின்றன.

இந்த தருணத்தில் தான் காட்டுயிர்களுக்கும், மனிதர்களுக்கும் இடையே பிணக்கு ஏற்படுகிறது. இந்த பிணக்குகளில் அதிகமாக பாதிக்கப்பட்டது அழியும் பேருயிர்களான யானைகள். கடந்த 1991ம் ஆண்டிலிருந்து “புராஜெக்ட் எலிபேன்ட்’ என்ற செயல்திட்டம் அமைத்து பெருமளவு யானைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இதர காட்டுயிர்கள் மனித பிணக்குகளால் கொடூரமான முறையில் பாதிப்புகளுக்கு தள்ளப்பட்டு வருகின்றன.

ஆதார உயிரினம்: தனது வாழிடத்தை எந்தவொரு விலங்கு மாற்றியமைக்கிறதோ, அந்த விலங்கே ஆதார உயிரினம் என விலங்கியல் கூறுவது யானைக்கு மிகப் பொருத்தம். யானை வாழத் தகுதியுடைய ஒரு வாழிடம். அதற்கு மட்டுமல்லாமல் மான், புலி, பறவைகள், பூச்சிகள் உள்ளிட்ட பல உயிர்களுக்கும் அருமையான வாழிடமாக அமைகிறது. அங்கு பல வகை தாவரங்கள் செழித்திருக்கும். இருப்பினும், யானைக்கு மற்ற நிலவாழ் உயிரினங்களை விட மிகப் பெரிய மேய்ச்சல் காடுகள் தேவைப் படுவதால் வாழிடம் குறைவதோ அழிவதோ முதலில் இவற்றைத் தான் பாதிக்கிறது.இந்தியாவில் 26 ஆயிரம் யானைகள் இருப்பதாக கணக்கிடப் பட்டுள்ளது. தென்னிந்தியாவில் யானைகளின் எண்ணிக்கை, 14 – 15 ஆயிரம் வரை உள்ளது. இதில், எட்டாயிரம் யானைகள் நீலகிரி உயிரியல் காப்பகத்தில் உள்ளன. இவை ஆண்டிற்கு 800 சதுர கிலோ மீட்டர் வரை உணவிற்காகவும், நீருக்காகவும் பயணிக்கின்றன.

யானைகள் தனித்து வாழும் விலங்கல்ல. 15, 20 என கூட்டமாகவே வாழும். ஒரு யானைக்கூட்டம் நிரந்தரமாக ஒரே இடத்தில் தங்கி வாழும் பண்புடையதல்ல. சுற்றித் திரியும் வாழ்க்கையைக் கொண்டது. தங்களுக்கென ஒரு சுற்றுப் பாதையை தேர்வு செய்து கொண்டு, அதை பயன்படுத்தும். இச்சுற்றுப்பாதை பல கிலோ மீட்டர் தொலைவு கொண்டதாகவும் இருக்கலாம். ஒரு இடத்தை அடையாளப்படுத்தி, அதை கணக்கிட்டு காத்திருந்தால், ஆண்டுக்கு ஒருமுறையாவது அதே பாதையில் வந்து போகும். அவ்வாறு வந்து போகும் வேளையில் அவற்றின் மேய்ச்சல் பகுதிக்கு மனிதனால் இடையூறு வரும் போது, வேளாண் பயிர் மேய்தல் போன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன. இங்கு தான் மனிதனுக்கும், யானைக்குமான பிணக்கு ஆரம்பமாகின்றது. இந்த பிணக்குகளை மட்டுப்படுத்துவதற்கு யானைகளின் வழித்தடங்களை பேணுதலே சிறந்த வழிமுறையாகும். இதன்மூலம், மற்ற உயிரினங்களின் வாழ்வு சிறக்கவும் எல்லாவற்றிற்கும் மேலாக மனித உயிர் சேதமும் பெருமளவு குறைக்கவும் வழிவகுக்கும்.

இரு வேறு வாழிடங்களில் இருக்கும் யானைகளை இணைக்கும் சிறிய பாதை தான், “யானைகளின் வழித்தடம்’ என்கிறோம். இவ்வழித் தடத்தை யானைகள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பயன்படுத்துகின்றன. இந்த பயணத்தைத் தான் நாம், “வலசை போதல்’ (migration) என்கிறோம். யானைகளின் வாழ்விடமாக இருந்த அடர்ந்த காடுகள் இன்று பல்வேறு காரணங்களினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, சிதறிப்போய் சுருங்கி யானைகள் பயணம் செய்வதற்கே முடியாமல் போகிறது. இந்த வழித்தடங்களில் பெரும்பாலானவை வனப்பகுதிகள் என்ற நிலையிலிருந்து இன்றைக்கு வருவாய் நிலங்களாக மாற்றப் பட்டுள்ளன. எனவே, வருவாய் நிலங்களாக மாறிய வனப்பகுதியில் யானைகளின் வழித்தடங்களை மீட்டெடுத்து, மீண்டும் அவற்றை யானைகளிடமே ஒப்படைக்க வேண்டியது நமது கடமை.தென்னிந்தியாவில் மட்டும் 30 யானை வழித்தடங்கள் இருக் கின்றன. பெரும்பாலான வழித்தடங்கள் நீலகிரி உயிரியல் காப்பகத்தில் உள்ளன. அவற்றில், 65 சதவீதம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாகவும், மீதி 35 சதவீதம் தனியார் மற்றும் வருவாய் நிலங்களாகவும் உள்ளன.

