Site icon சக்கரம்

டெல்லி சலோ! – போராட்ட வெப்பத்தால் சூடாகும் குளிர்நகரம்

செம்பியன்

“ஒரு விதையை நட்டு, அது வளர்ந்து விளைச்சல் தரும்வரை காத்திருக்கும் பொறுமையே விவசாயிகளின் குணம். நான்கு மாத காலம்கூட போராடும் பொறுமையுடன் நாங்கள் வந்திருக்கிறோம். முடிவு தெரியாமல் போக மாட்டோம்’’ என்கிறார் சுக்வீந்தர் சிங். பஞ்சாப் மாநிலத்திலிருந்து டெல்லி போராட்டத்துக்கு வந்திருந்த விவசாயி.

நீண்ட அணிவகுப்பாக டிராக்டர்களில் வந்திருக்கிறார்கள் விவசாயிகள். இது பனிக்காலம் என்பதால், டிராக்டரில் பிளாஸ்டிக் ஷீட் போட்டு மறைப்பு ஏற்படுத்தியுள்ளனர். மெத்தை, பெட்ஷீட், போர்வை என எல்லாமே இருக்கின்றன. சமைப்பதற்குத் தேவையான அரிசி, கோதுமை மாவு, பருப்பு, ஸ்டவ், சிலிண்டர் என எல்லாமே தயாராகக் கொண்டு வந்திருக்கின்றனர். கூட்டமாக சமைத்துச் சாப்பிடுகின்றனர். “எங்களிடம் உள்ள பொருள்கள் தீர்ந்துவிட்டால், ஊருக்கு போன் செய்து சொல்வோம். அவர்கள் கொடுத்து அனுப்புவார்கள்’’ எனச் சொல்கிறார் சுக்வீந்தர் சிங்.

நோயாளிகளுக்கான மருந்துகளையும் சேகரித்து வந்திருக்கின்றனர். ஒவ்வொரு டிராக்டரிலும் குறைந்தது பத்து செல்போன்களையாவது சார்ஜ் செய்யும் வசதி இருக்கிறது. ஊரில் இருக்கும் குடும்பத்தினருடன் பேசியபடி போராட்டத்தைத் தொடர்கிறார்கள்.

“ரேடியோவிலும் டி.வி-யிலும் விவசாயிகளைப் பற்றி அவ்வளவு உயர்வாக அரசியல் தலைவர்கள் பேசுகிறார்கள். சினிமாக்களில் நடிகர்கள் பேசுகிறார்கள். ஆனால், இந்த நாட்டின் சாதாரண விவசாயிகளான எங்களை மிருகங்கள்போல நடத்துகிறார்கள். எங்கள் நாட்டின் தலைநகருக்குள் நுழைய விடாமல் தடுக்கிறார்கள். எத்தனை நாள்கள் தடுப்பார்கள் என்று பார்க்கலாம்’’ என்கிறார் தேஜ்குரு.

“ரோட்டிலும் புழுதியிலும் படுத்துத் தூங்குகிறீர்களே… சிரமமாக இல்லையா?’’ என்று கேட்டால், சிரிக்கிறார் தேஜ்குரு. ‘`நமக்கு வசதியும் நிம்மதியும் தரும் ஒரே இடம் நம் வீடுதான். அது என் தலைமுறை தாண்டியும் என் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் போராட வந்திருக்கிறேன்’’ என்கிறார்.

கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்கள், மீண்டும் ஒருமுறை விவசாயிகளை வீதிக்கு வரவழைத்திருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக இந்தச் சட்டங்கள் வந்திருப்பதாக விவசாயிகள் கொந்தளித்தனர். இவற்றை ரத்துசெய்ய வேண்டும் எனப் போராட்டத்தில் குதித்தனர்.

‘வேளாண் விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கும் தற்போதைய நடைமுறை குறித்து இந்தச் சட்டங்களில் எதுவுமே இல்லை’ என்பது விவசாயிகளைக் கோபம் கொள்ள வைத்தது. ஆனால், ‘குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவது, எப்போதும்போலத் தொடரும்’ என பிரதமர் நரேந்திர மோடி உறுதிமொழி தந்தார். அதைச் சட்டமாக நிறைவேற்றுமாறு விவசாயிகள் கேட்டனர். நம் ஊரில் இருக்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், நேரடிக் கொள்முதல் நிலையங்கள்போல வட மாநிலங்களில் மார்க்கெட்டிங் கமிட்டிகள் உள்ளன. அரசு அங்கு பெருமளவில் கொள்முதல் செய்யும். இந்தக் கொள்முதல் தொடர வேண்டும் எனவும் உறுதிமொழி கேட்டனர்.

