பேரன்பு மிக்க நண்பரும் இடதுசாரி இயக்கத்தின் முக்கியத் தலைவருமான டி.லட்சுமணன் 24.8.2020 அன்று காலமானார். தோழர் டி.எல் என்று அழைக்கப்பட்ட டி.லட்சுமணன் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். அவரது தந்தை காவல்துறையில் பணியாற்றியவர். கால்நடை ஆய்வாளராக அரசுப் பணியிலிருந்தவர் டி.லட்சுமணன்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினை உருவாக்கி யதில் முக்கியப் பங்கு வகித்தவர். மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவராகச் செயல்பட்டவர். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையினை மேற்கொண்டு வந்த அற்புதமான மனிதர். அன்பு காட்டுவதில் டி.எல் அவர்களுக்கு நிகரே கிடையாது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அவரை நான் அறிவேன். அவர் செங்கல்பட்டிலிருந்து அன்றாடம் சென்னைக்கு மின்சார ரயிலில் வந்து போவது வழக்கம். சென்னை மாநகர வீதியில் நடந்தே அலையக்கூடியவர். எப்போதும் அவரது பையில் ஒரு புத்தகமிருக்கும். செங்கல்பட்டில் ரயில் ஏறியதும் படிக்கத் துவங்கிவிடுவார். இரவு வீடு திரும்பும் போதும் அது போலவே படித்தபடியே தான் பயணம் செய்வார்.
சில நாட்கள் இரவு பத்து மணி ரயிலைப் பிடித்து வீடு போய்ச் சேர நள்ளிரவாகிவிடும். ஆனால் காலை ஆறு மணிக்கு மறுபடியும் சென்னை நோக்கிக் கிளம்பிவிடுவார். வீட்டில் கோவித்துக் கொள்வார்கள். பொதுவாழ்க்கையில் இருப்பவன் ஜாலியா வீட்டில் படுத்துத் தூங்க முடியுமா என்று கேட்பார். ஏழை, எளிய மக்களின் நலனிற்காக அயராமல் பாடுபட்டவர். அரசு ஊழியர்களுக்கு என்ன பிரச்சனை என்றாலும் ஓடியோடி உதவி செய்தவர். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி, உதவித்தொகை, சட்டரீதி யான உதவிகளுக்காக நாள் முழுவதும் அரசு அலுவல கங்களின் படியேறிய மகத்தான மனிதர். பொது வாழ்க்கைக்காகத் தன்னைக் கரைத்துக் கொண்டவர்.
தோழர் டி.எல் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் வாசிக்கக் கூடியவர். இரண்டிலும் சிறப்பாக எழுதக் கூடியவர். அவரது ஐந்து புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. எனது சிறு கதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கி றார். எனது புத்தக வெளியீடுகள் அத்தனையிலும் கலந்து கொண்டிருக்கிறார். எனது நூல்களுக்கு விரிவான விமர்ச னம் எழுதியிருக்கிறார். புதிய புத்தகங்களை நான் வெளியிடுவதை உற்சா கப்படுத்தும் விதமாக வெளியீட்டுவிழாவிற்கு சில தினங்க ளுக்கு முன்பாக எனக்கு ஒரு விருந்து தருவதை வழக்க மாக வைத்திருந்தார். மிகச்சிறந்த உணவகம் ஒன்றுக்கு அழைத்துப் போய்க் குடும்பத்துடன் சாப்பிடச் செய்வார்.
தந்தையைப் போல என் மீது அன்பு காட்டிய அற்புத மான மனிதர். அவரது மறைவை எப்படித் தாங்குவேன்! வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தொலை பேசியில் அழைத்து என்ன படித்துக் கொண்டிருக்கிறேன், என்ன எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று விசாரித்துக் கொள்வார். நல்ல புத்தகங்கள் எதையாவது படித்தால் உடனே அதைப்பற்றி எனக்குத் தெரிவிப்பார். என்னோடு மட்டுமின்றி எனது மனைவி, பிள்ளைகளுடன் பேசி நலம் விசாரித்துவிட்டுத் தான் தொலைபேசியை வைப்பார்.
