-க.போத்திராஜ்
2020 ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு பிரிட்டன், அமெரிக்க விஞ்ஞானிகள் மூவருக்கு கூட்டாக 05.10.2020 அன்று அறிவிக்கப்பட்டது.
இரத்தத்தின் மூலம் பரவும் ஹெபாடைடிஸ் நோய், கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் அழற்சி ஆகியவற்றை உண்டாக்குவது ஹெபாடைடிஸ் சி வைரஸ்தான் என்பதை கண்டுபிடித்தமைக்காக இந்த 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
அமெரிக்க விஞ்ஞானி ஹார்வே ஜே.ஆல்டர் (வைரலாஜிஸ்ட்), பிரி்ட்டன் விஞ்ஞானி மைக்கேல் ஹாட்டன், அமெரிக்க விஞ்ஞானி சார்லஸ் எம். ரைஸ் (பேராசிரியர் ராக்கர் ஃபெல்லர் பல்கலைக்கழகம்) ஆகியோருக்கு 2020 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இந்த 3 விஞ்ஞானிகளும் ஏற்கெனவே ஹெபாடைடிஸ் ஏ, பி வைரஸ்களையும் கண்டுபிடித்திருந்தனர், இதுதான் ஹெபாடைடிஸ் சி வைரஸ் ஆய்வுக்கான முதல் படியாக அமைந்தது. இந்த ஹெபாடைடிஸ் சி வைரஸ் கண்டுபிடிப்பின் மூலம் நாள்பட்ட ஹெபாடைடிஸ் ஏற்படுவதற்கான காரணத்தை ரத்தப் பரிசோதனைகள் மூலம் கண்டறிய உதவின. கோடிக்கணக்கான மனித உயிர்களைக் காப்பாற்ற புதிய மருந்துகள் கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகளைத் தொடங்க வழிகாட்டியது.
இதற்கு முன் கடந்த 1960 ஆம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த பரூச் சாமுவேல் ப்ளூம்பெர்க் ரத்தத்தில் பரவும் ஒருவிதமான வைரஸால்தான் ஹெபாடைடிஸ் நோய் பரவுகிறது. அதுதான் ஹெபாடைடிஸ் பி எனக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்புதான் ஹெபாடைடிஸ் பி வகைக்கு மருந்து கண்டுபிடிக்க உத்வேகமாக இருந்தது. அவருக்கு 1976-ல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
2020 ஆம் ஆண்டு நோபல் பரிசின் முக்கியத்துவம்
2020-ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசின் முக்கியத்துவம் என்பது, உச்சபட்ச கவனத்துடன் செய்யப்படும் ரத்தப் பரிசோதனையின் மூலம் ஹெபாடைடிஸ் நோயைக் கண்டுபிடிக்க முடியும் என்பதாகும்.
இதுவரை ஹெபாடைடிஸ் ஏ, பி இருவகைகளுக்கு மட்டுமே தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு ஹெபாடிடைஸ் சி வைரஸுக்கு எதிராக தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க வழிகாட்ட உதவும்.
வரலாற்றிலேய முதல் முறையாக, ஹெபாடைடிஸ் சி வைரஸை இப்போதுதான் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. விரைவிலேயே உலகிலிருந்து ஹெபாடைடிஸ் சி வைரஸை அழித்து மனித குலத்தைக் காக்க முடியும் எனும் நம்பிக்கையை 3 விஞ்ஞானிகளும் விதைத்துள்ளனர். இவர்களின் கண்டுபிடிப்புகள் கோடிக்கணக்கான மனித உயிர்களைக் காப்பாற்ற புதிய மருந்துகள் கண்டுபிடிப்பையும் சாத்தியமாக்கி இருக்கிறது.
யார் இவர்கள்?
சார்லஸ் எம். ரைஸ் (Charles M. Rice)
அமெரிக்க விஞ்ஞானி சார்லஸ் எம். ரைஸ் கடந்த 1952-ம் ஆண்டு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாக்ரோமென்டோ நகரில் பிறந்தவர். கடந்த 1981இல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற ரைஸ் 1981 முதல் 1985 வரை ஆராய்ச்சியாளராகவும் பயிற்சி எடுத்தார். அதன்பின் கடந்த 1986இல் செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் யூனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசனில் ஆராய்ச்சிப் பிரிவை உருவாக்கினார்.
கடந்த 2001-ம் ஆண்டிலிருந்து நியூயார்க்கில் உள்ள ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தில் ஹெபாடைடிஸ் சி வைரஸ் குறித்த ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குநராகவும், தலைமை விஞ்ஞானியாகவும் ரைஸ் இருந்து வருகிறார்.
சார்லஸ் எம்.ரைஸ் ஆய்வின்படி, கல்லீரலில் ஹெபாடைடிஸ் நோய் வருவதற்கு முக்கியக் காரணம் ஹெபாடைடிஸ் சி வைரஸ்தான் என்று உறுதியான கண்டுபிடிப்பை அளித்தார்.
