–என்.குணசேகரன்
காலம் காலமாக பாடுபட்டு வரும்அடித்தட்டு உழைப்பாளி மக்களுக்காக குரல் கொடுத்தவர்கள்,கண்ணீர் சிந்தியவர்கள்,மனித நேயத்தோடு செயல்பட்டவர்கள் வரலாற்றில் ஏராளமானவர்கள் உண்டு. ஆனால் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் துயரங்களிலிருந்து முற்றாக விடுதலை பெற வழிகாட்டியவர்கள் கார்ல் மார்க்சும் ஏங்கெல்சும்தான்.
மார்க்சியத் தத்துவம் மானுட விடுதலைக்கான தத்துவம். அந்த தத்துவத்தை உருவாக்குவதில் இந்த இரண்டு மாமேதைகள் தங்களது வாழ்நாளை அர்ப்பணித்தார்கள். தன்னுடைய பணியை பற்றி குறிப்பிடுகிற போது, ஏங்கெல்ஸ் எப்போதுமே மிக அடக்கமாக நான் மார்க்ஸுக்கு பக்கவாத்தியம்தான் வாசித்தேன் என்றுசொல்வதுண்டு. ஆனால் ஏங்கெல்சின் அறிவுக்கூர்மையும் தத்துவப் பேரறிவும்,தனித்த ஆற்றல்களும் மார்க்சியம் படைப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளது.மனித சமூக வரலாற்றில் மணிமகுடமான சிந்தனையாக மார்க்சியம் இன்றளவும் திகழ்வதற்கு ஏங்கெல்சின் அளப்பரிய பங்களிப்பு முக்கியமானது.
மார்க்ஸ் ஏங்கெல்ஸ் காலம் வரை முதலாளித்துவம் புதிரான ஒன்றாக இருந்தது.அவர்களுக்கு முந்தைய அறிஞர்கள் பலர் பல கண்டுபிடிப்புகளை முன்வைத்திருந்தாலும்பல கேள்விகளும், குழப்பங்களும் நீடித்தன.உழைப்பைச் செலுத்தும் பாட்டாளி வர்க்கத்தின் பங்குகுறித்து பெரிதாகச் சிந்திக்கப்பட வில்லை. அவர்கள் கூலி பெறும் மனித இயந்திரங்களாகக் கருதப்பட்டனர்.தனது உழைப்பால் செல்வம் அனைத்தையும் படைத்திடும் அந்த வர்க்கத்தினை உதாசீனப்படுத்தினர். முதலாளித்துவத்தின் இயக்கம், அதில்வெளிப்படையாகத் தெரியாமல் நடக்கும்பாட்டாளி வர்க்கத்தின் மீதான உழைப்புச் சுரண்டல்,உபரி மதிப்புக் கோட்பாடு, மூலதனக் குவியலின் ரகசியம்,சமூகத்தையே ஆட்டிப்படைக்கும்பொருளாதார நெருக்கடிகள், வேலையின்மை,வறுமை,அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு பற்றிய கோட்பாடுகளையும், புதிய கண்டுபிடிப்புகளையும் மார்க்ஸ் உருவாக்கினார்.அவரோடு தோளோடு தோள் நின்று ஏங்கெல்ஸ் பங்களித்தார்.தங்களது மேதைமையினாலும், அயராத உழைப்பினாலும், இந்த கண்டுபிடிப்புக்களை அவர்கள் உருவாக்கினர். வறுமை,ஆளும் வர்க்கங்களின் அடக்குமுறை என அனைத்தையும் எதிர்கொண்டு இந்தப் பணியை ஆற்றினர். அவர்கள் உருவாக்கிய கண்டுபிடிப்புக்களை பாட்டாளி வர்க்கத்திடம் கொண்டுசெல்ல அவர்களே பெரும் முயற்சி எடுத்தனர். ஏனெனில் ஆளும் வர்க்கங்கள் அவர்களது எழுத்துக்கள் பரவிடாமல் சதி செய்தன.
