டாக்டர் கே.ஹேமலதா
அகில இந்திய தலைவர் – CITU
தொழிலாளர்களின் இப்போதைய நிலைமை என்பது வழக்கமானதல்ல. நிச்சயமாக இது வழக்கத்திற்கு மாறான ஒன்றாகும். ஆனாலும், இது புதிதா? இது ‘புதிய இயல்பானதா’? அல்லது இது ‘அசாதாரணமானதா’? இன்றைய நிலைமைஎந்த வகையிலானது?இப்போதைய நிலைமையை நாம் கையாள்வதற்கு இதனைப் புரிந்துகொள்வது அவசியமாகும். மார்ச் 24 அன்று மாலை, நாடு தழுவிய அளவில் நாடகபாணியில் சமூக முடக்கத்தைத் திடீர் என்று அறிவித்ததைத் தொடர்ந்து நிலைமையில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டது. நான்கு மணி நேரத்தில் இந்த சமூக முடக்கம் அமலுக்கு வந்தது.
திடீரென்று தலைகீழான வாழ்க்கை
அதுவரையிலும், நம் நாட்டில் முறையான ஊதியம் பெற்றுவந்த கோடானுகோடி தொழிலாளர்கள், தங்கள் வாழ்க்கை கிட்டத்தட்ட பாதுகாப்பாக இருக்கிறது என்றஎண்ணத்தின்கீழ் இருந்தார்கள். அவர்கள் ஊதியம் அதிகமாக இல்லாதிருக்கலாம். அவர்களில் பெரும்பாலானவர்கள், தொழிற்சங்கங்களால் 2015 முதல் வலியுறுத்தப்பட்டுவரும் குறைந்தபட்ச ஊதியமான 15 ஆயிரம் ரூபாயைப் பெறாதவர்கள்தான். அவர்களின் ஊதியம் 15ஆயிரம் ரூபாயாக, அல்லது 12 ஆயிரம் ரூபாயாக அல்லது அதற்கும் குறைவாகவே இருந்து வந்தது. ஆனாலும், அவர்களுக்கு உத்தரவாதம் செய்யப்பட்டிருந்தது என்னவென்றால் குறைந்த ஊதியம் பெற்றுவந்தபோதிலும் அது முறையானதாக இருந்தது. தங்கள் ஊதியத்தை வைத்து, அவர்கள் தங்கள் குடும்பச் செலவினங்களைத் திட்டமிட முடியும். இதுநாள்வரையிலும் அவர்களுக்கு மிகவும் முக்கியமாக இருந்துவந்த அம்சம் என்னவென்றால், எவரொருவர் முன்பாகவும் பிச்சை எடுக்கும்விதத்தில் கையேந்தவேண்டிய நிலை இல்லாமல் இருந்தார்கள். அவர்கள் கண்ணியத்துடன் வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.
இவை அனைத்தும் திடீரென்று மாறின. கோடானுகோடிமக்கள், தங்கள் சேவைகள் தங்களுக்கு வேலையளித்துவந்த முதலாளிகளால் தேவையில்லை என்று கூறப்பட்டார்கள். சமூகம் இதுவரை அளித்துவந்த பயன்களைத் தொடர்ந்து அளிக்கமுடியாத நிலைக்கு மாறியது. இதனால் தொழிலாளர்கள் வேலையிழந்தார்கள், இதன்மூலம் தாங்கள் ஈட்டிவந்த வருவாயை இழந்தார்கள். இதுநாள்வரையிலும் கண்ணியத்தோடும், சுயமரியாதையோடும் வாழ்ந்துவந்த கோடானுகோடி மக்கள் திடீரென்று வடுப்படத்தக்க நிலைக்கு ஆளானார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணங்களைக் கட்ட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்கள், வீட்டு வாடகைகளை கொடுக்க முடியாது திண்டாடினார்கள், சாப்பாட்டைத் தவிர்த்தார்கள். இதுநாள்வரையிலும் குறைந்த ஊதியமாக இருந்தாலும், முறையாக வந்துகொண்டிருந்ததால் எவரிடமும் கையேந்தாமல், கண்ணியமாக வாழ்ந்து வந்த நிலைமை நிலைகுலைந்தது. இப்போது அவர்கள் தங்களுக்கு எவரேனும் உதவ மாட்டார்களா என்றும், எப்படி இனிவருங்காலங்களில் உயிர்வாழ்வது என்றும் தவிக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்கள் வாழ்க்கை தலைகீழாக மாறிப்போனது.