தோழர் எஸ்.ஏ. பெருமாள் மீது அவருக்கு அள வில்லாத பாசம். நிகரற்ற அன்பு. அவரும் டி.எல்-லை அண்ணன் என்று தான் அழைப்பார். எஸ்.ஏ. பெருமாள் உருவாக்கிய பையன் என்று என் மீதும் நேசம். மதுரையிலிருந்து எஸ்.ஏ.பெருமாள் வந்திருக்கி றார் என்றால் உடனே என் வீட்டிற்குக் கிளம்பி வந்து விடுவார். அவர்களின் தோழமை அபூர்வமானது. இரு வரும் கட்சியின் தலைவர்கள் என்ற முறையில் மாநி லக்குழு கூட்டங்களில் கலந்து கொள்வார்கள். இளை ஞர்களுக்கு எப்படி வழிகாட்டுவது என்பதே இருவ ரின் பிரதான நோக்கம். ஆயிரக்கணக்கானவர்களை இலக்கியத்திலும் பொதுவாழ்விலும் ஈடுபடச் செய்தது இருவரின் சாதனை.
உதவி கேட்டு வரும் தொலைபேசிகளை ஒருபோதும் டி.எல் தவிர்ப்பதில்லை. அது போலவே எவர் எந்த உதவி கேட்டாலும் ஓடியோடி அலைந்து எப்படியாவது அதைப் பெற்றுத் தந்துவிடுவார். நிறையத் திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார். ஒரு திருமணத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் போவதாகச் சொன்னார். நானும் உடன் சென்றேன். அந்தத் திருமண நிகழ்வில் எளிய முறையில் திருமணத்தை நடத்தி வைத்தார். கல்யாணத்திற்கு வந்து போனது உட்பட அனைத்தும் அவரது சொந்த செலவு.
பின்பு என்னிடம், இந்தப் பெண்ணின் அப்பாவிற்கு நான் தான் பெண் பார்த்துத் திருமணம் நடத்தி வைத் தேன்; பெண்ணோட அம்மா வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி. ரொம்ப ஏழையான குடும்பம். நான் தான் மாப்பிள்ளையிடம் பேசி சம்மதிக்க வைத்தேன்; இன்றைக்கு நல்லா வாழ்ந்து, பெண்ணை எம்பிஏ படிக்க வைத்திருக்கிறார்கள்; நல்ல மாப்பிள்ளை கிடைச்சிருச்சி; பொண்ணு படிக்கவும் நான் உதவி பண்ணியிருக்கேன்; காலம் எப்படி ஓடிவிட்டது பாருங்கள் என்று சொல்லிச் சிரித்தார். அவர் செய்து வைத்த நற்காரியங்கள் அவர் முன்னே வளர்ந்து நிற்பதைக் கண்டு நெகிழ்ந்து போனேன்.
இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மதிய நேரம் தொலைபேசியில் அழைத்து வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்வார். எங்களுடன் தான் மதிய உணவு சாப்பிட வேண்டும் என்பேன். சிரித்தபடியே அதுக்குத் தானே தோழர் வருகிறேன் என்றபடியே வடபழனிவரை பேருந்தில் வந்து அங்கிருந்து நடந்தே என் வீட்டிற்கு வருவார். ஏன் இப்படி வெயிலில் அலைகிறீர்கள், நானே கார் அனுப்பி உங்களை அழைத்துக் கொள்வேனே என்று கோவித்துக் கொள்வேன். நடந்து பழகிருச்சி தோழர். ஐம்பது வருஷமா நடந்துகிட்டு தானே இருக்கேன். வெயில் என்னை ஒன்றும் செய்யாது என்பார். வீட்டிற்கு வரும்போது பை நிறையத் தின்பண்டங்கள்; பழங்கள் வாங்கிக் கொண்டு வருவார். அதுவும் செங்கல்பட்டில் உள்ள பேக்கரி ஒன்றிலிருந்து கேக்கு களை மறக்காமல் வாங்கிவருவார். சில நாட்கள் ஒரு பை நிறையப் பழங்கள். மறு பை நிறையத் தின்பண்டங்கள் இருக்கும். எதற்காகத் தோழர் இவ்வளவு என்று கேட்டால் இந்தப் பை நிறையப் புத்தகங்கள் உங்க கிட்ட இருந்து கொண்டு போகணும்லே. அதுக்குப் பை வேணும் தானே என்பார்.