வர்க்க எழுச்சிகளுக்கு வழிகாட்டுதல்
மார்க்ஸ் இறந்த பிறகு அவருடைய மூலதனம் உள்ளிட்ட எழுத்துக்களை அச்சில் கொண்டு வர ஏங்கெல்ஸ் அரும்பாடுபட்டார். அதுமட்டுமல்லாது , உலகில் செயல்படும் தொழிலாளி வர்க்க இயக்கங்களுக்கு மார்க்சியப் பார்வையில் வழிகாட்டுதல்களை அளிக்கும்பெரும்பணியையும் ஏங்கெல்ஸ் மேற்கொண்டார். ஐரோப்பிய தொழிலாளி வர்க்க இயக்கங்களுக்கு மட்டுமல்ல, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் பாட்டாளி வர்க்க விடுதலைக்கும் ஏங்கெல்ஸ் வழிகாட்டியிருக்கின்றார். பிரிட்டிஷ்காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலைபெற வேண்டும் என்கிற வற்றாத வேட்கையோடு அன்று நடைபெற்ற சிப்பாய்களின் எழுச்சிஉள்ளிட்ட நிகழ்வுகளை மிக நுணுக்கமாக ஏங்கெல்ஸ் ஆய்வு செய்து வந்தார். “கம்யூனிஸ்ட் அறிக்கை”யின் முன்னுரையில் வர்க்க ஒற்றுமை உருவாவதைக் கண்டு களித்துஅவர் எழுதிய வாக்கியங்கள் இவை:
“இன்றைய தினம், ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கம்தனது போரிடும் சக்திகளை பரிசீலித்து வருகின்றது. இந்தப் போராட்ட சக்திகள் முதன்முதலாக, அதுவும் ஒரே படையணியாக, ஒரே கொடியின் கீழ், ஒரே உடனடிக் குறிக்கோளுக்காகத் திரட்டப்பட்டுள்ளன. 1866-இல் அகிலத்தின் ஜெனீவா மாநாட்டிலும், மீண்டும் 1889-இல்பாரிஸ் தொழிலாளர் மாநாட்டிலும் பிரகடனப்படுத்தியதைப்போல், ஒரே மாதிரியான எட்டுமணிநேர வேலைநாள் என்பதை முறையாகச் சட்டம் இயற்றி நிலைநாட்ட வேண்டும் என்பதே அந்தக் குறிக்கோள் ஆகும். இன்றைய இந்தக்காட்சி, அனைத்து நாடுகளின் தொழிலாளர்களும் இன்றைக்கு மெய்யாகவே ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என்கிற உண்மையை, அனைத்து நாடுகளின் முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் காணும்வண்ணம் அவர்களின் கண்களைத் திறக்கும்.இதனை மார்க்ஸ் அவர்கள் தம் கண்கொண்டுநேரில் கண்டுகளிக்க இப்போது என் பக்கத்தில்இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!”