இந்த வழித்தடங்களை பேணுதலின் மூலம் 8,000 யானைகளின் சூழலியல் காப்பாற்றப்படுகின்றன. இந்த யானை வழித்தடங்களை பேணுதலினால், யானை இனப்பெருக்கத்தின் மூலம் தன்னுடைய மரபணுக்களை மற்ற கூட்டங்களுக்கு ஆண் யானைகள் எடுத்துச் செல்ல முடியும். மேலும், யானைக் கூட்டங்கள் தங்கள் உறவினர்களுக்குள்ளேயே இனப்பெருக்கம் செய்து, அதன் வீரியத்தையும், இனத்தையும் அழித்துக் கொள்ளும் நிலையில் இருந்து காப்பாற்றவும் முடியும்.

வருங்கால சந்ததி பாதிக்கும்: யானை – மனித பிணக்குகளில் பெரும்பாலும், மனிதனுடைய பங்கு மிகவும் அதிகமாக உள்ளது. இன்று நடந்து வரும் யானைகளின் இறப்பு மனிதனுடைய வருங்கால சந்ததியரை பாதிக்கும் என்ற விழிப்புணர்வு இல்லாமையே காரணம். யானைகள் வாழும் வனத்தின் அருகில் தரிசு நிலங்களாக இருந்ததை இன்று பம்பு செட்டுகள் மூலம் நீர்பாய்ச்சி விளைநிலங்களாக மாற்றி கரும்பு போன்றவற்றை சாகுபடி செய்வதால் யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து விடுகின் றன. மனிதன் ஏற்படுத்தும் காட்டுத் தீயினால் வனத்தில் உள்ள இயற்கையாக கிடைக்கும் யானைகளின் உணவான தாவரங்கள் அழிந்து, எந்த சூழலிலும் வளரக்கூடிய களைகளும் வேறு சில தாவரங்களும் வளர்ந்து வருவதால், உணவு கிடைக்காத நேரத்தில், அவை வெளியே வருகின்றன. பல சரணாலயங்களில் இரண்டு லட்சம் வளர்ப்பு மாடுகள் மேய்ச்சலுக்கு வருவதால், யானைகளின் வாழ்விடம் சீரழிந்து, உணவு பற்றாக் குறை ஏற்பட்டு, வனத்திலிருந்து வெளியேற, பெரிய காரணமாக அமைகிறது.யானைகளுக்கு நன்மை செய்வதாக நினைத்து, அதன் வாழ்விடங்களில் அபரிமிதமான செயற்கை நீர்நிலைகளை உண்டாக்குவதன் மூலம் யானைக் குட்டிகள் இறக்க நேர்கின்றன. இந்த செயற்கை நீர்நிலைகளால் யானைக் கூட்டம் அதிகமாகி, யானைகளின் பருவகால வலசைகள் பாதித்து, யானைக் கூட்டம் வெளியே வர ஆரம்பிக்கிறது.

யானைக் கூட்டம் விவசாய நிலங்களில் வருவதால் சேதம், பாதிப்பு, நஷ்டம், சில நேரங்களில் உயிர் பாதிப்பு ஏற்படுவதுண்டு. இதுபோன்ற நேரங்களில் மீண்டும் மனிதன் தான்தான் மேலோங்கியவன், அவன் சொல்படிதான் காட்டு யானைகள் நடந்து கொள்ள வேண் டும் என்று நினைத்து, யானைகளை வெளியேற்றுவதை விட, அதை துன்புறுத்துவது தான் அதிகமாக உள்ளன. யானைகளை மீண்டும் காட்டுப்பகுதிக்கு விரட்டுவதற்கு வனத்துறையினர் முயற்சி செய்து கொண்டு இருக்கும்போதே, அங்கிருக்கும் யானைக் கூட்டத்தை விட பல மடங்கு மக்கள் கூட்டம் சேர்ந்து கூச்சல் போடுவது, கல்லால் அடிப் பது, வெடிகள் வைப்பது மற்றும் தாரை போன்ற சத்தங்கள் எழுப்புவது ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதுபோன்ற தருணங்களில் அமைதி காத்து, யானைகளுக்கு சிந்திக்க நேரம் கொடுத்தால், அவை அந்த வழித்தடத்திலேயே வனத்திற்குள் சென்றால் தான் மீண்டும் வருவது தடுக்கப்படும். அதன் தடத்தை மாற்றி முடுக்கிவிட்டால், வேறு விளை நிலங்களுக்குள் சென்று விடும். மேலும், யானைகளின் வழித்தடங்களில் உயர் மின் அழுத்த வேலியாகவோ, ரயில்வே இருப்பு பாதையாகவோ, கல்வி நிறுவனங்களாகவோ, ஆசிரமங்களாகவோ இருக் கும் பட்சத்தில் யானைகள் தம்முடைய வழித்தடத்தை கடக்க முடியாமல், செய்வதறியாது ஊருக்குள் புகுகின்றன. யானைகள் மக்களாலும், சில இடங்களில் மக்கள் யானைகளாலும் கொல்லப்படும் நிலை அதனால் உருவாகிறது.

தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள யானை வழித்தடங்களை நேரில் பார்த்து, அதை பராமரித்து வரும் உயிரியலாளர்களை சந்தித்து, யானைகளின் வழித்தடத்தின் அவசியத்தை தெரிந்து கொண்டோம். நேரில் பார்த்தபோது அனைத்து வழித்தடங்களிலும் யானைகள் நன்கு பயணம் செய்திருப்பது தெரிந்தது. எனவே, யானைகளின் வழித்தடங்களை பேணுதலின் மூலம், அழிந்து வரும் யானைகளை காப்பாற்ற முடியும். மேலும் யானை – மனித பிணக்குகளை குறைக்க முடியும். யானைகளின் வாழ்விடங்களை இணைக்கும் யானை வழித்தடங்கள் வருவாய் நிலங்களாக இருந்தாலும், அதற்காக மக்களிடம் முறையாக அணுகி உரிய முயற்சிகளை மேற் கொண்டால், இந்த நிலங்களை மீண்டும் வனப்பகுதிகளாக மாற்ற முடியும். இங்கு யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே அடிக்கடி ஏற்படும் பிணக்குகள் முடிவிற்கு வரும்.இத்தகைய முக்கியமான யானை வழித்தடங்களை பாதுகாக்க மாநில மற்றும் மத்திய அரசுகள் நாடு முழுவதும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அவை வெற்றி பெற வேண்டும்.

மூன்று ஆண்டுகளாக ஆய்வு “இயற்கை அறக்கட்டளை” எனும் பெயரில் இந்திய அறக் கட்டளை சட்டம் எண்;113 /2003 இன் மூலம் பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும். அறக்கட்டளையின் முக்கிய பணிகளாக காட்டுயிர் பேணுதல் மற்றும் சுற்றுச்சூழல் பற்றியதாகும்.கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த அமைப்பு ஆய்வு செய்து வரும் பகுதியில் ஜனவரி – பிப்ரவரி மாதங்களில் ஒரு யானைக் கூட்டம் தவறாமல் வந்து செல்கிறது. யானைகளின் வருகை, அதனுடைய வழித்தடங்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் நீலகிரி உயிரியல் காப்பகத்திற்கு தொடர்ந்து சென்று குழுவாக பார்வையிட்டு ஆய்வு செய்கிறோம்.இவ்வாறு “தி நேச்சர் டிரஸ்ட்’ கே.வி.ஆர்.கே.திருநாராயண் கூறினார்.

இந்தியாவின் காட்டுயிர் வளம் : இந்தியாவில் 75 ஆயிரம் வகையான உயிரினங்கள் உள்ளன. அதில், 340 வகை பாலூட்டிகளும், 1,200 வகை பறவைகளும், 420 வகை ஊர்வனங்களும், 140 வகை நீர்நிலை வாழ்விகளும், 2,000 வகை மீன்களும், 50 ஆயிரம் வகை பூச்சிகளும், 4,000 வகை நத்தை முதலியனவும், இதைத் தவிர முதுகெலும்பில்லா உயிரினங்களும் உள்ளன. உலகில் 12 மெகா டைவர்சிட்டியில் இந்தியாவும் ஒன்றாகும். உலகின் மிக முக்கியமான காட்டுயிர் வாழ்விடங்களாக கருதப்படும் 25 இடங்களில் இரண்டு இந்தியாவில் உள்ளன. 1. மேற்குத் தொடர்ச்சி மலை, 2.கிழக்கு இமாலய மலைத் தொடர். உலகின் 8 சதவீதம் உயிரினங்களைக் கொண்டது இந்தியா; உலகில் 11 சதவீத தாவர இனங்களைக் கொண்டது இந்தியா.ஒரு 40 எக்டேர் பரப்பளவில் அமைந்த வனப்பகுதி ஒன்று மனிதத் தலையீட்டால் அழியும் போது 1,500 வகை பூக்கும் செடி, கொடிகளும், 700 வகை மரங்களும், 150 வகைப்பூச்சி, புழுக்களும், 100 வகை ஊர்வனங் களும், 60 வகை நீர்நில வாழ்விகளும் அழிந்து போகின்றன என்றும், ஒரு மழைக் கானக மரம், 400 வகைப் பூச்சிகளுக்கு வாழிடமாக இருக்கிறது என்றும் ஐ.நா. வின் சுற்றுச்சூழல் அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது.

Exit mobile version