–W.M.பைசல்
ஆபத்தில் இருந்து இளைய தலைமுறையை மீட்டெடுப்பதற்கான ஆலோசனைகள்
கொவிட் – 19 வைரஸ் தாக்கத்தினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருக்கும் அதேவேளை, எதிர்மறையாக இலத்திரனியல் சாதனங்களின் பயன்பாடு மாணவர்களின் மத்தியில் அதிகரித்து இருப்பதானது பெற்றோருக்கு பாரிய பிரச்சினையாக உள்ளது.
தொழில்நுட்ப உலகத்தில் பிறந்து வளர்ந்த பெற்றோர் சமூகத்தினால் தொழில்நுட்ப உலகத்தில் வளரும் இன்றைய இளைய தலைமுறையைக் கட்டுப்படுத்துவதென்பது அவ்வளவு இலகுவான காரியமில்லை. தொழில்நுட்ப உலகத்தில் வயது வந்தோர் இன்றுவரை அறியாத பல விடயங்களில், இன்றைய மாணவர்கள் இளம் வயதிலேயே பாண்டித்தியம் பெற்றிருப்பதை கண்கூடாக காண முடிகின்றது.
ஆனால் மிதமிஞ்சிய இணைய பயன்பாட்டின் காரணமாக மாணவர்கள் அடையும் பாதிப்புகள் எண்ணிலடங்காதவை. உளவியல் ரீதியான பாதிப்பு ஒருபுறமிருக்க, பாலியல் ரீதியான பிரச்சினைகளுக்குள் இணைய பயன்பாட்டின் காரணமாக மாணவர்கள் குறிப்பாக கட்டிளமைப் பருவத்தினர் இலகுவில் சிக்கி விடுகின்றனர்.
உதாரணமாக பருவத்துக்கு மீறிய தேவையற்ற விடயங்களை சிறார்கள் பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இணையத்தில் ஒரு விடயம் எதேச்சையாக குழந்தையின் தேடலில் வந்தவுடன், திரும்பத் திரும்ப அதே விடயங்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதே நேரத்தில் அதனை பெரியவர்களிடமிருந்து மறைத்துப் பார்ப்பதற்கான பாண்டித்தியமும் வெகு விரைவில் அவர்களிடம் வந்து விடுகின்றன. இது அபாயகரமான நிலையாகும்.
இதன் உச்சகட்டமாக மாணவர்களை பாலியல் ரீதியாக அச்சுறுத்தல் மற்றும் சிறார்களை பாலியல் பொருட்களாக பயன்படுத்தல் அபாயமான நிலைமைகளும் எதிர்நோக்கப்படுகின்றன. மாணவ சமூகத்தின் சுபிட்சமான எதிர்காலத்தை முளையிலேயே கிள்ளி எறியும் அபாயமும் ஏற்படலாம். எமது மாணவர்களை இவ்வாறான அபாய நிலையிலிருந்து பாதுகாக்க வேண்டுமென்றால் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே இணையத்தை சரியான விதத்தில் கையாள சொல்லிக் கொடுத்தல் பெரியோர் கடமையாகும்.
சிறு வயதிலிருந்தே சமூகவலைத் தளங்களில் பேணப்பட வேண்டிய ஒழுங்கு முறைகளை குழந்தைகளுக்கு அறிவுறுத்துதல் வேண்டும். சமூக வலைத்தளங்களில் தமது தனிப்பட்ட தகவல்களை தெரியாத நபர்களுடன் பரிமாறுதல் மற்றும் இருப்பிடங்களையும், தான் வீட்டில் தனியாக உள்ளேன் போன்ற பாதுகாப்பிற்கு பாதிப்பை செலுத்தும் விடயங்களையும் பரிமாறக் கூடாது என்பதனை அறிவுறுத்தல் வேண்டும்.
மேலும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான ஒழுங்குமுறைகளை ஆரம்பத்தில் இருந்து முறையாக வழங்குவது அவசியமாகும்.
பிறரது இலத்திரனியல் சாதனங்களை பயன்படுத்துவதற்கு முன் அவர்களது அனுமதியை பெறுதல்.