மாலை வரை பேசிக் கொண்டிருந்துவிட்டுக் கிளம்பும் போது அவர் படிப்பதற்காகப் பத்து இருபது ஆங்கிலப் புத்த கங்களை எடுத்துக் கொள்வார். பழைய ஆங்கிலப் படங்களை விரும்பிக் காணக்கூடியவர். ஆகவே ஒரு பென்டிரைவ்வில் பழைய ஆங்கிலப் படங்களைப் பெற்றுக் கொள்வார். ரயில் நிலையத்திற்கு நானே கொண்டு போய்விடுகிறேன் என்றால் ஒத்துக் கொள்ளவே மாட்டார். மாலையிலும் நடை. பொதுப் போக்குவரத்தில் ஏறி ரயில் நிலையம் போவதே அவரது வழக்கம். டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, செகாவ், ஹெமிங்வே, பாக்னர், காப்கா, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், போர் ஹெஸ், ருஷ்டி, கால்வினோ, மோயான், எட்வர்தோ கலி யானோ, ராபர்டோ பொலன்யோ வரை அத்தனை சர்வதேச இலக்கியப் படைப்பாளிகளையும் வாசித்தி ருக்கிறார்.
நாவல்கள் படிப்பதில் தான் அவருக்கு அதிக விருப்பம். அதுவும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நாவல்களைத் தேடித்தேடிப் படிப்பார். தமிழில் அரசியல், சமூகம் சார்ந்த கட்டுரைகளை விரும்பி வாசித்தார். தான் படித்த புத்த கங்களைப் பற்றிச் சிறிய கட்டுரைகளை எழுதுவார். கார்ல் மார்க்ஸ் ஜென்னியின் வாழ்க்கை பற்றிய Love and Capital நூலை வாசிக்கக் கொண்டு சென்றவர் கண்ணீரோடு ஒரு இரவு பேசினார். அற்புதமான பொஸ்தகம், இந்த நூலை மொழிபெயர்க்க வேண்டும் தோழர், படிக்கப் படிக்கக் கண்ணீர் வருகிறது என்றார். அந்த நூலை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். முடியும் போது மொழியாக்கம் செய்யுங்கள் என்றேன். யாராவது படிக்கிற பையனா பார்த்துக் கொடுத்து மொழியாக்கம் செய்யச் சொல்கிறேன் என்று நம்பிக்கையோடு சொன்னார். என்னிடமிருந்து கொண்டு சென்ற புத்தகங்களுக்கு அழகாக அட்டை போட்டுத் திருப்பித்தருவார். பழைய புத்தக மாக இருந்தால் பைண்டிங் செய்து தந்துவிடுவார்.
பல்வேறு சங்க கூட்டங்களுக்காக வெளியூர் செல்லும் போதும் முன்பதிவு செய்து பயணிப்பதில்லை. பொதுமக்க ளில் ஒருவராக மூன்றாம் வகுப்பு ரயில் டிக்கெட் எடுத்து போவதே வழக்கம். ஒரு முறை நான் அவரை மதுரையில் நடக்கும் புத்தக வெளியீட்டிற்கு வாருங்கள் என அழைத்தேன். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரபஞ்சன் வருகிறார், அவரோடு சேர்ந்து உங்களுக்கும் ஏசி டிக்கெட் போடுகிறேன் என்றேன். அவர் பெரிய எழுத்தாளர், நாம சாதாரணத் தோழர், இரண்டு பேரும் ஒண்ணா ஏசி கோச்சில் போகலாமா.. நானே பஸ் பிடிச்சி வந்துருறேன் என்றார். எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. அந்த நிகழ்ச்சி நடக்க இருந்த நாளில் முக்கியமான முகூர்த்த நாள். பேருந்தில் பயங்கரக் கூட்டம் திருச்சி வரை ஒரு பேருந்தில் வந்து மாறி மதுரைக்கு இன்னொரு பேருந்தில் பயணித்துக் களைத்துப் போய்க் காலை எட்டு மணிக்கு வந்திருந்தார். விடுதி அறையில் குளித்துத் தயாராகி காலை உணவு கூடச் சாப்பிடாமல் அப்படியே நிகழ்ச்சிக்கு வந்துவிட்டார். தான் பார்வையாளராகக் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு யார் இப்படி வந்து சேருவார்கள்!
