கி.ரா.அடிப்படையில் ஒரு விவசாயி தான். நாற்பது வயசுக்கு மேல் தான் எழுதத்துவங்கினார் என்பது பலரும் அறியாதசெய்தி. இடைச்செவல் கிராமத்தில் விவசாயசங்கத்தை உருவாக்கியவர். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர்.தமிழ் இலக்கியத்தில் விவசாயிகளின் பாடுகளை இவர் அளவிற்கு வேறு யாரும் நுட்பமாகபேசி இருப்பார்களா என தெரியவில்லை. ஆவாரம்பூ செடியை இடைக்காட்டார் சித்தர் எப்படி பயன்படுத்தினார் என்று திம்மய நாய்க்கர்கதையாய் சொல்லும்போது ( கிடை), ஆட்டுக்குட்டி மாதிரி நாம் திம்மய நாய்க்கர் பின்னாலேயே போவோம்.
பஞ்சம் வந்ததுன்னா, ஆவாரம் செடி மட்டுமேமுளைக்கும். மத்ததெல்லாம் முளைக்காதுன்னு அவர் சொல்லும்போது வாய்மூடாமல் கேட்போம்.கவண் கல்லுடன் கிராமத்தில் திரியும் திருவேதி நாய்க்கர் ட்ட (பிஞ்சுகள்) பறவைகள் பற்றியஞானம் அபாரம். வல்லயத்தான் பறவையின் விஷேசத்தை சொல்வார். பறவை வேட்டையாடுபவர் என்றபோதிலும், பயிர் பச்சைகளை கெடுக்கும் பூச்சி புழுக்களை பிடித்து தின்னும் பறவைகளை கொல்ல மாட்டார். அவருக்கு என்றுசில தர்ம நியாயங்கள் உண்டு. பழங்களையும் தானியங்களையும் உண்ணும் பறவைகளின் மாமிசமே ருசியாக இருக்கும் என்று ஒரு செய்தியை சொல்வார்.கரிசல் காட்டு விவசாயி துரைசாமி நாயக்கரின் அயராத உழைப்பைப் பற்றி தெரிஞ்சாகணும் என்றால் “ கரிசல்காட்டில் ஒரு சம்சாரி “ குறுநாவலை படிக்கணும். ஒத்தைக்கொம்பு காளைமாட்டை வாங்கி, கூட்டு மாடு சேர்த்து உழவடித்து, அது பின்னடைய ஆரம்பிக்கும் நேரம் பார்த்து, நுகத்தடியின் சரிமத்தியில் இருக்க வேண்டிய ஏர்க்காலை கூட்டு மாடான காங்கேயம் காளையின் பக்கத்தில் தள்ளிப் பூட்டி விடுவாராம்.
ஒத்தைக்கொம்பு மாடு பல வருஷங்கள் ஈடுகொடுத்து வந்தது என்று சொல்வார்.விவசாயிகளுக்கு கிணறு தோண்ட அரசு கடன்தருவது என்பது எவ்வளவு பெரிய ஏமாற்று வித்தைஎன்பதை “மாயமான்” கதை சொல்லும்.மழைபொய்த்த காலங்களில் கூட, ஏழை விவசாயி, வீட்டுத்தீர்வை கட்டவில்லை என்று சொல்லி, வீட்டின் வாசல்கதவை ஜப்தி செய்துஎடுத்துச்செல்லும் அரசு எந்திரத்தின் கோர முகத்தை “ கதவு “ சிறுகதையில் சொல்லி இருப்பார்.