இவ்வாறு, வர்க்கப் போராட்ட எழுச்சிகளையும், பாட்டாளி வர்க்க இயக்கத்தின் சிறு முன்னேற்றத்தையும் கூட பெருமளவு பாராட்டி, வரவேற்று, ஆதரவுக்கரம் நீட்டினார். ஏங்கெல்ஸ். தவறுகள் நடக்கும்போது கூர்மையாகச் சுட்டிக்காட்டினார். மார்க்சுக்கு பிறகு ஏங்கெல்ஸ் வாழ்ந்த 12 ஆண்டுகளிலும் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் செயல்பட்டுக் கொண்டிருந்த உழைக்கும் வர்க்க இயக்கங்களுக்கு வழிகாட்டி வந்தார். உழைக்கும் வர்க்கத்தின் ஒரு சிறுவெற்றி கூட அவரது மகிழ்ச்சியை அதிகரித்தது. 1871 ஆம் ஆண்டு பாரீஸ் நகரத் தொழிலாளர்கள் பாரீஸ் நகரத்தை விடுவித்து தொழிலாளி வர்க்க அரசாங்கத்தை அமைத்தபோது அதை பெரும் வரலாற்று மாற்றமாக மார்க்சும் ஏங்கெல்சும் கருதினர். அப்போதுதான் அவர்களது பிரசித்தி பெற்ற முழக்கமான ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ எனும் சக்தி வாய்ந்தமுழக்கம் எழுப்பப்பட்டது. 72 நாட்கள் கழித்து பாரீஸ் கம்யூன் வீழ்த்தப்பட்டது. முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். பாரீஸ்கம்யூனின் தோல்வியை மார்க்ஸும்ஏங்கெல்சும் மிகக் கூர்மையாக ஆய்வு செய்தார்கள். வீழ்ச்சியடைந்த புரட்சிகளும் பாட்டாளி வர்க்க இயக்க தோல்விகளும் புதிய புரட்சிகளுக்கான படிப்பினைகளை எப்போதுமே வழங்குகின்றன என்பதனை அவர்களது எழுத்துக்களில் உணர முடியும்.
மார்க்சிய ஆய்வுமுறை
சமூக, பொருளாதார, அரசியல் நிகழ்வுகள் அனைத்தையும் ஆராய்வதற்கான ஆய்வு முறையை மார்க்ஸ் வழங்கியிருக்கிறார். இதனை ஏங்கெல்ஸ் தனக்கே உரிய கூர்மையான, எளிமையான எழுத்து நடையில் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்; “(கம்யூனிஸ்ட்)அறிக்கையினூடே இழையோடி நிற்கும் அடிப்படையான கருத்து – ஒவ்வொரு வரலாற்றுக் காலகட்டத்தின் பொருளாதார உற்பத்தியும், அதிலிருந்து தவிர்க்கமுடியாதபடி எழுகின்ற சமுதாயக் கட்டமைப்பும், அந்தந்தக் காலகட்டத்தின் அரசியல், அறிவுத்துறை ஆகியவற்றின் வரலாற்றுக்கான அடித்தளமாக அமைகின்றன. ஆகவே, (புராதனநிலப் பொதுவுடைமை அமைப்பு சிதைந்துபோன காலம்தொட்டே) அனைத்து வரலாறும்வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது. “அதாவது, சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும், சுரண்டப்படும் வர்க்கத்துக்கும் சுரண்டும் வர்க்கத்துக்கும், ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கும் ஒடுக்கும் வர்க்கத்துக்கும் இடையேயான போராட்டங்களின் வரலாறாகவே இருந்துவருகிறது. எனினும், இந்தப் போராட்டமானது தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.“சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வரும்வர்க்கம் (பாட்டாளி வர்க்கம்), தன்னோடுகூடவே சமுதாயம் முழுவதையும் சுரண்டலிலிருந்தும், ஒடுக்கு முறையிலிருந்தும், வர்க்கப் போராட்டங்களிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவிக்காமல், சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) ஒருபோதும் தன்னை விடுவித்துக்கொள்ள இயலாது என்கிற கட்டத்தை எட்டியுள்ளது – இந்த அடிப்படையான கருத்து முற்றிலும் மார்க்ஸ் ஒருவருக்கு மட்டுமே உரியதாகும்.”(கம்யூனிஸ்டு அறிக்கை முன்னுரை)இதுவே,இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாத அணுகுமுறை. இதன் அடிப்படையில் 1895ஆம் ஆண்டு தனது மறைவு வரை உலகநிகழ்வுகளை ஆராய்ந்து பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு வழிகாட்டுதல்களை அளித்து வந்தார் ஏங்கெல்ஸ். அவர் எழுதிய நூல்கள், கட்டுரைகள் அனைத்திலும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் தத்துவ நடனமாடுவதை காண இயலும்.
