Site icon சக்கரம்

இலங்கையில் இலக்குக்குள்ளாகும் 13-வது சட்டத் திருத்தம்

மீரா ஸ்ரீநிவாசன்

வம்பர் 2019 அதிபர் தேர்தலிலும், ஆகஸ்ட் 2020 பொதுத்தேர்தலிலும் ராஜபக்ச குடும்பத்தினர் வென்ற பிறகு, இலங்கை அரசமைப்பின் இரண்டு முக்கியமான சட்டங்கள் மீது எல்லோருடைய கவனமும் குவிந்துள்ளது. ஒன்று, 19-வது சட்டத் திருத்தம்; இது அதிபரின் வானளாவிய அதிகாரத்தைக் கட்டுப்படுத்தவும் நாடாளுமன்றம், சுயேச்சையான ஆணையங்கள் ஆகியவற்றை வலுப்படுத்தவும் 2015-ல் கொண்டுவரப்பட்டது. ராஜபக்ச அரசாங்கமானது ஏற்கெனவே 20-வது சட்டத் திருத்தத்தின் வரைவை உருவாக்கி அரசிதழில் வெளியிட்டது. அதிக கவனத்துக்கு உள்ளாகியிருக்கும் இன்னொரு சட்டமானது, 1987-ல் நிறைவேற்றப்பட்ட 13-வது சட்டத் திருத்தம்; இது அந்த நாட்டின் 9 மாகாணங்களை ஆள்வதற்கு ஏதுவான வகையில் மாகாண கவுன்சில்களுக்கு அதிகாரங்களை வழங்குகிறது.

13-வது சட்டத் திருத்தம் என்ன சொல்கிறது?

1987-ல் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும், அப்போதைய இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்தனேவுக்கும் இடையிலான இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவு இந்தச் சட்டமாகும். முழு அளவிலான உள்நாட்டுப் போராக உருவாகிய இலங்கையின் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சி அது. மாகாண கவுன்சில்களின் உருவாக்கத்துக்கு வழிவகுத்த 13-வது சட்டத் திருத்தமானது சிங்களர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகள் உட்பட 9 மாகாணங்களும் சுயாட்சி மேற்கொள்ளும் வகையில் அதிகாரப்பகிர்வு கிடைப்பதற்கு உறுதிப்படுத்தியது.

கல்வி, ஆரோக்கியம், விவசாயம், வீட்டுவசதி, நிலம், காவல் துறை போன்ற பிரிவுகளில் மாகாண நிர்வாகங்களுக்கு அதிகாரம் தரப்பட்டது; ஆனாலும், நிதி அதிகாரங்களில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாகவும், அதிபருக்குக் கொடுக்கப்பட்டிருந்த அளவுக்கதிகமான அதிகாரங்கள் காரணமாகவும் மாகாண நிர்வாகங்களால் பெரிதும் முன்னேற்றம் காண முடியவில்லை. குறிப்பாக, காவல் துறை, நிலம் போன்ற பிரிவுகளில் வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள் அமலாக்கப்படவே இல்லை. ஆரம்பத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு வடகிழக்கு மாகாண கவுன்சில் உருவாக்கப்பட்டது. ஆனால், 2007-ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி இந்த இரண்டும் பழையபடி பிரிக்கப்பட்டன.

இது ஏன் பிரச்சினைக்குரியதாக இருக்கிறது?

13-வது சட்டத் திருத்தமானது இலங்கையின் உள்நாட்டுப் போர் நடந்த ஆண்டுகளின் பொதியைக் கணிசமாகச் சுமந்துகொண்டிருந்தது. அது ஒரே நேரத்தில் சிங்கள தேசியக் கட்சிகளாலும் விடுதலைப் புலிகளாலும் முழுமூச்சாக எதிர்க்கப்பட்டது. அளவுக்கு அதிகமான அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டதாக சிங்கள தேசியர்களும், மிகக் குறைவான அதிகாரங்களே பகிர்ந்தளிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகளும் கருதினார்கள். இந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஆயுதமேந்திய இடதுசாரி தேசியக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா உட்பட சிங்கள அரசியலில் பெரும்பான்மையானோர் இந்த ஒப்பந்தத்தையும் அதன் விளைவான சட்டத்தையும் இந்தியத் தலையீட்டின் தாக்கம் என்று கருதினார்கள்.

சக்திவாய்ந்த அதிபரான ஜெயவர்தனே இதில் கையெழுத்திட்டிருந்தபோதும் அண்டை நாடு ஒன்று தனது மேலாதிக்கத்தைத் திணித்த முயற்சியாகவே அது பரவலாகப் பார்க்கப்பட்டது. தீவிர தமிழ்த் தேசியர்கள் உட்பட தமிழ் அரசியல் உலகில் அது போதுமானதாக இல்லை என்றே கருதப்பட்டது. சமீபத்திய தேர்தலில் பின்னடைவைச் சந்திக்கும் வரை நாடாளுமன்றத்தில் வடக்கு, கிழக்கு தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்களான ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்’ உள்ளிட்ட சிலர் இதை ஒரு முக்கியமான தொடக்கப் புள்ளியாகவும், மேற்கொண்டு முன்செல்வதற்கான பாதையாகவும் கருதினார்கள்.