அவுரி செடியில் இருந்து நீலம் எடுக்கப்பட்டுவெளிநாட்டிற்கு அனுப்பப்படும். அதெல்லாம் ஒரு காலம். இயற்கை சாயமான அவுரி செடிகளை பயிரிட வேண்டும் என்று வெள்ளைக்காரர்கள் ஆண்டபோது கட்டாயப்படுத்தியதாக சொல்வார்கள். வங்காளத்திலும், தமிழ்நாட்டிலும் அவுரி அதிகமாக பயிரிட்டார்கள். அதற்குதண்ணீர் அதிகம் தேவை இல்லை. கரிசல்காடுகளில் மழை அதிகம் இருக்காது என்பதால், அவுரிசெடிகள் அதிகம். நல்ல விலையும் கிடைத்தது.அப்படிப்பட்ட அவுரி பயிரிட்ட விவசாயியின் கதையை “ அவுரி “ என்ற கதையில் சொல்லிஇருப்பார். அதற்கு போதிய விலை கிடைக்காமல் தாசரி நாயக்கரும் அவரது சம்சாரமும் குப்பைக்குழியில் கொண்டு கொட்டும்போது படிப்பவர் நெஞ்சு பதைபதைக்கும்.அதில் ஒரு உரையாடல் வரும்.வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகுற ஒரு பொருள் விஷயத்தில் சர்க்கார் இப்படி அக்கறை இல்லாம இருக்கே. இதை உண்டாக்குற சம்சாரிகளை தலையிலே கையை வைச்சு உட்காரும்படியா பண்ணீட்டதே? என தாசரி நாய்க்கர் புலம்பும்போது, அவரது நண்பர் கோயிந்தசாமிசொல்வார் : “நம்ம சர்க்கார்ன்னு ஒன்னு புதுசா வரணும்”
கதை முடியும்போது, “ இது சரியில்லை..இப்படி செம்மறியாடுகளைப் போல சம்சாரிகள், வருகிற துன்பங்களையெல்லாம் சகித்துக்கொண்டு தலையை தொங்கப்போட்டுக்கொண்டு கிடப்பது முறையில்லை. ஏதாவது செய்யணும்..செய்தே ஆகணும்..” என்று தாசரிநாய்க்கர் தீர்மானித்தார். என்று முடியும்.அது தான் கி.ரா.மழைக்கு மட்டுமே பள்ளிக்கூடம் ஒதுங்கிய கி.ரா.வை, புதுச்சேரி பல்கலைக்கழகம் வருகைதரு பேராசிரியர் ஆக நியமித்தது.இவரது “கோபல்லபுரத்து மக்கள் “ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்து.எழுத்தாளர் கி.ரா.விற்கு சங்கீத ஞானம் அதிகம். விளாத்திகுளம் சாமிகளின் சங்கீதம் பற்றி மணிக்கணக்கில் பேசுவார். வில்லிசை கலைஞர் சாத்தூர் பிச்சைக்குட்டி அவர்களின் வில்லிசையின் மகத்துவத்தை பற்றி நெகிழ்வாக பேசுவார். காருகுறிச்சி அருணாச்சலம், ராஜரத்தினம் ஆகியோரின் இசைத்தட்டுகளை சேகரித்துவைத்துள்ளார் இவர். நாதஸ்வரம் கற்றுக்கொள்ள விரும்பி, இளமையில் நாதஸ்வரக்கலைஞரிடம் பயிற்சியும் எடுத்துள்ளார்.
ஒரு பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டிய, வட்டார வழக்கு அகராதியை , தனி ஒருவராக இருந்து, கோவில்பட்டி நண்பர்கள் சிலரின் உதவியுடன் உருவாக்கினார். அது கரிசல் வட்டார சொல்லகராதி.நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், நாட்டார் வழக்காறுகளின் சேகரிப்பாளர், நாட்டுப்புற சிறுவர் கதைகள் எழுதியவர், கடித இலக்கியம் என்ற புது வடிவத்தை தந்தவர், இந்த தொண்ணூற்றி எட்டு வயதிலும், கைப்பட கதைகள் எழுதிக்கொண்டிருப்பவர்.சமீபத்தில் இவர் எழுதிய “அண்ட ரெண்டப்பட்சி” குறுநாவல் பலத்த வரவேற்பைபெற்றது.
தமிழ் இலக்கிய வரலாற்றில், அகிலன், ஜெயகாந்தனுக்குப்பிறகு ஞானபீட விருது எவருக்கும் வழங்கப்படவில்லை.அதற்கு முற்றிலும் தகுதியானவர் எழுத்தாளர் கி.ரா.கேரளத்தின் தகழி சிவசங்கரன் பிள்ளை, வைக்கம் முகம்மது பஷீர் போல, தமிழகத்தில் பலருக்கும் வழிகாட்டியாய் திகழ்ந்து வரும் எழுத்தாளர் கி.ரா.அவர்கள் இன்னும் பல்லாண்டுகள் வாழ வேண்டும்.
தமிழ் எழுத்தாளர், நாவலாசிரியர் என அன்போடு அழைக்கப்படுபவரும், ‘கரிசல் இலக்கியத்தின் தந்தை’ எனப் போற்றப்படுபவருமான கி.ராஜநாராயணன் (Ki.Rajanarayanan) பிறந்தநாள்:செப்டம்பர் 16. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
*தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த இடைச்செவல் கிராமத்தில் வசதியான குடும்பத்தில் (16 செப்டம்பர் 1922) பிறந்தவர். ராயங்கல ஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயண பெருமாள் ராமானுஜம் என்பது முழுப்பெயர். இதைச் சுருக்கி, கி.ராஜநாராயணன் என்று வைத்துக் கொண்டார். தந்தை விவசாயி.