அமெரிக்க விஞ்ஞானி ஹார்வே ஜே.ஆல்டர் (Harvey J. Alter) (வைராலஜிஸ்ட்)
அமெரிக்க விஞ்ஞானி ஹார்வே ஜே.ஆல்டர் (வைராலஜிஸ்ட்), கடந்த 1935-ம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்தவர். ரோசெஸ்டர் மெடிக்கல் ஸ்கூலில் மருத்துவப் பட்டமும், சீட்டல் பல்கலைக்கழகத்திலும், ஸ்ட்ராங் மெகோரியல் மருத்துவமனையில் பயிற்சியும் பெற்றார். அதன்பின் பல ஆண்டுகள் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தில் கிளிக்கல் சென்டர் பிரிவில் ஹார்வே பணியாற்றிவிட்டு, கடந்த 1961-ல் அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தில் சேர்ந்தார்.
பிரி்ட்டன் விஞ்ஞானி மைக்கேல் ஹாட்டன் (Michael Houghton)
பிரி்ட்டன் விஞ்ஞானி மைக்கேல் ஹாட்டன் லண்டனில் பிறந்தவர். கடந்த 1977-ல் கிங்ஸ் காலேஜ் லண்டனில் முனைவர் பட்டத்தை ஹாட்டன் பெற்றார். அதன்பின் ஜி.டி.சியாரெல் நிறுவனத்தில் சிரோன் கார்ப்பரேஷன், எம்ரிவில்லி ஆகிய நிறுவனங்களில் ஹாட்டன் பணியாற்றினார். கடந்த 2010-ல் அல்பெர்டா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஹாட்டன், தற்போது கனடாவில் உள்ள கனடா எக்ஸ்லென்ஸ் வைராலஜி பிரிவில் பணியாற்றி வருகிறார்.
பிரி்ட்டன் விஞ்ஞானி மைக்கேல் ஹாட்டன், அமெரிக்க விஞ்ஞானி ஹார்வே ஜே.ஆல்டர் ஆகிய இருவரும் சேர்ந்து ஹெபாடைடிஸ் சி வைரஸின் மரபணுவைத் தனிமைப்படுத்திய உத்திக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
ஹெபாடைடிஸ் சி (Hepatitis C) என்றால் என்ன?
ஹெபாடைடிஸ் சி என்பது மனித உடலில் கல்லீரலைத் தாக்கும் வைரஸாகும். இந்த வைரஸால் கல்லீரல் பெரும் பாதிப்புக்குள்ளாகும். அமெரிக்காவில் மட்டும் 39 லட்சம் மக்கள் ஹெபாடைடிஸ் சி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் பல கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஹெபாடைடிஸ் சி வைரஸ் மனிதர்களைத் தாக்கினால் உடனடியாக அறிகுறிகள் தெரியாது. நோய் முற்றும்போதுகூட லேசான அறிகுறிகள்தான் இருக்கும். இதனாலே இந்த வைரஸ் தாக்குதல் குறித்துப் பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை. பெரும்பாலும் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து ரத்தமாற்று மூலம், உடலுறவு மூலம் பரவுகிறது.
ஹெபாடைடிஸ் சி மனிதர்களைப் பல்வேறு வகைகளில் தாக்குகிறது. இன்குபேஷன் பீரியட், அக்குயிட் ஹெபாடைடிஸ் சி, க்ரானிக் ஹெபாடைடிஸ் சி, சிர்ஹோசிஸ் (கல்லீரல்அழற்சி), கல்லீரல் புற்றுநோய் ஆகியவை ஏற்படும்.
ஹெபாடைடிஸ் சி அறிகுறிகள் என்ன?
மலம் களிமண் நிறத்தில் கழித்தல், சிறுநீர் கருமையாகச் செல்லுதல், காய்ச்சல், உடல் சோர்வு, மஞ்சள்காமாலை, மூட்டுவலி, வயிற்றுவலி, பசியின்மை, வாந்தி எடுத்தல் போன்றவை அறிகுறிகள்.
எப்படிப் பரவுகிறது?
பெரும்பாலும் ஹெபாடைடிஸ் சி வைரஸ் நோய் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய சிரிஞ்ச், நீடில் போன்றவற்றைப் பயன்படுத்துதல், பாதிக்கப்பட்டவருடன் பாலியல் உறவு கொள்ளுதல், தாயின் மூலம் குழந்தைக்கு வரலாம், பாதிக்கப்பட்டவர்களின் அந்தரங்கப் பொருட்களை மற்றவர் பயன்படுத்துதல், சுத்தமில்லாத பொருட்களால் பச்சை (டாட்டூ) குத்துதல் போன்றவற்றால் வரலாம்.
–இந்து தமிழ்
2020.10.05