13-வது சட்டத் திருத்தம் ஏன் முக்கியமாகிறது?

தமிழர் பிரச்சினை குறித்துப் பேசும் ஒரே அரசமைப்புச் சட்டப் பிரிவாக 13-வது சட்டத் திருத்தம் மட்டுமே இன்றுவரை இருந்துவருகிறது. சில அதிகாரப் பகிர்வுகள் மட்டுமல்லாமல் 1980-களிலிருந்து பெறப்பட்ட சில முக்கியமான நல்விளைவுகளின் பகுதியாக இது கருதப்படுகிறது. முக்கியமாக, 1948-ல் இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து சிங்கள-பௌத்த பெரும்பான்மைவாதம் வளர்ந்துகொண்டிருக்கும் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது.

இது நீக்கப்பட வேண்டும் என்று கேட்பது யார், ஏன்?

புதிய அரசு பதவியேற்றதிலிருந்து தற்போதைய அரசில் செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கும் அமைச்சர்களிலிருந்து மாகாண அமைச்சர்கள் உட்பட பலரும் மாகாண கவுன்சில்களை ஒழித்துக்கட்ட வேண்டுமென்று கோரிவருகிறார்கள். இந்த கவுன்சில்களை ‘வெள்ளை யானைகள்’ (தேவையற்ற சுமை) என்று அவர்கள் அழைக்கிறார்கள். ஒரு சிறிய நாட்டில், மாகாணங்களை மத்திய அரசே திறம்பட நிர்வகிக்க வேண்டும் என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.

சிறுபான்மைத் தமிழர்களுக்கு எந்த அதிகாரத்தையும் பகிர்ந்தளிக்கக் கூடாது என்று சொல்லிவரும் எதிர்க்கட்சிகளும்கூட இந்த சட்டத் திருத்தத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கோருகின்றனர். ஆனால், இந்த அமைப்பைத் தீவிரமாக எதிர்த்த எல்லா அரசியல் முகாமைச் சேர்ந்தவர்களும் மாகாண கவுன்சில் தேர்தல்களில் போட்டியிட்டார்கள். அடிமட்ட அளவிலும் அமைப்புரீதியிலும் தேசியக் கட்சிகள் தங்களை வலுப்படுத்திக்கொள்ள மாகாண கவுன்சில்கள் காலப்போக்கில் உதவியிருக்கின்றன.

ராஜபக்ச குடும்பத்தினரின் நிலைப்பாடு என்ன?

2005-ல் தொடங்கி இரண்டு முறை அதிபராக இருந்த காலகட்டத்தில் மஹிந்த ராஜபக்ச 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்தப் போவதாகவும், அதில் உள்ள வழிவகைகளுக்குக் கூடுதலாக அம்சங்களைச் சேர்க்கப்போவதாகவும் அப்போது உறுதியளித்திருந்தார். வரலாற்றுச் சிறப்பு மிக்க வடக்கு மாகாணத் தேர்தலை 2013-ல் நடத்தியது வரவேற்கத் தகுந்தது. ஆனால், அவரது அரசு நிலம், காவல் துறை ஆகிய அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ளத் தயங்கியது. இலங்கையின் கடந்த கால வாக்குறுதிகள் குறித்து இந்தியா கொண்டிருந்த சந்தேகம் ஒன்றும் பெரிய ரகசியம் இல்லை.

2011-ல் விக்கிலீக்ஸ் மூலம் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்குக் காணக்கிடைத்த அமெரிக்கத் தூதரகத்தின் தந்திகள் இதை உறுதிப்படுத்துகின்றன. பிரதமர் நரேந்திர மோடி இந்தச் சட்டத் திருத்தத்தைப் பற்றி ஒன்றுக்கும் மேற்பட்ட முறை குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக, இரு தரப்பிலும் பரஸ்பரம் சந்தித்துக்கொண்டபோது. ஆனால், புவியரசியலில் நிலவும் பாதுகாப்பற்ற தன்மை அதிகரித்துக்கொண்டிருக்கும் வேளையில், இலங்கையில் உள்ள தமிழர்களின் பிரச்சினையில் இந்தியா எந்த அளவுக்குத் தலையிட முடியும் என்பது கேள்விக்குரியது என்றே இலங்கையில் உள்ள அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

© தி இந்து, தமிழில்: ஆசைதமிழர் பிரச்சினை குறித்துப் பேசும் ஒரே அரசமைப்புச் சட்டப் பிரிவாக 13-வது சட்டத் திருத்தம் மட்டுமே இருந்துவருகிறது. சில அதிகாரப் பகிர்வுகள் மட்டுமல்லாமல் 1980-களிலிருந்து பெறப்பட்ட சில முக்கியமான நல்விளைவுகளின் பகுதியாக இது கருதப்படுகிறது. முக்கியமாக, சிங்கள-பௌத்த பெரும்பான்மைவாதம் வளர்ந்துகொண்டிருக்கும் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது!

-இந்து தமிழ்
2020.09.09

Exit mobile version