21 அல்ல, 210 நாள் கடந்தும்…
மக்கள் பிரதமரை நம்பினார்கள். கொரோனாவை விரட்ட அவர் என்னவெல்லாம் சொன்னாரோ அத்தனையையும் செய்தார்கள். எப்படி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட சமயத்தில், வேலைகளையும், வருமானத்தையும் இழந்தார்களோ அதேபோன்று இப்போதும் அவர் சொன்னதையெல்லாம் செய்தார்கள். அந்த சமயத்தில், மோடி என்ன சொன்னார்?கறுப்புப் பணம், ஊழல், பயங்கரவாதம் ஆகியவற்றிற்கு எதிராகப் போராட இது அவசியம் என்றார். அதேபோன்றே, அவர்கள் மோடிக்கும், பாஜக-விற்கும் வாக்களித்து அவர்களை அரியாசனத்தில் அமர்த்தியுள்ளார்கள். ஏனெனில், அவ்வாறு செய்வதன்மூலம், நாட்டைப் பலவீனப்படுத்துவதற்காக செயல்பட்டுக்கொண்டிருக்கும், ‘தேச விரோத’ சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் தங்கள் தேசப்பற்று மிகுந்த பொறுப்பை நிறைவேற்றிக்கொண்டிருப்பதாக அவர்கள் நம்பினார்கள்.இவர் கூறிய 21 நாட்கள் அல்ல, இப்போது 210 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனாலும், கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று ஒழிக்கப்படுவதற்கான சாத்தியமே கண்ணுக்குத் தெரியவில்லை. மாறாக, கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையிலும், இறந்தவர்கள் எண்ணிக்கையிலும் உலகிலேயே அமெரிக்காவிற்கு அடுத்ததாக இந்தியா இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கிறது. தொழிலாளர்களும், சாமானிய மக்களும் இயல்பு நிலைமை எப்போது திரும்பும் என்று தெரியாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.
தொழிலாளர்களில் பெரும்பாலோர், ஏழை மக்களில் பெரும்பாலோர் தங்களின் இன்றைய இக்கட்டான, துன்பதுயர நிலையிலிருந்து மீள்வதற்கு அரசாங்கம் தங்களுக்குஉதவும் என்று எதிர்பார்த்தார்கள். குறைந்தபட்சம் அரசு, சமூக முடக்கத்தை அறிவித்த சமயத்தில், “உங்கள் வேலைகள் ஒழிக்கப்படமாட்டாது, உங்கள் ஊதியம் வெட்டப்பட மாட்டாது” என்று கூறிய உறுதிமொழிகளாவது குறைந்தபட்சம் உத்தரவாதப்படுத்தப்பட்டு அமல்படுத்தப்படும் என நம்பினார்கள். இது புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்குப் பாதுகாப்பாகப் போய்ச்சேருவதற்கு உதவும் என நம்பினார்கள். தாங்கள் பட்டினி கிடந்து இறக்கும் விதத்தில் அரசாங்கம் விட்டுவிடாது என நம்பினார்கள்.ஆனால், அவர்களை முற்றிலும் திகைப்பும் அதிர்ச்சியும் அச்சமும் அளிக்கக்கூடிய விதத்தில், இவர்கள் கூறிய எதுவுமே நடக்கவில்லை. அரசாங்கத்தின் தரப்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டபோது, 53 நாட்கள் கழித்து, அரசாங்கம் தான் பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டது.
‘தன்னிறைவு’ யாருக்கு?