நிகழ்ச்சி முடிந்தபிறகு ஒன்றாகச் சாப்பிட்டோம். பக்கத்தில் ஒரு வேலை இருக்கிறது என்று புறப்பட்டுச் சென்றார். இரண்டு நாட்கள் கழித்துத் தொலைபேசியில், உடனே சென்னை கிளம்பி வந்துட்டேன். உங்கள் புக் ரிலீஸ் அதுக்குத் தான் வந்தேன். மதுரையில் நான்கு மணி நேரம் இருந்துருக்கேன். அது போதும். உங்கள் கிட்ட சொன்னா விட மாட்டீங்க. அதான் நானே வழக்கம் போலப் பஸ் பிடிச்சி காலை நாலு மணிக்குச் செங்கல்பட்டு வந்து விட்டேன், நாளைக்குப் பார்வையற்ற மாணவர்களுக்காக ஹைகோர்ட்டில ஒரு வழக்கு இருக்கிறது என்றார். வாழ்க்கையில் எந்த வசதிகளையும் தேடிக் கொள்ளா மல் தனது உடல் உபாதைகளைப் பற்றிக் கவலைப்படா மல் தான் நேசிக்கும் மனிதர்கள் மீது பேரன்பினை வெளிப்படுத்திய அற்புதமான மனிதர் டி.எல்.
அவரைக் காண்பதற்காகவே அடிக்கடி செங்கல்பட்டு செல்வேன். பேருந்து நிலையத்தை ஒட்டிய சந்தைப்பகுதி யில் அவரது வீடு. நீண்டகாலத்தின் முன்பாகவே மனைவியை இழந்தவர். மகன், மருமகள் கவனிப்பில் வாழ்ந்து வந்தார். செங்கல்பட்டில் அவரைத் தெரியாத வர்களே இல்லை என்பேன். ஒரு முறை செங்கல்பட்டில் உள்ள சாம் டேனியல் அவர்களின் பள்ளியில் நடந்த கூட்டத்திற்குச் சென்றபோது அவரையும் அழைத்துக் கொண்டு போனேன். உடனே சாம் டேனியலுடன் நண்பராகிவிட்டார். அடுத்த சில நாட்க ளில் ஐம்பது ஆண்டுகள் சாம் டேனியலுடன் பழகியது போல உரிமையோடு அன்போடு பழகத் துவங்கினார். செங்கல்பட்டில் இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று தனது கைப்பணத்திலிருந்து செலவு செய்து கூட்டங்களை ஏற்பாடு செய்து வந்தார்.