நேரடியாக ஒருவருடன் கதைக்கும் போது பின்பற்றும் அதே ஒழுக்க முறையையே, அவருடன் சமூகவலைத்தளங்களினூடாக உரையாடும் போதும் பின்பற்றல். பிறரது அனுமதியின்றி அவர்களது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுதலை தவிர்த்தல். பிறருடன் கதைத்துக் கொண்டு இருக்கும் போது இலத்திரனியல் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்த்தல். காரணம் அது அவர்களுக்கு மரியாதை அளிக்காதது போல இருக்கலாம். பெற்றோர் வழங்கியுள்ள நேரவரையறைக்குள் இலத்திரனியல் சாதனைகளை பயன்படுத்த கற்றுக் கொள்ளல்.
குடும்பத்தினர், நண்பர்களிடமிருந்து வரும் அழைப்புகளுக்கு சரியான நேரத்தில் பதில் அளிப்பதுடன் வாசிப்பவருக்கு விளங்கக் கூடிய வகையில் பதிவிடுதல். உண்ணும் போது இலத்திரனியல் சாதனைகளை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளல். பிள்ளைகள் வெளியிடங்களுக்கு செல்லும் போது குறிப்பாக இளவயது பிள்ளைகளாயின் இலகுவாக தொடர்பு கொள்ளும் நோக்கத்தில் அநேகமான பெற்றோர் சிறு வயதிலேயே தனியாக ‘ஸ்மாட் ஃபோன்’ ஒன்றை அவர்களுக்கு வாங்கிக் கொடுப்பதை இன்று பரவலாக காண முடிகின்றது. தேவையான பணத்துடன் கையில் ஸ்மாட் ஃபோன் வழங்கப்படும்போது தவறான நடவடிக்கைகளில் மாணவர்கள் சிக்கி விடுகின்றனர்.
எனவே தொடர்பாடலை மட்டும் செய்யக் கூடிய பழைய ரக கையடக்கத் தொலைபேசியை வழங்குவதன் மூலம் இந்தப் பிரச்சினையைக் குறைக்கலாம்.
எல்லோருடைய கண்களுக்கும் தென்படக் கூடிய இடங்களில் இணையத் தொடர்புகளில் பயன்படுத்தும் உபகரணங்களை வைத்தல். தனி அறையில் வைத்து பயன்படுத்த வழங்கும் போது அவர்களின் வரையறையை மீறி பயன்படுத்த வாய்ப்புண்டு. நாம் இவற்றை அடிக்கடி பரிசோதிக்கும் போது தன் மீது நம்பிக்கை இல்லையா என்றவாறு அவர்கள் கோபம் கொள்ள முடியும். மாறாக தென்படக்கூடிய இடங்களில் வைத்து பயன்படுத்தும் போது இந்தப் பிரச்சினைகளை இலகுவில் கையாளலாம்.
வைஃபை கடவுச் சொல் போன்ற இணையத்தை கட்டுப்படுத்தும் விடயங்களை எப்போதும் பெற்றோரின் கட்டுப்பாட்டில் வைக்கும் போது மாணவர்கள் தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்த முடியும். குழந்தையுடன் அடிக்கடி கலந்துரையாடுவதன் மூலம் அவர்கள் இணையத்தில் எவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர், அவர்கள் பாதுகாப்பாக உள்ளனரா என்பதை மறைமுகமாக பரிசோதிக்க முடியும்.
‘ஒன்லைன் ஷொப்பிங்’ செய்வதற்கு 18 வயதிற்கு குறைந்த பிள்ளைகளை அனுமதிக்க வேண்டாம்.
இணையத்தை பயன்படுத்துவதில் தேவையான அறிவுரைகளை முறையாக வழங்க வேண்டும்.
தேவையான தகவல்களை மட்டும் வடிகட்டி வழங்கக் கூடிய மென்பொருள்கள் இன்று பரவலாக காணப்படுகின்றன. அவற்றை பயன்படுத்தி மாணவர்கள் தேவையற்ற விடயங்களை கையாள்வதனையும், பார்வையிடுவதனையும் தடை செய்ய முடியும். எனவே இந்நடைமுறைகளை கையாள்வதன் மூலம் இளம் வயதினரை இலத்திரனியல் ஊடக பயன்பாட்டின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கலாம்.