அரசாங்கம் அறிவித்த தன்னிறைவு (‘Atmanirbhar’) தொகுப்பு என்பது தொழிலாளர்களுக்கோ அல்லது சாமானிய மக்களுக்கோ கிடையாது. இவை அனைத்தும் கார்ப்பரேட்டுகளுக்கான சலுகைகளேயாகும். இவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் மூலமாக இவர்கள் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும், அதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என்றும், அதன் மூலம் மக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் உதவிடமுடியும் என்றும் அரசுத்தரப்பில் சாக்குப்போக்கு சொல்லப்பட்டது. இவர்கள் கார்ப்பரேட்டுகளுக்கு அளித்துள்ள சலுகைகளின் ஒரு பகுதியாக, தொழிலாளர் நலச் சட்டங்களை,தொழிலாளர் விரோதச்சட்டங்களாக – முதலாளிகள்நலச்சட்டங்களாக மாற்றுவது, வேளாண் சட்டங்களை நிறைவேற்றுவது மற்றும் தனியார்மயம் போன்றவற்றையும் ஆட்சியாளர்கள் நிறைவேற்றிக்கொண்டார்கள்.
ஆட்சியாளர்களிடமிருந்து எவ்விதமான உதவியும் வராதது மட்டுமல்ல. மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம், தொழிலாளர்கள் இதுநாள்வரையிலும் பெற்றுவந்த உரிமைகளையும், பாதுகாப்புகளையும் ஒன்றன்பின் ஒன்றாக இடித்துத் தரைமட்டமாக்கிடும் வேலைகளிலும் மிக வேகமாக இறங்கியிருப்பதைக் கண்டு மிகவும் திகைப்பும், ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தார்கள். தாங்கள் தொழிலாளர் நலச் சட்டங்களின்மூலம் பெற்றுவந்த ஒருசில உரிமைகளை ஒழித்துக்கட்டும் விதத்தில் நாடாளுமன்றத்தில் புதிய தொழிலாளர் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எதிர்க்கட்சியினர் அவையில் இல்லாத நிலையில், எவ்விதமான விவாதமுமின்றி இதனை நிறைவேற்றிக்கொண்டுவிட்டனர். வேளாண் சட்டமுன்வடிவுகள் மீது, வாக்கெடுப்புக்கு விட வேண்டும் என்று கோரிய நாடாளுமன்றமாநிலங்களவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துவிட்டு, அந்தச் சட்டமுன்வடிவுகளை நிறைவேற்றிக்கொண்டுள்ளனர்.
இத்தகைய இன்றைய புதிய சூழ்நிலை முற்றிலும் புதியதாகும். வேலையின்மையும் வேலையிழப்புகளும் பலகால கட்டங்களில் பலவிதங்களில் முன்பும் இருந்திருக்கின்றன. இவ்வாறு இருப்பது வழக்கமற்ற ஒன்று அல்ல. அதேபோன்று தொழிலாளர்களின் உரிமைகளையும் பயன்களையும் அமல்படுத்த மறுப்பது என்பதும் வழக்கமற்ற ஒன்று அல்ல. ஆனாலும், புதியதும் கொடூரமானதும், மிகவும் வெறுக்கத்தக்கதும் என்ன? பாஜக அரசாங்கம், கோவிட்-19 – கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, அதனைப் பயன்படுத்திக்கொண்டு, அதற்காக அறிவிக்கப்பட்ட சமூக முடக்கம் மற்றும் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்திக்கொண்டு, இரக்கமற்றமுறையில் நவீனதாராளமய நிகழ்ச்சிநிரலை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகும். நாட்டில்பொருளாதார நெருக்கடி மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளபோதிலும், முதலாளித்துவ வர்க்கத்தின் கொள்ளை லாபத்தைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறது.
முதலாளித்துவத்தின் படுதோல்வி
அடுத்து, குறிப்பிடப்பட வேண்டிய மற்றுமொரு முக்கியமான அம்சம் என்பது, கோவிட்-19 கொரோனா வைரஸ்தொற்று என்பதும், பொருளாதார நெருக்கடி என்பதும் நம் நாட்டிற்கும், பாஜக அரசாங்கத்திற்கும் மட்டுமானது அல்ல. உலகில், பல முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் உட்பட பல முதலாளித்துவ நாடுகளில் இதேபோன்று பொருளாதார நெருக்கடியும் கோவிட்-19ம் ஏற்பட்டிருக்கிறது. அவையும் இவ்வாறே தொழிலாளர்களால் கடுமையாகப் போராடிப்பெற்ற தொழிலாளர்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்திடுவதற்கான நடவடிக்கைகளிலும், குறிப்பாக சங்கம் அமைத்திடும் உரிமைகள் மீதும் நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றன. நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவாக பொது சுகாதாரத்திற்கான செலவினம் கடுமையாக வெட்டப்பட்டிருப்பதன் விளைவாக, உடல்நலம் பாதிக்கப்பட்ட மக்கள் கருணையற்ற தனியார் கார்ப்பரேட் சுகாதாரப் பாதுகாப்பு மையங்களை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு உலகம் முழுவதுமே, முறையான சுகாதாரப் பாதுகாப்பின்றி, கொரோனா வைரஸ் அல்லது வேறுபல நோய்களின் காரணமாக இக்கால கட்டத்தில் இறந்தோர்களில் அதிகமான அளவு ஏழைகளாவார்கள்.