செங்கல்பட்டுப் புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டு பேசுவதற்காகச் சென்றிருந்தேன். நீங்கள் என் வீட்டில் தான் மதியம் சாப்பிட வேண்டும் என்று சொல்லி பெரிய விருந்தே ஏற்பாடு செய்திருந்தார். செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்த நண்பர் ஜெயசீலன் ஐஏஎஸ் அவர்கள் இரவு உணவிற்கு அவர் வீட்டிற்கு அழைத்திருந்தார். தோழர் டி.எல் அவர்களையும் உடன் அழைத்துச் சென் றேன். சார் ஆட்சியாளர் தீவிர இலக்கியங்களைத் தேடித் தேடிப் படிக்கிறார் என்று வியந்து ஜெயசீலன் ஐஏஎஸ் அவர்களை மனதார பாராட்டினார். இரவு நான் சென்னை க்குக் கிளம்பும் போது செங்கல்பட்டுப் புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெறுகிறது என்று தன் வீட்டுக் கல்யாணம் நடப்பது போலச் சந்தோஷமாகச் சொன்னார். ஒவ்வொரு நாளும் புத்தகக் கண்காட்சியில் எவ்வளவு புத்தகம் விற்ப னையாகிறது என்று தெரிந்து சொல்வார். புத்தகங்கள் தான் அவரது உலகம்.
செங்கல்பட்டில் நடக்கும் தசரா விழாவினை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும். குடும்பத்துடன் வந்து விடுங்கள் என்று அழைப்பு விடுத்தார். நானும் போயி ருந்தேன். அப்படியொரு திருவிழாவை நான் கண்டதே யில்லை. மாலை முழுவதும் திருவிழாக் கூட்டத்தில் சிறு வனைப் போல உற்சாகமாக நடந்து திரிந்தார். என் பிள்ளை களுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்தார். இரவு வீடு திரும்பிய போது அவருக்கு நடக்கமுடியாதபடி கால்வலி. அதைப்பற்றிச் சிரித்தபடியே “மனசுக்கு வயசாகலை. ஆனால் உடம்புக்கு வயசாகுது தோழர், நம்ம சொன்னபடி உடம்பு கேட்கமாட்டேங்குது“ என்றார்.
தீபாவளி, பொங்கல் என்று எந்தப் பண்டிகையாக இருந்தாலும் அவரது வீட்டிலிருந்து இனிப்பும் பரிசுகளும் வந்துவிடும். பண்டிகை நாட்களில் என்னைத் தனியே அழைத்துக் கொண்டு போய் முழுநேர எழுத்தாளராக இருக்கிறீர்கள். பணக்கஷ்டம் என்றால் தயங்காமல் கேளுங்கள். என்னால் முடிந்த பணம் தருகிறேன் என்பார். இந்த உரையாடலை என் மனைவியோ, பிள்ளைகளோ கேட்டுவிடக் கூடாது என்பதற்காக ரகசியமான குரலில் சொல்லுவார். உங்கள் மனசு போதும் தோழர் என்பேன். வீட்டிற்குப் போனபிறகும் தொலைப்பேசியில் தோழர் என்ன வேணும்னாலும் தயங்காமல் கேளுங்கள். நானும் உங்கள் வீட்டில் ஒருத்தர் தான் என்பார். இந்த அன்பிற்கு என்ன கைமாறு செய்ய முடியும் சொல்லுங்கள்!
ஊரடங்கு நாட்களில் அடிக்கடி தொலைபேசியில் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார். வீட்டிற்குள்ளாகவே அடைந்து கிடந்த மனச்சோர்வு அவரது பேச்சில் வெளிப் பட்டது. உடல்நலக்குறைவும் இருந்தது. ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் மனுசன் எல்லாத்தையும் ஜெயிச்சிடுவான், இந்த வைரஸ் நோயிலிருந்து உலகம் மீண்டு வந்துரும், வழக்கம் போல உங்களைப் பார்க்க உங்கள் வீட்டுக்கு வந்துருவேன் என்று சொல்லிச் சிரித்தார்.
அந்தச் சிரிப்பின் ஓசை இன்னும் காதில் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. தோழர் டி.எல் என்ற ஒரு மாமனிதரோடு பழகியதும் நட்பு கொண்டதும் எனது வாழ்வின் பேறு . நானும் என் குடும்பமும் அவரது மறைவிற்காகக் கண்ணீர் சிந்துகிறோம். டி.எல்லின் நினைவுகள் என்றும் எங்களுக்கு நல்வழி காட்டும், சென்று வாருங்கள் தோழரே! கண்ணீருடன் விடையளிக்கிறேன்.
-தீக்கதிர்