நவம்பர் 28 அன்று சிவப்பு புத்தகதின-2வாசிப்புக்கான நூலாக தேர்வு செய்யப்பட்டுள்ள “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” நூலிலும் பாட்டாளி வர்க்கம் அடையவேண்டிய வெற்றிகள், அடுத்தகட்ட முன்னேற்றங்கள் ஆகியவற்றை விளக்கியுள்ளார். எடுத்துக்காட்டாக கேள்வி 25-ல் கீழ்க்கண்டவாறு ஏங்கெல்ஸ் குறிப்பிடுகிறார்: “முதலாளித்துவத்தை வெகுவிரைவில் வீழ்த்தும் பொருட்டு எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் முதலாளித்துவ வர்க்கம் ஆட்சியில் அமர அவர்களுக்கு உதவுவது கம்யூனிஸ்டுகளின் நலன்களுக்கு உகந்ததாகும்” என்று குறிப்பிடுகிறார். இன்று இந்த வரிகளை படிக்கிறபோது பொருத்தமில்லாமல் தோன்றலாம். ஆனால் அன்று ஐரோப்பிய நிலைமைகளில் நிலப்பிரபுத்துவ, மன்னராட்சி கோலோச்சிய சூழலில், பாட்டாளி வர்க்கம் முன்னேற்றத்தை சாதிக்க வேண்டுமானால் அன்றைய நிலப்பிரபுத்துவ ஆளும் வர்க்கம் வீழ்த்தப்பட்டு முதலாளித்துவ வர்க்கம் அதிகாரத்துக்கு வர வேண்டிய கட்டாயம் இருந்தது.பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றும்இறுதி வெற்றி நோக்கிய பயணத்தில் இந்தகட்டத்தை தாண்டிட வேண்டிய தேவை உள்ளது.
பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான வியூகங்களை அவ்வப்போது இருக்கிற சூழல், வர்க்க நிலைமைகள் அடிப்படையில் அமைத்திட வேண்டும் என்று ஏங்கெல்ஸ் போதிக்கிறார்.இதற்கு வரலாற்றுப் பொருள்முதல்வாதம் வழிகாட்டுகிறது.இன்று உலகம் முழுவதும் பாட்டாளிவர்க்கப் போராட்டங்கள் உலக முதலாளித்துவத்திற்கு எதிராக நடைபெற்று வருகின்றன. வெவ்வேறு நாடுகளிலும் வெவ்வேறு வியூகங்கள் அமைக்க வேண்டி உள்ளது. அமெரிக்கத் தேர்தலில் வலதுசாரி, இனவெறி பிற்
போக்காளர்களின் ஒரு பகுதி முறியடிக்கப்பட்டுள்ளது.ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தன்மை மாறவில்லை.உலகளாவிய பாட்டாளிவர்க்க ஒற்றுமையும் அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட வீச்சும்தான் மாற்றத்தை சாதிக்கும்.
உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி கடுமையாக உள்ள நிலையில் சீனா உள்ளிட்டசோசலிச நாடுகளில் பொருளாதார ஏற்றத்தைக்காண முடிகிறது. பொலிவியாவில் ராணுவத்தால் வீழ்த்தப்பட்ட இடதுசாரிகள் மீண்டும் எழுச்சியோடு ஆட்சிக்கு வந்துள்ளனர். இவ்வாறு பாட்டாளி வர்க்கம் அடைகிற சிறு முன்னேற்றமும் உலக பாட்டாளி வர்க்க விடுதலை இலட்சியம் முன்னேற வழிவகுக்கும்.
இந்த போராட்டப்பாதையில் முன்னேற ஏங்கெல்சின் எழுத்துக்கள் இன்றளவும் வழிகாட்டுகின்றன.ஏங்கெல்ஸை வாசிப்போம்!!! வர்க்க விடுதலையை சாதிப்போம்!!!
–தீக்கதிர்
2020.11.28