முதலாளித்துவ நெருக்கடி என்பது கோவிட் 19 கொரோனா வைரஸ் தொற்றும், அதனைத் தொடர்ந்து சமூக முடக்கம் அறிவிப்பு வருவதற்கு முன்பும் இருந்தது.முதலாளித்துவ வர்க்கத்திற்கு தங்கள் லாபம் அதிகரிப்பது தேக்கமடைந்திருப்பதை அல்லது தொய்வடைந்திருப்பதைச் சரிக்கட்ட ஒரே வழி, இந்தச் சுமையை தொழிலாளர் வர்க்கத்தின் மீதும் இதர உழைக்கும் மக்கள் பிரிவினர்மீதும் மாற்றுவது என்பதேயாகும். மக்களின் செல்வாதாரங்கள் – இயற்கை வளங்கள், பொதுக் கல்வி மற்றும் பொது சுகாதாரம் உட்பட பொதுத்துறைகள் அனைத்தையும் பறித்துக்கொள்வதன் மூலம் மட்டுமே தாங்கள் கொள்ளைலாபம் ஈட்டுவதற்கும், தங்கள் செல்வத்தை அபரிமிதமாகப் பெருக்குவதற்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு இருந்தி
டும் ஒரே வழியாகும். இவற்றிற்கு, உலகம் முழுதும் உள்ள மக்களால் கைவிடப்பட்டுவரும் நவீன தாராளமயத்தை விரைவுபடுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர்கள் பார்க்கிறார்கள்.
ஆனால், இதற்காக தாங்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் மத்தியிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பும் என்று அவர்களுக்குத் தெரியும். இந்த எதிர்ப்பு நசுக்கப்பட வேண்டும். முதலாவதாக, மக்கள் ஒன்றுபடுவதையும், ஒன்றுபட்டுப் போராடுவதையும் தடுத்திட வேண்டும். அவர்கள் ஒன்றுபட்டால் மட்டுமே போராட முடியும். எனவே, அவர்களை மத நம்பிக்கையைப் பயன்படுத்தி, சாதிப் பிரிவுகளைப் பயன்படுத்தி, பாலின வேற்றுமையைப் பயன்படுத்தி, பிராந்திய மற்றும் இன வேற்றுமையைப் பயன்படுத்தி, வேலை யிழப்புகள், வேலையின்மை, விலைவாசிஉயர்வு, பசி-பஞ்சம்-பட்டினி போன்ற உண்மையானபிரச்சனைகளிலிருந்து அவர்கள் கவனத்தைத் திசைதிருப்பிக் கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மையினரிடமிருந்து பெரும்பான்மையினருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக அவர்களை நம்பச் செய்திட வேண்டும். தலித்துகளிடமிருந்து மேல் சாதிக் காரர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக அவர்களை நம்பச் செய்திட வேண்டும். இந்தப் பிரச்சனைகள் அனைத்துக்கும் ‘அயலார்’தான் காரணம் என்று அவர்களை நம்பச்செய்திட வேண்டும்.