*ஏழாம் வகுப்பு வரை மட்டுமே பயின்றார். பிறகு, விவசாயம் பார்த்து வந்தார். 40 வயதுக்கு மேல் எழுதத் தொடங்கினார். ‘மாயமான்’ என்ற முதல் சிறுகதை 1958-ல் ‘சரஸ்வதி’ இதழில் வெளியானது. வாசகர்களிடம் அது பெரும் வரவேற்பைப் பெற்றதால், தொடர்ந்து பல சிறுகதைகள் எழுதினார்.
*கரிசல் பூமி மக்களின் வாழ்க்கை, துன்பங்கள், நம்பிக்கைகள், ஏமாற்றங்களை இவரது எழுத்துகள் விவரித்தன. சிறுகதை, குறுநாவல், நாவல், கிராமியக் கதை, கடிதம் என்று தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் முத்திரை பதித்தார்.
*வாய்மொழிக் கதை சொல்லும் மரபின் கூறுகளை தனது படைப்பின் அடிப்படை அம்சங்களாகக் கொண்டிருந்தார். வட்டார வாய்மொழி மரபு, செவ்விலக்கியக் கூறுகள், நேரடியான இதழியல் நடை ஆகிய மூன்று கூறுகளையும் கலந்து, தனக்கென தனி நடையை உருவாக்கிக்கொண்டவர்.
*பிரபல இதழ்களில் இவரது கதைகள் தொடர்ந்து வெளிவந்தன. 2007-ல் இவை அனைத்தும் தொகுக்கப்பட்டு 944 பக்கங்கள் கொண்ட ‘நாட்டுப்புறக்கதைக் களஞ்சியம்’ என்ற படைப்பாக வெளியானது. 2009-ல் மட்டும் இவரது 30 புத்தகங்கள் வெளி வந்தன. இவரது சில கதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.
*சிறுகதைத் தொகுப்புகள், 2 குறுநாவல்கள், 6 கட்டுரைத் தொகுதிகள், 3 நாவல்கள் எழுதியுள்ளார். ‘கோமதி’, ‘கண்ணீர்’, ‘கரிசல் கதைகள்’, ‘கி.ரா.பக்கங்கள்’, ‘கிராமியக் கதைகள்’, ‘கொத்தைபருத்தி’, ‘புதுவை வட்டார நாட்டுப்புறக் கதைகள்’, ‘கோபல்ல கிராமம்’, ‘புதுமைப் பித்தன்’, ‘மாமலை ஜீவா’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
*‘கிடை’ என்ற இவரது குறுநாவல் ‘ஒருத்தி’ என்ற திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. ‘‘ஒரே மூச்சில் ஒரு கதையை எழுதி முடிக்கும் வழக்கம் எனக்கு கிடையாது. எழுதியதைப் படித்து, மீண்டும் மீண்டும் அடித்துத் திருத்தி எழுதும் பழக்கம் உள்ளவன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
*பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராகப் பணியாற்றினார். நல்ல இசைஞானம் கொண்டவர். நண்பர்களுக்கு நீண்ட கடிதங்கள் எழுதுவார். அவர்கள் எழுதும் பதில் கடிதங்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பார்.
*கரிசல் வட்டார அகராதியை உருவாக்கி, வட்டார மொழிக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி என்ற பெருமை பெற்றார். ‘கோபல்லபுரத்து மக்கள்’ நாவலுக்காக இவருக்கு 1991-ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இலக்கியச் சிந்தனை விருது, தமிழக அரசு விருது, கனடா இலக்கியத் தோட்டம் வழங்கிய தமிழ் இலக்கியச் சாதனை-2016 சிறப்பு விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
*வட்டார இலக்கியத்தின் ‘முன்னத்தி ஏர்’, ‘தமிழ் எழுத்துலகின் பீஷ்மர்’, ‘தலைசிறந்த கதைசொல்லி’ என்றெல்லாம் போற்றப்படும் கி.ராஜநாராயணன் 98-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். தற்போது பாண்டிச்சேரியில் வசிக்கும் இவர், தள்ளாத வயதிலும் சோர்வின்றி எழுதி வருகிறார்.