இந்தப் போராட்டக் காலத்தில் மின்சாரத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்திருக்கிறது. இலவச மற்றும் மானிய மின்சாரத்தை அது இல்லாமல் செய்துவிடும் என்ற அச்சமும் சேர்ந்துகொண்டது. இதனால் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்தன. குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் போராட்டம் தீவிரமானது. மத்திய அரசு தங்களை அழைத்துப் பேச வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். அரசு அசைந்துகொடுக்கவில்லை. எனவே, 32 விவசாய அமைப்புகள் இணைந்து ‘அகில இந்திய கிசான் சங்கர்ஷ்’ என்ற கூட்டமைப்பை உருவாக்கி ‘டெல்லி சலோ’ எனத் தலைநகரை முற்றுகையிடக் கிளம்பினர்.

ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களைத் தாண்டியே விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முடியும். இந்த இரண்டு மாநிலங்களையும் ஆளும் பா.ஜ.க அரசுகள் எப்படியாவது விவசாயிகளைத் தடுக்க முயன்றன. குறிப்பாக, ஹரியானா அரசு கடும் வேகம் காட்டியது. முன்னெச்சரிக்கைக் கைது, குளிர் நடுக்கும் இரவு நேரத்தில் தண்ணீரைப் பீய்ச்சியடிப்பது, கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிக் கலைப்பது, தடியடி நடத்துவது, சாலைகளின் குறுக்கே பள்ளம் வெட்டி முன்னேற விடாமல் தடுப்பது என என்னென்னவோ செய்து பார்த்தது. அத்தனை தடைகளையும் கடந்தனர் விவசாயிகள்.

விவசாயிகள் போராட்டம் பற்றி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வந்த வழக்கு ஒன்றில், ‘விவசாயச் சங்கம் என்ற பெயரில் இவர்கள் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்’ என பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது ஹரியானா அரசு. குளிரில் நடுங்கும் விவசாயிகள்மீது தண்ணீரைப் பீய்ச்சியடிப்பது கண்டு பொறுக்காமல், நவ்தீப் சிங் என்ற இளைஞர் போலீஸ் வாகனத்தில் ஏறி, தண்ணீரைப் பீய்ச்சியடிப்பதை நிறுத்தினார். அவர்மீது கொலை முயற்சி வழக்கு போட்டிருக்கிறார்கள்.

பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகளே அதிகம் வந்திருந்தாலும், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் என வெகுதூரம் பயணம் செய்தும் நிறையபேர் வந்திருப்பதைக் காண முடிந்தது. நவம்பர் 26 வியாழக்கிழமை முதல் சாரிசாரியாக டெல்லி நோக்கி டிராக்டர்களில் இவர்கள் வந்துகொண்டி ருக்கிறார்கள். ‘டெல்லியின் ஜந்தர் மந்தர் அல்லது ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த தங்களை அனுமதிக்க வேண்டும்’ என்பது விவசாயிகளின் கோரிக்கை. ஆனால், ‘டெல்லி புறநகரிலுள்ள புராரி பூங்கா மைதானத்தில் போராடுங்கள்’ என்றது மத்திய அரசு. உத்தரகாண்டிலிருந்து வந்த சில விவசாயிகளை ‘ஜந்தர் மந்தருக்கு அழைத்துச் செல்கிறோம்’ என்று சொல்லி, புராரி பூங்காவுக்குக் கூட்டிச் சென்றுவிட்டது டெல்லி போலீஸ். அவர்கள் அதன்பின் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படவில்லை. ‘புராரி பூங்காவைத் திறந்தவெளிச் சிறைச்சாலையாக அரசு பயன்படுத்துகிறது’ என்பதை உணர்ந்துகொண்ட விவசாயிகள் இதை நிராகரித்தனர். டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு, அங்கேயே போராடி வருகின்றனர்.

டெல்லியின் சிங்கு எல்லையில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளில் சிலரைச் சந்தித்தோம். 70 வயது விவசாயி ஒருவருக்குக் கண்ணீர்ப்புகைக் குண்டு தாக்கி இடது கண்ணுக்குக் கீழே காயம் ஏற்பட்டிருந்தது. ‘`ஆம்புலன்ஸுக்கு ஏற்பாடு செய்கிறேன். உடனே மருத்துவமனைக்குப் போகலாம்’’ என சக நிருபர் ஒருவர் பதறியபோது, அவர் அமைதியாக பதில் சொன்னார். ‘`மகனே! இங்கு எனக்கு அதைவிட முக்கியமான வேலை இருக்கிறது. காயத்தை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். போராட்டமே முக்கியம்.’’

தரம்பீர் என்பவரிடம் பேசினோம். ‘`நான் ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ரா மாவட்டத்திலுள்ள சாபிரா என்ற கிராமத்திலிருந்து வந்திருக்கிறேன். அக்கம்பக்க கிராமங்களைச் சேர்ந்த 50 பேர் 7 டிராக்டர்களில் இங்கு வந்திருக்கிறோம். எல்லோரும் இப்படித்தான் வந்திருக் கிறார்கள். நான்கு மாதங்களாக எங்கள் பகுதிகளில் பல கட்டப் போராட்டங்களை நடத்திப் பார்த்தோம். அரசாங்கம் அசைந்து கொடுக்கவில்லை. நிறைய விவசாயச் சங்கங்கள் டெல்லியை நோக்கிய போராட்டத்தைத் தொடங்கி யிருப்பதாகச் செய்திகளில் படித்துவிட்டு நாங்களும் கிளம்பி வந்தோம். காவல்துறையினர் விவசாயிகளைத் தாக்குவதை டி.வி-யில் பார்த்து எங்கள் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் பயந்துபோய் உள்ளனர். ஆனால், இதற்கு ஒரு முடிவு தெரியாமல் நாங்கள் இங்கிருந்து போவதாக இல்லை’’ என்றார் அவர்.

பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவிலிருந்து வந்திருக் கிறார் நிர்மல் சிங். ‘`எனக்கு வயது 64 ஆகிறது. தாத்தா, அப்பா, நான், என் மகன் எனப் பரம்பரை பரம்பரையாக விவசாயமே எங்கள் தொழில். எங்கள் பகுதியில் இயற்கை புண்ணியத்தில் எந்தப் பிரச்னையும் இருந்ததில்லை. ஆனால் இந்த அரசாங்கங்கள் எடுக்கிற முன்யோசனை இல்லாத முடிவுகளால்தான் நாங்கள் பெருந்துயரைச் சந்தித்து வருகிறோம். விவசாயிகளை வஞ்சிப்பதில் எல்லா அரசாங் கங்களும் ஒரே மாதிரிதான் இருக்கிறது’’ எனப் பொரிந்து தள்ளினார்.

டெல்லியில் தற்போது கடுமையான குளிர் நிலவுகிறது. ‘`இந்தக் குளிரில் வெட்ட வெளியில் படுத்திருந்து போராட்டம் செய்வது கடினமாக இல்லையா’’ எனக் கேட்டதற்கு, தனது நீண்ட தாடியைத் தடவிக்கொண்டே சொன்னார். ‘`வெயில், மழை, பனி போன்றவற்றிற்கு பயப்படுகிறவன் விவசாயியாக இருக்க முடியாது. பஞ்சாபில் இதைவிட குளிர் மோசமாக இருக்கும். அங்கே வெறும் கம்பளியைப் போர்த்திக் கொண்டு காவல் இருப்போம். அதனால் இதெல்லாம் எங்களை ஒன்றும் செய்துவிடாது. கம்பளி, ரஜ்ஜாய் (வட மாநிலங்களில் பயன்படுத்தப்படும் கெட்டியான போர்வை) போன்றவற்றை எடுத்து வந்திருக்கிறோம். அதையும் மீறி குளிர் மோசமாக அடித்தால், நெருப்பை மூட்டிக் குளிர்காய்ந்துகொள்வோம்’’ எனச் சொன்னபடி தன் டிராக்டரை நம்மிடம் காட்டினார். விறகுக்கட்டைகள் உட்பட எல்லாமே அதில் இருந்தன.

வட மாநிலங்களில் ஹுக்கா என்னும் பாரம்பர்ய புகைபிடிக்கும் குழாயைப் பெரிய அளவில் பயன்படுத்து வார்கள். அந்த ஹுக்காவைப் புகைத்தபடி தங்களது டிராக்டர்களில் உட்கார்ந்திருந்த சிலரிடம், ‘`இப்படிப் போராட வந்து விட்டீர்களே… ஊரில் உங்களது விவசாய வேலைகளை யார் பார்த்துக் கொள்வார்கள்?’’ எனக் கேட்டோம். ‘`கிராமத்தில் உள்ள எல்லோரும் வந்து விட வில்லை. கொஞ்சம் பேர்தான் வந்திருக்கிறோம். மற்றவர்கள் எங்களது நிலங்களையும் சேர்த்துப் பார்த்துக் கொள் வார்கள். அவர்களுக்கும் தானே நாங்கள் போராடுகிறோம்’’ என நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

இந்த விவசாயிகள் எல்லோரும் உறுதியாய் இருப்பது ஒரே ஒரு விஷயத்தில் தான்… அது, ‘இந்தச் சட்டங்களை அரசு திரும்பப் பெறும்வரை ஊர் திரும்பப் போவதில்லை’ என்பதுதான்.

போராடும் விவசாயச் சங்கத் தலைவர்கள் சிலருக்குத் தனிப்பட்ட அரசியல் ஈடுபாடு உண்டு. ஆனால், இந்தப் போராட்டத்தில் துளியும் அரசியல் இல்லாமல் பார்த்துக்கொள்கிறார்கள். தங்கள் போராட்டக் களத்தில் எந்த அரசியல்வாதியையும் இவர்கள் அனுமதிக்கவில்லை. அதுவே இந்தப் போராட் டத்தைத் தனித்துவ மான ஒன்றாக மாற்றியிருக்கிறது.

இந்தப் போராட்டத்தில் அரசியல் இல்லா விட்டாலும், நம் தேசத்தின் அரசியல் போக்கையே மாற்றும் போராட்டமாக இது மாறியுள்ளது.

https://chakkaram.com/wp-content/uploads/2020/12/1.mp4

Exit mobile version