கொரோனாவை நல்வாய்ப்பாக கருதிய முதலாளித்துவம்
கார்ப்பரேட்டுகள் – இந்திய மற்றும் வெளிநாட்டுக் கார்ப்பரேட்டுகள் – நலன்களை மேம்படுத்துவதற்கும், இந்தியாவைஓர் இந்து ராஷ்ட்ரமாக நிறுவுவதற்கும் தேவையான நவீன தாராளமயம் மற்றும் வகுப்புவாதம் ஆகிய ஒருங்கிணைந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதே இப்போதுள்ள நிலைமையின் சாராம்சங்களாகும். இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு, மக்களின் மத்தியில் அதிகரித்துவரும் கோபாவேசத்திலிருந்து முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாக்க வேண்டியது அவர்களுக்கு அவசியம். இன்றையதினம் மோடி ஆட்சியின்கீழ் இதுதான் புதிய அம்சமாகும். இன்றையதினம், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் அங்கமாக விளங்கும் பாஜக-தான் தங்கள் நலன்களைப் பாதுகாத்திட சிறந்த தேர்வு என்று முதலாளித்துவ வர்க்கம் கருதுகிறது.
இன்றுள்ள நிலைமை, விரக்தியடைந்திருந்த முதலாளித்துவ வர்க்கம் தாங்கள் கொள்ளை லாபம் ஈட்டக்கூடிய நடவடிக்கைகளைத் தொடர எந்த எல்லைக்கும் செல்லத் தயாராகஇருந்தது. முதலாளித்துவ வர்க்கம் இன்றையதினம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வளங்களையும், செல்வத்தையும் அபரிமிதமாகக் கொண்டிருந்தபோதிலும், சமூகத்தின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு சக்தியற்றதாகவே இருப்பது மெய்ப்பிக்கப்பட்டிருந்தது. இப்போதுள்ள அமைப்புமுறையில் மாற்று எதையும் கண்டுபிடிக்கமுடியாது தத்தளித்துக்கொண்டிருந்த அதற்கு, கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றும், சமூக முடக்கமும் ஒரு பொன்னான வாய்ப்பாகத் தோன்றின, தங்கள் கொள்ளை லாபம் ஈட்டும் நடவடிக்கைகளைத் தொடர, இவை ‘கடவுளின் செயல்’ என்று கருதின. ‘இப்போதுஇல்லையேல் பின் எப்போதும் இல்லை’ என்று அவர்கள் கருதினர். அவர்களின் விரக்திநிலை அந்த அளவிற்கு இருக்கிறது. நவீன தாராளமயத்திற்கு வக்காலத்து வாங்குபவர்கள், இப்போதுள்ள நிலைமையை ஒரு ‘புதிய இயல்புநிலை’ (‘New Normal’) என்று சித்தரிக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள், 19ஆவது நூற்றாண்டு என்பது தொழிலாளர்கள் அடிமையாக இருந்த நிலைமைகளை உருவாக்கி இருந்தது என்றும், ஆனால் இப்போதுள்ள நிலைமையில் விவசாயிகள் கார்ப்பரேட் வேளாண்வர்த்தகர்களால் கட்டுப்படுத்தப்படும் நிலைமை உருவாகி இருக்கிறது என்றும், நாடு தன்னிறைவையும் இறையாண்மையையும் இழக்க வேண்டிய நிலைமை உருவாகி இருக்கிறது என்றும் எண்ணங்களை விதைத்திட விரும்புகிறார்கள்.
புதியதோர் எழுச்சி
உண்மையில், இவர்கள் கூறாத விதத்தில் வேறொரு‘புதிய’ நிலைமை உருவாகியிருக்கிறது. தொழிலாளர் வர்க்கம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தாமாகவே முன்வந்து இயக்கங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள், விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்கள்பிரிவினர் தங்கள் உரிமைகளையும், வாழ்வாதாரங்களையும் பாதுகாத்திடவும், தங்களுக்கு எதிராக ஏவப்படும் அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறைகளையும் துணிவுடன் எதிர்கொண்டு தாமாகவே முன்வந்து அணிதிரண்டு கொண்டிருக்கிறார்கள்.
சமூக முடக்கக் காலம், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பல போராட்டங்களை ஏற்படுத்திய காலமுமாகும். சமூக முடக்கக் காலத்தில் ஒரு மாதத்திற்குள்ளாகவே, லட்சக்கணக்கான மக்கள், (இவர்களில் பெண்கள் பெரும்பகுதியாக இருந்தார்கள்), தங்கள் வீட்டின் கூரைகளில் நின்று அரசாங்கத்தை நோக்கி, ‘வாயால் வடை சுடுவதைநிறுத்து’, ‘பட்டினி கிடக்கும் எங்களுக்கு உணவு கொடு’என்று முழக்கமிட்டார்கள். ஏழு மாத கால சமூக முடக்கத்தின்போது நிலக்கரித் தொழிலாளர்கள் மூன்று நாட்கள்கூட்டு வேலைநிறுத்தம் நடத்தி வரலாறு படைத்ததைப் பார்க்க முடிந்தது. இதேபோன்றே எண்ணெய் தொழிலாளர்கள், திட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், குறிப்பாக ‘ஆஷா’ தொழிலாளர்கள், உருக்குத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பல்வேறு தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களும் வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டார்கள்.
இந்தக் காலகட்டத்தில், நாட்டின் செல்வாதாரங்களை உற்பத்தி செய்து தந்துள்ள இரு பெரும் உற்பத்தியாளர்களாகிய, தொழிலாளர்களும் விவசாயிகளும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒருமைப்பாட்டுடனும் ஒருவர்க்கொருவர் ஆதரவுடனும் செயல்படுவது அதிகரித்திருப்பதை நன்கு காண முடிகிறது. பொதுக் கோரிக்கைகளுக்காகவும், தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக விவசாயிகளும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக தொழிலாளர்களும் பரஸ்பரம் ஒருமைப்பாடு தெரிவித்து, இருதரப்பினரும் ஒன்றுபட்டு நின்று போராடுவதும் அதிகரித்திருப்பதை இந்த ஆண்டு, ஆகஸ்ட் 9, செப்டம்பர் 23மற்றும் செப்டம்பர் 25 ஆகிய நாட்களில் நடைபெற்றபோராட்டங்களில் பார்த்தோம். இவை ஒட்டு மொத்த மொத்த தொழிலாளர் வர்க்கம், மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை ஆகியவற்றின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள நவம்பர் 26 நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தத்தின்போது, அதற்கு ஆதரவு தெரிவித்திட,200 விவசாய சங்கங்களை ஒன்றுபடுத்தியுள்ள அகிலஇந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு அறைகூவல் விடுத்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சிப்போக்காகும்.
தொழிலாளர் வர்க்கம் இந்த நிலைமையைச் சரியாகப் பற்றிக்கொள்ள வேண்டும். ஆளும் வர்க்கத்தினரின் ‘இப்போது இல்லையேல் எப்போதும் இல்லை’ என்கிற விரக்திக்குரலுக்கு, ‘இனி எப்போதும் உனக்கு இல்லை’ என்று உறுதியுடன் பதில் சொல்ல வேண்டும். இந்தப் போராட்டத்திற்கான தயாரிப்பு வேலைகள் ‘இப்போதே’ தொடங்கிட வேண்டும். இந்த நிலைமை தொழிலாளர் வர்க்கத்தின், விவசாயிகளின் மற்றும் உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரிவினரின்ஒன்றுபட்ட நடவடிக்கைகள், ஒன்றுபட்டு எதிர்ப்பு தெரிவித்தல், ஒன்றுபட்டு தடுத்து நிறுத்துதல் ஆகியவற்றைக் கோருகிறது. தொழிலாளர் வர்க்கமும், தொழிலாளர் வர்க்கத் தலைமையும் இந்தப் போராட்டத்தை ஒத்திவைத்திடவோ, தாமதப்படுத்திடவோ அல்லது திசைதிருப்பிடவோ முடியாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். நவம்பர் 26 அகில இந்திய வேலைநிறுத்தமும், நவம்பர் 26-27 நாடு தழுவிய அளவில் விவசாயிகளால் நடத்தப்படும் கிளர்ச்சிப் போராட்டங்களும் தொடக்கம்மட்டுமே. வேலைநிறுத்தத்திற்காக தொழிலாளர் வர்க்கத்தின்தயாரிப்புகளும், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவிப்பதும் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இவை அனைத்தும் வரவிருக்கும் காலங்களில் நடத்தவிருக்கும் மாபெரும் போராட்டங்களுக்கு முன்னோடிகள் என்ற புரிதலுடன் இப்போது தீவிரமாக்கப்பட வேண்டும்.
தமிழில் : ச.வீரமணி
–தீக்கதிர்
2020.11.20